செவ்வாய், 15 செப்டம்பர், 2009

படைக்களத்திலும் பாசத்தை பொழிந்தவர்!

பத்ர் போரின் போது நபி[ஸல்] அவர்கள் முஸ்லிம்களின் படையை அணிவகுத்து நிற்கச்செய்தார்கள். படையினரை சரிசெய்வதற்காக ஒரு குச்சியை எடுத்து, வரிசையில் சரியாக நிற்காத ஸவ்தா இப்னு கஸிய்யா[ரலி] அவர்களின் வயிற்றில் குச்சியால் லேசாக குத்தி சரியாக நிற்கும்படி பணித்தார்கள். அப்போது ஸவ்தா இப்னு கஸிய்யா[ரலி] அவர்கள், இறைத்தூதரே! எனக்கு நீங்கள் துன்பம் தந்துவிட்டீர்கள்! எனவே நான் அதற்கு பரிகாரம் காண நாடுகிறேன் என்றார்கள். உடனே நபி[ஸல்] அவர்கள் தனது வயிற்றைக்காட்டிபரிகாரம் தேடிக்கொள்ளுங்கள் என்றார்கள். உடனே ஸவ்தா இப்னு கஸிய்யா[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களை கட்டியணைத்து அவர்களின் வயிற்றில் முத்தமிட்டார்கள். இதைக்கண்ட நபி[ஸல்] அவர்கள், இப்படி செய்ய உம்மை தூண்டியது எது? என்று வினவினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதரே! இன்றைய நிலையை நீங்கள் அறிவீர்கள். எனவே உங்களின் தோலுடன் இணைந்து பிரிவதையே நான் விரும்பினேன் என்று ஸவ்தா இப்னு கஸிய்யா[ரலி] அவர்கள் கூறினார்கள். நபி[ஸல்] அவர்கள் ஸவ்தா இப்னு கஸிய்யா[ரலி] அவர்களுக்காக துஆ செய்தார்கள்.

ஆதாரம்; தப்ரானி
பத்ர் களத்தில் முஸ்லீம் அணியினர் வெற்றி அல்லது வீரமரணம் என்ற இரண்டில் ஒன்றை எதிர்பார்த்தவர்களாக நின்ற நேரத்தில், ஒரு வேளை மரணம் நம்மை தழுவும் நிலை வரலாம் . எனவே நம்முடைய இறப்பிற்கு முன்பாக நம் உயிரினும் மேலான இறைத்தூதர் அவர்களின் திருமேனியை ஆரத்தழுவி நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்வோம் என்று ஸவ்தா இப்னு கஸியா[ரலி] அவர்கள் என்னி, நபி[ஸல்] அவர்களை ஆரத்தழுவி முத்தமிடுகிறார்கள் எனில், தங்களின் உயிர் இந்த பத்ர் களத்தில் போவதை பற்றி அவர்களுக்கு கவலையில்லை. தங்களின் உயிரினும் மேலான நபியை பிரிவது குறித்தே அங்கே சிந்தித்தார்கள் என்பதை பார்க்கும் போது அந்த தியாக சீலர்களின் வாழ்க்கை உள்ளபடியே நம்மை மெய் சிலிர்க்கச்செய்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக