புதன், 2 செப்டம்பர், 2009

இவர் 'எடுப்பார் கைப்பிள்ளை அல்ல' ஏகத்துவ படையின் சேனாதிபதி!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்கள்;
(கைபர் போரின் போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நானை (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப் போகிறேன். அல்லாஹ் அவரின் கரங்களில் வெற்றியை அளிப்பான்" என்று சொன்னார்கள். எனவே, மக்கள் தம்மில் எவரிடம் அது கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கியிருந்தனர். காலையானதும மக்களில் ஒவ்வொருவரும் தன்னிடம் அது கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட வண்ணம் அல்லாஹ்வின் தூதரிடம் சென்றனர். நபி(ஸல்) அவர்கள், 'அலீ இப்னு அபீ தாலிப் எங்கே?' என்று கேட்டார்கள். மக்கள், 'அவருக்குக் கண்வலி, இறைத்தூதர் அவர்களே!" என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி) வந்தவுடன் அவர்களுடைய இரண்டு கண்களிலும் (தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காக (நலத்திற்கு) பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அவர்கள் (வலி நீங்கி) குணமடைந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் நம்மைப் போன்று (ஒரே இறைவனுக்கு கீழ்படிந்தவர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா? என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவர்களின் களத்தில் இறங்கும் வரை நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு (வரும்படி) அழையுங்கள். மேலும், இஸ்லாத்தில் அவர்களின் மீது கடமையாகிற அல்லாஹ்விற்குச் செய்யவேண்டிய கடமைகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியை அளிப்பது (அரபுகளின் அருஞ் செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 3701

அமீருல் முஃமினீன் உஸ்மான்[ரலி] அவர்களை கொன்றவர்களை கைது செய்யும் துணிவு அலீ[ரலி] அவர்களுக்கு இருக்கவில்லை. அலீ[ரலி] ஒரு எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தார் என்றெல்லாம் சிலர் அலீ[ரலி] அவர்களை விமர்சித்ததுண்டு. மேலே உள்ள பொன்மொழியை பாருங்கள். இஸ்லாமிய சேனையின் கொடியை ஒவ்வொருவரும் நம்மிடத்திலே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தந்துவிட மாட்டார்களா என்று ஆசைப்பட்ட நேரத்தில், இஸ்லாமிய சேனையின் சேனாதிபதியாக அலீ[ரலி] அவர்களை நியமித்து அவர்கள் கையில் இஸ்லாமிய கொடியை நபி[ஸல்] அவர்கள் வழங்குகிறார்கள் எனில், அலீ[ரலி] அவர்களின் வீரத்தையும்-சிறப்பையும் புரிந்து கொள்ளலாம். அதோடு, கொடியை பெற்றுக்கொண்ட அலீ[ரலி] அவர்கள், 'நம்மை போன்று முற்றிலும் அல்லாஹ்வுக்கு கீழ்படியும் வரை அவர்களோடு நான் போரிடட்டுமா? என்ன்று கர்ஜித்தார்களே! இது அவர்களின் வீரத்திற்கு எடுத்துக்காட்டல்லவா? ஆக, உஸ்மான்[ரலி] அவர்களை கொலை செய்த பாவிகளை தண்டிப்பதில் அலீ[ரலி] பயந்தவர்கள் அல்ல. மாறாக அன்றைய சூழல் காரணமாக இருக்கலாம்.[அல்லாஹ் அறிந்தவன்] இதை வைத்தது ஒரு மாவீரரை 'எடுப்பார் கைப்பிள்ளை' என்று விமர்சிப்பவர்கள் இறைவனுக்கு அஞ்சிக்கொள்ளட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக