புதன், 14 ஜூலை, 2010

அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களின் அருமை மனைவியரும், முஃமீன்களின் தாயுமான ஆயிஷா[ரலி] அவர்களின் சகோதரி அஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] அவர்களின் மகனாவார். நபி[ஸல்] அவர்களின் உற்ற தோழர் அபூபக்கர்[ரலி] அவர்களின் பேரனாவார். நபி[ஸல்] அவர்களின் தோழரும் முஹாஜிரும் சுவனத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவருமான ஸுபைர்[ரலி] அவர்களின் மகனாவார். மதீனா ஹிஜ்ரத்திற்கு பின் பிறந்த முதல் குழந்தையாவார். இத்தகைய சிறப்புமிகு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்கள்,
நபி[ஸல்] அவர்களின் மரணத்திற்கு பின்னால் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளில் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்பவரது படையால் ஷஹீதாக்கப்பட்டு, பேரீச்சம் மரத்தில் சிலுவையில் ஏற்றி தலைகீழாக தொங்கவிடப்பட்ட நிலையில்,

இப்னு உமர்[ரலி] அவர்கள், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் ஜனாஸா அருகே நின்று, அபூ குபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று கூறியதோடு, அப்துல்லாஹ் இப்னு ஸுபைரின் சில நற்பண்புகளை அங்கே சொல்கிறார்கள். இந்த செய்தி ஹஜ்ஜாஜுக்கு எட்டியபோது, அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் ஜனசாவை யூதர்க்களின் அடக்கஸ்தலம் மீது போட்டுவிடுமாறு உத்தரவிட்டார். அதோடு, அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் தாயார் அஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] அவர்களை அழைத்துவர ஆளனுப்பினார். அஸ்மா[ரலி]அவர்கள் வர மறுத்துவிட்டார்கள். ஹஜ்ஜாஜ் மீண்டும் ஆளனுப்பி, அஸ்மாவே! நீயாக வருகிறாயா..? அல்லது உமது சடையை பிடித்து இழுத்துவர ஆள் அனுப்பட்டுமா என கேட்க, அப்போதும் அஸ்மா[ரலி]அவர்கள் வர மறுத்ததோடு மட்டுமன்றி, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது சடைப் பிடித்து இழுத்துக்கொண்டு வருபவரை நீர் அனுப்பாதவரையில் நான் உம்மிடம் வரப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள்.

உடனே ஹஜ்ஜாஜ் தமது செருப்பை அணிந்துகொண்டு அஸ்மா[ரலி] அவர்களை நோக்கி விரைந்து வந்து அஸ்மா[ரலி] அவர்களிடம், அல்லாஹ்வின் விரோதியை [உமது மகனை] என்ன செய்தேன் பார்த்தீரா என்று கேட்டார். அப்போது அஸ்மா[ரலி]அவர்கள்,

நீ என் மகனின் இம்மையை சீரழித்துவிட்டாய்; என் மகனோ உனது மறுமையை சீரழித்துவிட்டார் என்றே நான் கருதுகிறேன். நீ என் மகனை 'இரு கச்சுடையாளின் புதல்வரே! என்று ஏளனமாக அழைப்பாய் என்று நான் கேள்விப்பட்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இரு கச்சுடையாள் நான்தான். [மதீனா ஹிஜ்ரத் சென்ற] அல்லாஹ்வின் தூதருக்கும் , எனது தந்தை அபூபக்கருக்கும் உரிய உணவை எனது ஒரு கச்சின் மூலம் கட்டினேன். மற்றொன்று ஒரு பெண்ணிடம் அவசியம் இருக்கவேண்டிய கச்சாகும்.

அறிந்துகொள்! அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் எங்களிடம், 'சகீஃப் குலத்தாரில் ஒரு மகாப் பொய்யனும், ஒரு நாசக்காரனும் இருப்பார்கள்' என்று கூறினார்கள். மகாப் பொய்யனை [முக்தார் இப்னு அபீஉபைத்] நாங்கள் பாத்துவிட்டோம். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறிய 'நாசக்காரன்' நீதான் என்றே நான் கருதுகிறேன் என்று கூறியவுடன், அஸ்மா[ரலி] அவர்களுக்கு பதிலளிக்கமுடியாமல் ஹஜ்ஜாஜ் அங்கிருந்து வெளியேறி சென்றுவிட்டார்.

[ஹதீஸ் சுருக்கம்நூல்; முஸ்லிம்.]
அன்பானவர்களே! இந்த செய்தியை நாம் பொறுமையுடன் படித்துப் பார்ப்போமானால், அஸ்மா[ரலி] அவர்களின் அளவுகடந்த வீரமும், பொறுமையும் வெளிப்படுவதை நாம் அறியமுடியும்.
  • தனது அருமை மகன் அநியாயமாக கொல்லப்பட்டு, சிலுவையில் தலைகீழாக தொங்க விடப்பட்டு , பின்பு அநியாயக்கார யூதர்களின் அடக்கஸ்தலத்தில் போடப்பட்ட செய்தியறிந்த பின்பும், கத்தாமல் கதறாமல் தன் மகனை காண ஓடாமல், தன் மகன் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாகியுள்ளான் என பொறுமை காத்த அந்த அஸ்மா[ரலி] அவர்களின் பாங்கு.
  • ஹஜ்ஜாஜ், அஸ்மா[ரலி] அவர்களை அழைத்துவர ஆள் அனுப்பியபோது, வீரமிக்க நம் மகனையே கொன்ற இந்த அநியாயக்காரன் நம்மை விட்டு வைப்பானா.? என்று பதறி ஹஜ்ஜாஜை சந்திக்க ஓடாமல், வரமறுத்த துணிவு! 'என் சடையை பிடித்து இழுத்துவரும் உன் ஆளை அனுப்பிப் பார்' என்று ஆர்ப்பரித்த வீரம்!! சுப்ஹானல்லாஹ்!!. தொடைநடுங்கி முஸ்லிம்களுக்கோர் பாடம்!!!
  • எங்கள் தலைவர் நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்த 'அநியாயக்காரன்' நீதானோ என்று ஆர்ப்பரித்த ஆளுமை அஸ்மா[ரலி] ஒரு சகாப்தம்.

எங்கள் இறைவா! அஸ்மா[ரலி] அவர்களின் வீரத்தை, உள்ள உறுதியை, ஈமானிய வலுவை எங்களுக்கும் தந்து நீ பொருந்திக் கொண்ட முஸ்லிம்களாக மரணிக்க செய்வாயாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக