புதன், 14 செப்டம்பர், 2011

தன்னுயிர் தந்து தாஹா நபியை காத்தவர்.


بسم الله الرحمن الرحيم


இறை மார்க்கத்தை ஏற்று, இறைத்தூதருக்கு முன்பாகவே மதீனா ஹிஜ்ரத் செய்து, அழைப்புப் பணி செய்த முதலாமவர் முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்களாவர். இந்த நபித்தோழர் உஹது போர்களத்தில் ஷஹீதானார்கள் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். ஆனால் யாருக்காக ஷஹீதானார்கள் என்பது  நம்மில் அறிந்தவர்கள் குறைவே. இப்போது அந்த உஹது போர்க்களத்தை நம் கண் முன் கொண்டு வருவோம்.

உர்வா பின் அஸ்ஸுபைர்[ரஹ்] அவர்கள் கூறியதாவது; பனூஜுமஹ  குலத்தாரில் ஒருவனான உபை இப்னு கலஃப், ''முஹம்மதை நிச்சயம் நான் கொல்வேன்'' என்று மக்காவில் வைத்து சத்தியம் செய்திருந்தான். இந்த சத்தியம் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கு தெரியவந்தபோது, ''இல்லை; அல்லாஹ் நாடினால் நான் அவனைக் கொல்வேன்'' என்று கூறியிருந்தார்கள்.

உஹத் நாள் வந்தபோது உபை, இரும்புக் கவசத்தால் தன்னை மறைத்துக் கொண்டு ''முஹம்மத் தப்பி விட்டால் நான் தப்பமுடியாது'' என்று கூறியவாறு வந்தான். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை கொல்லலாம் என நினைத்து அவர்களை அவன் தாக்கினான்.

உடனே முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்கள், தமது உயிரை கொடுத்தாவது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் உயிரை காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காக நபி[ஸல்] அவர்களுக்கு குறுக்கே வந்தார்.[இறைத்தூதர் மீதான உபை'யின் அந்த தாக்குதலை தம் மீது வாங்கிக் கொண்டார்] அதனால் முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்கள் ஷஹீதானார்கள். பினனர் உபை இப்னு கலஃப் நபி[ஸல்] அவர்களால் கொல்லப்பட்டான்.
[ஹதீஸ் சுருக்கம், நூல்; ஹாகிம்]

அன்பானவர்களே! இன்றைக்கு முஸ்லிம்களில் சிலர் சினிமா மாயையில் மயங்கி, உடல் மண்ணுக்கு; உயிர் .........க்கு என்று திரிவதை பார்க்கிறோம். மக்களை ஏமாற்றும் கூத்தாடிகளை மகானாக நினைத்து இவர்கள் மதி மயங்கித் திரிகிறார்கள். ஆனால் அருமை நபித்தோழர் முஸ்அப்[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் உயிரை காக்க தன்னுயிரை தியாகம் செய்து, இன்றைக்கும் அவர்கள் தியாகம் போற்றப்படக் கூடிய அளவுக்கு வாழ்ந்துள்ளார்கள் என்பதை நினைத்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம். மேலும், இந்த தியாகி முஸ்அப்[ரலி] அவர்கள் ஷஹீதான பின் அவர்களின் நிலை என்ன?

இப்ராஹீம் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார்.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் அவரின் உணவு கொண்டு வந்து வைக்கப்பட்டது. உடனே அவர், 'முஸ்அப்
(ரலி) கொல்லப்பட்டபோது.. அவர் என்னைவிடச் சிறந்தவராக இருந்தார். அவருக்குக் கஃபனிடுவதற்கு ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஹம்ஸா(ரலி) அல்லது வேறொருவர் கொல்லப்பட்டபோது.. அவரும் என்னைவிடச் சிறந்தவரே... அவருக்குக் கஃபனிடுவதற்கும் ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. எனவே, நல்லவை(க்கான நற்கூலி)களெல்லாம் எனக்கு இவ்வுலக வாழ்விலேயே முன் கூட்டியே கொடுக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்!" எனக் கூறிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.
நூல்; புஹாரி.

மேற்கண்ட செய்தியில், மாபெரும் உயிர்த்தியாகியான முஸ்அப்[ரலி] அவர்களுக்கு கபனிடக்கூட முழுமையான துணி இல்லாத அளவுக்கு அவரின் இஸ்லாமிய வாழ்க்கை ஏழ்மை நிலையில் கழிந்துள்ளது என்பதை காணும்போது கண்கள் கசிகின்றன. அந்த ஏழ்மை வாழ்க்கையிலும் இனிமை கண்டு, இம்மையை வென்று மறுமையை
தனதாக்கிய முஸ்அப்[ரலி] அவர்களின் மறுமை அந்தஸ்தை  அல்லாஹ் உயர்த்துவானாக! முஸ்அப்[ரலி] அவர்களின் வாழ்க்கை மூலம் முஸ்லிம்களுக்கு படிப்பினையை வழங்குவனாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக