வெள்ளி, 30 ஜூலை, 2010

அல்லாஹ்வின் தூதரையே பெரும் சொத்தாக கருதிய அன்சாரிகள்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அல்லாஹ் தன் தூதர்[ஸல்] அவர்களுக்கு 'ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை [போரின் வெற்றிப் பரிசாக] அளித்தபோது, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் [புதிதாக இஸ்லாத்தை தழுவியிருந்த] சில குறைஷிகளுக்கு நூறு ஒட்ட்டகங்களை கொடுக்கலானார்கள். அப்போது அன்சாரிகளில் சிலர், அல்லாஹ் 'அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை மன்னிப்பானாக! [எதிரிகளான] குறைஷிகளின் ரத்தம் நம் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க [நமக்கு கொடுக்காமல்] இவர்களுக்கு கொடுக்கிறார்களேஎன்று கவலையுடன் சொன்னார்கள்.

அன்சாரிகளின் இந்த பேச்சு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கு எட்டியது. இதையொட்டி அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், அன்சாரிகளை ஒரு இடத்தில் ஒன்று கூட்டினார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், உங்களை குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளிலுள்ள விவரமானவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் கருத்துடையவர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடையவர்கள் சிலர்தாம் அவ்வாறு பேசிக்கொண்டார்கள் என்று அன்சாரிகள் கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், ''இறைமறுப்பை விட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். [இதன் வாயிலாக இஸ்லாத்திற்கும்] அவர்களின் உள்ளங்களுடன் நான் இணக்கம் ஏற்படுத்துகிறேன். மக்கள் உலக செல்வங்களை எடுத்துச்செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரையே கொண்டு செல்வதை விரும்பமாட்டீர்களா..? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்று திரும்பும் செல்வத்தை விட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகள், ஆம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் [எங்களுடன் உங்களை கொண்டு செல்வதையே] விரும்புகிறோம் என்று சொன்னார்கள்.
ஹதீஸ் சுருக்கம் நூல்;முஸ்லிம்.

அன்பானவர்களே! மக்காவை விட்டு மதீனா நோக்கி கொள்கைக்காக நாட்டு துறந்து வந்த முஹாஜிர்களை தாயன்போடு அரவணைத்து தங்களின் சொந்த சகோதரர்களாகவே கருதி சொத்தில் கூட பங்கு கொடுக்கும் அளவுக்கு தயாள உள்ளம் கொண்டவர்கள் அன்சாரிகள் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அத்தகைய அன்சாரிகளில் சிலர், பொருள் பங்கீடு விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் மீது அதிருப்தி கொண்டது போன்ற தோற்றம் மேற்கண்ட ஹதீஸின் ஆரம்பத்தில் தோன்றலாம். ஆனால் அன்சாரிகள் குறுகிய மனம் கொண்டவர்கள் அல்ல. உயிரை பணயம் வைத்து போரிட்டு அதன் மூலம் கிடைத்த பொருட்களை பங்கிடுவதில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு வழங்கிவிட்டு நம்மை புறக்கணிக்கிறார்களே என்ற ஆதங்கம்தான் அன்சாரிகளின் அந்த வார்த்தை பிரயோகங்கள். பின்பு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் விளக்கிச்சொன்ன மாத்திரமே அதை அப்படியே ஏற்றுக்கொண்டதோடு, இறைத்தூதர்[ஸல்] அவர்களை நாங்கள் எங்கள் இல்லங்களுக்கு கொண்டு செல்லவே விரும்புகிறோம் என்று சொல்லி, உலகத்தின் பொருட்கள் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. எங்களின் மிகப்பெரிய சொத்தாக இறைத்தூதர்[ஸல்] அவர்களையே கருதுகிறோம் என்று சொல்லி தங்களின் தயாள குணத்தை மீண்டும் நிருப்பித்த அன்சாரிகள்ஒரு சரித்திர புருஷர்கள் என்றால் மிகையில்லை.

அல்லாஹ் அன்சாரிகளின் தியாகத்தை பொருந்திக்கொள்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக