வெள்ளி, 11 டிசம்பர், 2009

பாங்கோசையை முன்மொழிந்தவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

உமர்[ரலி] அவர்கள், 'உமரின் நாவின் அல்லாஹ் பேசுகிறான்' என்று நபி[ஸல்] அவர்களால் சிறப்பித்து சொல்லப்பட்ட ஸஹாபி என்பதை நாம் அறிவோம். உமர்[ரலி] அவர்கள் கூற்றிற்கேற்ப, அல்லாஹ் சில வசனங்களை இறக்கியதையும் நாமெல்லாம் அறிந்துள்ளோம். அத்தகைய சிறப்பிற்குரிய உமர்[ரலி] அவர்கள் இன்னொரு நல் அமலுக்கு ஒரு ஆலோசனை கூற அது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, அன்றும்-இன்றும்- நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் இவ்வுலகம் உள்ளளவும் அது நடைமுறையில் இருக்கும். ஆம்! அதுதான் அல்லாஹ்வை வணங்க ஐவேளை தொழுகையின் போது அழைக்கப்படும் 'பாங்கு' எனும் அழைப்போசையாகும்.
இதுபற்றிய பொன்மொழி இதோ;

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 604

இந்த பொன்மொழி உமர்[ரலி] அவர்களின் பெரும்பாலான சிந்தனைகள், செயல்கள் அல்லாஹ்வாலும், அவன் தூதராலும் பொருந்திக்கொள்ளும் வகையிலேயே அமைந்துள்ளதற்கு மற்றொரு சான்றாகும்.
அல்லாஹ் உமர்[ரலி] அவர்களுக்கு கிருபை செய்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக