பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிமான ஆண்களுக்கு அதிகபட்சமாக நான்கு திருமணம் வரை செய்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளதை நாம் அறிவோம். இந்திய அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்பவர்கள் மிக மிக குறைவு. காரணம் பொருளாதரா பிரச்சினை ஒருபக்கம் இருந்தாலும், மறு பக்கம் இரு மனைவியர் ஒருவருக்கு இருந்தால் அவர்களுக்கு மத்தியில் பஞ்சாயத்து தீர்ப்பதற்கே பெரும்பான்மையான நேரம் ஒதுக்கவேண்டிய நிலை. இரு ஆண்கள் ஒத்துப்போய் விடுவார்கள். ஆனால் இரு பெண்கள் ஒத்துப்போவது என்பது மிகமிக அரிது. அதிலும் ஒரு கணவருக்கு வாழ்க்கைப்பட்ட இரு பெண்கள், இவர்களில் ஒவ்வொருவரும் மற்ற மனைவியை தன் கணவன் நெருங்காமல் இருப்பதற்கு என்ன வழி என்று சதா யோசித்து தங்களில் ஒருத்தியை மாட்டிவிடும் வாய்ப்பு கிடைக்குமென்றால் அதை கச்சிதமாக பயன்படுத்தி அவளிடமிருந்து தன் கணவனை பிரித்துவிடுவாள். தன் கணவன் மறுமணம் செய்வதை அனுமதிக்கும் அரபு நாட்டு பெண்கள் பெரிய அளவில் தனது சக்களத்தியை கண்டுகொள்வதில்லை. ஆயினும் அவர்களில் சிலர் தனது கணவன் மற்றொரு பெண்ணை மணப்பதை தடுப்பதற்கான முயற்சி மேற்கொள்வதாக அறிகிறோம். சமீபத்தில் குவைத்தில் ஜஹ்ரா என்ற பகுதியில் ஒரு திருமணத்தின்போது நடந்த தீவிபத்திற்கு ஒரு முன்னாள் மனைவியே காரணம் என்று கூறப்பட்டது.[அல்லாஹ்வே அறிந்தவன்] இதை நாம் இங்கு குறிப்பிட காரணம் பொதுவாகவே பெண்கள், கணவன் குடிகாரனாகவோ, சூதாடியாகவோ, குடும்பத்தை சரிவர கவனிக்காத பொருப்பில்லாதவனாகவோ இருந்தால்கூட சகித்துகொண்டு விட்டுக்கொடுத்து விடுவார்கள். ஆனால் ஒரு உதவாக்கரை கணவனைக்கூட இன்னொரு பெண்ணிற்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இது பெரும்பான்மையான பெண்களின் இயல்பு. ஆனால் ஸஹாபி பெண்களை பொறுத்தவரையில் அல்லாஹ் அனுமதித்த எந்த ஒன்றையும் தடுக்கக் கூடியவர்கள் அல்லர். எனவே பெரும்பான்மையான சஹாபாக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்ததை நாம் ஹதீஸ்களின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் இறைத்தூதர்[ஸல்] அவர்களுக்கு அல்லாஹ் பல மனைவியரை மணக்கும் அனுமதி தந்திருந்தான். நபி[ஸல்] அவர்களும் சுமார் பதினொரு அல்லது பன்னெண்டு மனைவியரை மணந்தார்கள். இந்த மனைவியருக்குள் நபியவர்களின் அன்பை பெறுவதில் போட்டி இருந்தது. இதை நாமாக சொல்லவில்லை. நபி[ஸல்] அவர்களின் நேசத்திற்குரிய அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் சொல்கிறார்கள்;
அல்லாஹ்வின் தூதருடைய மனைவிமார்களான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, மற்றும் சவ்தா ஆகியோரும் இருந்தோம். மற்றொரு குழுவில் உம்மு சலாமா அவர்களும் அல்லாஹ்வின் தூதருடைய மற்ற மனைவிமார்களும் இருந்தனர்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 2581 ]
மற்றொரு ஹதீஸில் நம் அன்னையர்களுக்கு மத்தியில் நபியவர்களின் நெருக்கத்திற்குரியவர்களாக இருப்பதில் போட்டியிருந்ததை காணலாம்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் 'நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்' என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். எங்களில் ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான் சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்' என்று கூறினார்கள். எனவே, 'நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?' என்று தொடங்கி 'நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)' என முடியும் (திருக்குர்ஆன் 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.
ஆதாரம்; புஹாரி எண் 5267
இவ்வாறாக நம் அன்னையர்களுக்கு மத்தியில் பெண்களுக்கே உரித்தான போட்டி மனப்பான்மை இருந்தாலும், அவர்களுக்கிடையே பகைமையோ, ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கும் என்னமோ, பழிவாங்கும் நோக்கமோ கடுகளவும் இல்லை என்பதை பின்வரும் ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது. அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது பாவிகள் அவதூறு சொனன்போது, இது குறித்து என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து நபி[ஸல்] அவர்கள், அலீ[ரலி] உசாமா[ரலி] பரீரா[ரலி] உள்ளிட்ட சிலரிடம் ஆலோசனையும் கருத்துக்களும் கேட்டது போன்று அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடமும் கருத்து கேட்டார்கள். அப்போது அன்னையவர்கள் கூறிய வார்த்தை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை;
அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம் விசாரித்தார்கள். 'ஸைனபே! நீ (ஆயிஷாவைக் குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்?... அல்லது (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?... என்று (ஸைனபிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்" என்று பதிலளித்தார்கள். ஸைனப் அவர்கள் தாம், நபியவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபி-ஸல்-அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 4141 ]
அழகிலும், நபி [ஸல்] அவர்களின் அன்பிலும் எனக்கு போட்டியாக இருந்தவர் ஸைனப் என்று வர்ணிக்கும் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் வாயாலேயே, அன்னை ஸைனப்[ரலி] அவர்கள் சொன்ன வார்த்தையால் சிலாகித்து அன்னை ஆயிஷா[ரலி] அவர்களே சொல்லுமளவிற்கு அன்னை ஸைனப்[ரலி] அவர்களின் உள்ளம் இறையச்சத்தால் நிரம்பியிருந்ததை காண்கிறோம். அதனால்தான் தன்னை போட்டியாக கருதிய ஆயிஷா[ரலி] அவர்கள் மீது பழி சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்தபோதும், அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக ஆயிஷா[ரலி] அவர்கள் விஷயத்தில் உள்ளதை மட்டும், உண்மையை மட்டும், நன்மையை மட்டும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அன்னை ஸைனப்[ரலி] அவர்கள் சொல்கிறார்கள் என்றால் அதுதான் சஹாபாக்கள். இதே நிலை இன்றைய பெண்களிடம் நடந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே! எனவேதான் தெளிவாக சொல்கிறோம் இறையச்சத்திலும் சரி, அமல்களிலும் சரி, நன்னடத்தையிலும் நற்குணத்திலும் சரி அந்த சஹாபாக்கள் மற்றும் ஸஹாபி பெண்களின் அந்தஸ்த்தில் கடுகளவும் எட்டிப்பிடிக்கமுடியாது என்பதே உண்மை. இந்த லட்சணத்தில், அந்த மேன்மக்களை விட அல்லாஹ் நம்மை மேன்மையாக்கி வைத்துள்ளான் என்ற அகம்பாவ பிரச்சாரம் வேறு!
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக