புதன், 9 டிசம்பர், 2009

'அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து காப்பாற்றப் பட்டவர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
உமர்[ரலி] அவர்கள் ஒரு பாதையில் சென்றால் ஷைத்தான் வேறு பாதையில் செல்வான் என்ற செய்தி நாமெல்லாம் அறிந்த ஒன்றுதான். மனிதனின் ரத்த நாளங்களில் எல்லாம் வியாபித்து ஆட்டிப்படைக்கும் ஷைத்தானின் அட்டூழியத்திலிருந்து பாதுகாப்பு பெற்ற மற்றொரு ஸஹாபி அம்மார் இப்னு யாசிர்[ரலி] அவர்களாவார்.

அல்கமா இப்னு கைஸ் அந் நகஈ(ரஹ்) அறிவித்தார்கள்;
நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். பள்ளிவாசலில் நுழைந்(து இரண்டு ரக்அத்கள் தொழு)ததும் 'இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரை ஏற்படுத்துவாயாக" என்று பிராத்தித்தேன். பிறகு அபுதர்தா(ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்தேன். அபுத்தர்தா(ரலி) 'நீங்கள் எந்த ஊர்க்காரர் ?' என்று கேட்டார்கள். அதற்கு நான் 'கூஃபா வாசி' என்றேன். அபுத்தர்தா(ரலி) '(நபி - ஸல் - அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா?' என்று ஹுதைஃபா(ரலி) அவர்களைத் கருத்தில் கொண்டு கேட்டார்கள். நான், 'ஆம் (இருக்கிறார்)" என்று பதிலளித்தேன். அவர்கள், 'தன் நபியின் வாயால் எவரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா?' என்று கேட்டார்... அம்மார்(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள். நான் 'ஆம் (இருக்கிறார்)" என்று பதிலளித்தேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்களின் (பல்துலக்கும்) மிஸ்வாக் குச்சியையும், தலையணையையும் சுமந்து சென்றவர்... அல்லது அவர்களின் அந்தரங்க உதவியாளர்.. (இப்னு மஸ்வூத்) உங்களிடம் இல்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம் (இருக்கிறார்)" என்று பதிலளித்தேன்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 3743 ]

அல்கமா இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார். நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள், 'அபுத் தர்தா(ரலி), (இங்கு) வந்து, அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இருக்கிறாரா?' என்று கேட்டார்" எனச் சொன்னார்கள். முகீரா இப்னு மிக்ஸம்(ரலி), 'அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர்" என்று அபுத் தர்தா(ரலி) குறிப்பிட்டது அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களைத் தான்" என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 3287

இத்தகைய சிறப்பு வாய்ந்த அம்மார்[ரலி] அவர்கள், இஸ்லாத்திற்காக முதன்முதலாக உயிர்த்தியாகம் செய்த சுமைய்யா[ரலி], யாசிர்[ரலி] ஆகியோரின் அருமை மகன் என்பது நாமறிந்த செய்திதான். இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சத்திய மார்க்கத்தை போதிக்கத்தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இஸ்லாத்தை ஏற்று பல்வேறு இன்னல்களை சந்தித்தவர்கள் அம்மார்[ரலி] அவர்கள். ஒரு கட்டத்தில் இணைவைப்பாளர்களின் உச்சகட்ட துன்புறுத்தலின் போது, உள்ளத்தில் ஈமானை நிறைத்துகொண்டு உதட்டளவில் ஈமானுக்கு மாற்றமான கருத்தை சொன்ன அம்மார்[ரலி] அவர்கள் கைசேதம் அடைந்தவர்களாக அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் கூறியபோது கண்ணியம் பொருந்திய அல்லாஹ்,

مَن كَفَرَ بِاللّهِ مِن بَعْدِ إيمَانِهِ إِلاَّ مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالإِيمَانِ وَلَـكِن مَّن شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.[16:106 ]

என்ற வசனத்தை இறக்கி அம்மார்[ரலி] அவர்களின் தியாகத்தை பொருந்திக் கொள்கிறான், மேலும் நபியவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா செல்வதற்கு முன்பாகவே மதீனாவிற்கு ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணம் மேற்கொண்ட அம்மார்[ரலி] அவர்கள் புனிதமிக்க மஸ்ஜிதுன் நபவியின் கட்டுமனான பணியில் அதிகம் உடலுழைப்பு செய்த அந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

இக்ரிமா அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடமும் அவர் மகன் அலியிடமும் 'நீங்களிருவரும் அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் சென்று அவர் அறிவிக்கும் செய்தியைச் செவிமடுத்து வாருங்கள்!' எனக் கூறினார்கள். நாங்கள் சென்றோம். அபூ ஸயீத்(ரலி) தங்களின் தோட்டத்தைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். (எங்களைக் கண்டதும் தங்களின் மேலாடையைப் போர்த்திக் கொண்டு (பல செய்திகளை) எங்களுக்குக் கூறலானார்கள். பள்ளிவாசல் கட்டப்பட்ட செய்தியைக் கூறும்போது 'நாங்கள் ஒவ்வொரு செங்கல்லாகச் சுமப்பவர்களாக இருந்தோம். (ஆனால்) அம்மார்(ரலி) இரண்டிரண்டு செங்கற்களாகச் சுமக்கலானார். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவரின் மேனியில் படிந்த மண்ணைத் தட்டிவிட்டு 'பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்." என்று கூறினார்கள். அதற்கு அம்மார்(ரலி) 'அந்தக் குழப்பங்களைவிட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார்கள்' என அபூ ஸயீத்(ரலி) குறிப்பிட்டார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 447

தான் கொல்லப்படுவோம் என்பதை இறைத்தூதர்[ஸல்] அவர்களின் வாயால் செவிமடுத்த அம்மார்[ரலி] அவர்கள், நம்மை போன்ற பலவீனமானமானவராக இருந்தால், உயிர்மீது ஆசையுடையவராக இருந்தால் அவர் இஸ்லாத்தை விட்டே விரண்டோடியிருப்பார். அம்மார்[ரலி] அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. தான் கொல்லப்படப்போகும் நாளை எண்ணி கண்ணீர் விட்டு கொண்டிருக்கவில்லை. மாறாக, அத்தகைய குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறுகிறார்கள் என்றால், அவர்கள் உள்ளத்தில் எந்த அளவு இறையச்சம் நிரம்பியுள்ளது என்பதை விளங்கிக்கொள்ளலாம். அந்த இறையச்சம்தான் அவர்களுக்கு ஷஹீத் எனும் அந்தஸ்த்தையும், சுவனத்தில் உயர்ந்த படித்தரத்தையும் பெற்றுத்தந்துள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மார்[ரலி] அவர்களைப் போன்று நம்முடைய வாழ்வும்-மரணமும் இஸ்லாத்திற்காகவே அமைந்திட அருள்புரிவானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக