வியாழன், 22 செப்டம்பர், 2011

''அஞ்சாநெஞ்சர்'' அபூதர் அல் கிஃபாரி[ரலி]

بسم الله الرحمن الرحيم


அபூ ஜம்ரா(ரஹ்) அறிவித்தார்;
எங்களிடம் இப்னு அப்பாஸ்(ரலி), 'அபூ தர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று கேட்க, நாங்கள், 'சரி (அறிவியுங்கள்)" என்றோம். அப்போது அவர்கள், அபூதர்[ரலி] அவர்கள் தன்னிடம் கூறியதாக  பின்வருமாறு கூறினார்கள்:

''நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது 'ஒருவர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரர் (அனீஸ்) இடம், 'நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரின் செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு வா" என்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார்.

 நான், 'உன்னிடம் என்ன செய்தி உண்டு" என்று கேட்டேன். 'நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கிற ஒரு மனிதராக அவரைக் கண்டேன்" என்றார். நான் அவரிடம், 'போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லை" என்று கூறினேன். பிறகு தோலினால் ஆன (தண்ணீர்ப்)பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன்.

 [நபி ஸல்] அவர்களை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக் கொள்ளாமலிருக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. (வேறு உணவு இல்லாததால்) ஸம் ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன். அப்போது அலீ(ரலி) (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார். (என்னைக் கண்டதும்), 'ஆள் (ஊருக்குப்) புதியவர் போன்று தெரிகிறதே" என்று கேட்டார். நான், 'ஆம்' என்றேன். உடனே அவர்கள், 'அப்படியென்றால் (நம்) வீட்டிற்கு நடங்கள் (போகலாம்)' என்று கூறினார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும் (எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன்.

காலையானதும நபி(ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் நபி(ஸல்) அவர்களைப்  பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ(ரலி) என்னைக் கடந்து சென்றார்கள். 'மனிதர் (தான் தங்க வேண்டியுள்ள) தன் வீட்டை அடையாளம் தெரிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?' என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான், 'இல்லை' என்றேன். உடனே, அலீ(ரலி), 'என்னுடன் நடங்கள்' என்று சொல்லிவிட்டு, 'உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு, 'நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்" என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், 'அவ்வாறே செய்கிறேன்" என்று கூறினார்கள்.

நான் அப்போது 'இங்கே தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டபடி ஒருவர் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரை அவரிடம் பேசும்படி அனுப்பினேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. எனவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். எனவே, என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில், (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகிற ஒருவனைக் காண்பேனாயின், என் செருப்பைச் சரி செய்பவனைப் போல் சுவரோராமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க் கொண்டிருங்கள்" என்று கூறினார்கள்.

இறுதியில், அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்" என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அபூ தர்ரே! (நீ இஸ்லாத்தை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வை. உன் ஊருக்குத் திரும்பிச் செல். நாங்கள் மேலோங்கிவிட்ட செய்தி உனக்கு எட்டும்போது எங்களை நோக்கி வா" என்று கூறினார்கள்.

அதற்கு நான், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக்கிடையே உரக்கச் சொல்வேன்" என்று சொல்லிவிட்டு, இறையில்லத்திற்கு வந்தேன். அப்போது குறைஷிகள் அங்கே இருந்தனர். நான், 'குறைஷிக் குலத்தாரே!" அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை' என்று நான் உறுதி கூறுகிறேன். 'முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் நான் உறுதி கூறுகிறேன்" என்று சொன்னேன்.

உடனே, அவர்கள் 'இந்த மதம் மாறி(ய துரோம்)யை எழுந்து சென்று கவனியுங்கள்" என்று கூறினார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப்பட்டேன். அப்போது அப்பாஸ்(ரலி) என்னை அடையாளம் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்) கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி, 'உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?)" என்று கேட்டார்கள். உடனே, அவர்கள் என்னைவிட்டு விலகி விட்டார்கள்.

மறுநாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போன்றே சொன்னேன். அவர்கள், 'இந்த மதம் மாறி(ய துரோம்)யை எழுந்து சென்று கவனியுங்கள்" என்று கூறினார்கள். நேற்று என்னிடம் நடந்து கொண்டதைப் போன்றே நடந்து கொண்டார்கள். அப்பாஸ்(ரலி) என்னைப் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். நேற்று அப்பாஸ் அவர்கள் சொன்னதைப் போன்றே (அன்றும்) கூறினார்கள்.

(இதை அறிவித்து பிறகு) இப்னு அப்பாஸ்(ரலி), 'இது அபூ தர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அபூ தருக்கு கருணை காட்டுவானாக!" என்று கூறினார்கள். [புஹாரி எண் 3522 ]

மேற்கண்ட பொன்மொழியில் இஸ்லாத்தை நாடி, நபியவர்களை தேடி, சத்திய மார்க்கத்தில் சங்கமித்த அபூதர்[ரலி] அவர்களிடம், அபூதர் அவர்களே! உங்களின் சன்மார்க்க பிரவேசத்தை சில காலம் மறைத்து கொள்வீராக! என்று நபி[ஸல்] அவர்கள் சொல்லியும், அபூதர்[ரலி] அவர்களின் உள்ளத்தில் புகுந்த ஏகத்துவ கலிமா அவர்களை எட்டுத்திக்கும் முரசறைந்து ஏகத்துவத்தை முழங்கச் செய்தது. அதனால்தான் அன்றைக்கு முஸ்லிம் என்றாலே [உயிர்]மூச்சுக்கு உத்திரவாதமில்லை என்ற காலகட்டத்தில், 
குறைஷிகள் முன்பாக உரக்க  கர்ஜித்தார் ஏகத்துவ கலிமாவை; ஏந்தல் அபூதர்[ரலி] அவர்கள்.

பொதுவாக இன்று தலைவர்கள் அதிகார வர்க்கத்திற்கு எதிராக சவால் விடுகிறார்கள் எனில், அவர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கும் தைரியம்தான். அதே தலைவர் தனிமைப்படுத்தப்பட்டால் பயத்தின் காரணமாக அடங்கிவிடுவார். அதுபோல் பத்துபேர் கூடியிருக்கும் நிலையில் ஒருவருக்குள்ள தைரியம் தனிமையில் இருக்கும்போது இருப்பதில்லை. ஆனால் ஒரு முஸ்லிம்  கூட்டமாக இருந்தாலும் சரி, தனிமையில் இருந்தாலும் சரி, சத்தியத்தை சொல்வதற்கும் அதை செயல்படுத்துவதற்கும் தயங்கக்கூடாது என்பதற்கு, இதோ! தனி மனிதராக ஏகத்துவ சங்கநாதம் முழங்கிய  அபூதர் அல் கிஃபாரி[ரலி] அவர்களின் வாழ்வு, அசத்தியத்திற்கு எதிராக, சத்தியத்தின் குரலை எங்கும் எதிலும் ஒலிக்கும் துணிவை நமக்குத் தரும் என்பதில் ஐயமில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ், அபூதர்[ரலி] அவர்களை பொருந்திக் கொண்டு, சுவனத்தில் அவர்களின் அந்தஸ்த்தை உயர்த்துவானாக!

புதன், 14 செப்டம்பர், 2011

தன்னுயிர் தந்து தாஹா நபியை காத்தவர்.


بسم الله الرحمن الرحيم


இறை மார்க்கத்தை ஏற்று, இறைத்தூதருக்கு முன்பாகவே மதீனா ஹிஜ்ரத் செய்து, அழைப்புப் பணி செய்த முதலாமவர் முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்களாவர். இந்த நபித்தோழர் உஹது போர்களத்தில் ஷஹீதானார்கள் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். ஆனால் யாருக்காக ஷஹீதானார்கள் என்பது  நம்மில் அறிந்தவர்கள் குறைவே. இப்போது அந்த உஹது போர்க்களத்தை நம் கண் முன் கொண்டு வருவோம்.

உர்வா பின் அஸ்ஸுபைர்[ரஹ்] அவர்கள் கூறியதாவது; பனூஜுமஹ  குலத்தாரில் ஒருவனான உபை இப்னு கலஃப், ''முஹம்மதை நிச்சயம் நான் கொல்வேன்'' என்று மக்காவில் வைத்து சத்தியம் செய்திருந்தான். இந்த சத்தியம் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கு தெரியவந்தபோது, ''இல்லை; அல்லாஹ் நாடினால் நான் அவனைக் கொல்வேன்'' என்று கூறியிருந்தார்கள்.

உஹத் நாள் வந்தபோது உபை, இரும்புக் கவசத்தால் தன்னை மறைத்துக் கொண்டு ''முஹம்மத் தப்பி விட்டால் நான் தப்பமுடியாது'' என்று கூறியவாறு வந்தான். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை கொல்லலாம் என நினைத்து அவர்களை அவன் தாக்கினான்.

உடனே முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்கள், தமது உயிரை கொடுத்தாவது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் உயிரை காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காக நபி[ஸல்] அவர்களுக்கு குறுக்கே வந்தார்.[இறைத்தூதர் மீதான உபை'யின் அந்த தாக்குதலை தம் மீது வாங்கிக் கொண்டார்] அதனால் முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்கள் ஷஹீதானார்கள். பினனர் உபை இப்னு கலஃப் நபி[ஸல்] அவர்களால் கொல்லப்பட்டான்.
[ஹதீஸ் சுருக்கம், நூல்; ஹாகிம்]

அன்பானவர்களே! இன்றைக்கு முஸ்லிம்களில் சிலர் சினிமா மாயையில் மயங்கி, உடல் மண்ணுக்கு; உயிர் .........க்கு என்று திரிவதை பார்க்கிறோம். மக்களை ஏமாற்றும் கூத்தாடிகளை மகானாக நினைத்து இவர்கள் மதி மயங்கித் திரிகிறார்கள். ஆனால் அருமை நபித்தோழர் முஸ்அப்[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் உயிரை காக்க தன்னுயிரை தியாகம் செய்து, இன்றைக்கும் அவர்கள் தியாகம் போற்றப்படக் கூடிய அளவுக்கு வாழ்ந்துள்ளார்கள் என்பதை நினைத்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம். மேலும், இந்த தியாகி முஸ்அப்[ரலி] அவர்கள் ஷஹீதான பின் அவர்களின் நிலை என்ன?

இப்ராஹீம் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார்.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் அவரின் உணவு கொண்டு வந்து வைக்கப்பட்டது. உடனே அவர், 'முஸ்அப்
(ரலி) கொல்லப்பட்டபோது.. அவர் என்னைவிடச் சிறந்தவராக இருந்தார். அவருக்குக் கஃபனிடுவதற்கு ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஹம்ஸா(ரலி) அல்லது வேறொருவர் கொல்லப்பட்டபோது.. அவரும் என்னைவிடச் சிறந்தவரே... அவருக்குக் கஃபனிடுவதற்கும் ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. எனவே, நல்லவை(க்கான நற்கூலி)களெல்லாம் எனக்கு இவ்வுலக வாழ்விலேயே முன் கூட்டியே கொடுக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்!" எனக் கூறிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.
நூல்; புஹாரி.

மேற்கண்ட செய்தியில், மாபெரும் உயிர்த்தியாகியான முஸ்அப்[ரலி] அவர்களுக்கு கபனிடக்கூட முழுமையான துணி இல்லாத அளவுக்கு அவரின் இஸ்லாமிய வாழ்க்கை ஏழ்மை நிலையில் கழிந்துள்ளது என்பதை காணும்போது கண்கள் கசிகின்றன. அந்த ஏழ்மை வாழ்க்கையிலும் இனிமை கண்டு, இம்மையை வென்று மறுமையை
தனதாக்கிய முஸ்அப்[ரலி] அவர்களின் மறுமை அந்தஸ்தை  அல்லாஹ் உயர்த்துவானாக! முஸ்அப்[ரலி] அவர்களின் வாழ்க்கை மூலம் முஸ்லிம்களுக்கு படிப்பினையை வழங்குவனாக!