வெள்ளி, 6 நவம்பர், 2009

ஜக்காத்தை மறுத்தார்களா சஹாபாக்கள்...?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அபூபக்கர்[ரலி] அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு சாரார் ஜக்காத்தை மறுத்தார்கள் என்பதும் அவர்களை எதிர்த்து அபூபக்கர்[ரலி] அவர்கள் யுத்தம் செய்வேன் என்று அறைகூவல் விடுத்ததும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதில் பிரச்சினை என்ன வென்றால் அபூபக்கர்[ரலி] அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஜக்காத்தை மறுத்த அந்த சாரார் யார் என்பதுதான். அதுபற்றி 72 .கூட்டம் யார் என்ற தலைப்பில் பேசிய பீஜே என்பவர், ஜக்காத்தை மறுத்தவர்களில் சகாபாக்களும் உண்டு என்று கூறுகிறார். அவரது உரையிலிருந்து;

ஜக்காத்தை மறுத்தவர்கள் இரு சாரார்; ஒரு சாரார் மதீனாவில் நபி[ஸல்] அவர்கள் கை ஓங்கியிருந்த காரணத்தால் பயந்தவர்களாக, வேண்டா வெறுப்பாக ஜக்காத்தை கொடுத்தவர்கள். அதாவது நடித்தவர்கள் நயவஞ்சகர்கள்.

இன்னொரு சாரார் யார் என்றால்,

ஒரு முடிவை எடுத்துக்கொண்டு, ஜக்காத் கொடுக்காம இருக்குறதுக்கு ஏதாவது ஆயத்து இருக்குமான்னு தேடினார்கள் . தங்களுக்கு சாதகமாக வளைப்பதற்கு ஒரு வசனத்தை தேடிப்பிடிக்கிறார்கள். தவ்பா அத்தியாயத்தின் ஒருவசனத்தை எடுத்துவைத்துக்கொண்டு வளைக்கிறாங்க. ஒரு வசனத்த எடுத்து வைத்துக்கொண்டு அவங்க விரும்பிய வடிவத்த கொடுக்குற அந்த வியாதி அங்கதான் வருது. அதுல அல்லாஹ் சொல்றான்; நபியே நீங்க அந்த மக்கள்ட இருந்து எடுங்க! பின்பு அவங்களுக்காக துஆ செய்யுங்க! அது அவங்களுக்கு அமைதியைதரும் என்ற வசனத்தை எடுத்து வைச்சுக்கிட்டு அவங்க சொன்னாங்க; அபூபக்கரே! நீ என்ன ரசூலா..? ஒன்னோட துஆ எங்களுக்கு மன அமைதியா தருமா ? ஒமரோட துஆ எங்களுக்கு மன அமைதியா தருமா? எனவே ஜக்காத் ரசூல் காலத்தோட முடிஞ்சு போச்சு என்றார்கள். [இவங்க யார்னு அந்த அறிஞர் சொல்கிறார்] நல்ல சகாபாக்களா இருந்தவங்க;அல்லாஹ்வுக்காக பல தியாகங்களை செய்ஞ்சவங்க. கஷ்டப்பட்டவங்க. ஆனா காசு விஷயம்ன்னு வந்த வுடனே, அபூபக்கரே ஒங்களை ஆட்சியாளரா ஏத்துக்கிறோம் ஆனா காசுன்னு வந்தீங்கன்னா எங்களுக்கு இஸ்லாமே வேணாம் என்று கூறியதாக அந்த அறிஞர் பேசுகிறார். அதோடு இறுதியாக ஜக்காத் கொடுக்காமல் இருப்பதற்காக குர்ஆன் வசனத்தை வளைக்கும் நோய் சில சகாபாக்களுக்கு வந்தது. ஆனால் அதற்கு ட்ரீட்மெண்டு அபூபக்கரால் கொடுக்கப்பட்டு அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது ஆனால் அவர்களால் தொடங்கப்பட்ட அந்த நோய் இன்றும் இருக்கிறது என்று கூறி அதற்கு தர்காவாதிகள் குர்ஆன் வசனங்களை வளைப்பதை மேற்கோள் காட்டுகிறார்.ஆக, சுருங்க சொன்னால், ஜக்காத்தை மறுத்தவர்களில் இரு சாராரில் ஒருசாரார் நயவஞ்சகர்கள் ; மறு சாரார் அல்லாஹ்வுக்காக தியாகம் செய்த சகாபாக்கள் என்ற கருத்தை முன்வைக்கிறார். இவ்வளவு பேசிய அவர் இந்த விஷயங்கள் எந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ளது என மறந்தும் கூட சொல்லவில்லை என்பதுதான் 'ஹைலைட்'.

சரி! இப்ப விஷயத்திற்கு வருவோம்; அபூபக்கர்[ரலி] அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஜக்காத்தை மறுத்தவர்கள் யார் என்று நேரடியான தெளிவான வார்த்தைகளில் குறிப்பிடப்படவில்லை. அது சம்மந்தமாக புஹாரியில் வரும் ஹதீஸ் இதோ;

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி[ஸல்] அவர்கள் மரணித்து அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாம்விட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரலி) தயாரானார் (உமர்(ரலி), 'லா இலாஹ இல்லல்லாஹ்" கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி), உமரை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்" என்றார். இது பற்றி உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்" என்றார். [எண்; 1399 ]

இந்த செய்தியில் உமர்[ரலி]அவர்கள், 'லா இலாஹ இல்லல்லாஹ்" கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்? என்று கேட்கிறார்கள். இதன்மூலம் ஜக்காத்தை மறுத்தவர்கள் முஸ்லிம்கள் அதாவது சஹாபாக்களில் சிலர் என்றும் விளங்கலாம். அல்லது முஸ்லிம்கள் என்ற போர்வையில் இருந்த நயவஞ்சகர்கள் என்றும் விளங்கலாம். ஆனால் எது சரியானது என்றால், உண்மையான சகாபாக்கள் தியாகமே வாழ்க்கையாக கொண்ட சகாபாக்கள் நபி[ஸல்] அவர்கள் மரணித்த குறுகிய நாட்களில் இஸ்லாத்தின் மிகப்பெரிய தூணாக உள்ள ஜக்காத்தை மறுக்கும் அளவுக்கு செல்லமாட்டார்கள். அப்படித்தான் நம்பவேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
لَوْلَا إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بِأَنفُسِهِمْ خَيْرًا وَقَالُوا هَذَا إِفْكٌ مُّبِينٌ
முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, "இது பகிரங்கமான வீண் பழியேயாகும்" என்று கூறியிருக்க வேண்டாமா? (24:12)

இந்த வசனத்தை நாம் முன்வைத்ததற்கு காரணம் சகாபாக்கள்தான் ஜக்காத்தை மறுத்தார்கள் என்று தெளிவாக இல்லாத நிலையில், அதுபோன்ற தோற்றத்தை தரும் தகவல் வருமாயின் சகாபாக்கள் மீது நமக்கு நல்லெண்ணம் வரவேண்டும். சகாபாக்கள் ஜக்காத்தை மறுக்கும் அளவுக்கு பொருளாசை பிடித்தவர்கள் அல்ல என்பதை தங்களின் வாரிவழங்கும் தன்மையால் நிரூபித்தவர்கள். எனவே ஜக்காத்தை மறுத்தவர்கள் முஸ்லிம்கள் என்ற போர்வையில் இருந்த நயவஞ்சகர்கள் என்பதே சரியாகும். இல்லையில்லை சகாபாக்கள்தான் ஜக்காத்தை மறுத்தார்கள் என்றால் எந்த ஸஹாபி மறுத்தார் என்பதை அவர்கள் விளக்கவேண்டும். மேலும், ஜக்காத் வழங்குவதிலிருந்து தப்பிப்பதற்காக சகாபாக்கள் குர்ஆண் வசனத்தையே வளைத்தார்கள். அதோடு அபூபக்கரே! நீ என்ன ரசூலா..? உன்னோட துஆ எங்களுக்கு அமைதியை தருமா..? என்றெல்லாம் கேட்டார்கள் என்று சகாபாக்கள் மீது அப்பட்டமான அவதூறு முன்வைக்கப்பட்டுள்ளது. அதோடு இன்று குர்ஆண் வசனங்களை வளைப்பவர்களுக்கு முன்னோடியாக சகாபாக்கள் இருந்தார்கள் என்ற தோற்றமும் விதைக்கப்பட்டுள்ளது.

அதோடு ஜக்காத் விஷயத்தில் உமர்[ரலி] அவர்கள் அபூபக்கர்[ரலி] அவர்களிடம், அபூபக்கரே! மக்கள்ட்ட ஜக்காத் விஷயத்துல எதிர்ப்பு கடுமையா இருக்கு; அதுனால மென்மையை கடைபிடிங்க; ஜக்காத்த நாம் பின்னாடி வசூலித்து கொள்ளலாம் என்று கூறியதாகவும் அதாவது உமர் வளைந்து கொடுத்துவிட்டார் என்ற கருத்தில் இந்த அதிமேதாவி பேசுகிறார். ஆனால் மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள ஹதீஸில், அபூபக்கர்[ரலி] அவர்களிடம், இது தொடர்பாக உமர்[ரலி] அவர்கள் சொன்ன வாசகம் தெளிவாகவே இடம்பெற்றுள்ளது. ஆக உமர்[ரலி] அவர்கள் மென்மையை கடைபிடிக்க சொன்னார்கள் என்றும், ஜக்காத்தை நாம் பின்னாடி வசூலித்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள் என்றும் உமர்[ரலி] அவர்கள் சொல்லாத ஒன்றை சொல்லி உமர்[ரலி] அவர்களை பலவீனராக அடையாளம் காட்டியுள்ளார்கள். அதோடு தெளிவான வார்த்தையில் இந்த அதிமேதாவி இப்படி வர்ணிக்கிறார்;

'உமறு பெரிய வீரரு; அலீயை புலி அப்பிடீன்னு நாம சொல்லுவோம். ஆனா இஸ்லாமிய வரலாற்றில வீரத்திற்கும், மனத்துணிவிற்கும் ,தைரியத்திற்கும் அபூபக்கருக்கு நிகரான ஒருவரை சொல்ல இயலாது என்கிறார்.'
இந்த உம்மத்தில் சிறந்தவர் அபூபக்கர்[ரலி] அவர்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. அதற்காக அபூபக்கர்[ரலி] அவர்களை புகழ்கிறேன் என்ற பெயரில் அபூபக்கர்[ரலி] அவர்களை போலவே இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்த மாவீரர்களான உமர்[ரலி] மற்றும் அலீ[ரலி] அவர்களின் வீரத்தை கேள்விக்குள்ளாக்குவது/கேலிக்குள்ளாக்குவது போன்ற வார்த்தை பிரயோகம் சரியா என்பதையும் சிந்திக்கவேண்டுகிறோம்.

ஆக, குர்ஆண்-ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு, மறுபுறம் உண்மையும்-பொய்மையும் கலந்த வரலாறுகளை மைய்யமாக கொண்டு, உண்மையாளர்களான சஹாபாக்கள் மீது தப்பெண்ணம் கொள்ளும் வார்த்தை பிரயோகங்கள், அவர்கள் வாயிலிருந்து வெளியாவது ஆரோக்கியமானதல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக