بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
உஸ்மான் இப்னு மவ்ஹப்(ரலி) அறிவித்தார்கள்;எகிப்துவாசியான ஒருவர் வந்து, (கஅபா எனும்) இறையில்லத்தை ஹஜ் செய்தார் அப்போது ஒரு கூட்டம் அமர்ந்திருப்பதைக் கண்டு, 'இந்தக் கூட்டத்தார் யார்?' என்று கேட்டதற்கு மக்கள், 'இவர்கள் குறைஷிகள் என்று பதில் கூறினார்கள். அப்போது, 'இவர்களில் முதிர்ந்த அறிஞர் யார்" என்று அவர் கேட்டதற்கு மக்கள், ' அப்துல்லாஹ் இப்னு உமர்" என்று பதில் அளித்தார்கள். உடனே அவர் அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களை நோக்கி,
'இப்னு உமர் அவர்களே நான் உங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்கிறேன். நீங்கள் எனக்கு அதைப்பற்றிச் சொல்லுங்கள். உஸ்மான்(ரலி) உஹுதுப் போர்க்களத்திலிருந்து வெருண்டோடியதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) 'ஆம் அறிவேன்" என்று பதில் அளித்தார்கள். அப்போது அவர் 'உஸ்மான்(ரலி) பத்ர் போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டார்கள் என்பது தங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டடார். அற்கு இப்னு உமர்(ரலி) 'ஆம் தெரியும்" என்று பதில் அளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் அவர், 'ஹுதைபியாவில் நடந்த பைஅத்துர் ரிள்வான் சத்தியப் பிரமாணத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பது தங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்க ஆம் தெரியும் என்று பதில் அளித்தார்கள். (இவற்றைக் கேட்டுவிட்டு உஸ்மான்(ரலி) தாம் நினைத்தது போன்றே இவ்வளவு குறைகளுள்ளவர்தாம் என்று தொனிக்கும் படி) அந்த மனிதர், அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப்பெரியவன் என்று என்று கூறினார். அப்போது இப்னு உமர்(ரலி),
'வாரும்! (இவற்றிலெல்லாம் உஸ்மான்(ரலி) ஏன் பங்கு பெறவில்லை என்பதை உனக்கு நான் விளக்குகிறேன். அவர்கள் உஹத் போரின்போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரின் பிழையைப் பொறுத்து மன்னித்துவிட்டான் என்று நானே சாட்சியாக இருக்கிறேன். பத்ர் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், நபி(ஸல்) அவர்களின் மகள் (ருகய்யா(ரலி)) உஸ்மான்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (அவர்கள்) அப்போது நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் பத்ர் போரில் பங்கெடுத்த ஒருவருக்குரிய (மறுமைப்) பலனும், (போர்ப் பொருளில்) உங்களுக்கான பங்கும் கிடைக்கும் (நீங்கள் உங்களுடைய மனைவியைக் கவனியுங்கள்) என்றார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை.) பைஅத்துர் ரிள்வான் சத்தியப்பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம் உஸ்மான்(ரலி) அவர்களையும் விட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) அப்படி இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்கள், குறைஷிகளிடம் பேசுவதற்கு தம் தூதராக அவரை) அனுப்பி இருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை.) எனவேதான், நபி(ஸல்) அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும் இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான்(ரலி) மக்காவிற்குள் போனபின்னர்தான் நடந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் வலக்கரத்தை சுட்டிக் காண்பித்து இது உஸ்மானுடைய கை என்று கூறி அதை தம் இடக்கரத்தின் மீது தட்டினார்கள். பிறகு, இப்போது நான் செய்யும் சத்தியப்பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்" என்றார்கள். என இப்னு உமர்(ரலி) கூறிவிட்டு, (உஸ்மான்(ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணி வைத்திருந்த) அந்த மனிதரிடம், 'நான் இப்போது சொன்ன பதில்களை நீ எடுத்துச் செல்லலாம்" என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 3699
உஸ்மான்[ரலி] அவர்கள் சம்மந்தமாக சில விசயங்களை மேலோட்டமாக அறிந்து அதன் காரணமாக உஸ்மான்[ரலி] அவர்களை தாழ்வாக எண்ணியவருக்கு, உஸ்மான்[ரலி] அவர்கள் அந்த காரியங்களை எதற்காக செய்யநேர்ந்தது என்பதை இப்னு உமர்[ரலி] அவர்கள் விளக்கி கூறி அங்கே உஸ்மான்[ரலி] அவர்களின் கண்ணியத்தை சம்மந்தப்பட்டவருக்கு உணர்த்துகிறார்கள். இதிலிருந்து புரிவது என்ன? சகாபாக்கள் சம்மந்தமாக அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்று மேலோட்டமாக கூறப்படுவதை நம்பி அவர்களை இழிவாக கருதக்கூடாது. அவர்களின் கண்ணியத்திலும், மேன்மையிலும் சந்தேகம் கொள்ளக்கூடாது. மாறாக, சகாபாக்கள் விஷயத்தில் சொல்லப்படுவதை தீர ஆராயவேண்டும். அறிந்தவர்களிடம் கேட்டு தெளிவு பெறவேண்டும். அதையும் தாண்டி அவர்கள் தவறு செய்தார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டாலும் அவர்களை குற்றவாளிகளாக அடையாளம் காட்டவோ, அல்லது விமர்சிக்கவோ நமக்கு அனுமதி இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக