சனி, 10 ஜூலை, 2010

இறைத்தூதரின் ரகசியத்தை இறுதிவரை காத்தவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நான்[ரசூல்[ஸல்]அவர்களிடம் சேவகனாக இருந்தபோது] என்னிடம் வந்தார்கள். நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். நபி[ஸல்] அவர்கள் எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு ஒரு அலுவல் நிமித்தமாக என்னை ஒரு இடத்திற்கு அனுப்பினார்கள். நான் என் தாயாரிடம் தாமதமாகவே வந்தேன். அப்போது என்தாயார், உன் தாமதத்திற்கு காரணம் என்ன..? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் ஒரு அலுவலுக்காக என்னை அனுப்பி வைத்திருந்தார்கள் என்று சொன்னேன். அப்போது என் தாயார் என்ன அலுவல்? என்று கேட்டார்கள். நான் அது 'ரகசியம்' என்று சொன்னேன். அப்போது என்தாயார், அல்லாஹ்வின் தூதரின் ரகசியத்தை நீ யாரிடம் சொல்லாதே என்றார்கள்.[ நூல்;முஸ்லிம் 4891 ].

மற்றொரு அறிவிப்பில்;
நபி[ஸல்] அவர்கள் என்னிடம் ஒரு ரகசியம் சொன்னார்கள். அவர்களின் இறப்பிற்கு பிறகு கூட அதை நான் ஒருவரிடமும் தெரிக்கவில்லை. என் தாயார் உம்மு சுலைம்[ரலி] அவர்கள் அது குறித்து கேட்டபோது நான் அவர்களுக்கும் தெரிவிக்கவில்லை. [நூல்;முஸ்லிம் 4892 ]

இந்த பொன்மொழியில் நபி[ஸல்]அவர்களிடம் சேவகராக இருந்த அனஸ்[ரலி] அவர்களின் பண்பு நமக்கு மிகப்பெரிய படிப்பினையாக உள்ளது. சிறுவர்களுடன் விளையாடும் அளவுக்கு சிறிய வயதுடைய அனஸ்[ரலி]அவர்கள், இறைத்தூதரின் ரகசியம் விசயத்தில் எந்த அளவுக்கு கவனமாக இருந்துள்ளார்கள் எனில், அவர்களது தாயார் கேட்டபோதும் கூட சொல்லவில்லை. அதுமட்டுமன்றி, அந்த ரகசியத்தை இறைத்தூதர்[ஸல்] அவர்களின் மரணத்திற்கு பின்னால் கூட எவரிடமும் சொன்னதில்லை என்றால், ரகசியமும் அமானிதமே என்பதை அனஸ்[ரலி] அவர்கள்வாழ்வு எமக்கு உணர்த்துகிறது. ஆனால் இன்று பெரும்பாலான பிரச்சினைக்கு ரகசியங்கள் வெளிப்படுவதே காரணமாக அமைகிறது. இயக்கம், அமைப்பு, தொழில், பாதுகாப்பு போன்றவை மட்டுமன்றி, கணவன் மனைவிக்குள் நடக்கும் இல்லறம் வரை பேணப்படவேண்டிய ரகசியங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு அதனால் பல்வேறுவகையான பின்னடைவை சந்திக்கிறோம். எனவே அனஸ்[ரலி] அவர்களின் இந்த உயரிய பண்பை நம்முடைய வாழ்விலும் கடைபிடிக்க முன்வருவோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக