வியாழன், 24 செப்டம்பர், 2009

ஆட்சியாளர்களுக்கு அஞ்சுபவர்களா சகாபாக்கள்...?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சகாபாக்களை மட்டம் தட்டும் நூலில் பின்வரும் செய்தியை பதிவு செய்துள்ளார்கள்;
அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிடவேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ, ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும் வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழுமூ திடலுக்கு வந்தபோது கஸீர் இப்னு ஸல்த் என்பவர் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏறமுயன்றார். நான் அவரின் ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தலானார். அப்போது நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றி விட்டீர்கள் என்று கூறினேன். அதற்கு மர்வான் 'நீ விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறிவிட்டது' என்றார். நான் விளங்காத (இந்தப் புதிய) நடைமுறையை விட நான் விளங்கி வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாகமிகச் சிறந்ததாகும் என கூறினேன். அதற்கு மர்வான் 'மக்கள் தொழுகைக்ப் பிறகு இருப்பதில்லை' எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன்' என்று கூறினார். [புஹாரி எண் 956 ]

இந்த செய்தி மிகச்சரியானதே! இச்செய்திக்கு அவர்கள் தந்துள்ள விளக்கம்தான் சகாபாக்களை கொச்சைப்படுத்துகிறது.
  • சிறந்த காலம் என்று நபி[ஸல்] அவர்களால் புகழ்ந்து கூறிய நபித்தோழர்களும், தாபியீன்களும் வாழும் காலத்தில் ஒட்டுமொத்த சமுதாயமும் குழுமியுள்ள பெருநாள் தொழுகையில் நபி[ஸல்] அவர்களின் நடைமுறை அப்பட்டமாக மீறப்படுகிறது. ஒரே ஒருவர் மட்டும் அதை எதிர்க்கிறார் என்பதை காண்கிறோம். ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு பயந்து கூட மார்க்கத்திற்கு முரணான செயல்களை அன்றைய மக்கள் சகித்துக்கொண்டிருக்கக்கூடும்.

என்று எழுதியுள்ளார்கள். திருக்குர்ஆண் விளக்க உரை என்ற பெயரில், உழைப்புக்கு உதாரணமாக நபி[ஸல்] அவர்களால் சொல்லப்பட்ட நபி தாவூத் [அலை] அவர்கள் குறித்து, சாமான்யர்களின் நிலங்களை கையகப்படுத்தியிருக்கக்கூடும் என்று கற்பனையை அள்ளித்தெளித்தது போன்று சகாபாக்கள் விசயத்திலும் 'ஆட்சியாளர்களுக்கு பயந்து மார்க்கத்திற்கு முரணான சட்டத்தை சகித்துக்கொண்டிருக்கக்கூடும் என்ற கற்பனையை அள்ளித் தெளித்து சகாபாக்கள் 'கோழைகள்' என்ற கருத்தை மறைமுகமாக விதைத்துள்ளார்கள். சகாபாக்கள் ஆட்சியாளர்களுக்கு அஞ்சி மார்க்கத்தை விடும் கோழைகள் அல்ல என்பதை மேற்கண்ட இந்த ஹதீஸில் அபூசயீத்[ரலி] அவர்களின் நடவடிக்கை நிரூபிக்கிறது. மர்வான் ஒரு ஆளுநராக இருந்தும்கூட அவர் நபிவழியை மாற்றுகிறார் என்ற மாத்திரத்தில் சட்டையை பிடிக்கும் துணிவு நபித்தோழருக்கு இருந்தது. ஆனால், இன்றும் கூட ஹனபியாக்கள் மர்வானின் வழியில் தொழுகைக்கு முன்பாகவே உரை நிகழ்த்துகிறார்களே! நாம் எத்துனை பேர் போய் அவர்களின் சட்டையை பிடித்து தடுத்து நிறுத்தினோம்..? இன்று ஆட்சியாளரும் இல்லையே நாம் அஞ்சுவதற்கு..? ஆக சாதாரண ஆலிம்ஷா நபிவழியை அப்பட்டமாக ஒவ்வொரு பெருநாளின் போதும் மீறுவதை தடுக்கமுடியாதவர்கள் , ஒரு ஆளுநரை சட்டையை பிடித்த சமுதாயத்தைச் நோக்கி 'ஆட்சியாளர்களுக்கு பயந்தவர்கள்' என்று முத்திரை குத்துவது வியப்பிற்குரியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக