செவ்வாய், 17 நவம்பர், 2009

அல்லாஹ்வின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் சொன்னார்; அல்லாஹ் நிறைவேற்றினான்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்;
என் தந்தையின் சகோதரி - ருபய்யிஉ பின்த்து நள்ர், - ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தாரிடம் என் குலத்தார், 'இழப்பீட்டுத் தொகையைப் பெறுங்கள்; அல்லது (ருபய்யிஉவை) மன்னித்து விடும்படி சொல்லுங்கள்" என்று கோரினார்கள். அவர்கள் (இரண்டில் எதற்குமே ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டார்கள். எனவே, எங்கள் குலத்தார் நபி(ஸல்) அவர்களிடம் (விபரம் கூறி, தீர்ப்புப் பெற) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (ருபய்யிஉவைப்) பழி வாங்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ரு(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? அப்படி நடக்காது. தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவனின் மீது சத்தியமாக! அவளுடைய முன்பல் உடைக்கப்படாது" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும். (எனவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)" என்று கூறினார்கள். பிறகு, அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக் கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்" என்றார்கள். அனஸ்(ரலி) வழியாக அறிவிக்கப்படும் மற்றோர் அறிவிப்பில், '(அந்த வாலிபப் பெண்ணின்) குலத்தார் (பழிவாங்காமல்விட்டுவிட) ஒப்புக் கொண்டு பரிகாரத் தொகையை ஏற்றார்கள்' என்று வந்துள்ளது.

ஆதாரம்;புஹாரி எண்; 2703

அன்பானவர்களே! ஒரு பெண்ணின் பல்லை உடைத்ததனால், அப்பெண்ணின் குலத்தார் ஈட்டுத்தொகையை பெறாததாலும், மன்னிக்காததாலும் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின்படி பல் உடைப்பு தண்டனை உறுதியான நிலையில் இருக்கிறார் ருபைய்யிஉ பின்த் நள்ர்[ரலி] அவர்கள். இந்நிலையில் இந்த நபித்தோழியின் சகோதரரும் உஹத் உயிர் தியாகியுமான அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்கள், தன் சகோதரிக்கு பல் உடைக்கப்படாது என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு, அல்லாஹ்வின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் அல்லாஹ்வின் தூதரிடத்தில் கூறுகிறார். யாரும் எதிர்பாராத நிலையில் பல் உடைக்கப்பட்ட பெண்ணின் குலத்தார் அதற்குரிய நஷ்ட ஈடு பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் ருபைய்யிஉ[ரலி] அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது அசைக்கமுடியா நம்பிக்கையுடன் அல்லாஹ்வின் மீதுசத்தியமிட்டு சொன்ன அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்களின் நம்பிக்கையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான் என்றால், அவர்களின் இறையச்சத்தையும், தூய்மையான வாழ்க்கையையும் இதன் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக