வெள்ளி, 2 அக்டோபர், 2009

சஹாபாக்களை விட நாம் சிறப்பாக விளங்கமுடியுமா?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சஹாபாக்களை விட நாம் இன்று சிறப்பாக மார்க்கத்தை விளங்கிக்கொள்ளமுடியும். காரணம், சஹாபாக்களின் இறுதிக் காலத்தில் தான் நூல் வடிவில் திருக்குர்ஆன் தாயரிக்கப்பட்டது. அதுவும் எல்லா சகாபியிடமும் குர்ஆன் பிரதிகள் இருக்கவில்லை. ஆனால் இன்று நம்மிடையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரதி குர்ஆன் வைத்துள்ளோம். அதுபோல் முழுமையாக எல்லா ஹதீஸ்களையும் அறிந்த ஒரு சகாபியும் இருக்கவில்லை. அவர்கள் காலத்தில் ஹதீஸ்கள் தொகுத்து நூல் வடிவில் இருக்கவில்லை. எனவே அவர்கள் தங்கள் அளவில் தெரிந்த விஷயங்கள் அடிப்படையில் மட்டும் விளங்கமுடியும். ஆனால் இன்று நாம் மார்க்க விஷயங்கள் முழுமையாக கிடைக்கப்பெற்ற காலத்தில் வாழ்கிறோம். எனவே எந்த ஒரு கடுமையான பிரச்சினையாயினும் ஒரு அரைமணிநேரம் ஒதுக்கினால் மார்க்கத்தின் சரியான தீர்வை அடையமுடியும். எனவே நம்மால்தான் சகாபாக்களை விட மார்க்கத்தை சிறப்பாக விளங்கமுடியும் என்ற கருத்து பரவலாக சிலரால் விதைக்கப்படுகிறது. ஒரு அடிப்படையை விளங்கிக்கொள்ளவேண்டும். சகாபாக்கள் ஒவ்வொருவரிடமும் குர்ஆணின் பிரதிகள் இல்லாவிட்டாலும், அவர்களின் உள்ளத்தில் குர்ஆன் வாழ்ந்தது. அவர்கள் உள்ளத்தில் பதிந்தவற்றை அடிப்படையாக கொண்டே இன்று பேப்பரிலும் பல்வேறு பரிணாமங்களிலும் பதிந்து பாதுகாத்து வருகிறோம். மேலும் ஹதீஸ்கள் முழுமையாக அறிந்த ஒரு சகாபியும் இல்லாவிட்டாலும் அவர்கள் எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் தமக்கு தெரியவில்லை என்றால் சக தோழர்களிடம், இதுகுறித்து நபி[ஸல்] அவர்கள் ஏதாவது சொல்லியுள்ளார்களா என்று கேட்டு அதன் அடிப்படையில் தங்களின் முடிவை எடுத்தார்கள். திருக்குர்ஆன் பிரதிகளை கையில் வைத்திராத, நபி [ஸல்] அவர்களின் அனைத்து பொன்மொழிகளையும் முழுமையாக மனனம் செய்திராத அந்த தோழர்கள் எத்துனை விஷயத்தில் மார்க்கத்திற்கு முரானாக தீர்ப்பளித்தார்கள்...?விரல்விட்டு எண்ணிவிடலாம்! ஆனால் அனைத்தையும் கரைத்து குடித்த நாம் கடந்த 25 ஆண்டுகளில் எத்துனை மஸாயில்களில் நேற்று ஒரு தீர்ப்பை சொல்லி அதை இன்று மாற்றிய பட்டியல் ஏராளம் உண்டே! மார்க்கம் சம்மந்தமான அனைத்தும் முழுமையாய் கிடைக்கப்பெறாத[?] சகாபாக்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் தவறான தீர்ப்பளித்தால் கூட அதை குறைகாண முடியாது. ஆனால் இன்று அனைத்தையும் விரல் நுனியில் வைத்துள்ளோம் என்று சொல்லக்கூடிய நம்மிடையே ஏன் குறுகிய காலத்தில் இவ்வளவு தடுமாற்றங்கள்..? மேலும் அரை மணிநேரம் ஒதுக்கினால் எந்த பிரச்சினையாயினும் மார்க்கத்தின் சரியான தீர்வை எட்டமுடியுமேன்று சொல்லும் நாம், அந்த அரைமணி நேரத்தில் ஒரு உமர்[ரலி]யோ, ஒரு அபூபக்கர்[ரலி]யோ, அபூஹுரைரா[ரலி]யோ சொன்னதைத்தானே தீர்வாக சொல்கிறோம். பின்பு எப்படி அவர்களுக்கு தெரியாதது நமக்கு தெரியும் என்று மார்தட்டமுடியும்..? மேலும் குர்ஆனில்-ஹதீஸ்களில் சொல்லப்படும் விஞ்ஞான கருத்துக்கள்சகாபாக்கள் காலத்தை விட இன்று நாம்தான் தெளிவாக புரிந்துகொள்ளும் காலத்தில் வாழ்கிறோம் என்று சொல்லப்படுகிறது. மார்க்கத்தில் கூறப்பட்ட விஞ்ஞானத்தை எந்த அளவுக்கு நாம் புரிந்துள்ளோம் என்பதை நாம் பின்னால் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த விஞ்ஞான கருத்துக்கள் சகாபாக்களுக்கு புரிந்ததோ இல்லையோ, நபி[ஸல்] அவர்கள் சொன்னவுடன் அப்படியே நம்பினார்களே! நம்மைப்போல், அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கிவருவானா..? அப்ப அர்ஷில் யார் இருப்பது என்று விஞ்ஞான கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கவில்லையே..? அடுத்து சகாபாக்களுக்கு விளங்காத விஞ்ஞானத்தை நாம் விளங்கிய லட்சனத்திற்கு ஒரு உதாரணம்;

விண்வெளி பயணம் மேற்கொள்ளலாம் என்று குர்ஆன் சொல்கிறது என்று கூறி அதற்கு ஆதாரமாக அர்ரஹ்மான் அத்தியாயத்தில் இடம் பெறும் மனித ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. என்ற வசனத்தை சிலர் காட்டுவதுண்டு. ஆனால் இந்த வசனத்தை அடுத்து வரும் வசனத்தை பாருங்கள்;
உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். (55:35)
முதல் வசனம் விண்வெளி பயணத்தை வலியுறுத்துவதாக இருந்தால் அடுத்த வசனம் உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். என்று முரணாக வருவது ஏன்? முதலில் வாங்க என்று சொல்லிவிட்டு பின்பு நீங்கள் விண்வெளிக்கு வந்தால் நெருப்புஜுவாலைகள் வீசப்படும் என்று முரணாக இறைவன் கூறுவானா?எனவே இது விண்வெளி பயணம் சம்மந்தமானது அல்ல. மறுமை சம்மந்தமானது என்பதற்கு பின்வரும் அதே அத்தியாயத்தின் வசனங்கள் சான்று பகர்கிறது;

فَإِذَا انشَقَّتِ السَّمَاء فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ
எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும். (55:37)
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:38)
فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ
எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது. (55:39)
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:40)
يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ
குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள் (55:41)
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:42)
هَذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ
அன்று அவர்களிடம்; "இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்" (என்று கூறப்படும்). (55:43)
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ
அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள். (55:44)
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:45 ]

இந்த வசனங்கள் கூறுவதென்ன..? மறுமையில் இறைவன் தண்டிக்க நாடும்போது அதிலிருந்து தப்பிக்க துணிவிருந்தால், மனித ஜின் வர்க்கமே வானம் பூமியின் எல்லைகளை கடந்து போய் பார். அப்போது உங்கள் மீது நரகத்தின் நெருப்பு ஜுவாலைகள் வீசப்படும் [எனவே தப்ப முடியாது]என்கிறான். ஆக மறுமை பற்றி சொல்லும் வசனங்களை விஞ்ஞானம் என்று நாம் விளங்கியதுதான் சகாபாக்களை மிஞ்சிய சிந்தனை போலும்.

அடுத்து சகாபாக்களை விட சகாபாக்களிடமிருந்து செவியுருபவர்கள் நன்கு பேணி பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் என்ற நபி[ஸல்] அவர்களின் வார்த்தையை காட்டி சகாபாக்களை விட நாம் சிந்தனையில் சிறந்தவர்கள் என்று காட்ட சிலர் முயற்ச்சிக்கிறார்கள். அந்த ஹதீஸ்;

இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (என் கட்டளைகளை)த் தெரிவித்து விடுங்கள். ஏனெனில், இச்செய்தியை (நேரடியாக)க் கேட்டவரை விட அவர் யாரிடம் தெரிவிக்கிறாரோ அவர்களில் சிலர் இதை நன்கு கர்ப்பவராயிருக்கலாம்.[புஹாரி]

இதில் நபி[ஸல்] அவர்கள் வந்தவர்கள் வராதவர்களுக்கு சொல்லிவிடுங்கள் என்று சொல்கிறார்கள். வந்தவர்கள் யார்? சகாபாக்கள்! வராதவர்கள் யார் அன்றைய காலத்தில் வாழ்ந்த சகாபாக்கள்! ஆக சொல்பவரும் ஸஹாபி, அவரிடமிருந்து செவியேர்ப்பவரும் சகாபிகள். நபி[ஸல்] அவர்களின் போதனையை நேரடியாக கேட்ட சகாபாக்களை விட, இவரிடமிருந்து செய்தியை செவியுறும் ஸஹாபி இந்த செய்தியை நன்கு விளங்குபராக காப்பவராக இருக்கலாம் என்றுதான் புரிந்து கொள்ள முடியுமேயன்றி, சகாபாக்கள் தலைமுறைக்கு பின் சுமார் 14 தலைமுறைக்கு பின் வந்த நம்மை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது என்று கூறுவது சரியா? மேலும் சகாபாக்கள் சிலர் சிலரை விட சிறப்பாக விளங்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஒரு சான்று;

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் உமர்(ரலி) பத்ருப் போரில் பங்கெடுத்த புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். எனவே, அவர்களில் சிலர், 'எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம்விட்டுவிட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக அமரச் செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி), 'அவர் நீங்கள் அறிந்து வைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்'' என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள். அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன். (அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர்(ரலி), 'இதா ஜாஅ நஸ்ருல்லாஹி.. (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணை வகை நீங்கள் பார்க்கும்போது உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்)'' என்னும் (திருக்குர்ஆனின் 110-வது 'அந்நஸ்ர்') அத்தியாயத்தை, இறுதிவரை ஓதிக்காட்டி, 'இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்களில் சிலர், 'நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்'' என்று (விளக்கம்) கூறினர். சிலர், 'எங்களுக்குத் தெரியாது'' என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர்(ரலி) என்னிடம், 'இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித் தான் கூறுகிறீர்களா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை'' என்றேன். அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான், 'அது, அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டதை அறிவிப்பதாகும். எனவே, 'அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து' என்பதில் உள்ள 'வெற்றி' என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றி தான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். எனவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்' என்பதே இதன் கருத்தாகும்'' என்று சொன்னேன். உமர்(ரலி), 'நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகிறீர்களோ அதையே நானும் அறிகிறேன்'' என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 4294 ]

உமர்[ரலி] அவர்கள் மேற்கோள் காட்டி விளக்கம் கேட்ட வசனத்திற்கு மற்ற சகாபாக்கள் எல்லாம் நாம்மை போன்று அந்த வசனத்தின் நேரடிப் பொருளை கூறிக்கொண்டிருக்க இப்னு அப்பாஸ்[ரலி] அவர்களோ அந்த வசனத்தின் உள் அர்த்தத்தை விளக்குகிறார்கள் எனில், சகாபாக்கள் சிலர் சிலரை விட விளக்கமுடையவர்களாக இருந்திருந்தார்கள். அந்த அடிப்படையில்தான் நபி[ஸல்] அவர்கள், வந்தவர்களிடமிருந்து செவியுறுபவர்கள் சிறந்த முறையில் பேணுபவர்களாக இருக்கலாம் என்றார்கள்.

எனவே என்னதான் நவீன வசதிகளை பெற்றாலும், மார்க்கத்தை முழுமையாக கரைத்துக்குடித்தாலும் அந்த சகாபாக்களுக்கு மேலாக நாம் சிறந்தவர்களாக ஆக முடியாது என்பதே உன்மை.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

2 கருத்துகள்:

  1. Assalaamu alaikkum.

    Please see my blog :
    salafkalvi.blogspot.com

    Please mail me at masoudsalafy@gmail.com, after reading the article about PJ.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான விளக்கங்கள். அல்ஹம்துலில்லாஹ்.

    புரிய வேண்டியவர்கள் தங்கள் பிடிவாதத்தை தளர்த்திவிட்டு உன்மையைப் புரிந்துக்கொள்ள வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திப்போம்.

    சஹாபாக்களைக் குறித்து நம்மிடையே புகுத்தப்படும் நச்சுக்கருத்துக்களை அடியோடு ஒழித்திடும் உங்கள் எழுத்துப்பணி தொடர வேண்டும். அப்படிப்பட்ட உங்களின் இந்த முயற்சிக்கு வல்ல இறைவன் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை வழங்குவானாக.

    சத்திய சஹாபாக்களின் உன்மைச் சரித்திரம் உலகறிய செய்திடும் உங்கள் பணிச்சிறக்க வாழ்த்துக்கள்.

    அபு இப்ராஹீம், சென்னை

    பதிலளிநீக்கு