புதன், 30 செப்டம்பர், 2009

அன்னலாரோ மரணப்படுக்கையிலே! அவர்தம் தோழர்களோ ஆட்சி பற்றிய ஆலோசனையிலே..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
இஸ்லாத்தை தூய வடிவில் சொல்லும்[?] இணைய தளத்தில் ஒரு கேள்வி;நீங்கள் சகாபாக்களை 'கிரிமினல்' என்று சொன்னதாகவும் மேலும், 'அண்ணன் எப்ப போவான்; திண்ணை எப்ப காலியாகும்' போன்றவாறு பேசியுள்ளீர்கள் என்று கூறுகிறார்களே உண்மையா?


பதில்; [இரண்டாம் பகுதி]
நபி[ஸல்] அவர்கள் மரணப்படுக்கையில் கிடக்கும்போது அவர்களின் குடும்பத்து நபித்தோழர்கள் ஆட்சிப்பொறுப்பை பற்றி ரகசிய ஆலோசனை நடத்தியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நபிகள் நாயகம் மரணப்படுக்கையில் கிடக்கும்போதே அதை நமக்காக கேட்போம் என்று பேசியது அருவருப்பாகவே தெரிகிறது.திண்ணை எப்போது காலியாகும் என்ற மனப்பான்மை இதில் தெள்ளத்தெளிவாக தெரியும்போது என் விமர்சனத்தில் தவறும் இல்லை. நபிகள் நாயகம் மரணப்படுக்கையில் கிடக்கும்போது இப்படி நடக்கலாமா என்று நபியை நேசிப்பவர்கள் எண்ணுவார்கள். நபியை விட்ட நபித்தோழரை நேசிப்பவர்கள் எப்படி ஸஹாபியை விமர்சிக்கலாம் என்பார்கள். எனது இந்த விமர்சனத்தை உரிய முறையில் கவனிக்காதவர்களுக்காக நான் எனக்கு சரி என்று பட்டதை மாற்றிக்கொள்ளமுடியாது. உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மார்க்க ஆதாரத்துடன் எனது விமர்சனம் தவறு என்று சுட்டிகாட்டினால் அது சரியாகவும் இருந்தால் நான் மாற்றிக்கொள்வேன்.

அன்பானவர்களே! அந்த 72 கூட்டம் யார் என்ற தலைப்பில் உரையாற்றிய இந்த அறிஞர் அதில், 'அண்ணன் எப்ப சாவான்; திண்ணை எப்ப காலியாகும்' என்று காத்துக்கிடந்தவர்களாக அன்சாரித்தோழர்களை அடையாளம் காட்டினார். இப்போது அதை மறந்தோ-அல்லது மறைத்தோ, 'திண்ணை எப்போது காலியாகும் என்ற மனநிலையில் நபி[ஸல்] அவர்களின் குடும்பத்து நபித்தோழர்கள் இருந்ததாக இப்போது கூறுகிறார். சரி! இதற்காகவது உரிய சான்றுகளை வைத்திருக்கலாம் அதையும் செய்யவில்லை. எனவே நபி[ஸல்] அவர்களின் குடும்பத்து நபித்தோழர்கள் அத்தகைய மனநிலையில் இருந்தார்களா என்று ஹதீஸ்களை பார்த்தால் இந்த அறிஞரின் கூற்றுக்கு மாற்றமான கருத்தே கிடைக்கிறது. இதோ;

முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார் அப்துல்லாஹ் இப்னு கஅப் இப்னு மாலிக் அல் அன்சாரி(ரலி) - (இவருடைய தந்தை) கஅப்பின் மாலிக்(ரலி) (தபூக் போரில் கலந்துகொள்ளத் தவறியதற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஒருவராயிருந்தார். அன்னார் எனக்கு அறிவித்தார்கள்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) எனக்குத் தெரிவித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களிடமிருந்து அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) (அவர்களை நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், 'அபுல் ஹசனே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?' என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்'' என்று கூறினார்கள். உடனே அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), அலீ(ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாள்களுக்குப் பிறகு, (பிறரின்) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆki விடப்போகிறீர்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரைவில் தம் இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே கருதுகிறேன். மரணத்தின்போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாணம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். 'இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?' என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்'' என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரலி), 'நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன்'' என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 4447

இந்த ஹதீஸை கவனமாக படியுங்கள்;
  • நபி[ஸல்] அவர்களின் மரணம் நிச்சயம் என்பதைகருதிய அப்பாஸ்[ரலி] அவர்கள், 'இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?' என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்'' என்றுதான் கூறுகிறார்கள். சுருங்க சொன்னால் அடுத்த ஆட்சியாளர் யார் என்பதை கேட்டு தெரிந்து கொள்வோம் என்பதுதான் அப்பாஸ்[ரலி] அவர்களின் நிலைப்பாடு. அதைக்கூட அலீ[ரலி] மறுத்துவிடுகிறார்கள். ஆக இறுதி உபதேசம் என்ற அடிப்படையில் தகவலாக கேட்போம் என்று அப்பாஸ்[ரலி] அவர்கள் கருதியதை,

'நபிகள் நாயகம் மரணித்து விட்டால் ஆட்சிப்பொறுப்பை நம்மிடம் தரமாட்டார்கள்;நபிகள் நாயகம் மரணப்படுக்கையில் அதை நமக்காக கேட்போம் என்று நபி[ஸல்] அவர்கள் குடும்பத்து நபித்தோழர்கள் பேசினார்கள் என்பது அப்பட்டமான அவதூரல்லவா? அந்த உத்தமர்களை இன்றைய அரசியல்வாதிகள் போல் கருதிய காரணத்தால் வந்த வர்ணனையல்லவா? இதுதான் சகாபாக்களை கண்ணியப்படுத்தும் வழிமுறையோ..?

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

தொடர்புடைய இடுகை;http://sahaabaakkal.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%5B%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%5D

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக