بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போருக்குச் செல்வார்கள். அப்போது, (அவர்கள் யார் மீது படையெடுத்துச் செல்கிறார்களோ) அவர்கள், 'உங்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா?' என்று கேட்பார்கள். 'ஆம், இருக்கிறார்கள்" என்று (போரிடச் சென்ற) அவர்கள் பதில் செல்வார்கள். உடனே, போருக்குச் சென்ற அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்வார்கள். (அவர்களிடம்), 'உங்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கிறார்களா?' என்று கேட்கப்படும். போருக்குச் சென்றவர்கள், 'ஆம், இருக்கிறார்கள்" என்று சொல்வார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதருடைய தோழர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களுடன், தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கின்றனரா?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், 'ஆம், இருக்கிறார்கள்" என்று பதிலளிப்பார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்.ஆதாரம் புஹாரி;எண் 3649
இந்த பொன்மொழியில், நபி[ஸல்] அவர்களின் காலத்திற்கு பின்னால் போருக்கு செல்லும் படையில் நபித்தோழர்கள் இடம்பெற்றிருந்தால் அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும் என்றும், பின்னாளில் போருக்கு செல்லும் படையில் சகாபாக்களோடு தோழமை கொண்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும் என்றும், பின்னாளில் சகாபாக்களின் தோழர்களோடு தோழமை கொண்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும் என்றும் விளங்கமுடிகிறது. பூவோடு சேர்ந்த நாறும் மனம் பெறும் என்பது போன்று சகாபாக்கள் என்ற உத்தமர்களின் தோழமையால்-சகாபாக்களோடு தோழமை கொண்டவர்களின் தோழமையால் மற்றவர்களுக்கும் சிறப்பு கிடைக்கிறது என்பதை பார்க்கும்போது, நபி[ஸல்] அவர்களின் தோழர்களின் சிறப்பை புரிந்துகொள்ள முடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக