வெள்ளி, 27 நவம்பர், 2009

ஏழைகளின் நலனுக்கே எமது ஆட்சியில் முன்னுரிமை!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

உமர்(ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமை அஸ்லம்(ரஹ்) அறிவித்தார்.
உமர் இப்னு கத்தாப்(ரலி), (ஸகாத் கால்நடைகளின்) பிரத்தியேக மேய்ச்சல் நிலம் ஒன்றுக்கு 'ஹுனைன் என்றழைக்கப்படும் தம் அடிமை ஒருவரை (காவலராக) நியமித்தார்கள். அப்போது, 'ஹுனையே! உன் கையை முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதிலிருந்து காத்துக் கொள். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபப் பிரார்த்தனைக்கு அஞ்சு. ஏனெனில், அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை (அல்லாஹ்வினால்) எற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும். சிறு ஒட்டக மந்தைகளையும் சிறு ஆட்டு மந்தைகளையும் ஓட்டி வருபவர்கள் (மேய்ச்சல் நிலத்திற்குள்) நுழைய அனுமதியளி. (செல்வந்தர்களான) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் மற்றும் உஸ்மான் இப்னு அஃப்பான் ஆகியோரின் கால்நடைகளைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. (அவற்றை உள்ளே நுழைய விடாதே) ஏனெனில், அவ்விருவரின் கால்நடைகளும் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் அவர்களிருவரும் (தம் பிழைப்பிற்குத் தம்) பேரீச்சந் தோட்டங்களையும் விளைநிலங்களையும் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால், சிறிய ஒட்டக மந்தைகளையும் சிறிய ஆட்டு மந்தைகளையும் வைத்திருப்பவர்கள் தங்கள் கால்நடைகள் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் (கலீஃபாவான) என்னிடம் தம் பிள்ளை குட்டிகளை அழைத்து வந்து, 'விசுவாசிகளின் தலைவரே! நான் இவர்களை (பட்டினி கிடந்து) சாகவிட்டு விடவா?' என்ற கேட்பார்கள். எனவே, (முஸ்லிம்களின் பொதுநிதியிலிருந்து) தங்கத்தையும் வெள்ளியையும் (அவர்களுக்குத் தருவதை) விட (அரசின் பிரத்தியேக மேய்ச்சல் நிலங்களிலிருந்து) தண்ணீரையும் புற்பூண்டுகளையும் தருவது எனக்கு இலேசானதாகும் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவர்களுக்கு அநீதியிழைத்துவிட்டதாக இவர்கள் கருதுகிறார்கள். இது அவர்களின் நாடு. இதற்காக இவர்கள் அறியாமைக் காலத்திலும் போரிட்டிருக்கிறார்கள்; இஸ்லாத்தின் காலத்திலும் இஸ்லாத்தைத் தழுவி இதற்காகப் போரிட்டிருக்கிறார்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இறைவழியில் (போரிடுவோரை) நான் ஏற்றியனுப்பவேண்டிய (கால்நடைச்) செல்வம் மட்டும் தேவையில்லையென்றால் இவர்களுடைய நாட்டிலிருந்து ஓர் அங்குலத்தைக் கூட (கையகப்படுத்தி) பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக நான் ஆக்கியிருக்க மாட்டேன்" என்று கூறினார்கள்.
ஆதாரம் புஹாரி எண் 3059

அன்பானவர்களே! உமர்[ரலி] அவர்கள் தனது ஆட்சியின் போது ஒரு நிலத்தை கையகப்படுத்தி ,அதில் போருக்கு பயன்படும் கால்நடைகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலமாக ஆக்கி அதில் காவலரையும் நியமிக்கிறார்கள். அந்த காவலரிடம் கூறும்போது,
கால்நடைகளை மட்டுமே நம்பி ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கும் ஏழைகள் தங்கள் கால்நடைகளை மேயவிடுவதற்காக இந்த நிலம் நோக்கி கொண்டுவந்தால் அவர்களுக்கு அனுமதியளி. ஏனெனில், இரை கிடைக்காமல் அவர்களின் கால்நடைகள் அழிந்துவிட்டால், அவர்கள் தங்களின் வறுமையை முறையிட தங்கள் குழந்தைகள் சகிதமாக எம்மை நோக்கி வருவார்கள். அந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக ஏழைகள் விஷயத்தில் அநீதி இழைப்பதை விட்டு காத்துக்கொள் என்று கூறுகிறார்கள்.
அடுத்து உமர்[ரலி] அவர்கள் சொன்னதுதான் முத்தாய்ப்பானது. வசதிபடைத்த உஸ்மான்[ரலி] மற்றும் அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] ஆகியோரின் கால்நடைகள் விஷயத்தில் கண்டிப்பாக இரு. ஏனெனில் அவர்களது கால்நடைகள் அழிந்துவிட்டால் கூட அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. ஏனெனில் அவர்களுக்கு பேரீத்தம் மரங்களும், விளைநிலங்களும் இருக்கின்றன என்று கூறுகிறார்கள்.
இதில் நாம் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவெனில், அரசுக்கு சொந்தமான எந்த ஒன்றும் வசதிபடைத்தோருக்கு திகட்டும் கனியாகவும், ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவும் இருப்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். வசதிபடைத்தவர்களுக்காக அரசு இயந்திரம் தொடங்கி, நீதிமன்றம் வரை அப்பட்டமாக வளைவதை பார்க்கிறோம். வசதிபடைத்தவர்கள் மற்றும் தமக்கு பின்னால் ஒரு கூட்டத்தை வைத்திருப்பவர்கள் என்னதான் பாரதூரமான தவறுகள் செய்தாலும், அவர்களை கைது செய்வது அரிது. அவ்வாறே கைது செய்யப்பட்டாலும் அவர்கள் ஜாமீனில் 'ஹாயாக' வெளியே வருவார். பின்பு அந்த வழக்கு மறக்கப்பட்டுவிடும். அதே நேரத்தில் ஒரு முஸ்லீம் ஏதாவது தவறு செய்தான் என்று கருதப்பட்டால் அவனை அதிரடியாக கைது செய்யும் அரசு இயந்திரம், அவனை விசாரைக்கைதியாகவே ஜாமீன் கூட வழங்காமல் ஆயுளை சிறையிலேயே முடிக்கும் அளவுக்கு நடந்து கொள்வதை காணுகிறோம். ஆனால், உமர்[ரலி] அவர்கள் ஏழைகளிடம் அவர்களின் நிலையறிந்து கணிவாகவாகவும், வசதி படைத்தோரிடம் அவர்களின் நிலையறிந்து கடுமையாகவும் நடந்து, என்னுடைய ஆட்சி இறைவனுக்கு மட்டுமே அஞ்சக்கூடிய, ஏழைகளின் சிரிப்பில் இறைவனை உண்மையாகவே காணக்கூடிய ஆட்சி என்று நடத்திக்காட்டிய அமீருல் முஃமினீன் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக