திங்கள், 10 ஆகஸ்ட், 2009

அருமை மகள் மீது 'அவதூறு' சொன்னவருக்கும் அள்ளித்தந்த வள்ளல்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் விஷயத்தில் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் என்ற நயவஞ்சகன் பரப்பிய அவதூறை நம்பி, அதை மக்கள் மத்தியில் பரப்பியவர்களில் மிஸ்தஹ் இப்னு உஸாஸா[ரலி] என்ற நபித்தோழரும் ஒருவர். இவர் பத்ர் போரில் பங்கெடுத்த வீரர்களில் ஒருவர். மேலும் இவர் அபூபக்கர்[ரலி] அவர்களின் உறவினர் என்பதால், அபூபக்கர்[ ரலி] அவர்கள் இவருக்கு[இவர் அவதூறு பரப்புவதற்கு முன்னர்] பல்வேறு உதவிகளை செய்து வந்தார்கள். இந்நிலையில், தன் அருமை மகள் ஆயிஷா[ரலி] அவர்கள் மீது தன்னிடத்தில் உதவி பெற்று வாழும் மிஸ்தஹ் அவதூறு பரப்புவதை அறிந்த அபூபக்கர்[ரலி] அவர்கள் கூறியதையும் பின்னர் நடந்தவைகளையும் கீழ்கண்ட ஹதீஸில் பாருங்கள்;

அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹ¤க்காக எதையும் செலவிடமாட்டேன்' என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். -மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். -அப்போது அல்லாஹ், 'உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்' எனும் (திருக்குர்ஆன் 24:22 வது) வசனத்தை அருளினான்.
அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள்,
'ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்' என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்' என்றும் கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 6679

தன் மகள் விஷயத்தில் அவதூறு கூறியவர் என்ற அடிப்படையில், ஒரு தந்தை என்ற ரீதியில் கோபம் கொண்டாலும், அல்லாஹ்வின் கட்டளை இறங்கியவுடன் அதற்கு முற்றிலும் கட்டுப்பட்டவராக மீண்டும் மிஸ்தஹ்[ரலி] அவர்களை அரவணைத்த அபூபக்கர்[ரலி] அவர்கள், பிறரை மன்னிப்பதிலும், இறைவன் தன்னை மன்னிக்கவேண்டும் என்று விரும்புவதிலும் தனது இறையச்சத்தை வெளிப்படுத்திய விதத்தை வர்ணிக்க வார்த்தைகளும் உண்டோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக