சனி, 14 ஆகஸ்ட், 2010

பாவத்தைக் கண்டு பதறி பரிகாரம் கண்டவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நாங்கள் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அமர்ந்திருந்த போது, ஒருவர் நபி[ஸல்] அவர்களிடம் வந்து, இறைத்தூதர்[ஸல்] அவர்களே நான் அழிந்துவிட்டேன் என்றார். அப்போது நபி[ஸல்] அவர்கள், உமக்கு என்ன நேர்ந்தது..? என்று கேட்டார்கள். நான் நோன்பு வைத்துக்கொண்டு என்மனைவியிடம் கூடிவிட்டேன் என்று கூறினார். அப்போது நபி[ஸல்] அவர்கள், விடுதலை செய்வதற்கு ஒரு அடிமை உம்மிடம் இருக்கிறாரா..? என்று கேட்டார்கள் . அதற்கு அவர், இல்லை என்று சொன்னார். தொடர்ந்து இரு மாதம் நோன்பு வைக்க உமக்கு சக்தி இருக்கிறதா..? என்று நபி[ஸல்] அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா..? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்று சொன்னார். நபி[ஸல்] அவர்களிடம் பேரிச்சம் பழம் நிறைந்த 'அரக்' எனும் அளவை கொண்டுவரப்பட்டது. அப்போது நபி[ஸல்] அவர்கள், கேள்வி கேட்டவர் எங்கே என்று கேட்டார்கள். நானே என்று அவர் கூறினார். இதைப்பெற்று தர்மம் செய்வீராக! என்று இறைத்தூதர்ஸல்] அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், இறைத்தூதர்[ஸல்] அவர்களே! என்னைவிட ஏழையாக இருப்போருக்கா[நான் தர்மம் செய்யவேண்டும்]..? மதீனாவின் [கருங்கற்கள் நிறைந்த] இரு மலைகளுக்கும் மத்தியில் என் குடும்பத்தை விட பரம ஏழைகள் யாருமில்லை என்று கூறினார். அப்போது நபி[ஸல்] அவர்கள் தங்களின் கடவாய் பற்கள் தெரியும் அளவுக்கு சிரித்தார்கள்; பிறகு இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக! என்றார்கள்.
நூல்;புஹாரி எண்; 1936

அன்பானவர்களே! பாவங்கள் செய்வது மனித இயல்பு. ஆனால் செய்த பாவத்தை எண்ணி வருந்துவது ஒரு இறை நம்பிக்கையாளனின் பண்பு. ஒரு இறை நிராகரிப்பாளன் தான் செய்யும் பாவத்தை தன் மீது அமரும் கொசுக்கு நிகராக கருதுவான்; ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளன் தான் செய்யும் பாவத்தை தன் மீது ஒரு மலை சாய்வதைப் போல கடுமையாக கருதுவான். அதனால்தான், ஆதமின் மகன் பாவம் செய்யக்கூடியவனே; அவர்களில் சிறந்தவன் தவ்பா எனும் பாவமன்னிப்பு கோருபவன் என்ற நபிமொழிக்கேற்ப, இந்த ஸஹாபி உணர்ச்சி மேலிட ஒரு பாவம் செய்கிறார். அதுவும் அந்நியப் பெண்ணிடம் அந்த தவறை செய்யவில்லை. அவருக்கு ஹலாலான மனைவியிடமே செய்கிறார். ஆனாலும் ரமளானில் பகலில் நோன்பு நோற்ற நிலையில் செய்ததால்தான் பாவமாகியது. அந்த பாவம் அவரும்- அவருடைய மனைவியும் தவிர வேறு எவரும் அறியாத நிலையிலும் கூட தான் செய்த பாவத்தால் கைசேதப்பட்டு தான் 'நாசமாகி' விட்டதாக புலம்பிக்கொண்டு நபியவர்களிடம் ஓடோடி வருகிறார். நபியவர்களிடம் பரிகாரம் காண்கிறார். இதுதான் ஒரு இறை நம்பிக்கையாளின் பண்பாகும். சஹாபாக்கள் பாவம் செய்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?
என்று அவர்களை குற்றவாளிகளாக காட்ட இந்த ஹதீஸை சிலர் சொல்வார்கள். ஆனால் இந்த ஹதீஸில் அவர்கள் பாவத்தை செய்து விட்டு துடித்த அந்த துடிப்பை; செய்த பரிகாரத்தை மறைத்து அல்லது மறந்து விடுவார்கள். எனவே சஹாபாக்கள் இயன்றவரை பாவம் தவிர்த்திருக்கிறார்கள். அதையும் தாண்டி மனிதன் என்ற முறையில் தப்பித்தவறி செய்த பாவத்திற்காகவும் வருந்தி தவ்பா செய்துள்ளார்கள். பரிகாரம் கண்டுள்ளார்கள். எனவே பாவம் செய்யும் ஒவ்வொருவரும் பாவத்தை நஞ்சென வெறுக்கவேண்டும். செய்த பாவத்திற்கான மன்னிப்பை அல்லாஹ்விடம் கேட்கவேண்டும். அதன் மூலமே நாம் நஷ்டத்திலிருந்து விடுபடமுடியும் என்பதற்கு இந்த நபித் தோழரின் வாழ்வு மிகச்சிறந்த படிப்பினையாக நமக்கு உள்ளது.

அல்லாஹ், அந்த நபித் தோழரை பொருந்திக்கொள்வானாக! நம்மை பாவத்திலிருந்தும் காப்பானாக!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக