திங்கள், 23 நவம்பர், 2009

தந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
உஹுதுப் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அப்போது இப்லீஸ், 'அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்!' என்று கத்தினான். உடனே முஸ்லிம்களில் முன் அணிப் படையினர் திரும்பிச் சென்று (எதிரிகள் தாம் பின்னால் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு) பின் அணிப்படையினருடன் மோதினார்கள். அப்போது அங்கு (தமக்கு அருகேயிருந்த) தம் தந்தை அல்யமான்(ரலி) அவர்கள் (முன்னணிப் படையினரிடம்) சிக்கிக் கொண்டதை ஹுதைஃபா(ரலி) அவர்கள் பார்த்துவிட்டு, 'அல்லாஹ்வின் அடியார்களே! (அவர்) என் தந்தை! என் தந்தை' என்று (உரத்த குரலில்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வீன் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்பே (அவரைவிட்டு) அவர்கள் விலகினார்கள் . ஹுதைஃபா(ரலி) அவர்கள் 'அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!' என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்கள் மன்னித்தால் அவர்கள் இறைவனை அடையும் வரை (அவர்களின் வாழ்க்கையில் நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது.
ஆதாரம்;புஹாரி

உஹத் களத்தில் ஆரம்பத்தில் தீரமுடன் போராடி இணைவைப்பாளர்களை வேருண்டோடச்செய்த முஸ்லிம்களின் கவனத்தை திசை திருப்பும்வகையில் ஷைத்தான், முன்னேறி முதலாவதாக சென்ற படைக்கு அடுத்தபடியாக வந்த முஸ்லிம்களின் ஒருபிரிவினரை எதிரிகள் என்ற தோற்றத்தை உண்டாக்கினான். அவர்களை இனைவைப்பாளர்களோ என்று தவறாக கருதிய முஸ்லிம்கள் தாக்கத் தொடங்கினார்கள். முஸ்லிம்களின் படையால் தாக்கப்பட்ட முஸ்லிம் குழுவில் மாட்டிக்கொண்டார் யமான்[ரலி] அவர்கள். யமான் [ரலி] அவர்களின் மகன் ஹுதைஃபா[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை என்தந்தை என்று கத்தியது போர்முனையில் இணைவைப்பாளர்களை வெருண்டோட செய்வதே லட்சியமாக கொண்ட சஹாபாக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அல்லாஹ்வின் நாட்டப்படி யமான்[ரலி] அவர்கள் முஸ்லிம்கள் கையாலேயே ஷகீதானார்கள். தன் கண் முன்னே தனது தந்தையை தனது சக முஸ்லிம் சகோதரர்கள் கொன்றதை கண்ட ஹுதைஃபா[ரலி] அவர்கள் கோபம் கொள்ளவில்லை. தனது சக முஸ்லிம் சகோதரர்கள் அறியாமல் செய்துவிட்டார்கள் என அமைதி காத்து அந்த முஸ்லிம் சகோதர்களை நோக்கி, அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! என்று அவர்களுக்காக துஆ செய்தார்களே இந்த உயர்வான மனம் யாருக்குவரும்..? அதுதான் சஹாபாக்கள்! சிலர் இன்றைக்கு சின்ன சின்ன மன கசப்பிற்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல் இருக்கிறார்கள். தனது சக முஸ்லிம் தவறே செய்திருந்தாலும் அதை மன்னித்து அவனை அரவணைக்கும் மனப்பக்குவம் நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை. நாம் மட்டுமன்றி, நமது சமுதாயத்தை இவர்தான் தாங்கி கொண்டிருக்கும் தூண் என்று வர்ணிக்கப்படும் சில தலைவர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை மன்னித்து ஒன்றிணைய தயாராக இல்லை என்பதை பெருகிவரும் இயக்கங்கள் உறுதிப்படுத்துகிறது. இந்த லட்சணத்தில் மன்னிப்பின் சிகரமாக திகழ்ந்த சஹாபாக்களின் வாழ்வில் நடந்ததாக கருதப்படும் 'குற்றங்களை' கண்டுபிடிக்க கிளம்பிவிட்டார்கள். இதுதான் விந்தை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக