بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
ஹஸன் பஸரீ(ரஹ்) அறிவித்தார்;அலீ(ரலி) அவர்களின் மகனான ஹஸன்(ரலி), முஆவியா(ரலி) அவர்களை மலைகளைப் போன்ற (பிரம்மாண்டமான) படையணிகளுடன் எதிர்கொண்டார்கள். (அவற்றைக் கண்ட முஆவியா(ரலி) அவர்களின் ஆலோசகர்) அம்ர் இப்னு ஆஸ்(ரலி), 'இவற்றில் உள்ள (போரிடுவதிலும், வீரத்திலும்) சமபலம் வாய்ந்தவர்களை நீங்கள் கொன்று விடாதவரை இந்தப் படைகள் பின்வாங்கிச் செல்லாது என்று கருதுகிறேன்" என்று கூறினார்கள். அவருக்கு முஆவியா(ரலி) அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்விருவரில் முஆவியாவே, சிறந்தவராக இருந்தார்..." அம்ரே! இவர்கள் அவர்களையும் அவர்கள் இவர்களையும் கொன்று விடுவார்களாயின் மக்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்க என்னிடம் வேறு யார் இருப்பார்கள்? (என் குடி) மக்களின் பெண்களைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் இருப்பார்கள்? அவர்களின் சொத்துகளைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் தான் இருப்பார்கள்?' என்று பதிலளித்தார்கள். எனவே, ஹஸன்(ரலி) அவர்களிடம் குறைஷிகளில் பனூ அப்தி ஷம்ஸ் கிளையாரைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னி குரைஸ்(ரலி) அவர்களையும் அனுப்பி, 'நீங்கள் இருவரும் இந்த மனிதரிடம் சென்று விபரத்தை எடுத்துரைத்துப் பேசி, அவரிடம் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) கோருங்கள்" என்று கூற, அவ்விருவரும் (அவ்வாறே) ஹஸன்(ரலி) அவர்களிடம் சென்று, அவர்களின் அறைக்குள் நுழைந்து பேசினார்கள்; ஹஸன்(ரலி) அவர்களிடம் (முஅவியா(ரலி) அவர்களின் தூதை எடுத்துச்) சொல்லி (அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வரும்படி) கோரினார்கள். அதற்கு அவ்விருவரிடமும் ஹஸன்(ரலி), 'நாங்கள் அப்துல் முத்தலிபின் மக்கள்; இந்த செல்வத்தை (எங்கள் தலைமைத்துவத்தின் காரணத்தால்) பெற்றிருக்கிறோம். (அதை எங்கள் குடிமக்கள், படைவீரர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே செலவு செய்து வருகிறோம்.) இந்தச் சமுதாயமோ தன் இரத்தத்தை சிந்திப் பழகிவிட்டது" என்று கூறினார்கள். இதற்கு அவ்விருவரும், 'முஆவியா(ரலி) உங்களுக்கு இவ்வளவு (மானியம்) தருவதாகக் கூறுகிறார்கள்; மேலும் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) உங்களிடம் கோருகிறார்கள்" என்று கூறினர். அதற்கு ஹஸன்(ரலி), 'இந்த விஷயத்தில் எனக்குப் பொறுப்பு யார்?' என்று கேட்க, அவ்விருவரும் 'இதில் உங்களுக்கு நாங்கள் பொறுப்பு" என்று கூறினர். ஹஸன்(ரலி) கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள், 'நாங்கள் உங்களிடம் இதற்குப் பொறுப்பேற்கிறோம்" என்றே கூறினார்கள். இறுதியாக, ஹஸன்(ரலி), முஆவியா(ரலி) அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். மேலும், '(ஒரு முறை) இறைத்தூதர் மிம்பர் மீதிருக்க, அவர்களின் ஒரு பக்கத்தில் ஹஸன் இப்னு அலீ(ரலி) அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களை நோக்கியும், மற்றொரு முறை ஹஸன்(ரலி) அவர்களை நோக்கியும் (உரை நிகழ்த்திய வண்ணம்), 'இந்த என்னுடைய புதல்வர் (கண்ணியத்திற்குரிய) தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு பெரும் கூட்டத்தாரிடையே இவரின் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைக்க விரும்புகிறான்" என்று கூறிக் கொண்டிருந்ததை பார்த்தேன்" என்று அபூ பக்ரா(ரலி) கூறியதை கேட்டேன்.
ஆதாரம்;புஹாரி எண் 2704
இந்த செய்தியில் பெரும்படையுடன் முஆவியா[ரலி] அவர்களை முற்றுகையிட்ட ஹசன்[ரலி] அவர்கள், போர் தவிர்த்து முஆவியா[ரலி] அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து இணக்கத்திற்கு வழிகாணுகிறார்கள் எனில், அந்த நல்லறத்தோழர்கள் என்றுமே தங்களுக்குள் பிரிவினையை விரும்பியதில்லை என்பதை அறியமுடிகிறது. ஆனால், இஸ்லாத்தை தூய வடிவில் சொல்கிறோம் என்று கிளம்பிய தவ்ஹீத்வாதிகளாகிய நமக்குள்தான் குறுகிய காலத்தில் எத்துனை பிளவுகள்..? காரணம் ஹசன்[ரலி] அவர்களைப்போல் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை சமுதாயத்தலைவர்களிடம் இல்லை. பின்பு எப்படி அவர்களது தொண்டர்களிடம் இத்தகைய பண்பை எதிபார்க்கமுடியும்..? ஹசன்[ரலி] அவர்களின் இந்த வரலாறு இயக்கவெறியர்களுக்கு மிகப்பெரிய படிப்பினையாகும்.
அல்லாஹ் ஹசன்[ரலி] மற்றும் முஆவியா[ரலி] ஆகியோரை பொருந்திக்கொள்வானாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக