வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

உம்மஹாத்துல் முஃமினீன்களின் தியாகம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

[ஒருமுறை] அபூபக்கர் அஸ்ஸித்தீக்[ரலி] அவர்கள் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் வீட்டிற்கு வந்து உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்போது மக்களில் பலர் தங்களில் எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடைக்காமல் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் வீட்டின் வாசலிலேயே அமர்ந்திருப்பதை கண்டார்கள். அனுமதி கிடைத்ததும் அபூபக்கர்[ரலி] உள்ளே சென்றார்கள். பிறகு உமர்[ரலி] அவர்கள் வந்து உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் அனுமதி கிடைத்தது.[அவர்களும் உள்ளே நுழைந்தார்கள்] அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தமது மனைவியர் சூழ, பேசமுடியாத அளவிற்கு துக்கம் மேலிட அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.

அப்போது அபூபக்கர்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களை சிரிக்கவைக்க எதையேனும் சொல்லப் போகிறேன் என்று[மனதிற்குள்] சொல்லிக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களே! எனது மனைவி [ஹபீபா]பின்த் காரிஜா என்னிடத்தில் குடும்பச்செலவுத் தொகையை [உயர்த்தித்தருமாறு] கேட்க, நான் அவரது கழுத்தில் அடித்துவிட்டேன் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்..? என்று கேட்டார்கள். இதைக்கேட்டு அல்லாஹ்வின்தூதர்[ஸல்] அவர்கள் சிரித்தார்கள். பிறகு, இதோ நீங்கள் கானுகிண்றீர்களே! இவர்களும் என்னிடம் செலவுத்தொகையை [உயர்த்தித்தரக்]கோரியே என்னைச்சுற்றி குழுமியுள்ளனர் என்று கூறினார்கள். உடனே அபூபக்கர்[ரலி] அவர்கள் [தம் புதல்வி] ஆயிஷா[ரலி] அவர்களை நோக்கி, அவர்களை கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். உமர்[ரலி] அவர்கள், [தம் புதல்வி] ஹப்ஸா[ரலி] அவர்களை நோக்கி, கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் இல்லாததை நீங்கள் கேட்கிறீர்களா என்று அவ்விருவருமே கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மனைவியர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் இல்லாததை ஒருபோதும் நாங்கள் கேட்கமாட்டோம் என்று கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தி ஒன்பது நாட்கள் தம் மனைவியரை விட்டு விலகியிருந்தார்கள். அப்போது,

நபியே! உம்முடைய மனைவிகளிடம், ''நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகியமுறையில் விடுதலை செய்கிறேன். ஆனால் நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமைவீட்டையும் விரும்புவீர்களானால், அப்போது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் நிச்சயமாக மகத்தான நற்கூலியை சித்தம் செய்து வைத்துள்ளான் என்று கூறுவீராக. [33; 28,29 ]
என்ற வசனங்கள் அவர்களுக்கு அருளப்பட்டன.

இதையடுத்து ஆரம்பமாக ஆயிஷா[ரலி] அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் சென்று, ஆயிஷாவே! உன்னிடம் ஒரு செய்தியை சொல்லப்போகிறேன். அது தொடர்பாக உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காதவரை அவசரப்பட்டு[எந்த முடிவுக்கும் வந்துவிடக்]கூடாது என விரும்புகிறேன் என்று கூறினார்கள்.

அதற்கு ஆயிஷா[ரலி] அவர்கள், அது என்ன அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்றார்கள். அப்போது நபியவர்கள் மேற்கண்ட வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அப்போது ஆயிஷா[ரலி] அவர்கள், உங்கள் [உறவை துண்டிக்கும்] விஷயத்திலா என் பெற்றோரின் ஆலோசனையை நான் கேட்கவேண்டும்..? இல்லை! நான் அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும், மறுமையும் நான் தேர்ந்தெடுக்கிறேன் என்றார்கள்.
[நூல்;முஸ்லிம் 2946 ]

அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் முடிவைப் போன்றே நபி[ஸல்] அவர்களின் ஏனைய மனைவியரும் அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும், மறுமை வாழ்வையும் தேர்ந்தெடுத்தார்கள் என்று முஸ்லிமின் 2939 மற்றும் சில அறிவிப்புகளில் உள்ளது]

அன்பானவர்களே! இந்த பொன்மொழி நம்முடைய உள்ளத்தையும் கண்களையும் ஒருசேர நெகிழச்செய்வதாக உள்ளது. வெறும் பேரீச்சம் பழத்தையும், தண்ணீரையும் பெரும்பாலான நேரங்களில் உண்டு வாழ்ந்த அன்னையர்கள், சில நேரங்களில் வெறும் தண்ணீர் மட்டுமே தங்களின் வீடுகளில் இருந்ததாக கூறும் அன்னையர்களின் செய்திகளை படிக்கும்போதெல்லாம் எவ்வாறு இவர்களால் இப்படி ஒரு தியாக வாழ்க்கை வாழமுடிந்தது.?என்று எமக்குள் ஒரு கேள்வி அலை வந்துபோகும். இந்த பொன்மொழியை படித்தபின்புதான் ஆம்! அவர்கள் வறுமை வாழ்வையும் பொருந்திக்கொண்டு கருணை நபியோடு வாழ்ந்ததற்கு காரணம் மறுமைவாழ்வு மீது கொண்ட தேட்டமே என்பதை உணரமுடிந்தது. அன்று அன்னையர்கள் இம்மை சுக போகத்தை பெரிதாக கருதாமல், அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மகத்தானமறுமை வீட்டையும் தேர்ந்தெடுத்ததால்தான் உலகம் அழியும் காலம் வரை தோன்றக்கூடிய நம்பிக்கையாளர்களுக்கு தாய்மார்கள் எனும் மகத்தான சிறப்பை அல்லாஹ்விடம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் இன்றைய நவீன யுவதிகளில் பெருபாலோர் , தனது கணவன் பெரும்பான்மையான தேவைகளை நிறைவேற்றிஇருந்தாலும் , சில வேளைகளில் ஏதேனும் ஒரு விருப்பத்தை நிறைவேற்றமுடியாமல் போகும் பட்சத்தில், 'உனக்கு வாழ்க்கைப்பட்டு என்னத்தை கண்டேன்..? என்று கணவனை எடுத்தெறிந்து பேசுவதை நாம் நடைமுறையில் காண்கிறோம். இப்படிப்பட்டவர்களுக்கு அன்னையர்களின் தியாக வாழ்க்கை மிகப்பெரும் பாடமாகும்.
அதோடு, தமது மகளுக்கும்- மருமகனுக்கும் பிரச்சினை என்றால், பிரச்சினை குறித்து தீர ஆராயாமல் மகளுக்கே 'சப்போர்ட்' செய்யும் பெற்றோர்களைத்தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால் இந்த பொன்மொழியில், அபூபக்கர்[ரலி] உமர்[ரலி] என்ற இரு மாமனார்கள், தம் மகள்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தும்கூட, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மனம் துன்பத்தில் ஆழ்த்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தம்முடைய மகள்களை அடிக்க முற்படுகிறார்கள் என்றால், இங்கே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மகிழ்ச்சியே தமது மகிழ்ச்சியாக எண்ணி இந்த இரு நல்லறத்தோழர்களும் வாழ்ந்துள்ளனர் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ், அபூபக்கர்[ரலி], உமர்[ரலி] ஆகியோரையும், உம்மஹாத்துல் முஃமீன்களான நம்பிக்கையாளர்களின் தாய்மார்களையும் பொருந்திக்கொள்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக