வியாழன், 10 டிசம்பர், 2009

அபூஹுரைரா[ரலி] அவர்களின் வியக்கத்தக்க நினைவாற்றல்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆன் நபி[ஸல்] அவர்கள் மீது அருளப்படும் காலகட்டத்தில், சில நபித்தோழர்களை எழுத்தர்களாக நியமித்து நபியவர்கள் எழுதிவைத்திட பனித்த செய்தியை நாம் அறிவோம். ஆனால் நபி[ஸல்] அவர்களின் திருவாயால் மொழிந்த பொன்மொழிகள் அவ்வாறு எழுதப்படவேண்டும் என்று நபியவர்கள் கட்டளையிடவில்லை. இருப்பினும் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களைப் போன்ற சிலர் ஹதீஸ்களை எழுதிவைத்திருந்தனர். ஆனாலும் இவர்கள் அறிவித்த ஹதீஸ்களை விட, ஹதீஸ்களை எழுதிவைக்காத அபூஹுரைரா[ரலி] அவர்கள் தான் அதிக அளவில் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் ஹதீஸ்களை அறிவித்த சஹாபிகள் பட்டியலில் அபூஹுரைரா[ரலி] அவர்கள் முதலாவதாக திகழ்கிறார்கள். நம்மை எடுத்துக்கொண்டால் இன்று சாப்பிட்டதை ஒருவாரம் கழித்துக் கேட்டால் நினைவிருக்காது. பரீட்சைக்கு விழுந்து விழுந்து மனப்பாடம் செய்யும் மாணவன் கூட காலையில் மனனம் செய்ததை பரீட்சை ஹால் உள்ளே சென்றதும் பாதியை மறந்து விடுகிறான். திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் கூட தொழுகை நடத்தும் போது ஒரு சில வசனங்கள் மறந்து மற்றவர்களால் நினைவூட்டப்படுகிறது. ஆனால் அபூஹுரைரா[ரலி] அவர்கள் ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் எந்த வார்த்தையை பயன்படுத்தி சொன்னார்களோ அதே வார்த்தையை அட்சரம் பிசகாமல், மறக்காமல் எப்படி மனனம் செய்யமுடிந்தது..? பல ஆண்டுகளுக்கும் பின்னால் யார் கேட்டாலும் எப்படி இறைத்தூதர் வார்த்தையை அப்படியே சொல்ல முடிந்தது என்ற நமது வியப்பிற்கு விடையாக அபூஹுரைரா[ரலி] அவர்கள் அதிக ஹதீஸ்களை அறிவித்ததற்கும், மறக்காமல் இருந்ததற்கும் அவர்கள் கூறும் விளக்கம் பாரீர்;

'மக்காவிலிருந்து ஹிஜ்ரத்துச் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரம் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்ஸாரித் தோழர்களோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூ ஹுரைராவோ முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) பட்டினியாக நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்பாடம் செய்யாதவற்றையெல்லாம் நான் மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன்.என்று கூறினார்கள்" அஃரஜ் என்பவர் அறிவித்தார்.
ஹதீஸ் சுருக்கம் புஹாரி;எண் 118

இந்த பொன்மொழி ஹதீஸ்களை திரட்டுவதற்காக அபூஹுரைரா[ரலி] அவர்கள் செய்த தியாகத்தை விளக்குகிறது. அடுத்து திரட்டிய செய்தி மறக்காமல் இருக்க அவர்கள் செய்தது என்ன..?

'இறைத்தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன் மொழிகளைக் கேட்கிறேன். (ஆயினும்) அவற்றை மறந்து விடுகிறேன் என நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு 'உம்முடைய மேலங்கியை விரியும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் அதனை விரித்தேன். தம் இரண்டு கைகளாலும் இரண்டு கை நிறையளவு அள்ளி (எடுப்பது போன்று பாவனை செய்து)விட்டுப் பின்னர், 'அதனை (நெஞ்சோடு) நீர் அணைத்துக் கொள்வீராக!" என்றார்கள். நானும் உடனே அதனை என் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதனையும் மறந்ததே இல்லை" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஆதாரம் புஹாரி எண் 119

அபூஹுரைரா[ரலி] அவர்கள் ஹதீஸ்களை மறக்காமல் இருக்க நபியவர்கள் மூலம் பாதுகாப்பு பெற்றிருக்கிறார்கள். இந்த அளவுக்கு தியாகம் செய்து, சிரத்தைஎடுத்து அபூஹுரைரா[ரலி] அவர்கள் போன்ற பல நல்லறத் தோழர்கள் மூலமாக கிடைக்கப்பெற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை கூட 'நொண்டிச்சாக்கு' சொல்லி குப்பையில் தள்ளும் சில அதிமேதாவிகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை என்னும் போது உள்ளம் வேதனையால் விம்முகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அபூஹுரைரா[ரலி] அவர்களின் தியாகத்தை பொருந்திக் கொள்வதோடு, இறைத்தூதரின் பொன்மொழிகளை நாமும் மனனம் செய்து மற்றவர்களுக்கு எடுத்தியம்பும் நன்மக்களாக ஆக்கியருள்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக