வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

'பட்டு' இவரது கைக்குட்டைக்கு கிட்ட நிற்குமா ...?

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம் .
அகழ்ப்போரின்போது ஸஅத் இப்னு முஆத்(ரலி) தாக்கப்பட்டார்கள். அன்னாரின் கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் இப்னு அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி)விட்டான். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்குக்) கூடாரமொன்றை அமைத்தார்கள். அகழ்ப் போரை முடித்துக் கொண்டு வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் தங்களின் தலையிலிருந்து புழுதியைத் தட்டிய வண்ணம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'நாங்கள் இன்னும்  ஆயுதங்களைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கி (படை நடத்தி)ச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு 'எங்கே? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது 'பனூ குறைழா' குலத்தினர் (வசிப்பிடம்) நோக்கி ஜிப்ரீல் (அலை) அவர்கள் சைகை செய்தார்கள். உடனே,  உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பனூ குறைழா நோக்கிச் சென்றார்கள்.(பல நாள் முற்றுகைக்குப் பின்னர்) ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக் கொண்டு (யூதர்களான) 'பனூ குறைழா' குலத்தார் (கைபரிலிருந்த தங்கள் கோட்டையிலிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களுக்கு ஆளனுப்பிட, அன்னார் கழுதையின் மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபிகளார் தாற்காலிமாக அமைத்திருந்த) தொழுமிடத்திற்கு அருகே அன்னார் வந்து சேர்ந்ததும், நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தலைவரை... அல்லது உங்களில் சிறந்த வரை... நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கி விடுங்கள்" என்று அன்சாரிகளிடம் கூறினார்கள். பிறகு, '(சஅதே!) இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறீர்கள்?') என்று கேட்டார்கள். ஸஅத்(ரலி), 'இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்களை நீங்கள் கொன்று விட வேண்டும்; இவர்களுடைய பெண்களையும் குழந்தைகளையும் நீங்கள் கைது செய்திட வேண்டும் என்று நான் தீர்ப்பளிக்கிறேன்" என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்."... அல்லது 'அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்" என்று கூறினார்கள்.
நூல்; புஹாரி எண் 4121 எண் 4122
 
ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்கள் மதீனாவில் அவ்ஸ் கோத்திரத்தாரின் தலைவராக இருந்தார்கள். இந்த கோத்திரத்தாரோடு பனூகுறைளா கோத்திரத்தார் நட்புறவு பாராட்டி வந்தனர். எனவே அவ்ஸ் கோத்திரத்தின் தலைவரான ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்கள் நமக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவார்கள் என கருதினார்கள். ஆனால் அல்லாஹ்வின் நேசரான ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களோ, இறைவனின் பொருத்தத்தை மட்டும் நாடியவர்களாக, அவன் விரும்பும் தீர்ப்பை பனூகுறைலாக்கள் விசயத்தில் வழங்குகிறார்கள். அதற்காக அல்லாஹ்வின் தீர்பபுப் படியே தீர்ப்பளித்தீர்கள் என்று நபியவர்களால் பாராட்டப் படுகிறார்கள். மேலும் ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் நேசம் கொண்டவர்களாக திகழ்ந்தார்கள். அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்டபோது, இறைத்தூதர் அவர்களே! அவதூறு சொன்னவர்களில்  எனது கோத்திரத்தார் இருந்து, நீங்கள் உத்தரவிட்டால் அவனது கழுத்தை நான் துண்டிக்கிறேன் என்று முழங்கியவர். அதுபோலவே ஸஅத் ரலி அவர்கள் மீது நபி[ஸல்] வர்களும் மிகுந்த நேசம் கொண்டவர்களாக இருந்தார்கள். எனவேதான் போரில் ஸஅத் [ரலி] அவர்கள் காயமுற்றவுடன்  அவர்களை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்காக மஸ்ஜிதுன் நபவியிலேயே அவருக்காக கூடாரம் அமைத்து கவனித்தார்கள். நபியவர்கள் மட்டுமன்றி, அல்லாஹ்வும் ஸஅத்[ரலி] அவர்களை நேசித்தான் என்பதற்கு, ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் அசைந்தது [புஹாரி] சான்றாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களுக்கு மகத்தான சுவன பதவிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அது குறித்து அறிந்துகொள்ள ஒரு பொன்மொழி;
 
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்;

நபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்து வந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆ
துக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிடத் தரமானவையாயிருக்கும்" என்று கூறினார்கள்.[புஹாரி எண் 2615 ]
 
எங்கள் இறைவா! உனது திருப்தியே இலக்காக கொண்டு வாழ்ந்த அந்த நல்லறத்தோழர்களின் வழியில் எங்களையும் வாழ அருள்புரிவாயாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக