ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

லுஹாத் தொழுகையை மறுத்தார்களா அன்னை ஆயிஷா[ரலி]யும்-இப்னு உமர்[ரலி]யும்..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

லுஹாத் தொழுகை நபி[ஸல்] அவர்களால் காட்டித்தரப்பட்ட ஒரு தொழுகையாகும்.
  • அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். "ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும். 'ளுஹா' நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும். உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுது விடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்!" நூல்;புஹாரி எண் 1981 ]

இந்த பொன்மொழி லுஹாத் தொழுகை உண்டு என்பதையும் அத்தொழுகை 2 ரக்அத்துகள் என்பதையும் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. விஷயம் என்ன என்றால் , சகாபாக்களை மட்டம் தட்டும் நூலில், இந்த தொழுகையை சில நபித்தோழர்கள் அறியாததன் காரணத்தினால் அடியோடு மறுத்துள்ளார்கள் என்று கூறி அவ்வாறு மறுத்தவர்கள் அன்னை[ஆயிஷா[ரலி], இப்னு உமர்[ரலி] என்று போட்டு சில ஹதீஸ்களையும் போட்டுள்ளார்கள்.

அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் லுஹாத்தொழுகை குறித்து கூறிய தாக அவர்கள் வெளியிட்டுள்ள இரு ஹதீஸ்கள்;

  • ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழ நான் பார்த்ததில்லை. ஆனால் தொழுவேன்.[புஹாரி எண் 1177 ]

  • ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சில அமல்களைச் செய்ய விரும்புவார்கள். (ஆனால்) சில சமயம் அவற்றைச் செய்ய மாட்டார்கள். மக்களும் அதைச் செய்து அவர்களின் மீது அது அச்சமே இதற்கு காரணம். நபி(ஸல்) அவர்கள் ஒருபோதும் லுஹாத் தொழுததில்லை. நான் லுஹாத் தொழுது வருகிறேன். [புஹாரி எண் 1128 ]

இந்த இரு ஹதீஸ்களை கவனமாக பாருங்கள். லுஹாத் தொழுகை இல்லை என்று அன்னைஆயிஷா[ரலி] அவர்கள் சொல்லவில்லை. நபி[ஸல்] அவர்கள் லுஹாத் தொழுகை தொழுததில்லை அதற்கு காரணம் மக்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம்தான். என்று கூறிவிட்டு நான் லுஹாத் தொழுகை தொழுகிறேன் என்று கூறுகிறார்கள். ஆக அன்னையின் கருத்து லுஹாத்தொழுகை இல்லை என்பதல்ல. நபி[ஸல்] அவர்கள் தொழவில்லை என்பதுதான். உண்மை இவ்வாறிருக்க 'அடியோடு' மறுத்தார்கள் என்று கூறுவது எப்படி என்பதை சம்மந்தப்பட்டவர்கள் விளக்கவேண்டும்.

இப்னு உமர்[ரலி] அவர்கள் சம்மந்தமாக உள்ள ஹதீஸ்;

முவர்ரிக் அறிவித்தார். நீங்கள் லுஹாத் தொழுவது உண்டா? என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'இல்லை' என்றார்கள். உமர் தொழுவார்களா? என்று கேட்டேன். அதற்கவர்கள் 'இல்லை' என்றார்கள். அபூ பக்ர்(ரலி தொழுவார்களா? என்று கேட்டேன். அதற்கும் 'இல்லை' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுவார்களா? என்று கேட்டேன். 'அது தெரியவில்லை' என்றார்கள். [புஹாரி எண் 1175 ]

இந்த செய்தியில் லுஹாத் தொழுகை இல்லை என்று இப்னு உமர்[ரலி] அவர்கள் சொல்லவில்லை. நபி[ஸல்] அவர்கள் தொழுதார்களா என்ற கேள்விக்கு 'தெரியவில்லை' என்று தான் பதிலளிக்கிறார்கள் . இது எப்படி மறுத்ததாக ஆகும்..?

நபி[ஸல்] அவர்கள் லுஹாத் தொழுகை தொழுதார்களா.. இல்லையா?

நபி[ஸல்] அவர்கள் லுஹாத்தொழுகை தொழுததாக உம்மு ஹானி[ரலி] அவர்களைத்தவிர வேறு யாரும் எமக்கு அறிவிக்கவில்லை என்று இப்னு அபீ லைலா(ரஹ்) என்பார் கூறுகிறார் [புஹாரி எண் 4292 ] மேலும், உம்மு ஹானி [ரலி] அவர்கள் சம்மந்தப்பட்ட ஹதீஸில்,

மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி(ஸல்) அவர்களை, அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) மறைத்துக் கொண்டிருக்க, அவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது, அவர்களுக்கு நான் சலாம் உரைத்தேன். அவர்கள், 'யார் அது?' என்று கேட்டார்கள். நான், 'அபூ தாலிபின் மகள் உம்மு ஹானீ" என்று பதிலளித்தேன். உடனே அவர்கள், 'உம்மு ஹானீயே! வருக! வருக! (உங்களுக்கு நல்வரவு கூறுகிறேன்)" என்றார்கள். அவர்கள் குளித்து முடித்ததும் ஒரே ஆடையை (மேனியில்) சுற்றியவர்களாக எழுந்து நின்று எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என் தாயின் மகன் (என் சகோதரர்) அலீ, நான் புகலிடம் அளித்திருக்கும் ஒரு மனிதரை ஹுபைராவின் மகனான இன்னாரை தான் கொல்லப் போவதாகக் கூறுகிறார்" என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உம்மு ஹானியே! நீ அபயம் அளித்தவருக்கு நாமும் அபயம் அளித்து விட்டோம் (எனவே கவலை வேண்டாம்)" என்று கூறினார்கள். (நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்ற) அந்த நேரம் முற்பகல் நேரமாக இருந்தது. [புஹாரி எண் 3171 ]

இந்த பொன்மொழியில், நபி[ஸல்]அவர்கள் எட்டுரக்அத்துகள் தொழுததாக வருகிறது. ஆனால் லுஹா தொழுகை இரு ரக்அத்துகள் என்று அபூ ஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கும் செய்தி கூறுகிறது. எனவே நபி[ஸல்] அவர்கள் தொழுதது லுஹாத்தொழுகை அல்ல என்றும், உம்முஹானி[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களிடம் சென்ற நேரத்தையே இங்கே குறிப்பிடுகிறார்கள் என்றும் இந்த ஹதீஸுக்கு நிகழ்கால அறிஞர் ஒருவர் விளக்கமளித்தார். ஆக நபி[ஸல்] அவர்கள் லுஹாத்தொழுகை தொழுமாறு ஏவியதை எந்த சகாபியும் குறிப்பாக அன்னை ஆயிஷா[ரலி]யும்-இப்னு உமர்[ரலி]யும் மறுக்கவில்லை. ஆனால் நபி[ஸல்] அவர்கள் லுஹாத் தொழுகை தொழுதார்களா என்பதில் தான் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மட்டும் மாற்றுக்கருத்து கொள்கிறார்கள். எனவே 'அடியோடு'மறுத்தார்கள் என்பது தவறாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக