வியாழன், 3 டிசம்பர், 2009

உயரிய பண்புடைய உம்மு ஸுலைம்[ரலி].

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
நபி[ஸல்] அவர்களின் மதீனா வாழ்வை நாம் படித்துப்பார்த்தால், அவற்றில் பல்வேறு இடங்களில் நபியவர்களோடு தொடர்புடையவர்களாக அபூதல்ஹா[ரலி] -உம்மு ஸுலைம்[ரலி] தம்பதியை நாம் காணலாம். இந்த தம்பதிகளுக்கென்று பல்வேறு சிறப்புகள் உண்டு. இவ்விருவரும் இறைக்கட்டளையை அப்படியே பேனக்கூடியவர்களாக, இறைத்தூதரின் விருப்பத்திற்குரியவர்களாக இருந்துள்ளனர். இவர்களில் உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் சீரிய அறிவாற்றலும் மதிநுட்பமும் பொருந்தியவர்களாக திகழ்ந்தார்கள். எப்படிப்பட்ட சோதனையான கட்டமாகிலும் அதை பொறுமையுடன் எதிர்கொண்டு அதை நன்மையாக மாற்றக் கூடியவர்களாக திகழ்ந்துள்ளனர் என்பதற்கு ஒரே ஒரு சான்று;

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்கள்;
என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூ தல்ஹா(ரலி) திரும்பி வந்தபோது 'என் மகன் என்ன ஆனான்?' என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) 'பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்' என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), 'ஆம்' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்.
பின்னர் உம்முசுலைம்(ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூ தல்ஹா(ரலி), 'குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டுசெல்' என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். என்னிடம் உம்மு சுலைம்(ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, 'இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?' என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் 'ஆம்; பேரீச்சம் பழங்கள் உள்ளன' என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தம் வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு 'அப்துல்லாஹ்' எனப் பெயர் சூட்டினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 5470

இந்த பொன்மொழியில் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் செயல்பாடுகள் ஒவ்வொரு முஸ்லிமான ஆணுக்கும்-பெண்ணுக்கும் ஆயிரம் படிப்பினை தரும் விஷயமாகும். பொதுவாகவே ஒருவர் இறந்துவிட்டால் அதிலும் குறிப்பாக தமது பிள்ளை இறந்துவிட்டால் ஆணை விட பெண்கள் அழுது ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதில் முன்னிலை வகிப்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். இங்கே தமது மகன் இறந்தபோது, உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை . முதலாவதாக அல்லாஹ்வின் தீர்ப்பை பொருந்திக் கொள்கிறார்கள். அடுத்து வெளியே சென்றுள்ள கணவன் திரும்பி வந்தவுடன் மகன் இறந்த சோகத்தை மறைத்து கணவனை உபசரிக்கிறார்கள். கணவனோடு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள். இந்த விஷயத்தில் கணவனின் மனநிலை அறிந்து செயல்படும் ஒரு சிறந்த மனைவியாக திகழ்ந்துள்ளார்கள். அடுத்து தன் மகன் பற்றி அபூ தல்ஹா[ரலி] அவர்கள் கேட்டபோது, உங்கள் மகன் இறக்கவில்லை என்று சொல்லியிருந்தால் அது பொய்யாகிவிடும் என்பதால், மிகவும் சாதுர்யமாக உண்மையை வேறு வார்த்தையில் அதாவது 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று கூறி, எந்த நிலையிலும் பொய் சொல்லக் கூடாது என்ற மார்க்க கட்டளையை பேணி காத்ததன் மூலம் மிகச்சிறந்த இறையச்சமுடையவராக திகழ்கிறார்கள் . உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் இந்த செயல் பற்றி அபூ தல்ஹா[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, நபியவர்கள் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை கண்டிக்காமல் அவர்களின் செயல்களை அங்கீகரிக்கும் வகையில், 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்திக்கிறார்கள் என்றால் உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் எத்தகைய சிறப்புடையவர்கள் என்று விளங்கிக்கொள்ளலாம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். [புஹாரி எண் 6424 ]

மேலும் உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் சொர்க்கத்திற்கு உரியவர் என்று நபி[ஸல்] அவர்களின் மற்றொரு பொன்மொழியின் வாயிலாக உணரமுடிகிறது;

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள், 'நான் (கனவில்) என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரிஎண் 3679 ]
[உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் இயற்பெயர் அர்ருமைஸா பின்த் மில்ஹான் என்பதாகும்]
எல்லாம் வல்ல அல்லாஹ் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக! தியாகத்தையும், இறையச்சத்தையும் வாழ்க்கையாக கொண்ட அவர்களைப்போல் நம்மையும் வாழ்ந்து மரணிக்க செய்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக