இஸ்லாம் எனும் சாந்திமார்க்கம் உலகெங்கிலும் பரவிட தங்கள் உயிர்களை உரமாக்கியவர்கள் ஸஹாபாக்கள்; அவர்களின் தியாகங்களை பின்னுக்குத்தள்ளி, அவர்கள் செய்ததாக கருதப்படும் சில தவறுகளை முன்னிலைப்படுத்தும் பிரச்சாரத்தை முறியடிக்க, அந்த சத்தியசீலர்களின் தியாகவாழ்வை இந்த வலைப்பூ விவரிக்கும்!
திங்கள், 10 ஆகஸ்ட், 2009
உயிர் பிரியும் நேரத்திலும் 'உயர்ந்தோனின்' வேதனைக்கு அஞ்சிய உத்தமர் உமர்[ரலி]
மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்;
உமர்(ரலி) (பிச்சுவாக்கத்தியினால்) குத்தப்பட்டபோது அவர்கள் வேதனையடைலானார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), உமர்(ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறுவதைப் போன்று, 'நம்பிக்கையாளர்களின் தலைவரே! இதைப் பெரிதுப்படுத்திக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டு அத்தோழமையில் நல்லவிதமாக நடந்து கொண்டீர்கள். பிறகு, அவர்கள் உங்களைக் குறித்துத் திருப்தி கொண்டிருந்த நிலையிலேயே (அவர்கள் இறந்துவிட,) அவர்களைப் பிரிந்தீர்கள். பிறகு, அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் தோழமை கொண்டு அந்தத் தோழமையிலும் நல்ல விதமாக நடந்து கொண்டீர்கள். பிறகு உங்களின் மீது அவர்கள் திருப்தி கொண்டிருந்த நிலையிலேயே (அவர்கள் இறந்து விட,) அவர்களைப் பிரிந்தீர்கள். பிறகு அவர்களின் மற்ற தோழர்களுடன் தோழமை கொண்டு அந்தத் தோழமையிலும் நல்ல விதமாக நடந்து கொண்டீர்கள். அவர்களை நீங்கள் பிரிவதாயிருந்தால் நிச்சயம் அவர்கள் உங்களைக் குறித்துத் திருப்தி கொண்டிருக்கும் நிலையிலேயே பிரிவீர்கள்" என்று கூறினார்கள். உமர்(ரலி), '(இப்னு அப்பாஸே!) அல்லாஹ்வின் தூதருடன் நான் கொண்டிருந்ததாக நீங்கள் சொன்ன தோழமை, அவர்கள் என் மீது கொண்டிருந்த திருப்தி ஆகியவையெல்லாம் அல்லாஹ் என் மீது பொழிந்த அருட்கொடையாகும். மேலும், அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் நான் கொண்டிருந்ததாக நீங்கள் சொன்ன தோழமை, அவர்கள் என் மீது கொண்டிருந்த திருப்தி ஆகியனவும் புகழுயர்ந்த அல்லாஹ் என் மீது பொழிந்த அருடகொடையாகும். என்னிடம் நீங்கள் காண்கிற பதற்றமோ (பிற்காலத்தில் குழப்பங்களில் சிக்கவிருக்கும்) உங்களுக்காகவும் உங்கள் தோழர்களுக்காகவும் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு பூமி நிரம்பத் தங்கம் இருந்தால் கூட, கண்ணியமும் உயர்வுமுடைய அல்லாஹ்வின் வேதனையை நான் காண்பதற்கு முன்பாகவே அதற்குப் பகரமாக அந்தத் தங்கத்தைப் பிணைத் தொகையாகத் தந்து விடுவேன்" என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 3692
உமர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் வாழ்நாளில் நபியவர்களால் சுவனத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட ஒரு உத்தமர். அப்படியிருந்தும் இறைவனின் வேதனை ஏதேனும் நமக்கு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, பூமியளவு தங்கம் இருந்தாலும் அதை நான் பிணையாக தந்துவிடுவேன் என்று கூறினார்களே! இதுதான் இறையச்சத்தின் உச்சம்! இன்று பாவங்களை மலையளவும், நன்மைகளை மடுவளவும் செய்யும் நாம் 'நாங்கள் மட்டுமே சொர்க்கத்துக்குரியவர்கள்' என்ற ரீதியில் மார்தட்டி திரியாமல் அந்த உத்தமர் உமர்[ரலி] அவர்களின் மேற்கண்ட உபதேசத்திலிருந்து படிப்பினை பெறுவோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக