சனி, 28 நவம்பர், 2009

எங்களுக்குள் போட்டி உண்டு; ஆனால் பொறாமையில்லை என்று நிரூபித்த அன்னை!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிமான ஆண்களுக்கு அதிகபட்சமாக நான்கு திருமணம் வரை செய்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளதை நாம் அறிவோம். இந்திய அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்பவர்கள் மிக மிக குறைவு. காரணம் பொருளாதரா பிரச்சினை ஒருபக்கம் இருந்தாலும், மறு பக்கம் இரு மனைவியர் ஒருவருக்கு இருந்தால் அவர்களுக்கு மத்தியில் பஞ்சாயத்து தீர்ப்பதற்கே பெரும்பான்மையான நேரம் ஒதுக்கவேண்டிய நிலை. இரு ஆண்கள் ஒத்துப்போய் விடுவார்கள். ஆனால் இரு பெண்கள் ஒத்துப்போவது என்பது மிகமிக அரிது. அதிலும் ஒரு கணவருக்கு வாழ்க்கைப்பட்ட இரு பெண்கள், இவர்களில் ஒவ்வொருவரும் மற்ற மனைவியை தன் கணவன் நெருங்காமல் இருப்பதற்கு என்ன வழி என்று சதா யோசித்து தங்களில் ஒருத்தியை மாட்டிவிடும் வாய்ப்பு கிடைக்குமென்றால் அதை கச்சிதமாக பயன்படுத்தி அவளிடமிருந்து தன் கணவனை பிரித்துவிடுவாள். தன் கணவன் மறுமணம் செய்வதை அனுமதிக்கும் அரபு நாட்டு பெண்கள் பெரிய அளவில் தனது சக்களத்தியை கண்டுகொள்வதில்லை. ஆயினும் அவர்களில் சிலர் தனது கணவன் மற்றொரு பெண்ணை மணப்பதை தடுப்பதற்கான முயற்சி மேற்கொள்வதாக அறிகிறோம். சமீபத்தில் குவைத்தில் ஜஹ்ரா என்ற பகுதியில் ஒரு திருமணத்தின்போது நடந்த தீவிபத்திற்கு ஒரு முன்னாள் மனைவியே காரணம் என்று கூறப்பட்டது.[அல்லாஹ்வே அறிந்தவன்] இதை நாம் இங்கு குறிப்பிட காரணம் பொதுவாகவே பெண்கள், கணவன் குடிகாரனாகவோ, சூதாடியாகவோ, குடும்பத்தை சரிவர கவனிக்காத பொருப்பில்லாதவனாகவோ இருந்தால்கூட சகித்துகொண்டு விட்டுக்கொடுத்து விடுவார்கள். ஆனால் ஒரு உதவாக்கரை கணவனைக்கூட இன்னொரு பெண்ணிற்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இது பெரும்பான்மையான பெண்களின் இயல்பு. ஆனால் ஸஹாபி பெண்களை பொறுத்தவரையில் அல்லாஹ் அனுமதித்த எந்த ஒன்றையும் தடுக்கக் கூடியவர்கள் அல்லர். எனவே பெரும்பான்மையான சஹாபாக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்ததை நாம் ஹதீஸ்களின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் இறைத்தூதர்[ஸல்] அவர்களுக்கு அல்லாஹ் பல மனைவியரை மணக்கும் அனுமதி தந்திருந்தான். நபி[ஸல்] அவர்களும் சுமார் பதினொரு அல்லது பன்னெண்டு மனைவியரை மணந்தார்கள். இந்த மனைவியருக்குள் நபியவர்களின் அன்பை பெறுவதில் போட்டி இருந்தது. இதை நாமாக சொல்லவில்லை. நபி[ஸல்] அவர்களின் நேசத்திற்குரிய அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் சொல்கிறார்கள்;

அல்லாஹ்வின் தூதருடைய மனைவிமார்களான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, மற்றும் சவ்தா ஆகியோரும் இருந்தோம். மற்றொரு குழுவில் உம்மு சலாமா அவர்களும் அல்லாஹ்வின் தூதருடைய மற்ற மனைவிமார்களும் இருந்தனர்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 2581 ]

மற்றொரு ஹதீஸில் நம் அன்னையர்களுக்கு மத்தியில் நபியவர்களின் நெருக்கத்திற்குரியவர்களாக இருப்பதில் போட்டியிருந்ததை காணலாம்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் 'நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்' என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். எங்களில் ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான் சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்' என்று கூறினார்கள். எனவே, 'நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?' என்று தொடங்கி 'நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)' என முடியும் (திருக்குர்ஆன் 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.
ஆதாரம்; புஹாரி எண் 5267

இவ்வாறாக நம் அன்னையர்களுக்கு மத்தியில் பெண்களுக்கே உரித்தான போட்டி மனப்பான்மை இருந்தாலும், அவர்களுக்கிடையே பகைமையோ, ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கும் என்னமோ, பழிவாங்கும் நோக்கமோ கடுகளவும் இல்லை என்பதை பின்வரும் ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது. அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது பாவிகள் அவதூறு சொனன்போது, இது குறித்து என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து நபி[ஸல்] அவர்கள், அலீ[ரலி] உசாமா[ரலி] பரீரா[ரலி] உள்ளிட்ட சிலரிடம் ஆலோசனையும் கருத்துக்களும் கேட்டது போன்று அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடமும் கருத்து கேட்டார்கள். அப்போது அன்னையவர்கள் கூறிய வார்த்தை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை;

அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம் விசாரித்தார்கள். 'ஸைனபே! நீ (ஆயிஷாவைக் குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்?... அல்லது (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?... என்று (ஸைனபிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்" என்று பதிலளித்தார்கள். ஸைனப் அவர்கள் தாம், நபியவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபி-ஸல்-அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 4141 ]

அழகிலும், நபி [ஸல்] அவர்களின் அன்பிலும் எனக்கு போட்டியாக இருந்தவர் ஸைனப் என்று வர்ணிக்கும் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் வாயாலேயே, அன்னை ஸைனப்[ரலி] அவர்கள் சொன்ன வார்த்தையால் சிலாகித்து அன்னை ஆயிஷா[ரலி] அவர்களே சொல்லுமளவிற்கு அன்னை ஸைனப்[ரலி] அவர்களின் உள்ளம் இறையச்சத்தால் நிரம்பியிருந்ததை காண்கிறோம். அதனால்தான் தன்னை போட்டியாக கருதிய ஆயிஷா[ரலி] அவர்கள் மீது பழி சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்தபோதும், அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக ஆயிஷா[ரலி] அவர்கள் விஷயத்தில் உள்ளதை மட்டும், உண்மையை மட்டும், நன்மையை மட்டும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அன்னை ஸைனப்[ரலி] அவர்கள் சொல்கிறார்கள் என்றால் அதுதான் சஹாபாக்கள். இதே நிலை இன்றைய பெண்களிடம் நடந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே! எனவேதான் தெளிவாக சொல்கிறோம் இறையச்சத்திலும் சரி, அமல்களிலும் சரி, நன்னடத்தையிலும் நற்குணத்திலும் சரி அந்த சஹாபாக்கள் மற்றும் ஸஹாபி பெண்களின் அந்தஸ்த்தில் கடுகளவும் எட்டிப்பிடிக்கமுடியாது என்பதே உண்மை. இந்த லட்சணத்தில், அந்த மேன்மக்களை விட அல்லாஹ் நம்மை மேன்மையாக்கி வைத்துள்ளான் என்ற அகம்பாவ பிரச்சாரம் வேறு!

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

வெள்ளி, 27 நவம்பர், 2009

ஏழைகளின் நலனுக்கே எமது ஆட்சியில் முன்னுரிமை!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

உமர்(ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமை அஸ்லம்(ரஹ்) அறிவித்தார்.
உமர் இப்னு கத்தாப்(ரலி), (ஸகாத் கால்நடைகளின்) பிரத்தியேக மேய்ச்சல் நிலம் ஒன்றுக்கு 'ஹுனைன் என்றழைக்கப்படும் தம் அடிமை ஒருவரை (காவலராக) நியமித்தார்கள். அப்போது, 'ஹுனையே! உன் கையை முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதிலிருந்து காத்துக் கொள். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபப் பிரார்த்தனைக்கு அஞ்சு. ஏனெனில், அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை (அல்லாஹ்வினால்) எற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும். சிறு ஒட்டக மந்தைகளையும் சிறு ஆட்டு மந்தைகளையும் ஓட்டி வருபவர்கள் (மேய்ச்சல் நிலத்திற்குள்) நுழைய அனுமதியளி. (செல்வந்தர்களான) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் மற்றும் உஸ்மான் இப்னு அஃப்பான் ஆகியோரின் கால்நடைகளைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. (அவற்றை உள்ளே நுழைய விடாதே) ஏனெனில், அவ்விருவரின் கால்நடைகளும் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் அவர்களிருவரும் (தம் பிழைப்பிற்குத் தம்) பேரீச்சந் தோட்டங்களையும் விளைநிலங்களையும் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால், சிறிய ஒட்டக மந்தைகளையும் சிறிய ஆட்டு மந்தைகளையும் வைத்திருப்பவர்கள் தங்கள் கால்நடைகள் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் (கலீஃபாவான) என்னிடம் தம் பிள்ளை குட்டிகளை அழைத்து வந்து, 'விசுவாசிகளின் தலைவரே! நான் இவர்களை (பட்டினி கிடந்து) சாகவிட்டு விடவா?' என்ற கேட்பார்கள். எனவே, (முஸ்லிம்களின் பொதுநிதியிலிருந்து) தங்கத்தையும் வெள்ளியையும் (அவர்களுக்குத் தருவதை) விட (அரசின் பிரத்தியேக மேய்ச்சல் நிலங்களிலிருந்து) தண்ணீரையும் புற்பூண்டுகளையும் தருவது எனக்கு இலேசானதாகும் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவர்களுக்கு அநீதியிழைத்துவிட்டதாக இவர்கள் கருதுகிறார்கள். இது அவர்களின் நாடு. இதற்காக இவர்கள் அறியாமைக் காலத்திலும் போரிட்டிருக்கிறார்கள்; இஸ்லாத்தின் காலத்திலும் இஸ்லாத்தைத் தழுவி இதற்காகப் போரிட்டிருக்கிறார்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இறைவழியில் (போரிடுவோரை) நான் ஏற்றியனுப்பவேண்டிய (கால்நடைச்) செல்வம் மட்டும் தேவையில்லையென்றால் இவர்களுடைய நாட்டிலிருந்து ஓர் அங்குலத்தைக் கூட (கையகப்படுத்தி) பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக நான் ஆக்கியிருக்க மாட்டேன்" என்று கூறினார்கள்.
ஆதாரம் புஹாரி எண் 3059

அன்பானவர்களே! உமர்[ரலி] அவர்கள் தனது ஆட்சியின் போது ஒரு நிலத்தை கையகப்படுத்தி ,அதில் போருக்கு பயன்படும் கால்நடைகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலமாக ஆக்கி அதில் காவலரையும் நியமிக்கிறார்கள். அந்த காவலரிடம் கூறும்போது,
கால்நடைகளை மட்டுமே நம்பி ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கும் ஏழைகள் தங்கள் கால்நடைகளை மேயவிடுவதற்காக இந்த நிலம் நோக்கி கொண்டுவந்தால் அவர்களுக்கு அனுமதியளி. ஏனெனில், இரை கிடைக்காமல் அவர்களின் கால்நடைகள் அழிந்துவிட்டால், அவர்கள் தங்களின் வறுமையை முறையிட தங்கள் குழந்தைகள் சகிதமாக எம்மை நோக்கி வருவார்கள். அந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக ஏழைகள் விஷயத்தில் அநீதி இழைப்பதை விட்டு காத்துக்கொள் என்று கூறுகிறார்கள்.
அடுத்து உமர்[ரலி] அவர்கள் சொன்னதுதான் முத்தாய்ப்பானது. வசதிபடைத்த உஸ்மான்[ரலி] மற்றும் அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] ஆகியோரின் கால்நடைகள் விஷயத்தில் கண்டிப்பாக இரு. ஏனெனில் அவர்களது கால்நடைகள் அழிந்துவிட்டால் கூட அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. ஏனெனில் அவர்களுக்கு பேரீத்தம் மரங்களும், விளைநிலங்களும் இருக்கின்றன என்று கூறுகிறார்கள்.
இதில் நாம் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவெனில், அரசுக்கு சொந்தமான எந்த ஒன்றும் வசதிபடைத்தோருக்கு திகட்டும் கனியாகவும், ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவும் இருப்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். வசதிபடைத்தவர்களுக்காக அரசு இயந்திரம் தொடங்கி, நீதிமன்றம் வரை அப்பட்டமாக வளைவதை பார்க்கிறோம். வசதிபடைத்தவர்கள் மற்றும் தமக்கு பின்னால் ஒரு கூட்டத்தை வைத்திருப்பவர்கள் என்னதான் பாரதூரமான தவறுகள் செய்தாலும், அவர்களை கைது செய்வது அரிது. அவ்வாறே கைது செய்யப்பட்டாலும் அவர்கள் ஜாமீனில் 'ஹாயாக' வெளியே வருவார். பின்பு அந்த வழக்கு மறக்கப்பட்டுவிடும். அதே நேரத்தில் ஒரு முஸ்லீம் ஏதாவது தவறு செய்தான் என்று கருதப்பட்டால் அவனை அதிரடியாக கைது செய்யும் அரசு இயந்திரம், அவனை விசாரைக்கைதியாகவே ஜாமீன் கூட வழங்காமல் ஆயுளை சிறையிலேயே முடிக்கும் அளவுக்கு நடந்து கொள்வதை காணுகிறோம். ஆனால், உமர்[ரலி] அவர்கள் ஏழைகளிடம் அவர்களின் நிலையறிந்து கணிவாகவாகவும், வசதி படைத்தோரிடம் அவர்களின் நிலையறிந்து கடுமையாகவும் நடந்து, என்னுடைய ஆட்சி இறைவனுக்கு மட்டுமே அஞ்சக்கூடிய, ஏழைகளின் சிரிப்பில் இறைவனை உண்மையாகவே காணக்கூடிய ஆட்சி என்று நடத்திக்காட்டிய அமீருல் முஃமினீன் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

வியாழன், 26 நவம்பர், 2009

இனிய பெருநாளே..தியாகத் திருநாளே..!பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
ஒப்பற்ற ஓரிறை கொள்கையை உலகில் நிலைநாட்ட, சோதனைகளுக்கு முகம் கொடுத்து, நெருப்பிலிட்டபோதும் ஏகத்துவ தங்கமாய் மின்னிய ஏந்தல் நபி இப்ராஹீம் அலை] அவர்களின் தியாகத்தையும் , தரணியின் தலைவன் அல்லாஹ்வின் கட்டளையின்படி, தன்னை அறுக்க தந்தை கோரியபோது, ' இறைவன் நாடினால் பொறுமையாளனாக என்னை காண்பீர்கள்' என்று இறைக்கட்டளைக்கு தன் தலை கொடுக்க முன்வந்த தனயன் நபி இஸ்மாயீல்[அலை] அவர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் இந்த தியாககத்திருநாளில் உலகமெங்கும் வாழும் எனது இஸ்லாமிய சகோதரர-சகோதரிகளுக்கு வாழ்த்தினை தெரிவிப்பதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ், ஏகத்துவத்தை நிலைநாட்டும் உயரியபனியில் நபிஇப்ராஹீம்[அலை] அவர்களுக்கு வழங்கிய உள்ள உறுதியையும், தியாக மனப்பான்மையையும் நமக்கும் வழங்கிட, நம்மை அல்லாஹ் பொருந்திக்கொண்ட வாழ்க்கை வாழ்ந்திட இறைவனிடம் இறைசுகிறேன்.

-உங்கள் இஸ்லாமிய சகோதரன் முகவை எஸ்.அப்பாஸ்

புதன், 25 நவம்பர், 2009

இயற்பெயரை விட இறைத்தூதர் இட்ட பெயரே இஷ்டமானது!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்கள்;
(தம் பெயர்களில்) 'அபூ துராப்' (மண்ணின் தந்தை) எனும் பெயரைவிட வேறெந்தப் பெயரும் அலீ(ரலி) அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கவில்லை. அப்பெயர் கூறி அழைக்கப்படும்போது அவர்கள் (மிகவும்) மகிழ்வார்கள். (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் புதல்வி) ஃபாத்திமா(ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது அலீ அவர்களை வீட்டில் காணவில்லை. எனவே, நபி அவர்கள் 'உன் பெரிய தந்தையின் புதல்வர் (உன் கணவர்) எங்கே? என்று கேட்டார்கள். அதற்கு ஃபாத்திமா(ரலி) அவர்கள், 'எனக்கும் அவருக்குமிடையே ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. எனவே, அவர் கோபித்துக் கொண்டு என்னிடம் மதிய ஓய்வெடுத்துக் கொள்ளாமல் வெளியே சென்றார் என்று பதிலளித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், 'அவர் எங்கே என்று பார்' என்றார்கள். அவர் (சென்று தேடிவிட்டு) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அவர் பள்ளிவாசலில் உறங்கி கொண்டிருக்கிறார்' என்றார். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்கு) வந்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் தங்களின் மேனியிலிருந்து மேல் துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த மண்ணை அவர்களின் உடலிலிருந்து துடைத்துக் கொண்டே 'அபூ துராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள். அபூ துராபே ! எழுங்கள்' என்று (இரண்டு முறை) கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 6280

அன்பானவர்களே! பொதுவாக நம்மை யாரேனும் பட்டபெயர் சூட்டி அழைத்தால் நமக்கு கோபம் வரும். ஆனால் அலீ]ரலி] அவர்களுக்கோ, அவரது இயற்பெயர் மட்டுமன்றி சில காரனப்பெயர்களும் உள்ள நிலையில், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களால் கேலியாக சொல்லப்பட்ட 'அபூ துராப்' என்ற பெயரில் தன்னை யாரேனும் அழைத்தால் அதில் மிகவும் மகிழக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள் என்றால் இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது அலீ[ரலி] அவர்கள் கொண்ட நேசம் வெளிப்படுகிறது. மேலும், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், தான் ஒரு நபி என்ற கர்வம் சிறிதும் இன்றி அலீ[ரலி] அவர்களின் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணை துடைக்கிறார்கள் என்றால், இங்கே நபி[ஸல்] அவர்களின் எளிமையும், அலீ[ரலி] அவர்கள் மீது கொண்ட பாசமும் வெளிப்படுவதை காணலாம். எனவே இறைத்தூதர் ஒரு தாயின் பரிவோடு தன் தோழர்களை அணுகியிருக்கிறார்கள் என்பதும் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் மூலம் நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. நபியவர்களின் நேசத்திற்குரிய அலீ[ரலி] அவர்களை சிலர், 'எடுப்பார் கைப்பிள்ளை' என்றெல்லாம் ஏளனமாக வர்ணிப்பது உள்ளபடியே வேதனைக்குரியது.

திங்கள், 23 நவம்பர், 2009

தந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
உஹுதுப் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அப்போது இப்லீஸ், 'அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்!' என்று கத்தினான். உடனே முஸ்லிம்களில் முன் அணிப் படையினர் திரும்பிச் சென்று (எதிரிகள் தாம் பின்னால் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு) பின் அணிப்படையினருடன் மோதினார்கள். அப்போது அங்கு (தமக்கு அருகேயிருந்த) தம் தந்தை அல்யமான்(ரலி) அவர்கள் (முன்னணிப் படையினரிடம்) சிக்கிக் கொண்டதை ஹுதைஃபா(ரலி) அவர்கள் பார்த்துவிட்டு, 'அல்லாஹ்வின் அடியார்களே! (அவர்) என் தந்தை! என் தந்தை' என்று (உரத்த குரலில்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வீன் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்பே (அவரைவிட்டு) அவர்கள் விலகினார்கள் . ஹுதைஃபா(ரலி) அவர்கள் 'அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!' என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்கள் மன்னித்தால் அவர்கள் இறைவனை அடையும் வரை (அவர்களின் வாழ்க்கையில் நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது.
ஆதாரம்;புஹாரி

உஹத் களத்தில் ஆரம்பத்தில் தீரமுடன் போராடி இணைவைப்பாளர்களை வேருண்டோடச்செய்த முஸ்லிம்களின் கவனத்தை திசை திருப்பும்வகையில் ஷைத்தான், முன்னேறி முதலாவதாக சென்ற படைக்கு அடுத்தபடியாக வந்த முஸ்லிம்களின் ஒருபிரிவினரை எதிரிகள் என்ற தோற்றத்தை உண்டாக்கினான். அவர்களை இனைவைப்பாளர்களோ என்று தவறாக கருதிய முஸ்லிம்கள் தாக்கத் தொடங்கினார்கள். முஸ்லிம்களின் படையால் தாக்கப்பட்ட முஸ்லிம் குழுவில் மாட்டிக்கொண்டார் யமான்[ரலி] அவர்கள். யமான் [ரலி] அவர்களின் மகன் ஹுதைஃபா[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை என்தந்தை என்று கத்தியது போர்முனையில் இணைவைப்பாளர்களை வெருண்டோட செய்வதே லட்சியமாக கொண்ட சஹாபாக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அல்லாஹ்வின் நாட்டப்படி யமான்[ரலி] அவர்கள் முஸ்லிம்கள் கையாலேயே ஷகீதானார்கள். தன் கண் முன்னே தனது தந்தையை தனது சக முஸ்லிம் சகோதரர்கள் கொன்றதை கண்ட ஹுதைஃபா[ரலி] அவர்கள் கோபம் கொள்ளவில்லை. தனது சக முஸ்லிம் சகோதரர்கள் அறியாமல் செய்துவிட்டார்கள் என அமைதி காத்து அந்த முஸ்லிம் சகோதர்களை நோக்கி, அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! என்று அவர்களுக்காக துஆ செய்தார்களே இந்த உயர்வான மனம் யாருக்குவரும்..? அதுதான் சஹாபாக்கள்! சிலர் இன்றைக்கு சின்ன சின்ன மன கசப்பிற்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல் இருக்கிறார்கள். தனது சக முஸ்லிம் தவறே செய்திருந்தாலும் அதை மன்னித்து அவனை அரவணைக்கும் மனப்பக்குவம் நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை. நாம் மட்டுமன்றி, நமது சமுதாயத்தை இவர்தான் தாங்கி கொண்டிருக்கும் தூண் என்று வர்ணிக்கப்படும் சில தலைவர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை மன்னித்து ஒன்றிணைய தயாராக இல்லை என்பதை பெருகிவரும் இயக்கங்கள் உறுதிப்படுத்துகிறது. இந்த லட்சணத்தில் மன்னிப்பின் சிகரமாக திகழ்ந்த சஹாபாக்களின் வாழ்வில் நடந்ததாக கருதப்படும் 'குற்றங்களை' கண்டுபிடிக்க கிளம்பிவிட்டார்கள். இதுதான் விந்தை!

ஞாயிறு, 22 நவம்பர், 2009

மறைச்செய்தி முடிந்துவிட்டதே..! மனமடைந்த நபித்தோழி!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
உம்மு அய்மன்[ரலி] அவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிற்குரிய இடத்தை பெற்ற நபித்தோழியராவார். இந்த உம்மு அய்மன்[ரலி] அவர்கள் மீதும் இவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் மீதும் நபி[ஸல்] அவர்கள், தனது பேரர்கள் மீது கொண்ட அளவுக்கு நேசம் வைத்திருந்தார்கள். உஸாமா இப்னு ஸைத்[ரலி] அவர்களை நாம் அறிந்துவைத்துள்ளோம். இந்த உஸாமா இப்னு ஸைத்[ரலி] அவர்கள் மீது நபி[ஸல்] அவர்கள் கொண்ட பாசம் எத்தகையது..?

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் (சிறார்களாயிருந்த) என்னையும் ஹஸன்(ரலி) அவர்களையும் கையிலெடுத்து 'இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன்; நீயும் நேசிப்பாயாக!" என்று பிரார்த்திப்பார்கள்.
ஆதாரம் புஹாரி எண் 3735 ]

இப்படி ஹஸன்(ரலி) அவர்களுக்கு இணையான பாசத்தை நபியவர்களிடம் கொண்ட இந்த உஸாமா[ரலி] அவர்கள் யார் என்றால் உம்மு அய்மன்[ரலி] அவர்களின் மகனாவார்.
நபியவர்கள் ஒருமுறை தம் தோழர்களின் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்கள். ‘எவரேனும் சுவனத்துப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால் அவர் உம்மு ஐமனை மணந்து கொள்ளட்டும்!”
இதனைக் கேட்டதும் ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள் உம்மு ஐமனை மணந்து கொண்டார்கள். நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு இத்தம்பதிக்கு உஸாமா (ரலி) அவர்கள் பிறந்தார்கள். தந்தை ஜைத் (ரலி) அவர்களைப் போன்று உஸாமா (ரலி) அவர்களும் நபியவர்களின் அன்பிற்குரித்தானவர்களாய்த் திகழ்ந்தார்கள்.

இந்த உஸாமா[ரலி] மட்டுமல்ல உம்மு ஐமனின் ஏனைய பிள்ளைகள் மீதும் நபி[ஸல்]அவர்கள் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள்.

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா(ரஹ்) கூறினார்;
நான் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் இருந்தபோது ஹஜ்ஜாஜ் இப்னு அய்மன் (பள்ளிவாசலுக்குள்) நுழைந்(து தொழு)தார். அப்போது அவர் தன் ருகூவையும் முழுமையாக நிறைவேற்றவில்லை; தன் சுஜூதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. எனவே, இப்னு உமர்(ரலி) (ஹஜ்ஜாஜை நோக்கி), 'திரும்பத் தொழுங்கள்" என்று கூறினார்கள். அவர் திரும்பிச் சென்றபோது என்னிடம் இப்னு உமர்(ரலி), 'யார் இவர்?' என்று கேட்டார்கள். நான், 'உம்மு அய்மனின் மகன் அய்மனுடைய மகன் ஹஜ்ஜாஜ் தான் இவர்" என்று சொன்னேன். அதற்கு இப்னு உமர்(ரலி), 'இவரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பார்த்திருந்தால் இவரை நேசித்திருப்பார்கள்" என்று கூறினார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள், (உஸாமா - ரலி - அவர்களின் மீது) கொண்டிருந்த நேசத்தையும் உம்மு அய்மன்(ரலி) பெற்றெடுத்த (மற்ற) பிள்ளைகளின் மீதும் கொண்டிருந்த நேசத்தையும் இப்னு உமர்(ரலி) நினைவு கூர்ந்தார்கள். அறிவிப்பாளர்: சுலைமான் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்: உம்மு அய்மன்(ரலி) நபி(ஸல்) அவர்களின் வளர்ப்புத் தாயாக இருந்தார்கள்.
ஆதாரம்புஹாரி எண் 3737

மேலும் தனக்கு கிடைத்த அன்பளிப்பு பேரிச்சமரங்களையும் உம்மு அய்மன்[ரலி] அவர்களுக்கே நபி[ஸல்]அவர்கள் வழங்கியிருந்தார்கள்.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்; முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில் ) கொடுப்பதாகவும் 'எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்' என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். என்னுடைய தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி(ஸல்) அவர்கள் தங்களின் அடிமைப் பெண்ணான, உஸாமா இப்னு ஜைத்டைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகளின் மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பியபோது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங்களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவரின் பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.
ஆதாரம்புஹாரி;எண் 2630

இந்த அளவுக்கு நபி[ஸல்] அவர்களின் நேசத்திற்குரியவராக திகழ்ந்த உம்மு அய்மன்[ரலி] அவர்கள், ஹிஜ்ரத் செய்த முஹாஜிராகவும், உஹத்-கைபர் உள்ளிட்ட சில போர்களில் படை வீரர்களுக்கு சேவையாற்றி வீரப் பெண்மணியாகவும் திகழ்ந்துள்ளார்கள். அதுமட்டுமன்றி இறைவேதத்தின் மீது தீராத நேசம் கொண்டவர்களாகவும் திகழ்ந்துள்ளார்கள்.

உம்மு ஐமன் (ரலி) அவர்கள் அண்ணல் நபியின் மரணத்தால் கடும் துயரத்திற்கு ஆளானார்கள். மனம் நொந்து அழுது அழுது கடுமையான பலவீனம் ஏற்பட்ட பிறகும் அவர்களின் அழுகை நிற்கவே இல்லை! இதனைக் கேள்விப்பட்டதும் அபூபக்கர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வந்து உம்மு ஐமனைத் தேற்றினார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் இவ்வாறு கூறினார்கள். ‘ஏன் இவ்வளவு தூரம் கவலைப்படுகின்றீர்கள்! நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடத்தில் மிகச் சிறந்த சன்மானங்கள் உள்ளன.” அதற்கு உம்மு ஐமன் (ரலி) அவர்கள் ‘இதுதான் எனக்குத் தெறியுமே! நான் அழுது கொண்டிருப்பது இறைச் செய்தியின் வருகை (வஹீ) நின்று விட்டதே என்பதற்காகத்தான்!” என்று பதில் அளித்தார்கள். இதனைக் கேட்டதும் அவர்கள் இருவரின் manamum இளகியது. அவர்களும் அழலாயினர். - ஸஹீஹ் முஸ்லிம்.
ஆனால் தபகாத் இப்னு சஃத் எனும் நூலில் இவ்வாறு உள்ளது:- மக்கள் உம்மு ஐமன் (ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறி மரணம் ஏற்படுவது இயற்கையே எனப் புரியவைத்தபோது, ‘இறைவனின் விதிப்படி நபியவர்கள் மரணம் அடைந்தது குறித்து எனக்குத் தெறியும்! இறைச் செய்தியின் வருகை தடைப்பட்டு விட்டதே என்பதற்காகத்தான் நான் அழுகின்றேன்” என்று பதில் அளித்தார்கள்.


அன்பானவர்களே! இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மரணித்தவுடன் ஏனைய சகாபாக்கள் இறைத் தூதரின் பிரிவை எண்ணி வாடிக்கொண்டிருக்க, உம்மு அய்மன்[ரலி] அவர்கள் அதையும் தாண்டி, இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மரணித்துவிட்டதால், இறைச்செய்தி இனிவராதே! இறைவனின் கட்டளைகள் நின்றுவிட்டதே என்று வருந்தி கண்ணீர் வடிக்கிறார்கள் என்றால், நாம் சிந்தித்து பார்க்கவேண்டும். அன்று உம்மு அய்மன்[ரலி] அவர்கள் நேசித்த இறைச்செய்தி இன்றும் நம்மிடையே இருக்கிறது. ஆனால் உம்மு ஐமன்[ரலி] அவர்களை போன்று நேசம் நாம் வைத்துள்ளோமா என்றால், பெரும்பாலோர் வைக்கவில்லை என்றே சொல்லிவிடலாம். காரணம் இறைச்செய்தி மீது யார் நேசம் கொள்வார்கள் என்றால்அந்த செய்தி அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரக்கூடிய கட்டளை. அதற்கு கட்டுப்படவேண்டும் என்றசிந்தனை எவருடைய உள்ளத்தில் உள்ளதோ அவர்தான் இறைச்செய்தியை நேசிப்பார். ஆனால் நம்முடைய வாழ்வில் தனிமனிதனின் சொந்த கருத்துக்கு கட்டுப்படும் அளவுக்கு கூட இறைச்செய்திக்கு கட்டுப்படவில்லை என்பதே உண்மை. எனவே உம்மு அய்மன்[ரலி] அவர்களைப்போல் இறைச்செய்தியை நம் வாழ்வில் அமுல்படுத்துவதன் மூலம் அதை நேசிப்போம் இன்ஷா அல்லாஹ்.

வியாழன், 19 நவம்பர், 2009

உயிர் பிரியும் நேரத்திலும் உன்னத தாஃவா!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

'அப்போது[உமர் ]அவர்கள் இறக்கும் நிலையை அடைந்துவிட்டார்கள் என்று மக்கள் அறிந்து கொண்டனர். அவர்களின் அருகே நாங்கள் சென்றோம். மக்கள் வந்து உமர்(ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசத் தொடங்கினார்கள். ஓர் (அன்சாரி) இளைஞரும் வந்தார். அவர், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே!" அல்லாஹ்வின் தூதருடனான (உங்களுடைய) தோழமை, இஸ்லாத்தில் (உங்களுக்கிருக்கும்) நீங்களே அறிந்துள்ள சிறப்பு, பிறகு நீங்கள் (ஆட்சித்தலைவராகப் பதவியேற்று (குடி மக்களிடையே) நீதியாக நடந்து கொண்டது, பிறகு (இப்போது) உயிர்த் தியாகம் (செய்ய விருப்பது) ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள நற்செய்தி கொண்டு நீங்கள், மகிழ்ச்சி அடையுங்கள்" என்று கூறினார். (இதைக் கேட்ட) உமர்(ரலி) 'இவையெல்லாம் எனக்கு (சாதகமாக இல்லாவிட்டாலும் பாதகமாக இல்லாமலிருந்தாலே போதும். எனவே, இவை எனக்கு) சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம். சரிக்குச் சமமாக இருப்பதையே விரும்புகிறேன்" என்று கூறினார்கள். அந்த இளைஞர் திரும்பிச் சென்றபோது அவரின் கீழங்கி பூமியைத் தொட்டுக் கொண்டிருந்தது. (இதைக் கண்ட) உமர்(ரலி), 'அந்த இளைஞரை என்னிடம் திரும்ப அழைத்து வாருங்கள்" என்று கூறினார்கள். (அவர் திரும்பி வந்த போது), 'என்னுடைய சகோதரரின் மகனே! உன்னுடைய ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டு! இது உன் ஆடையை நீண்ட நாள் நீடிக்கச் செய்யும்; உன்னுடைய இறைவனுக்கு அஞ்சி நடப்பதுமாகும்" என்று கூறினார்கள்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 3700 ]

அன்பானவர்களே! நன்மையை ஏவுவதும் தீமையை தடுப்பதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை என்பதை நம்மில் பெரும்பாலோர் விளங்கி வைத்துள்ளோம். ஆனால் அதை எங்கு செய்வோம் என்றால் மேடை அமைக்கப்பட்டு மைக்குகள் வைக்கப்பட்டால்தான் செய்வோம் என்ற நிலை உள்ளது. அதிலும் நாப்பது பேர் உட்காரும் தெருமுனை கூட்டமா அதுக்கு வரமாட்டேன். நாலாயிரம் பேர் கூடும் பொதுக்கூட்டமா அதுக்கு நான் வருகிறேன் என்று கண்டிஷன் போடும் 'நட்சத்திர' பேச்சாளர்கள் ஒருபுறம். அல்லாஹ்வை நம்பாத அரசியல்வாதி அமர்ந்துள்ள மேடையில் ஏறினாலும் ஏறுவோமே தவிர, அடுத்த சக தவ்ஹீத் இயக்கத்தவர் மேடை ஏறமாட்டோம். அவர்களை எங்கள் மேடையில் ஏற்றவும் மாட்டோம் என்றெல்லாம் தாஃவா செய்வதற்கு எண்ணற்ற கண்டிஷன்கள். ஆனால் ஒரு முஸ்லிம் எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் ஒரு நன்மையை ஏவமுடியும் என்றால் அதை செய்யவேண்டும். ஒரு தீமையை தடுக்கமுடியும் என்றால் அது எந்த இடமாக இருந்தாலும் தடுக்கவேண்டும். நாம் வீட்டில் இருந்தாலும், அலுவலகத்தில் இருந்தாலும், பயணத்தில் இருந்தாலும், பாதையில் நடந்தாலும், சுப நிகழ்ச்சி நடக்கும் இடமாகினும், துக்க நிகழ்வு நடந்துவிட்ட இடமாகினும் அங்கெல்லாம் நன்மையை ஏவும் தீமையை தடுக்கும் வாய்ப்புகள் சாதாரணமாக கிடைக்கும். ஆனால் நாம் அதை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. மேடைகளில் பேசும்போதும், புத்தகங்களில் எழுதும்போதும், பிரசுரங்கள் வெளியிடுபோதும், இணையங்களில் உலவும்போதும்தான் நம்முடைய தாஃவாக்கள் பெரும்பாலும் இருக்கின்றன. ஆனால் உத்தமர் உமர்[ரலி] அவர்கள் கத்தியால் குத்தப்பட்டு உதிரம் ஊற்றாக வெளியேறி உயிர் பிரியும் கட்டத்தை நெருங்கிய நிலையிலும், ஒருவரிடத்தில் இறைத்தூதரின் சுன்னாவிற்கு மாற்றமான செயலை கண்டவுடன், அந்த நபரிடம் அழகிய முறையில் எடுத்து சொல்லி தனது கடமையை செய்கிறர்கள் என்றால் அதுதான் சஹாபாக்கள். எந்த இடமாகினும், எந்த ஒரு நொடியாகினும் அதில் எவ்வாறெல்லாம் இந்த சத்திய இஸ்லாத்தை நிலைநாட்டலாம் அதன் மூலம் நன்மையை பெறலாம் என்பதே அந்த உத்தம சஹாபாக்களின் லட்சியமாக இருந்துள்ளதை மேற்கண்ட சம்பவம் உணர்த்துகிறது. நாமும் இயன்றவரை சஹாபாக்களின் வழியில் ஒவ்வொரு வினாடியையும் தாஃவாவின் மூலம் நன்மையாக்க முயற்சிப்போமாக!

புதன், 18 நவம்பர், 2009

உஸ்மான்[ரலி] அவர்களை கொன்றது அபூபக்கர்[ரலி]யின் மகனா..?

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
உஸ்மான்[ரலி] அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட அந்த சம்பவம் பற்றி பீஜே அவர்கள், தனது அந்த ௭௨ கூட்டம் யார்.? தொடர் உரையில் பேசும்போது,

முஹம்மத் இப்னு அபூபக்கர் மற்றும் முஹம்மத் இப்னு உபைதா ஆகிய இருவரும் உஸ்மான்[ரலி] அவர்களுக்கு எதிராக ஆட்களை திரட்டினார்கள். இதுல முஹம்மத் இப்னு அபூபக்கற பத்தி ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும். ஏன்னா உஸ்மான் கொலைல இவரு முக்கிய சீன்ல வர்றாரு. அபூபக்கரு பையனா இப்பிடி செஞ்சது..? அபூபக்கர் சித்தீக் இப்பிடி வளத்து உட்டுட்டு போய்ட்டாரே! அப்படீன்னு சொல்ல இயலாது. ஏன்னா அபூபக்கர் மகனா இவரு இருந்தாலும் அபூபக்கர் மவ்த்தா போகும்போது இவருக்கு ரெண்டரை வயசுதான். பின்னாடி இவரோட அம்மாவ அதாவது அபூபக்கரோட மனைவிய அலீ[ரலி] கல்யாணம் பண்றாரு. அவர்தான் இவரை வளக்குராரு. இவரோட[முஹம்மத்] போதனை, டிரைனிங் இதுக்கெலாம் யாரு பொறுப்புன்னா அலீதான் என்கிறார் பீஜே.
அதாவது உஸ்மான்[ரலி] அவர்களுக்கு எதிராக படை திரட்டக்கூடிய, ஜிஹாத் என்ற பெயரால் 'ரவுடித்தனம்' [இதுவும் பீஜே பயன்படுத்திய வார்த்தைதான்] செய்யக்கூடிய, உஸ்மான்[ரலி] அவர்களை கொலை செய்யும் கொலைகாரரை பெற்றதுதான் அபூபக்கர்[ரலி] . ஆனால் அவரை இப்படி வளர்த்தது அலீ[ரலி] அவர்கள் என்று சொல்லி அலீ[ரலி] அவர்கள், முஹம்மத் இப்னு அபூபக்கர்[ரலி] அவர்களை வளர்த்த வளர்ப்பில் குறை காண்கிறார் பீஜே.
மேலும்,

உஸ்மான்[ரலி]] அவர்களை மூன்றுபேர் சேர்ந்து கொன்றார்கள். அவர்களில் ஒருவர் முஹம்மது இப்னு அபூபக்கர்[ரலி] ஆவார். இந்த மூன்று பேருக்கும் உஸ்மான்[ரலி] அவர்கள் கொல்லப்பட்டதில் நேரடி பங்கு உண்டு பேசுகிறார். அதாவது உஸ்மான்[ரலி] அவர்களை கொன்றவர் அபூபக்கர்[ரலி] அவர்களின் மகன் முஹம்மத்[ரலி] என்று கூறுவதன் மூலம் முஹம்மத்[ரலி] அவர்களை 'கொலைகாரர்' என்று திட்டவட்டமாக கூறுகிறார். இதற்கு ஆதாரமாக வழக்கம் போல எந்த நூலையும் மேற்கோள் காட்டவில்லை. ஆனாலும், உஸ்மான்[ரலிஅவர்கள் முற்றுகையிடப்பட்டபோது மதீனத்து சஹாபாக்கள் கோழைத்தனமாக[?] வ்வீட்டிற்குள் முடங்கிவிட்டார்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தும்போது அதற்கு சான்றாக 'பிதாயா வன் நிஹாயா' என்ற வரலாற்று நூலை ஆதாரமாக காட்டுகிறார்.

குர்ஆணும்-ஹதீசும் மட்டுமே மார்க்கம் என்று போதனை செய்யக்கூடிய அறிஞர் பீஜே, ஒரு வரலாற்று நூலை மைய்யமாக வைத்து கொண்டு, சுவனத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட அபூபக்கர்[ரலி] அவர்களின் மகனாரை கொலைகாரராக அடையாளம் காட்டுவது எப்படி என்பது அவருக்கே வெளிச்சம். இது ஒருபுறமிருக்க, உண்மையில் அபூபக்கர்[ரலி] அவர்களின் மகன் முஹம்மத், உஸ்மான்[ரலி] அவர்களை கொன்றார்களா என்றால், அவர் ஆதாரமாக காட்டும் அதே 'பிதாயா வன் நிஹாயா' வில் இல்லை என்று தெளிவாகவே உள்ளது.
அதாவது முஹம்மத் இப்னு அபூபக்கர்[ரலி] அவர்கள் ஆட்களை திரட்டி மதீனா நோக்கி வந்ததும், உஸ்மான்[ரலி] வீட்டை முற்றுகையிட்டதும், உஸ்மான் [ரலி] அவர்களின் வீட்டிற்குள் சென்றதும் உண்மை. அதற்கு பின்னால் என்ன நடந்தது..? இதோ அந்த நூலில் உள்ள செய்திகள்;

قال سيف بن عمر التميمي رحمه الله عن العيص بن القاسم، عن رجل، عن خنساء مولاة أسامة بن زيد - وكانت تكون مع نائلة بنت الفرافصة امرأة عثمان - أنها كانت في الدار ودخل محمد ابن أبي بكر يأخذ بلحيته وأهوى بمشاقص معه فيجأ بها في حلقه، فقال مهلا يا بن أخي، فوالله لقد أخذت مأخذا ما كان أبوك ليأخذ به، فتركه وانصرف مستحييا نادما، فاستقبله القوم على باب الصفة فردهم طويلا حتى غلبوه، فدخلوا وخرج محمد راجعا.
முஹம்மது இப்னு அபூபக்கர்(ரலி)உதுமான் ரலி அவர்களின் இல்லத்தில் நுழைந்து உதுமான்(ரலி)அவர்களுடைய தாடியை பிடித்தார்கள் இன்னும் அவருடைய தொண்டைக்குழியை பிடித்தார்கள் அப்பொழுது உதுமான்(ரலி)அவர்கள் எனது சகோதரனின் மகனே நிறுத்து எனக்கூறிவிட்டு உனது தந்தை புடிக்காத இடத்தை நீ புடிக்கிறாயா என கேட்டவுடன் கவலை கொண்டவர்களாக வெட்கத்துடன் வெளியேறினார்கள் அப்பொழுது அவ்வீட்டின் திண்ணையில் உள்ளவர்கள் அவரை மிகைத்துவிட்டு உள்ளே சென்றார்கள.

உஸ்மான்[ரலி] அவர்கள் தாடியையும், தொண்டையையும் பிடித்த முஹம்மத் இப்னு அபூபக்கர்[ரலி] அவர்கள் உஸ்மான்[ரலி] அவர்களின் அறிவுரையை கேட்டவுடன் அவர்களை விட்டுவிட்டு வெளியேறி விட்டதாகவும், மற்றவர்கள் முஹம்மத் இப்னு அபூபக்கர்[ரலி] அவர்களை மிகைத்துவிட்டு உஸ்மான்[rali] அவர்களின் இல்லத்திற்குள் நுழைந்ததையும் மேற்கண்ட செய்தி தெளிவாக கூறுகிறது. ஆகஎ முஹம்மத் இப்னு அபூபக்கர்[ரலி] அவர்கள் உஸ்மான்[ரலி] அவர்களை கொல்லவில்லை என்று தெளிவாக உள்ளபோது, இப்படி அப்பட்டமாக ஒரு நபித்தோழர் அல்லது நபித்தோழரின் மகனை கொலைகாரர் என்று கூறுவது அநியாயம் மற்றும் அவதூறாகும்.
மேலும், அதே நூலில் கிடைக்கும் குறிப்பு;
والصحيح أن الذي فعل ذلك غيره، وأنه استحى ورجع حين قال له عثمان: لقد أخذت بلحية كان أبوك يكرمها
சுரியான சொல் முஹம்மது(ரலி)அவர்கள். அவரை [usmaan] கொல்லவில்லை உன்னுடைய தந்தை புடிக்காத தாடியை நீ புடிக்கிறாயா?என உதுமான்(ரலி) கேட்டவுடன் அவர்கள் விட்டு விட்டு திரும்பிவிட்டார்கள.
உஸ்மான்[ரலி] அவர்களை கொன்றது யார்..?
وعن ابن عمر قال: كان اسم الذي قتل عثمان أسود بن حمران
இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
அஸ்வது இப்னு ஹம்ரான் என்பவர் உதுமான்(ரலி)அவர்களை கொன்றார்.

அன்பானவர்களே !பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவத்தை, எதோ பக்கத்தில் இரு பார்த்தது போன்று கொலைப்பழி சுமத்துபவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளட்டும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

செவ்வாய், 17 நவம்பர், 2009

அல்லாஹ்வின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் சொன்னார்; அல்லாஹ் நிறைவேற்றினான்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்;
என் தந்தையின் சகோதரி - ருபய்யிஉ பின்த்து நள்ர், - ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தாரிடம் என் குலத்தார், 'இழப்பீட்டுத் தொகையைப் பெறுங்கள்; அல்லது (ருபய்யிஉவை) மன்னித்து விடும்படி சொல்லுங்கள்" என்று கோரினார்கள். அவர்கள் (இரண்டில் எதற்குமே ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டார்கள். எனவே, எங்கள் குலத்தார் நபி(ஸல்) அவர்களிடம் (விபரம் கூறி, தீர்ப்புப் பெற) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (ருபய்யிஉவைப்) பழி வாங்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ரு(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? அப்படி நடக்காது. தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவனின் மீது சத்தியமாக! அவளுடைய முன்பல் உடைக்கப்படாது" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும். (எனவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)" என்று கூறினார்கள். பிறகு, அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக் கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்" என்றார்கள். அனஸ்(ரலி) வழியாக அறிவிக்கப்படும் மற்றோர் அறிவிப்பில், '(அந்த வாலிபப் பெண்ணின்) குலத்தார் (பழிவாங்காமல்விட்டுவிட) ஒப்புக் கொண்டு பரிகாரத் தொகையை ஏற்றார்கள்' என்று வந்துள்ளது.

ஆதாரம்;புஹாரி எண்; 2703

அன்பானவர்களே! ஒரு பெண்ணின் பல்லை உடைத்ததனால், அப்பெண்ணின் குலத்தார் ஈட்டுத்தொகையை பெறாததாலும், மன்னிக்காததாலும் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின்படி பல் உடைப்பு தண்டனை உறுதியான நிலையில் இருக்கிறார் ருபைய்யிஉ பின்த் நள்ர்[ரலி] அவர்கள். இந்நிலையில் இந்த நபித்தோழியின் சகோதரரும் உஹத் உயிர் தியாகியுமான அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்கள், தன் சகோதரிக்கு பல் உடைக்கப்படாது என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு, அல்லாஹ்வின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் அல்லாஹ்வின் தூதரிடத்தில் கூறுகிறார். யாரும் எதிர்பாராத நிலையில் பல் உடைக்கப்பட்ட பெண்ணின் குலத்தார் அதற்குரிய நஷ்ட ஈடு பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் ருபைய்யிஉ[ரலி] அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது அசைக்கமுடியா நம்பிக்கையுடன் அல்லாஹ்வின் மீதுசத்தியமிட்டு சொன்ன அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்களின் நம்பிக்கையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான் என்றால், அவர்களின் இறையச்சத்தையும், தூய்மையான வாழ்க்கையையும் இதன் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

வானவரும் மேகமென வருவர்; இவர் வான்மறை ஓதும் அழகை காண!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
உசைத் இப்னு ஹுளைர்(ரலி) அறிவித்தார்கள்;
நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) 'அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது. அதனால்) அதைக் காணமுடியவில்லை. காலை நேரமானதுபோது நான் நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?)' என்று கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். இறைத்தூதர் அவர்களே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் அவனை நெருங்கியபோது அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளிய வந்(து பார்த்)தபோது அதைக் காணவில்லை' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அது என்னவென்று நீ அறிவாயா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை (தெரியாது)' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'உன் குரலைக் கேட்டு நெருங்கிவந்த வானவர்கள் தாம் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள்; மக்களைவிட்டும் அது மறைந்திருக்காது' என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 5018

மற்றொரு அறிவிப்பில்....
ஒருவர் (உசைத் இப்னு ஹுளைர் - ரலி-) தம் வீட்டில் வாகனப் பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) 'அல் கஹ்ஃப்' (18-வது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து (பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து)விட்டார். உடனே, மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடியது. இதை அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்னபோது நபி(ஸல்) அவர்கள், 'இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும் நீங்கள்]. ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்களின் மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்" என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 3614

இந்த பொன்மொழி, உசைத் இப்னு ஹுளைர்[ரலி] அவர்களுக்கு திருக்குர்ஆனோடு இருந்த தொடர்பும், குர்ஆணை அழகிய முறையில் ஓதும் அவரது அந்த அழகிய நற்செயலை முன்னிட்டு அல்லாஹ்வின் வானவர்கள் மேகமாக இறங்குகிறார்கள் [அல்லது] அமைதி எனும் மேகம் அவரை சூழ முகாமிட்டதையும் அறியமுடிகிறது. இந்த ஹதீஸின் மூலம் நாம் அருள்மறை குர்ஆனை அழகுற ஓதும்போது அதற்கு எழுத்துக்கு பத்து நன்மை என்ற விஷயம் ஒரு புறமிருக்க, அல்லாஹ்வின் அமைதி நம் மீது இறங்கும். ஆனால் நாமோ குர்ஆனை ஒரு குறிப்பிட்ட நாளில் ஓதக்கூடியதாக ஒதுக்கி விட்டோமே! மேலும் குர்ஆன் ஓதும் பலர் அதை அழகுற ஓதாமல் அலங்கோலமாக ஓதுவதை பார்க்கலாம். குறிப்பாக ரமலான் தராவீ ஹ் தொழுகையில் ஒரு மாதத்தில் முழு குர்ஆனை முடிக்கவேண்டும் என்று இவர்களாகவே முடிவு செய்து மின்னலை விட வேகமாக, பிழையாக ஓதினால் கூட சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு வேகமாக ஓதுவதை பார்க்கிறோம். இது குர்ஆனோடு விளையாடும் போக்காகும். எனவே குர்ஆனை ஓதும்போது ஒவ்வொரு வசனமாக அழகிய நயத்துடன் அதன் அர்த்தம் புரிந்து ஓதவேண்டும். அப்படி ஓதியதால்தான் உசைத் இப்னு ஹுளைர்[ரலி] அவர்கள் மீது அல்லாஹ்வின் அமைதி எனும் மேகம் தவழ்ந்தது. எனவே நாமும் உசைத்[ரலி] அவர்களை போல் வான்மறை ஓதுவோம். வல்லோனின் அமைதியை பெறுவோம்.

திங்கள், 16 நவம்பர், 2009

இறைவனால் பெயர் கூறப்பட்டு சிறப்பிக்கப்பட்ட நல்லடியார்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அல்லாஹ் தனது தூதர்களுக்கு பல்வேறுஅற்புதங்களை வழங்கினான். அந்த வரிசையில் நபி[ஸல்] அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதம் திருமறை குர்ஆன் ஆகும். இந்த குர்ஆனை பெரும்பாலான சஹாபாக்கள் மனனம் செய்திருந்தாலும் அதில் நால்வரை குறிப்பிட்டு அவர்களிடமிருந்து குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் கூறிய அந்த நால்வரில் உபை இப்னு கஅப்ரலி] அவர்களும் ஒருவர்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" இப்னு மஸ்வூத்(ரலி), அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப் மற்றும் முஆத் இப்னு ஜபல் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள். [புஹாரி]

இந்த அளவுக்கு சிறப்பிற்குரிய நபித்தோழராக உபை இப்னு கஅப்[ரலி] திகழ்வதற்கு காரணம், குர்ஆனை மனனம் செய்ததோடு சிறப்பாக ஓதவும் கூடியவர்.

உமர்(ரலி) அறிவித்தார்கள்; எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி]

அல்லாஹ்வின் வேதத்தை மனதில் தாங்கி, அதை அழகிய முறையில் ஓதக்கூடிய உபை இப்னு கஅப்[ரலி] அவர்களின் பெயரை அல்லாஹ் சொல்லி சங்கைப்படுத்திய அதிசயம் பாரீர்;

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்கள்;
நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், 'உங்களுக்கு 'லம் யகுனில்லஃதீன கஃபரூ' எனும் (98 வது) அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்' என்று கூறினார்கள். அதற்கு உபை(ரலி), 'அல்லாஹ் என் பெயரை குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை(ரலி) அழுதார்கள். [நூல்;புஹாரி]

அன்பானவர்களே! திருமறை குர்ஆனோடு உபை இப்னு கஅப் [ரலி] அவர்கள் கொண்ட நேசம் அவர்களின் பெயரை அல்லாஹ் சொல்லும் அளவுக்கு அல்லாஹ்வின் நேசத்தை பெற்றுத்தந்துள்ளது என்றால், இன்று அந்த உபை இப்னு கஅப்[ரலி] ஓதிய அதே குர்ஆன் நம்மிடம் உள்ளது. அதை அழகிய முறையில் ஓதுபவர்கள் நம்மில் எத்துனை பேர்..? குர்ஆன் பட்டுத்துணியால் போர்த்தப்பட்டு பரணியில் வைக்கும் அழகு பொருளாகவும், பட்டுப்[இறந்து]போனவர்களின் பக்கத்தில் உக்கார்ந்து ஓதும் மந்திரப்பொருளாகவும் நம்மால் மாற்றப்பட்டுவிட்டதே! இந்த நிலை மாற இன்று முதல் இயன்றவரை இறைமறை ஓதுவோம். இறைவனின் அன்பை பெறுவோம்!

ஞாயிறு, 15 நவம்பர், 2009

செய்த பாவத்திற்கு வாழ்நாளிலேயே பரிகாரம் கண்டவர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
நபி[ஸல்] அவர்களின் சிறிய தந்தையார் மாவீரர் ஹம்ஸா[ரலி] அவர்களை உஹது களத்தில் ஷகீதாக்கிய வஹ்ஷீ அவர்கள் அந்த சம்பவத்தை வர்ணிக்கிறார்கள்;
ஹம்ஸா(ரலி) பத்ருப்போரில் (என் எஜமான் ஜுபைருடைய தந்தையின் சகோதரரான) துஐமா இப்னு அதீ இப்னி கியார் என்பாரைக் கொலை செய்தியிருந்தார். எனவே, என் எஜமான் ஜுபைர் இப்னு முத்யிம் என்னிடம், 'என் சிறிய தந்தை(யின் கொலை)க்குப் பதிலாக ஹம்ஸாவை நீ கொன்றால் நீ (அடிமைத் தளையிலிருந்து) விடுதலையாவாய்" என்று கூறினார். எனவே, அய்னைன் (உஹுது) ஆண்டில் - அய்னைன் என்பது உஹுது மலைக்கரும்லுள்ள ஒரு மலையாகும். இந்த இரண்டு மலைகளுக்குடையில் ஒரு பள்ளத்தாக்கு உண்டு (குறைஷி) மக்கள் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றபோது அம்மக்களுடன் போர்(க் களம்) நோக்கி நானும் சென்றேன். மக்கள் போருக்காக அணிவகுத்து நின்றபோது சிபாஉ இப்னு அப்தில் உஸ்ஸா என்பவன் (அணியைவிட்டு) முன்னால் வந்து, '(என்னோடு) தனியே மோதுபவர் உண்டா?' என்று கேட்டான். அவனை நோக்கி ஹம்ஸா பின்அப்தில் முத்தலிப்(ரலி) கிளம்பி வந்து, பெண்களுக்கு விருத்தசேதனம் செய்யும் உம்மு அன்மாரின் மகனே! சிபாஉவே! நீ அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் (பகைத்துக் கொண்டு) மோத வந்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள். பிறகு ஹம்ஸா(ரலி) அவன் மீது (பாய்ந்து) கடுமையாகத் தாக்கினார்கள். அவன் கழிந்து போட்டவிட்ட நேற்யை தினம் போல் (மடிந்தவனாக) ஆகி விட்டான். நான் ஹம்ஸா (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்து) அவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்து கொண்டேன். ஹம்ஸா அவர்கள் என்னை (க் கவனிக்காமல்) நெருங்கி வந்தபோது, என்னுடைய ஈட்டியை அவரின் மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன். அது (பாய்ந்து) அவரின் புட்டத்திற்கிடையிலிருந்து வெளியேறியது. அதுதான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷிகள் (உஹுதிலிருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்றபோது நானும் அவர்களுடன் திரும்பினேன். மக்காவிற்கு போய் அங்கு (வெற்றி கிடைத்து) இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்கு (ஓடிச்) சென்று விட்டேன். தாயிஃப் வாசிகள் (இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) தங்கள் தூதுக் குழுவினரை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். அப்போது, என்னிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்கு தொல்லை தரமாட்டார்கள்: (எனவே, தூதுக் குழுவினருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்)" என்று கூறப்பட்டது. எனவே, தூதுக் குழுவினருடன் நானும் புறப்பட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்டபோது, 'நீ வஹ்ஷி தானே?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்" என்று கூறினேன். 'நீ தானே ஹம்ஸாவைக் கொன்றாய்?' என்று கேட்டார்கள். நான், 'உங்களுக்கு எட்டியபடி விஷயம் நடந்தது உண்மைதான்" என்று கூறினேன். அப்போது அவர்கள், '(உன்னைக் காணும்போது என் பெரிய தந்தை ஹம்ஸாவின் நினைவு வரும், எனவே,) என்னைவிட்டும் உன் முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா?' என்று கேட்டார்கள். உடனே, நான் (அங்கிருந்து) புறப்பட்டுவிட்டேன். நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டபோது, (தன்னை ஒரு நபி என்று வாதிட்ட வண்ணம்) பொய்யன் முஸைலிமா கிளம்பினான். (அவன் நபித்தோழர்களிடம் போரிடுவதற்காகப் பெரும்படை ஒன்றைத் திரட்டலானான். அவனை முறியடிப்பதற்காக அபூ பக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களும் படை திரட்டி அதற்கு காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்) நான் (என் மனத்திற்குள்), 'நிச்சயம் நான் முஸைலிமாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன். அவனை நான் கொல்ல (வாய்ப்புக் கிடைக்க)லாம். அதன் மூலம், (முன்பு) நான் ஹம்ஸா(ரலி) அவர்களைக் கொன்தற்கு(ப் பிரயாசித்தம் தேடி) ஈடுசெய்யலாம்" என்று கூறிக் கொண்டேன். (அபூ பக்ர் - ரலி அவர்கள் அனுப்பிய போர்ப்படையிலிருந்து) மக்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன். அப்போதுதான்அவனுடைய விஷயத்தில் நடந்தது நடந்து முடிந்தது. அப்(போரின்)போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்றிருந்தான். அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்து) சாம்பல் நிற ஒட்டகம் போன்றிருந்தான். அவன் மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதே) என்னுடைய ஈட்டியை எறிந்தேன். நான் அந்த ஈட்டியை அவனுடைய இரண்டு மார்புகளுக்கு மத்தியில் பாய்ச்சினேன். அது அவனுடைய பின் தோள்களுக்கிடையிலிருந்து வெளியேறியது. அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடி வந்தார். தம் வாளால் அவனுடைய உச்சந்தலை மீது ஓங்கி வெட்டிவிட்டார். (அவன்தான் முஸைலிமா) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்: (முஸைலிமா கொல்லப்பட்ட போது) ஒரு சிறுமி வீட்டின் முகட்டிலிருந்து கொண்டு, 'அந்தோ! நம்பிக்கையாளர்களின் தலைவரை ஒரு கறுப்பு அடிமை (வஹ்ஷீ) கொலை செய்துவிட்டான்" என்று (உரக்கச் சப்தமிட்டுச்) சொன்னாள்.
ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 4072

வஹ்ஷீ அவர்கள் தமது அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறும் ஆசையில் மாவீரர் ஹம்ஸா[ரலி] அவர்களை உஹதில் கொன்றதன் மூலம் மிகப்பெரிய பாவியாக இருந்த அவர், இறைவனின் நாட்டப்படி இஸ்லாம் அவரது உள்ளத்தில் குடியேறியபின், ஒரு சிறந்த மனிதரை, ஒரு சிறந்த நல்லடியாரை கொன்ற பாவத்திற்கு பரிகாரமாக, தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று வாதிட்ட பொய்யனை கொன்று பரிகாரம் தேடிக்கொள்கிறார்கள். இதன் மூலம் இஸ்லாமிய வரலாற்றில் தன்னையும் இணைத்துக்கொண்டவராக திகழ்கிறார். எனவே அல்லாஹ் நாடினால் இன்று இஸ்லாமிய எதிரிகளாக காட்சி தருபவர்களையும் இஸ்லாத்தை நிலைநாட்டுபவர்களாக மாற்றிக் காட்டுவான் என்பதற்கு வஹ்ஷீ அவர்கள் மிகப்பெரிய சான்றாக திகழ்கிறார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் வஹ்ஷீ அவர்களை பொருந்திக்கொள்வானாக!

வெள்ளி, 13 நவம்பர், 2009

இறைத்தூதரிடம் அளித்தார் உறுதிமொழி; இறுதிவரை காட்டினார் அதில் உறுதி!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ


ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்கள்;நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (தருமம்) கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகும் நபி அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், 'ஹகீமே! இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். இதை தாராள மனத்துடன் (பேராசையின்றி) எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அருள் வளம் (பரக்கத்) வழங்கப்படுகிறது. இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். மேல் கை, கீழ்க் கையை விடச் சிறந்ததாகும்" என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! சத்திய மார்க்கத்துடன் தங்களை அனுப்பியவன் மீது ஆணையாக! தங்களுக்குப் பின் எவரிடமும் எதையும் நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும் வரை கேட்க மாட்டேன்" என்று கூறினேன்.

அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்: ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அவர்களை அபூ பக்ர்(ரலி) அன்பளிப்புத் தருவதற்காக அழைத்தார்கள். அவர்களிடமிருந்து எதையும் ஏற்றுக் கொள்ள அவர் மறுத்துவிட்டார். பிறகு, உமர்(ரலி) அவருக்கு (அன்பளிப்புகள் சிலவற்றைக்) கொடுப்பதற்காக அழைத்தார்கள். அதையும் ஏற்க அவர் மறுத்துவிட்டார். எனவே, உமர்(ரலி) (மக்களிடையே), 'முஸ்லிம்களே! இந்த (ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வங்களிலிருந்து அல்லாஹ் ஒதுக்கிய அவரின் உரிமையை அவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தேன். ஆனால், அதை எடுத்துக் கொள்ள அவர் மறுத்துவிட்டார்' என்று அறிவித்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த மனிதரிடமும், ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி), தாம் மரணிக்கும் வரை (எதுவும்) கேட்கவில்லை. அல்லாஹ் அவரின் மீது கருணை புரிவானாக!ஆதாரம்; புஹாரி எண் 2750

அன்பானவர்களே! பொதுவாக மனிதன் போதும் என்று சொல்லாத விஷயங்களில் முதலிடம் வகிப்பது செல்வமாகும். ஒருவனுக்கு எவ்வளவுதான் செல்வம் அல்லாஹ்வால் வழங்கப்பட்டிருந்தாலும், அதில் மனநிறைவு அடையாமல் இன்னும் ஏதாவது இலவசமாக கிடைக்காதா என்று எதிபார்த்து காத்திருப்பான். இதற்கு நிகழ் கால சம்பவம் ஒன்றை குறிப்பிடலாம் அரசு சார்பாக இலவச கலர் டிவி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் என்பது அவசியமற்றது என்பது ஒருபுறமிருக்க, இந்த இலவச கலர் டிவியை வாங்குவதற்கு ஒரு பெண்மணி காரில் வந்து இறங்குகிறார். கார் வைத்து இருக்கும் அளவுக்கு வசதி படைத்தவர் , அரசு ஒரு பொருளை இலவசமாக வழங்குகிறது என்றால் அங்கே தனது கண்ணியத்தை மறந்து அந்த பொருளை அடையமுயற்சிக்கிறார் என்றால் மனிதனின் பொருளாசைக்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. இப்போது நாம் ஹகீம் இப்னு ஹிஸாம்[ரலி] அவர்களை நினைத்து பார்க்கிறோம். அல்லாஹ்வின் தூதரிடம் சொன்ன வாக்கிற்காக, அபூபக்கர்[ரலி] அவர்களும், உமர்[ரலி] அவர்களும் தனக்கு வழங்க முன்வந்த, தனக்கு சேரவேண்டிய செல்வத்தை கூட வாங்க மறுத்து, எவரிடத்திலும் எதையும் வாங்குவதில்லை என்ற தனது கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்று மரணித்த அந்த மாமேதையை என்னும்போது,

ஆம்! இவர்கள் மறுமைக்காக இம்மையை விற்றவர்கள் என்ற உண்மை உறுதியாக வெளிப்படுகிறது. மேலும் அவர்களின் ஒப்பற்ற தியாக வாழ்வும் நம்மை மெய்சிலிர்க்க செய்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் , அவசியமற்ற செல்வத்திற்காக பேராசை கொண்டு அடுத்தவர்களிடம் கையேந்தும் இழி நிலையில் இருந்து நம்மை காப்பாற்றுவானாக!

வியாழன், 12 நவம்பர், 2009

ஷைத்தான் வெருண்டோடுவான் இவரைக்கண்டால்..!

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்கள்;

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் (குடும்பச் செலவுத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர்(ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர்(ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள். உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக ) இருக்கச் செய்வானாக" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே" என்றார்கள். உமர்(ரலி), 'எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!" என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) 'தமக்குத் தாமே பகைவர்களாகி விட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்காக நீங்கள் அஞ்சுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், 'ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக் கடுமை காட்டக் கூடியவராகவும் இருக்கிறீர்கள்" என்று பதிலளித்தார்கள். (அப்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்" என்று கூறினார்கள்.ஆதாரம்;புஹாரி எண் 3294!

இந்த பொன்மொழியில் நாம் கவனிக்கவேண்டிய படிப்பினை பல இருக்கின்றன. அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் தமது வாழ்வாதார தேவைகள் குறித்து பேசிக்கொண்டிருந்த நமது அன்னையர்கள், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தமது கணவர் என்பதால் சாதாரண உடையோடு சகஜமாக பேசிய நிலையில் உமர்[ரலி] அவர்கள் வருவதையறிந்தவுடன் உடனடியாக தத்தமது பர்தாவை அணிந்து கொள்கிறார்கள். உமர்[ரலி] அவர்கள் சிறந்த ஸஹாபி எனினும், அவர் ஒரு அந்நிய ஆண் என்பதால் உடனடியாக தமது ஆடை விசயத்தில் நமது அன்னையர்கள் கவனம் செலுத்துகிறார்கள். அதோடு உமர்[ரலி] அவர்கள் விஷயத்தில் நம் அன்னையர்கள் அஞ்சியதற்கு மற்றொரு காரணமும் உண்டு. பர்தா கடமையாக்கப்படுவதற்கு முன்பே உமர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களிடம்,

'இறைத்தூதர் அவர்களே! தங்களின் மனைவியருடன் உரையாட வருபவர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர். எனவே தங்களை அன்னிய ஆண்களிடமிருந்து மறைத்துக் கொள்ளுமாறு தங்களின் மனைவியருக்கு தாங்கள் உத்திரவிடலாமே!' என்று கூற, அல்லாஹ் உமர்[ரலி]அவர்கள் கூற்றிற்கேற்ப பர்தா தொர்பான வசனத்தை இறக்கி அருளினான்[புஹாரி] ஆக உமர்[ரலி] அவர்கள் பர்தாவை முன் மொழிந்தவர் என்பதால் அவர் வருகிறார் என்றவுடன் அன்னையர்கள் அவசரமாக பர்தாவை பேணுகிறார்கள்.

இதில் இன்றைய பெண்களுக்கு பல படிப்பினை உள்ளது தனது கணவரோடு இருக்கும் நிலையில் எந்த ஆடையோடு இருக்கிறார்களோ, அதே ஆடையோடு கணவனின் சகோதரனோ அல்லது வேறு நெருங்கிய உறவினர்களோ வந்தாலும் அப்படியே சர்வ சாதாரணமாக, சகஜமாக அதே உடையோடு நம் பெண்களில் பலர் இருப்பதை காணலாம். உறவினர் அல்லாத வேறு யாரேனும் வந்தால்தான் பர்தா முறையை பேணும் பெண்களும் உண்டு. இப்படிப்பட்ட பெண்கள், நம் அன்னையர்களிடம் படிப்பினை பெறவேண்டும்.

அடுத்து உமர்[ரலி] அவர்களின் உயர்வான சிறப்பும் இந்த பொன்மொழியில் விளங்குகிறது. அதாவது அவர்கள் ஒரு தெருவில் வந்தால், ஷைத்தான் அவர்களை கண்டு தனது பாதையை அடுத்த தெருவிற்கு மாற்றி விடுவான் என்று நபி[ஸல்] அவர்கள் கூறுவதன் மூலம் ஷைத்தான் அஞ்சக்கூடிய ஒரு சிறந்த இறை நேசராக உமர்[ரலி] அவர்கள் திகழ்ந்துள்ளார்கள். இன்று நம்முடைய நிலை என்ன..? நாம் ஒரு தெருவில் நடந்தால், ஷைத்தான் நம்மை எதிர்கொண்டு ஆரத்தழுவி வரவேற்று நம் தோள்மீது கை போட்டு அளவளாவும் அளவுக்கு மது-மாது-சூது-வட்டி-சினிமா-வரதட்சனை- போன்ற ஷைத்தானின் அடிச்சுவட்டில் பயணிப்பதன் மூலமும் இறைவனின் அருள் வாசலுக்கு நெருக்கமான அமல்களை செய்வதில் பாராமுகமாக இருப்பதன் மூலமும் ஷைத்தானின் உற்ற தோழர்களாக நாம் திகழ்கிறோம். இந்த நிலை மாறவேண்டும் எனில், உமர்[ரலி] அவர்களை போல் முழுமையான இஸ்லாமிய வாழ்க்கை நம்மிடத்தில் வரவேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ், இறைமறையோடும் -இறைத்தூதரின் பொன்மொழியோடும் தோழமை கொள்ளக்கூடியவர்களாக, ஷைத்தானிடம் பகைமை பாராட்ட கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!

வெள்ளி, 6 நவம்பர், 2009

ஜக்காத்தை மறுத்தார்களா சஹாபாக்கள்...?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அபூபக்கர்[ரலி] அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு சாரார் ஜக்காத்தை மறுத்தார்கள் என்பதும் அவர்களை எதிர்த்து அபூபக்கர்[ரலி] அவர்கள் யுத்தம் செய்வேன் என்று அறைகூவல் விடுத்ததும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதில் பிரச்சினை என்ன வென்றால் அபூபக்கர்[ரலி] அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஜக்காத்தை மறுத்த அந்த சாரார் யார் என்பதுதான். அதுபற்றி 72 .கூட்டம் யார் என்ற தலைப்பில் பேசிய பீஜே என்பவர், ஜக்காத்தை மறுத்தவர்களில் சகாபாக்களும் உண்டு என்று கூறுகிறார். அவரது உரையிலிருந்து;

ஜக்காத்தை மறுத்தவர்கள் இரு சாரார்; ஒரு சாரார் மதீனாவில் நபி[ஸல்] அவர்கள் கை ஓங்கியிருந்த காரணத்தால் பயந்தவர்களாக, வேண்டா வெறுப்பாக ஜக்காத்தை கொடுத்தவர்கள். அதாவது நடித்தவர்கள் நயவஞ்சகர்கள்.

இன்னொரு சாரார் யார் என்றால்,

ஒரு முடிவை எடுத்துக்கொண்டு, ஜக்காத் கொடுக்காம இருக்குறதுக்கு ஏதாவது ஆயத்து இருக்குமான்னு தேடினார்கள் . தங்களுக்கு சாதகமாக வளைப்பதற்கு ஒரு வசனத்தை தேடிப்பிடிக்கிறார்கள். தவ்பா அத்தியாயத்தின் ஒருவசனத்தை எடுத்துவைத்துக்கொண்டு வளைக்கிறாங்க. ஒரு வசனத்த எடுத்து வைத்துக்கொண்டு அவங்க விரும்பிய வடிவத்த கொடுக்குற அந்த வியாதி அங்கதான் வருது. அதுல அல்லாஹ் சொல்றான்; நபியே நீங்க அந்த மக்கள்ட இருந்து எடுங்க! பின்பு அவங்களுக்காக துஆ செய்யுங்க! அது அவங்களுக்கு அமைதியைதரும் என்ற வசனத்தை எடுத்து வைச்சுக்கிட்டு அவங்க சொன்னாங்க; அபூபக்கரே! நீ என்ன ரசூலா..? ஒன்னோட துஆ எங்களுக்கு மன அமைதியா தருமா ? ஒமரோட துஆ எங்களுக்கு மன அமைதியா தருமா? எனவே ஜக்காத் ரசூல் காலத்தோட முடிஞ்சு போச்சு என்றார்கள். [இவங்க யார்னு அந்த அறிஞர் சொல்கிறார்] நல்ல சகாபாக்களா இருந்தவங்க;அல்லாஹ்வுக்காக பல தியாகங்களை செய்ஞ்சவங்க. கஷ்டப்பட்டவங்க. ஆனா காசு விஷயம்ன்னு வந்த வுடனே, அபூபக்கரே ஒங்களை ஆட்சியாளரா ஏத்துக்கிறோம் ஆனா காசுன்னு வந்தீங்கன்னா எங்களுக்கு இஸ்லாமே வேணாம் என்று கூறியதாக அந்த அறிஞர் பேசுகிறார். அதோடு இறுதியாக ஜக்காத் கொடுக்காமல் இருப்பதற்காக குர்ஆன் வசனத்தை வளைக்கும் நோய் சில சகாபாக்களுக்கு வந்தது. ஆனால் அதற்கு ட்ரீட்மெண்டு அபூபக்கரால் கொடுக்கப்பட்டு அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது ஆனால் அவர்களால் தொடங்கப்பட்ட அந்த நோய் இன்றும் இருக்கிறது என்று கூறி அதற்கு தர்காவாதிகள் குர்ஆன் வசனங்களை வளைப்பதை மேற்கோள் காட்டுகிறார்.ஆக, சுருங்க சொன்னால், ஜக்காத்தை மறுத்தவர்களில் இரு சாராரில் ஒருசாரார் நயவஞ்சகர்கள் ; மறு சாரார் அல்லாஹ்வுக்காக தியாகம் செய்த சகாபாக்கள் என்ற கருத்தை முன்வைக்கிறார். இவ்வளவு பேசிய அவர் இந்த விஷயங்கள் எந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ளது என மறந்தும் கூட சொல்லவில்லை என்பதுதான் 'ஹைலைட்'.

சரி! இப்ப விஷயத்திற்கு வருவோம்; அபூபக்கர்[ரலி] அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஜக்காத்தை மறுத்தவர்கள் யார் என்று நேரடியான தெளிவான வார்த்தைகளில் குறிப்பிடப்படவில்லை. அது சம்மந்தமாக புஹாரியில் வரும் ஹதீஸ் இதோ;

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி[ஸல்] அவர்கள் மரணித்து அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாம்விட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரலி) தயாரானார் (உமர்(ரலி), 'லா இலாஹ இல்லல்லாஹ்" கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி), உமரை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்" என்றார். இது பற்றி உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்" என்றார். [எண்; 1399 ]

இந்த செய்தியில் உமர்[ரலி]அவர்கள், 'லா இலாஹ இல்லல்லாஹ்" கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்? என்று கேட்கிறார்கள். இதன்மூலம் ஜக்காத்தை மறுத்தவர்கள் முஸ்லிம்கள் அதாவது சஹாபாக்களில் சிலர் என்றும் விளங்கலாம். அல்லது முஸ்லிம்கள் என்ற போர்வையில் இருந்த நயவஞ்சகர்கள் என்றும் விளங்கலாம். ஆனால் எது சரியானது என்றால், உண்மையான சகாபாக்கள் தியாகமே வாழ்க்கையாக கொண்ட சகாபாக்கள் நபி[ஸல்] அவர்கள் மரணித்த குறுகிய நாட்களில் இஸ்லாத்தின் மிகப்பெரிய தூணாக உள்ள ஜக்காத்தை மறுக்கும் அளவுக்கு செல்லமாட்டார்கள். அப்படித்தான் நம்பவேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
لَوْلَا إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بِأَنفُسِهِمْ خَيْرًا وَقَالُوا هَذَا إِفْكٌ مُّبِينٌ
முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, "இது பகிரங்கமான வீண் பழியேயாகும்" என்று கூறியிருக்க வேண்டாமா? (24:12)

இந்த வசனத்தை நாம் முன்வைத்ததற்கு காரணம் சகாபாக்கள்தான் ஜக்காத்தை மறுத்தார்கள் என்று தெளிவாக இல்லாத நிலையில், அதுபோன்ற தோற்றத்தை தரும் தகவல் வருமாயின் சகாபாக்கள் மீது நமக்கு நல்லெண்ணம் வரவேண்டும். சகாபாக்கள் ஜக்காத்தை மறுக்கும் அளவுக்கு பொருளாசை பிடித்தவர்கள் அல்ல என்பதை தங்களின் வாரிவழங்கும் தன்மையால் நிரூபித்தவர்கள். எனவே ஜக்காத்தை மறுத்தவர்கள் முஸ்லிம்கள் என்ற போர்வையில் இருந்த நயவஞ்சகர்கள் என்பதே சரியாகும். இல்லையில்லை சகாபாக்கள்தான் ஜக்காத்தை மறுத்தார்கள் என்றால் எந்த ஸஹாபி மறுத்தார் என்பதை அவர்கள் விளக்கவேண்டும். மேலும், ஜக்காத் வழங்குவதிலிருந்து தப்பிப்பதற்காக சகாபாக்கள் குர்ஆண் வசனத்தையே வளைத்தார்கள். அதோடு அபூபக்கரே! நீ என்ன ரசூலா..? உன்னோட துஆ எங்களுக்கு அமைதியை தருமா..? என்றெல்லாம் கேட்டார்கள் என்று சகாபாக்கள் மீது அப்பட்டமான அவதூறு முன்வைக்கப்பட்டுள்ளது. அதோடு இன்று குர்ஆண் வசனங்களை வளைப்பவர்களுக்கு முன்னோடியாக சகாபாக்கள் இருந்தார்கள் என்ற தோற்றமும் விதைக்கப்பட்டுள்ளது.

அதோடு ஜக்காத் விஷயத்தில் உமர்[ரலி] அவர்கள் அபூபக்கர்[ரலி] அவர்களிடம், அபூபக்கரே! மக்கள்ட்ட ஜக்காத் விஷயத்துல எதிர்ப்பு கடுமையா இருக்கு; அதுனால மென்மையை கடைபிடிங்க; ஜக்காத்த நாம் பின்னாடி வசூலித்து கொள்ளலாம் என்று கூறியதாகவும் அதாவது உமர் வளைந்து கொடுத்துவிட்டார் என்ற கருத்தில் இந்த அதிமேதாவி பேசுகிறார். ஆனால் மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள ஹதீஸில், அபூபக்கர்[ரலி] அவர்களிடம், இது தொடர்பாக உமர்[ரலி] அவர்கள் சொன்ன வாசகம் தெளிவாகவே இடம்பெற்றுள்ளது. ஆக உமர்[ரலி] அவர்கள் மென்மையை கடைபிடிக்க சொன்னார்கள் என்றும், ஜக்காத்தை நாம் பின்னாடி வசூலித்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள் என்றும் உமர்[ரலி] அவர்கள் சொல்லாத ஒன்றை சொல்லி உமர்[ரலி] அவர்களை பலவீனராக அடையாளம் காட்டியுள்ளார்கள். அதோடு தெளிவான வார்த்தையில் இந்த அதிமேதாவி இப்படி வர்ணிக்கிறார்;

'உமறு பெரிய வீரரு; அலீயை புலி அப்பிடீன்னு நாம சொல்லுவோம். ஆனா இஸ்லாமிய வரலாற்றில வீரத்திற்கும், மனத்துணிவிற்கும் ,தைரியத்திற்கும் அபூபக்கருக்கு நிகரான ஒருவரை சொல்ல இயலாது என்கிறார்.'
இந்த உம்மத்தில் சிறந்தவர் அபூபக்கர்[ரலி] அவர்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. அதற்காக அபூபக்கர்[ரலி] அவர்களை புகழ்கிறேன் என்ற பெயரில் அபூபக்கர்[ரலி] அவர்களை போலவே இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்த மாவீரர்களான உமர்[ரலி] மற்றும் அலீ[ரலி] அவர்களின் வீரத்தை கேள்விக்குள்ளாக்குவது/கேலிக்குள்ளாக்குவது போன்ற வார்த்தை பிரயோகம் சரியா என்பதையும் சிந்திக்கவேண்டுகிறோம்.

ஆக, குர்ஆண்-ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு, மறுபுறம் உண்மையும்-பொய்மையும் கலந்த வரலாறுகளை மைய்யமாக கொண்டு, உண்மையாளர்களான சஹாபாக்கள் மீது தப்பெண்ணம் கொள்ளும் வார்த்தை பிரயோகங்கள், அவர்கள் வாயிலிருந்து வெளியாவது ஆரோக்கியமானதல்ல.