திங்கள், 21 செப்டம்பர், 2009

சஹாபாக்களை பின்பற்றக்கூடாது என்பதற்கு அவர்களது 'அறியாமை' அளவுகோளாகுமா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
இஸ்லாத்தின் அடிப்படை அல்-குர்ஆனும்-ஹதீஸும்தான். இவை இரண்டை மட்டுமே ஒரு முஸ்லிம் பின்பற்ற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்ககூடாது. இவையிரண்டும் அல்லாத வேறு எதனையும்-யாரையும் குறிப்பாக சகாபக்களைக்கூட பின்பற்றக்கூடாது என்பதற்கு சஹாபாக்களின் தவறுகள் என்று கருதப்படுபவைகளை பட்டியலிடவேண்டிய அவசியமில்லை. மாறாக குர்ஆனையும்-ஹதீஸையும் பின்பற்றுவதை வலியுறுத்தும் வசனங்களும், நபிமொழிகளும் ஏராளம் உண்டு. அவைகளை எடுத்துவைத்தே குர்ஆண்-ஹதீஸ் மட்டுமே பின்பற்றப்பட வேண்டியது என்பதை நிலை நாட்டமுடியும். நிலை இவ்வாறிருக்க சகாபாக்களை பின்பற்றக்கூடாது என்பதற்கு அவர்கள் செய்ததாக கருதப்படும் தவறுகளை மட்டுமல்லாது இன்னொரு முக்கியமான[?] அளவுகோலை வைக்கிறார்கள். அதாவது சஹாபாக்களில் பலருக்கு பல சட்டங்கள் தெரியவில்லை. எனவே இவர்களை எப்படி பின்பற்றுவீர்கள் என்று சொல்லி ஒரு பட்டியல் போடுகிறார்கள்;
  • ருஹுஉ செய்யும்போது கைகளை முட்டுக்கால் மீது வைக்கவேண்டும் என்ற சட்டம் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களுக்கு தெரியவில்லை.
  • முத்ஆ திருமணம் தடை செய்யப்பட்டது இப்னு அப்பாஸ்[ரலி] அவர்களுக்கு தெரியவில்லை.
  • தமத்துவு ஹஜ் அனுமதி பற்றி உமர்[ரலி] மற்றும் உஸ்மான்[ரலி] ஆகியோருக்கு தெரியவில்லை.
  • விந்து வெளியானாலும் வெளியாகாவிட்டாலும் குளிப்பு கடமை என்ற சட்டம் உஸ்மான்[ரலி], அலீ[ரலி] போன்ற சகாபக்களுக்கு தெரியவில்லை.
  • இஹ்ராம் கட்டிய நிலையில் திருமணம் செய்யக்கூடாது என்ற சட்டமிருக்க, இஹ்ராம் கட்டிய நிலையில் நபி[ஸல்] அவர்கள் திருமணம் செய்ததாக இப்னு அப்பாஸ்[ரலி] கூறுகிறார்.
  • குளிப்புக்கடமையான நிலையில் ஸஹர் நேரத்தை அடைந்தால் அதே நிலையில் ஸஹர் செய்யலாம் என்ற சட்டம் அபூ ஹுரைரா[ரலி], இப்னு அப்பாஸ்[ரலி] ஆகியோருக்கு தெரியவில்லை.
  • லுஹாத்தொழுகையை நபி[ஸல்] அவர்கள் தொழுதது ஆயிஷா[ரலி] மற்றும் இப்னு உமர்[ரலி] ஆகியோருக்கு தெரியவில்லை.
  • பிறரது இல்லத்தில் நுழைவது குறித்த சட்டம் உமர்[ரலி] அவர்களுக்கு தெரியவில்லை.
  • தயம்மும் சலுகை இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களுக்கு தெரிந்தும் மறுக்கிறார்.
  • பிளேக் நாய் வந்தால் என்ன செய்வது என்ற சட்டம் ஒரு ஸஹாபியை தவிர[?]யாருக்கும் தெரியவில்லை.
  • இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசலாம் என்ற சட்டம் இன்னு உமர்[ரலி] அவர்களுக்கு தெரியவில்லை.

இவ்வாறாக பட்டியல் நீள்கிறது. தவ்ஹீதை அடிப்படையாக கொண்ட யாரும் நாம் அறிந்தவரை சகாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, குர்ஆணிலும்-ஹதீஸிலும் தெளிவாக கூறப்பட்ட விஷயங்கள் நீங்கலாக, எதற்கு விளக்கம் தேவையுள்ளதோ அவைகளுக்கு இன்றைய அறிஞர்களின் கருத்தைவிட சஹாபாக்களின் கருத்துக்கு முன்னுரிமை தரவேண்டும். ஏனெனில் அவர்கள் அரபியை தாய்மொழியாக கொண்டவர்கள்- நபி[ஸல்] அவர்களிடம் நேரடி பாடம் பயின்ற, நபி[ஸல்] அவர்களால் சிலாகித்து சொல்லப்பட்டவர்கள். இறையச்சத்திலும்-பேனுதளிலும்சிறந்தவர்கள் என்பதால்தான். சஹாபாக்களை பின்பற்றவேண்டும் என்று சொல்லும் சுன்னத் வல் ஜமாத்தினரில் சில பிரிவினர் கூட ஒரு குறிப்பிட்ட ஸஹாபியை பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. ஒட்டுமொத்த சகாபிகளையும் பின்பற்றவேண்டும் என்றே சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸஹாபியை பின்பற்ற வேண்டும் என்று சொன்னால்தான் 'நீங்கள் பின்பற்ற சொல்லும் சகாபிக்கு இன்னின்ன சட்டங்கள் தெரியவில்லை. எனவே எப்படி பின்பற்ற முடியும் என்று கேள்வி எழுப்ப வழியுண்டு. ஆனால் ஒட்டுமொத்த சகாபிகளையும் பின்பற்ற வேண்டும் எனும்போது ஒரு சகாபியிடம் கிடைக்காத சட்டத்தை வேறு ஒரு சகாபியிடம் பெற்றுக்கொள்ள முடியும். எனவே சகாபாக்களுக்கு பல்வேறு சட்டங்கள் தெரியவில்லை. எனவே அவர்களை பின்பற்ற கூடாது என்ற வாதம் சரியல்ல. மாறாக குர்ஆணை-ஹதீஸை பின்பற்ற வலியுறுத்தும் கருத்துக்களை எடுத்துக்காட்டியதோடு நிறுத்தப்படிருக்கவேண்டும்.

அடுத்து சகாபாக்களுக்கு சில சட்டங்கள் தெரியாமல் போனது அவர்களின் குற்றமா என்றால் இல்லை. எல்லா சகாபாக்களும் எல்லா நேரமும் நபி[ஸல்] அவர்களோடு ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை. சில நேரம் நபியவர்களோடு இருக்கும் அவர்கள் சில நேரம் தொழில்-உழைப்பு என்றும் சென்றிருக்கிறார்கள் . நபியவர்களின் அவையில் இல்லாத நேரத்தில் நபி[ஸல்] அவர்களால் கூறப்படும் சட்டத்தை ஆர்வத்தோடு கேட்டுத்தெரிந்து கொண்ட சான்றுகளும் உண்டு. மேலும் ஒரு சட்டத்தில் ஆரம்பநிலை ஒன்றாக இருக்கும்- பின்னர் மாற்றப்பட்ட நிலை ஒன்றாக இருக்கும். இதில் ஆரம்ப நிலையை மட்டுமே அறிந்த ஸஹாபி , மாற்றப்பட்ட நிலை அறியாத நிலையில், முதல் சட்டத்தை அமுல்படுத்துவதோ -அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதோ குற்றமாகுமா என்பதை சம்மந்தப்பட்டவர்கள் விளக்க கடமைப்பட்டுள்ளார்கள். எனவே சகாபாக்களை பின்பற்றக்கூடாது என்பதை வரவேற்கிறோம். அதற்காக சகாபாக்களை 'அறியாதவர்கள்' 'அறிந்தும் முரணாக செயல்பட்டார்கள் ' என்ற ரீதியில் வார்த்தைப் பிரயோகங்களை கையாள்வது யாராக இருந்தாலும் அதை தவிர்ந்து கொள்ள உபதேசிக்கிறோம். ஏனெனில் அனைத்தையுமறிந்த ஒருவர் இவ்வுலகில் இதுவரை பிறக்கவுமில்லை. இனி பிறக்கப்போவதுமில்லை. அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக