திங்கள், 14 செப்டம்பர், 2009

சஹாபாக்கள் ஹதீஸ்களுக்கு முரணான சட்டத்தை சொல்பவர்களா?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
'ஒருவர் தம் மனைவியுடன் உறவு கொள்ளும்போது இந்திரியம் வெளியாகாமலிருந்தால் அவரின் மீது குளிப்புக் கடமையாகுமா?' என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'தொழுகைக்குச் செய்வது போன்ற உளூவைச் செய்து கொள்ள வேண்டும்; தம் உறுப்பைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் நபி(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்' என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) பதிலளித்தார். மேலும், இது விஷயமாக அலீ இப்னு அபீ தாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம், தல்ஹா இப்னு உபைதில்லாஹ், உபை இப்னு கஅப்(ரலி) ஆகிய நபித்தோழர்களிடம் கேட்டேன். அவர்களும் இவ்வாறுதான் கூறினார்கள். இவ்வாறே நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ அய்யூப் அல் அன்ஸாரி(ரலி) கேட்டதாக உர்வா கூறினார்" என ஜைத் இப்னு காலித் அல் ஜுஹைனி(ரலி) அறிவித்தார்.ஆதாரம்;புஹாரி எண் 292

நபித்தோழர்கள் தவறிழைக்கக்கூடியவர்கள்; அவர்கள் பல்வேறு சட்டங்களில் ஹதீஸுக்கு மாற்றமான கருத்தை சொல்லியிருக்கிறார்கள் என்று கூறும் ஒரு சிலர், மேற்கண்ட ஹதீஸை எடுத்துவைத்து, பார்த்தீர்களா! உடலுறவு கொண்டால் குளிப்பு கடமை என்று சாமான்யர்கள் கூட வெளங்கி வச்சுருக்கிறோம். ஆனா உஸ்மான் என்ன சொல்றாரு? ஒளு செஞ்சா போதும்கிராரு! அப்ப சஹாபாக்களை பின்பற்ருறதா இருந்தா இத ஏத்துக்கிருவீகளா? என்று சிலர் விமர்சிப்பதுண்டு.[சகாபாக்களை பின்பற்றுவதா இல்லையா? என்பது தனி விஷயம்] இந்த ஹதீஸை சொல்லும் இவர்கள் பாதியை சொல்லிவிட்டு மீதியை மறைத்து சகாபாக்கள் மீது தவறான தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறார்கள். இந்த சட்டத்தை சொன்ன உஸ்மான்[ரலி]] அவர்கள்அதை தனது சொந்த கருத்தாக சொல்லவில்லை. சொல்லிவிட்டு அதிலிருந்து திசைதிருப்ப சொந்த வியாக்கியானங்களை வாரிக்கொட்டவில்லை. மாறாக 'இதை நபி[ஸல்] அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்' என்று சொல்வதன் மூலம் இது உஸ்மான்[ரலி] அவர்களின் கருத்தல்ல. மாறாக நபி[ஸல்] அவர்களின் கருத்து என்பதை விளங்கிக்கொள்ளலாம். மேலும், இதே கருத்தை உஸ்மான்[ரலி] அவர்கள் மட்டுமல்ல. அலீ இப்னு அபீ தாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம், தல்ஹா இப்னு உபைதில்லாஹ், உபை இப்னு கஅப்(ரலி) அபூ அய்யூப் அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர்களும் உஸ்மான்[ரலி] அவர்கள் சொன்ன கருத்தையே சொன்னதாக இதே ஹதீஸ் கூறுகிறது. அப்படியாயின், இத்துணை சகாபாக்களும் ஹதீஸுக்கு முரணானவர்களா? எனவே, சஹாபாக்கள் ஒரு மஷாயில் விசயத்தில் ஒரு கருத்தை சொல்கிறார்கள் எனில், தனது கருத்தாக சொல்கிறார்களா? அல்லது நபி[ஸல்] அவர்களின் கருத்தாக சொல்கிறார்களா? எந்த காலகட்டத்தில் இந்த கருத்தை சொன்னார்கள்? என்றெல்லாம் பார்க்காமல், மேலோட்டமாக பாதி ஹதீஸை வைத்து சஹாபாக்கள் தவறான சட்டத்தை சொன்னவர்கள் என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முனைவது, அந்த நல்லறத்தோழர்களுக்கு செய்யும் துரோகமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக