வெள்ளி, 30 ஜூலை, 2010

அல்லாஹ்வின் தூதரையே பெரும் சொத்தாக கருதிய அன்சாரிகள்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அல்லாஹ் தன் தூதர்[ஸல்] அவர்களுக்கு 'ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை [போரின் வெற்றிப் பரிசாக] அளித்தபோது, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் [புதிதாக இஸ்லாத்தை தழுவியிருந்த] சில குறைஷிகளுக்கு நூறு ஒட்ட்டகங்களை கொடுக்கலானார்கள். அப்போது அன்சாரிகளில் சிலர், அல்லாஹ் 'அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை மன்னிப்பானாக! [எதிரிகளான] குறைஷிகளின் ரத்தம் நம் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க [நமக்கு கொடுக்காமல்] இவர்களுக்கு கொடுக்கிறார்களேஎன்று கவலையுடன் சொன்னார்கள்.

அன்சாரிகளின் இந்த பேச்சு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கு எட்டியது. இதையொட்டி அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், அன்சாரிகளை ஒரு இடத்தில் ஒன்று கூட்டினார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், உங்களை குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளிலுள்ள விவரமானவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் கருத்துடையவர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடையவர்கள் சிலர்தாம் அவ்வாறு பேசிக்கொண்டார்கள் என்று அன்சாரிகள் கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், ''இறைமறுப்பை விட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். [இதன் வாயிலாக இஸ்லாத்திற்கும்] அவர்களின் உள்ளங்களுடன் நான் இணக்கம் ஏற்படுத்துகிறேன். மக்கள் உலக செல்வங்களை எடுத்துச்செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரையே கொண்டு செல்வதை விரும்பமாட்டீர்களா..? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்று திரும்பும் செல்வத்தை விட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகள், ஆம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் [எங்களுடன் உங்களை கொண்டு செல்வதையே] விரும்புகிறோம் என்று சொன்னார்கள்.
ஹதீஸ் சுருக்கம் நூல்;முஸ்லிம்.

அன்பானவர்களே! மக்காவை விட்டு மதீனா நோக்கி கொள்கைக்காக நாட்டு துறந்து வந்த முஹாஜிர்களை தாயன்போடு அரவணைத்து தங்களின் சொந்த சகோதரர்களாகவே கருதி சொத்தில் கூட பங்கு கொடுக்கும் அளவுக்கு தயாள உள்ளம் கொண்டவர்கள் அன்சாரிகள் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அத்தகைய அன்சாரிகளில் சிலர், பொருள் பங்கீடு விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் மீது அதிருப்தி கொண்டது போன்ற தோற்றம் மேற்கண்ட ஹதீஸின் ஆரம்பத்தில் தோன்றலாம். ஆனால் அன்சாரிகள் குறுகிய மனம் கொண்டவர்கள் அல்ல. உயிரை பணயம் வைத்து போரிட்டு அதன் மூலம் கிடைத்த பொருட்களை பங்கிடுவதில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு வழங்கிவிட்டு நம்மை புறக்கணிக்கிறார்களே என்ற ஆதங்கம்தான் அன்சாரிகளின் அந்த வார்த்தை பிரயோகங்கள். பின்பு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் விளக்கிச்சொன்ன மாத்திரமே அதை அப்படியே ஏற்றுக்கொண்டதோடு, இறைத்தூதர்[ஸல்] அவர்களை நாங்கள் எங்கள் இல்லங்களுக்கு கொண்டு செல்லவே விரும்புகிறோம் என்று சொல்லி, உலகத்தின் பொருட்கள் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. எங்களின் மிகப்பெரிய சொத்தாக இறைத்தூதர்[ஸல்] அவர்களையே கருதுகிறோம் என்று சொல்லி தங்களின் தயாள குணத்தை மீண்டும் நிருப்பித்த அன்சாரிகள்ஒரு சரித்திர புருஷர்கள் என்றால் மிகையில்லை.

அல்லாஹ் அன்சாரிகளின் தியாகத்தை பொருந்திக்கொள்வானாக!

வெள்ளி, 23 ஜூலை, 2010

கண் மூடும் வேளையிலே கண்ணீர்; அம்ரு இப்னு அல்ஆஸ்[ரலி]!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அப்துர் ரஹ்மான் இப்னு ஷுமாசா அல் மஹ்ரி[ரஹ்] கூறியதாவது;

இறக்கும் தருவாயில் இருந்த அம்ரு இப்னு அல் ஆஸ்[ரலி] அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். பின்பு சுவற்றின் பக்கம் தமது முகத்தை திருப்பிக் கொண்டார்கள். அப்போது அவர்களின் மகன், என் தந்தையே! உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் இன்னின்ன நற்செய்திகள கூறவில்லையா என [அறுதல் சொல்லும் வகையில்] கேட்டார். உடனே அம்ரு இப்னு அல்ஆஸ்[ரலி] அவர்கள் தமது முகத்தை [தம் புதல்வரை நோக்கி] திருப்பி [பின்வருமாறு] கூறினார்கள்;
அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத்[ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்ததாகும். நான்[என் வாழ்நாளில்] மூன்று கட்டங்களை கடந்து வந்துள்ளேன்.

[முதலாவதுகட்டத்தில்] அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மீது கடுமையான வெறுப்பு கொண்டவர் என்னைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது என்று நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களை கொன்றுவிடவேண்டும் என்பதே எனக்கு விருப்பமானதாக இருந்தது. அந்த கால கட்டத்தில் மட்டும் நான் மரணித்திருந்தால் நரகவாதிகளில் ஒருவனாக நான் ஆகியிருப்பேன்.

[இராண்டாவது கால கட்டத்தில்] அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை புகுத்தினான். அப்போது நான் நபியவர்களிடம் சென்று உங்கள் வல்லக்கரத்தை நீட்டுங்கள் நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் [பைஅத்] அளிக்கிறேன் என்றேன். நபி[ஸல்] அவர்கள் தமது வலது கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கரத்தை இழுத்துக் கொண்டேன். நபி[ஸல்] அவர்கள், அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று என்றார்கள். நான் சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். நபி[ஸல்] அவர்கள் என்ன நிபந்தனை விதிக்கப் போகிறீர் என்று கேட்டார்கள். என் [முந்தைய] பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று கூறினேன். அப்போது நபி[ஸல்] அவர்கள் உங்கள் முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும். ஹஜ்ஜும் முந்தையா பாவங்களை அழித்துவிடும் என்பது உமக்கு தெரியாதா என்றார்கள். [பின்பு நான் இஸ்லாத்தை தழுவினேன்] அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை விட மிகவும் பிரியமானவர் எவரும் எனக்கில்லை. எனது பார்வைக்கு அவர்களைவிட கண்ணியமானவர்கள் எவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால் என் கண்கள் நிரம்ப, அவர்களை பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறுமாறு என்னிடம் கேட்கப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில் அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால், என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவில்லை. அந்த நிலையில் நான் மரணித்திருந்தால் நான் சொர்க்கவாசிகளில் ஒருவானாக ஆகியிருப்பேன் என்றே கருதுகிறேன்.

பிறகு [மூன்றவாது கட்டத்தில்] பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலை என்ன என்று எனக்குத்தெரியாது.
[ஹதீஸ் சுருக்கம் நூல்;முஸ்லிம்]

அன்பானவர்களே! அம்ரு இப்னுஆஸ்[ரலி] அவர்களை நாமெல்லாம் அறிந்து வைத்துள்ளோம். இந்த பொன்மொழியில் தமது வாழ்வின் மூன்று கட்டங்களை குறிப்பிடுகிறார்கள் அந்த மேதை. முதல் கட்டம் இஸ்லாத்திற்கு எதிரான நிலை அதாவது நரகத்தின் விளிம்பில்.
இரண்டாவது இஸ்லாத்திற்குள் அதுவும் இறைத்தூதரை உயிருக்கு உயிராக நேசிக்கும் காலகட்டம் அதாவது சொர்க்கத்தின் வாயிலில்.
மூன்றாவது பல்வேறு பொறுப்புகள சுமந்த காலகட்டம். இந்த மூன்று காலகட்டங்கலில் எதைக் குறித்து அம்ரு இப்னு ஆஸ் [ரலி] அவர்கள் கைசேதப் படுகிறார்கள் என்றால்,
மூன்றாவது காலகட்டம் அதாவது பொறுப்புகளை வகித்த காலகட்டம் குறித்துதான். ஏனென்றால் இஸ்லாத்திற்கு முந்தைய காலகட்டம் குறித்து அவர்கள் கவலைப் படவேண்டியதில்லை. ஏனெனில், அதில் செய்த பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும் என்று இறைத்தூதர்[ஸல்] அவர்கள் உத்திரவாதம் அளித்து விட்டார்கள். ஆனால் பொறுப்புகள் வகித்த காலத்தில் நாம் தவறு இழைத்திருந்து அதனால் அல்லாஹ்வால் குற்றம் பிடிக்கப் படுவோமோ என்று கண்ணீர் சிந்தி கவலை கொள்கிறார்கள் எனில்,
பதவி வரும்போது பணிவும்-துணிவும் வந்தால் போதாது; அங்கே பயமும் அதாவது இறைவனின் பயமும் வரவேண்டும். ஏனெனில் பொறுப்பில் உள்ளவர்கள் தாம் செய்வதை குறித்து திருப்தி அடையலாம். ஆனால் அந்த செயல்கள் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்படுமா என்ற அச்சம் ஒவ்வொரு பொறுப்பாளருக்கும் இருக்கவேண்டும். அத்தகைய சிறந்த படிப்பினைக்கு அம்ரு இப்னு ஆஸ்[ரலி] அவர்கள் முன்னுதாரமாக திகழ்கிறார்கள்.
அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக!

வெள்ளி, 16 ஜூலை, 2010

இறையச்சத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு; ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி]!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நம்பிக்கையாளர்களே! நபியின் குரலுக்கு மேலாக உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்; உங்களுக்குள் மற்றொருவர் இரைந்து பேசுவதுபோல் நபியிடம் இரைந்து பேசாதீர்கள்; [இவற்றால்] நீங்கள் அறிந்து கொள்ளமுடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்துபோகும்.[49 ;2 ]

என்ற வசனம் அருளப்பட்டவுடன் ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி] அவர்கள் தமது இல்லத்திலேயே அமர்ந்துவிட்டார்கள். 'நான் நரகவாதிகளில் ஒருவன்' என்று கூறிக்கொண்டு நபி[ஸல்] அவர்களிடம் வராமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தார்கள். எனவே நபி[ஸல்]அவர்கள் [ஸாபித்] குறித்து ஸஅத்இப்னு முஆத் [ரலி] அவர்களிடம் , அபூ அம்ர்! ஸாபித்க்கு என்ன ஆயிற்று..? அவருக்கு உடல் நலமில்லையா.? என்று கேட்டார்கள். அதற்கு ஸஅத் [ரலி] அவர்கள், அவர்[ஸாபித்] எனது அண்டை வீட்டுக்காரர்தான். அவருக்கு எந்த நோயுமிருப்பதாக தெரியவில்லை என்றார்கள். பிறகு ஸஅத்[ரலி] அவர்கள் ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி] அவர்களிடம் நபி[ஸல்] அவர்கள் கேட்டதை பற்றி தெரிவித்தார்கள்.

அப்போது ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி] அவர்கள், [49 ;2 ] வசனம் அல்லாஹ்வால் அருளப்பட்டுள்ளது. உங்களில் இறைத்தூதர்[ஸல்] அவர்கள் முன் நான் குரலை உயர்த்தி பேசுபவன் என்பதை நீங்கள் அறிந்தே வைத்துள்ளீர்கள். ஆகவே நான் நரகவாசிகளில் ஒருவன்தான் என்று கூறினார்கள் . இதை ஸஅத்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி[ஸல்] அவர்கள், இல்லை.அவர்[ஸாபித்] சொர்க்கவாசிகளில் ஒருவர் ஆவார் என்று கூறினார்கள்.

[நூல்; முஸ்லிம்]

அன்பானவர்களே! இந்த பொன்மொழியில், நபியவர்களின் நெருங்கிய தோழர்களில் ஒருவரான ஸாபித்இப்னு ஹைஸ்[ரலி] அவர்கள், அல்லாஹ் மேற்கண்ட வசனத்தை இறக்கிய மாத்திரமே நபி[ஸல்] அவர்களுக்கு முன்னால் குரலை உயர்த்தி பேசியதால், நம்முடைய அமல்கள் அழிந்துவிட்டது; நாம் நரகவாதிதான் என்று கவலைகொண்டவர்களாக நபியவர்களை சந்திக்க வெட்கப்பட்டு ஒதுங்கியதை பார்க்கிறோம். அந்த அளவுக்கு தன்னுடைய தவறு குறித்து, அதுவும் அல்லாஹ் மேற்கண்ட வசனத்தை இறக்கி கட்டளை பிறப்பிப்பதற்கு முன்னால் செய்த தவறு குறித்து கைசேதப்படுகிறார்கள் கவலை கொள்கிறார்கள் என்றால் அதுதான் இறையச்சம்! ஆனால் இன்று நாமோ அல்லாஹ்வின் கட்டளைகள் முழுமையாக அல்-குர்ஆன் வடிவில் இருக்கிறது. அதை பார்த்த பின்னும், படித்த பின்னும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக தவறுகளை செய்துவிட்டு, அந்த தவறு குறித்து எந்தவித சலனமுமின்றி, 'அல்லாஹ் மன்னிக்கக் கூடியவன்' என்று சாதாரணமாக சென்று கொண்டிருக்கிறோம். அல்லாஹ் மன்னிக்க கூடியவன் என்று ஸாபித் இப்னு ஹைஸ் அவர்களுக்கும் தெரியும். அதையும் தாண்டி உள்ளத்தில் இறைவனின் இறையச்சம் . அதனால்தான், 'எங்களிடையே நடமாடும் சொர்க்கவாசியாகவே நாங்கள் ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி] அவர்களை கருதி வந்தோம்' என்று அனஸ்[ரலி] அவர்கள் கூறும் அளவுக்கு சிறப்பு பெற்றார்கள். ஆனால் நாமோ பாவங்களை அற்பமாக கருதுகிறோம், அதற்கு கிடைக்கும் தண்டனைகள் குறித்து பாராமுகமாக இருக்கிறோம். இந்நிலை தொடர்ந்தால் மறுமையில் கைசேதம் அடையவேண்டிய நிலை வரும்.

எனவே இயன்றவரை பாவம் தவிர்ப்போம்; பாவமன்னிப்பு தேடுவோம்; படைத்தவனின் அருள் பெறுவோம்.

புதன், 14 ஜூலை, 2010

அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களின் அருமை மனைவியரும், முஃமீன்களின் தாயுமான ஆயிஷா[ரலி] அவர்களின் சகோதரி அஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] அவர்களின் மகனாவார். நபி[ஸல்] அவர்களின் உற்ற தோழர் அபூபக்கர்[ரலி] அவர்களின் பேரனாவார். நபி[ஸல்] அவர்களின் தோழரும் முஹாஜிரும் சுவனத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவருமான ஸுபைர்[ரலி] அவர்களின் மகனாவார். மதீனா ஹிஜ்ரத்திற்கு பின் பிறந்த முதல் குழந்தையாவார். இத்தகைய சிறப்புமிகு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்கள்,
நபி[ஸல்] அவர்களின் மரணத்திற்கு பின்னால் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளில் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்பவரது படையால் ஷஹீதாக்கப்பட்டு, பேரீச்சம் மரத்தில் சிலுவையில் ஏற்றி தலைகீழாக தொங்கவிடப்பட்ட நிலையில்,

இப்னு உமர்[ரலி] அவர்கள், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் ஜனாஸா அருகே நின்று, அபூ குபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று கூறியதோடு, அப்துல்லாஹ் இப்னு ஸுபைரின் சில நற்பண்புகளை அங்கே சொல்கிறார்கள். இந்த செய்தி ஹஜ்ஜாஜுக்கு எட்டியபோது, அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் ஜனசாவை யூதர்க்களின் அடக்கஸ்தலம் மீது போட்டுவிடுமாறு உத்தரவிட்டார். அதோடு, அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் தாயார் அஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] அவர்களை அழைத்துவர ஆளனுப்பினார். அஸ்மா[ரலி]அவர்கள் வர மறுத்துவிட்டார்கள். ஹஜ்ஜாஜ் மீண்டும் ஆளனுப்பி, அஸ்மாவே! நீயாக வருகிறாயா..? அல்லது உமது சடையை பிடித்து இழுத்துவர ஆள் அனுப்பட்டுமா என கேட்க, அப்போதும் அஸ்மா[ரலி]அவர்கள் வர மறுத்ததோடு மட்டுமன்றி, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது சடைப் பிடித்து இழுத்துக்கொண்டு வருபவரை நீர் அனுப்பாதவரையில் நான் உம்மிடம் வரப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள்.

உடனே ஹஜ்ஜாஜ் தமது செருப்பை அணிந்துகொண்டு அஸ்மா[ரலி] அவர்களை நோக்கி விரைந்து வந்து அஸ்மா[ரலி] அவர்களிடம், அல்லாஹ்வின் விரோதியை [உமது மகனை] என்ன செய்தேன் பார்த்தீரா என்று கேட்டார். அப்போது அஸ்மா[ரலி]அவர்கள்,

நீ என் மகனின் இம்மையை சீரழித்துவிட்டாய்; என் மகனோ உனது மறுமையை சீரழித்துவிட்டார் என்றே நான் கருதுகிறேன். நீ என் மகனை 'இரு கச்சுடையாளின் புதல்வரே! என்று ஏளனமாக அழைப்பாய் என்று நான் கேள்விப்பட்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இரு கச்சுடையாள் நான்தான். [மதீனா ஹிஜ்ரத் சென்ற] அல்லாஹ்வின் தூதருக்கும் , எனது தந்தை அபூபக்கருக்கும் உரிய உணவை எனது ஒரு கச்சின் மூலம் கட்டினேன். மற்றொன்று ஒரு பெண்ணிடம் அவசியம் இருக்கவேண்டிய கச்சாகும்.

அறிந்துகொள்! அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் எங்களிடம், 'சகீஃப் குலத்தாரில் ஒரு மகாப் பொய்யனும், ஒரு நாசக்காரனும் இருப்பார்கள்' என்று கூறினார்கள். மகாப் பொய்யனை [முக்தார் இப்னு அபீஉபைத்] நாங்கள் பாத்துவிட்டோம். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறிய 'நாசக்காரன்' நீதான் என்றே நான் கருதுகிறேன் என்று கூறியவுடன், அஸ்மா[ரலி] அவர்களுக்கு பதிலளிக்கமுடியாமல் ஹஜ்ஜாஜ் அங்கிருந்து வெளியேறி சென்றுவிட்டார்.

[ஹதீஸ் சுருக்கம்நூல்; முஸ்லிம்.]
அன்பானவர்களே! இந்த செய்தியை நாம் பொறுமையுடன் படித்துப் பார்ப்போமானால், அஸ்மா[ரலி] அவர்களின் அளவுகடந்த வீரமும், பொறுமையும் வெளிப்படுவதை நாம் அறியமுடியும்.
  • தனது அருமை மகன் அநியாயமாக கொல்லப்பட்டு, சிலுவையில் தலைகீழாக தொங்க விடப்பட்டு , பின்பு அநியாயக்கார யூதர்களின் அடக்கஸ்தலத்தில் போடப்பட்ட செய்தியறிந்த பின்பும், கத்தாமல் கதறாமல் தன் மகனை காண ஓடாமல், தன் மகன் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாகியுள்ளான் என பொறுமை காத்த அந்த அஸ்மா[ரலி] அவர்களின் பாங்கு.
  • ஹஜ்ஜாஜ், அஸ்மா[ரலி] அவர்களை அழைத்துவர ஆள் அனுப்பியபோது, வீரமிக்க நம் மகனையே கொன்ற இந்த அநியாயக்காரன் நம்மை விட்டு வைப்பானா.? என்று பதறி ஹஜ்ஜாஜை சந்திக்க ஓடாமல், வரமறுத்த துணிவு! 'என் சடையை பிடித்து இழுத்துவரும் உன் ஆளை அனுப்பிப் பார்' என்று ஆர்ப்பரித்த வீரம்!! சுப்ஹானல்லாஹ்!!. தொடைநடுங்கி முஸ்லிம்களுக்கோர் பாடம்!!!
  • எங்கள் தலைவர் நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்த 'அநியாயக்காரன்' நீதானோ என்று ஆர்ப்பரித்த ஆளுமை அஸ்மா[ரலி] ஒரு சகாப்தம்.

எங்கள் இறைவா! அஸ்மா[ரலி] அவர்களின் வீரத்தை, உள்ள உறுதியை, ஈமானிய வலுவை எங்களுக்கும் தந்து நீ பொருந்திக் கொண்ட முஸ்லிம்களாக மரணிக்க செய்வாயாக!

ஞாயிறு, 11 ஜூலை, 2010

அமல் செய்வதில்தான் எத்துனை ஆர்வம் இவருக்கு..?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
நபி [ஸல்] அவர்களின் இந்த உம்மத்தில் தலைசிறந்தவர் அபூபக்கர் சித்தீக்[ரலி] அவர்கள் என்பதை நாமெல்லாம் அறிந்துவைத்துள்ளோம். இத்தகைய சிறப்பு அவர்களுக்கு இருந்தும், சொர்க்கத்திற்கு உரியவர் என்று இறைத்தூதரால் பிரகடனப் படுத்தப்பட்ட பின்பும் அபூபக்கர்[ரலி] அவர்களின் அமல்கள் குறைந்ததா என்றால் இல்லை. நல்லமல்கள் என்று எவையெல்லாம் உள்ளதோ அவைகளை அன்றாடம் செய்யக்கூடிய அற்புத மனிதராக அபூபக்கர்[ரலி] அவர்கள் திகழ்ந்துள்ளதற்கு சான்றாகவும், நமக்கும் அத்தகைய ஆர்வம் வரவேண்டும் என்பதற்காகவும் இந்த பொன்மொழி இங்கு பதியப்படுகிறது;

அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

[ஒருநாள்] இறைத்தூதர்[ஸல்] அவர்கள் [எங்களிடம்] இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார் என்று கேட்டார்கள்.

அப்போது அபூபக்கர்[ரலி] அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றைய தினம் உங்களில், ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்றவர் யார் என்று கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றையதினம் உங்களில் ஒரு ஏழைக்கு உணவளித்தவர் யார் என்று கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றையதினம் ஒரு உங்களில் ஒரு ஒரு நோயாளியின்நலம் விசாரித்தவர் யார் என்று கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

அப்போது இறைத்தூதர் அவர்கள், இவை அனைத்தும் ஒரு மனிதரிடத்தில் ஒன்று சேர்ந்தால் அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை என்று கூறினார்கள். [நூல்;முஸ்லிம்].

சனி, 10 ஜூலை, 2010

அபூஹுரைரா[ரலி] என்றாலே நமக்கு பாசம் பொங்குவது எதனால்..?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
நபித்தோழர்களில் அபூஹுரைரா[ரலி] அவர்களை அறியாத முஸ்லிம்கள் இருப்பது அரிது. அதுமட்டுமன்றி, அபூஹுரைரா[ரலி] அவர்கள் பெயரை கேட்டாலோ, அல்லது அவர்கள் சம்மந்தப்பட்ட செய்தி படித்தாலோ அவர்கள் மீது நமக்கு இனம் புரியாத பாசம் வெளிப்படுவதை நாம் உணரமுடியும். அதற்கு காரணம் அவர்களின் தியாக வாழ்க்கை என்பது ஒருபுறமிருந்தாலும், மற்றொரு புறம் இவ்வாறு அவர்கள் மீது நமக்கு பாசம் ஏற்படுவதற்கு காரணம் இறைத்தூதர்[ஸல்] அவர்களின் பிரார்த்தனை என்பதுதான் பிரதானமான உண்மையாகும். அதுபற்றிய பொன்மொழி இதோ;

அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
எனது தாயார் இணைவைப்பு கொள்கையில் இருந்தபோது இஸ்லாத்திற்கு வருமாறு நான் அழைப்பு விடுத்து வந்தேன். அவர் மறுத்து வந்தார். இன்றும் அதுபோல் அழைப்பு விடுத்தபோது அவர் இறைத்தூதர்[ஸல்]அவர்கள் குறித்து நான் விரும்பாத வார்த்தைகளை என் காது பட கூறினார். நான் அழுதுகொண்டே அல்லாஹ்வின் தூதரிடம் சென்று நடந்தவற்றை கூறி, இந்த அபூஹுரைரவின் அன்னைக்கு நேர்வழி கிடைத்திட பிரார்த்தியுங்கள் என்றேன்.
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், இறைவா! அபூஹுரைராவின் அன்னைக்கு நல்வழி காட்டுவாயாக என்று பிரார்த்தித்தார்கள். இதைக்கேட்டு நான் மகிழ்ந்தவனாக புறப்பட்டு எனது வீட்டை அடைந்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது . எனது காலடி சத்தத்தை அறிந்துகொண்ட என் தாயார், அபூஹுரைரா! அங்கே இரு என்றார்கள்.
அப்போது தண்ணீர் சிந்தும் சத்தம் கேட்கவே என் தாயார் குளித்துவிட்டு வந்து கதவை திறந்தார். பின்பு அபூஹுரைராவே! அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாரும் இல்லை. முஹம்மது[ஸல்] அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிகூறுகிறேன் என்றார்கள்.
உடனே மகிழ்ச்சியில் அழுதவனாக இறைத்தூதரை சந்தித்து, யாரசூலுல்லாஹ்! அல்லாஹ் உங்களின் பிரார்த்தனையை அங்கீகரித்துவிட்டான், அபூஹுரைராவின் அன்னைக்கு நேர்வழி காட்டிவிட்டான் என்றேன். அதைக்கேட்ட நபி[ஸல்]அவர்கள் இறைவனை போற்றி புகழ்ந்தார்கள். அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! இறை நம்பிக்கையுள்ள அடியார்களுக்கு என்மீதும், என்தாயார்மீதும் நேசம் ஏற்படவும், அவ்வாறே அவர்கள் மீது எனக்கும் என் தாயாருக்கும் நேசம் ஏற்படவும் பிரார்த்தியுங்கள் என்றேன். நபியவர்கள், இறைவா! உன்னுடைய அடியார் அபூஹுரைரா மீதும், அவருடைய தாயார் மீதும் இறை நம்பிக்கையாளர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக! இறை நம்பிக்கையாளர்கள் மீது இவர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக என்று பிரார்த்தித்தார்கள்.
எனவேதான், என்னை பார்க்காவிட்டாலும் என்னைப்பற்றி கேள்விப்படும் எந்த ஒரு இறைநம்பிக்கையாளரும் என்னை நேசிக்காமல் இருப்பதில்லை.
நூல்;முஸ்லிம்]

அன்பானவர்களே! அபூஹுரைரா[ரலி] அவர்கள் மீது நமக்கு ஏற்படும் இனம் புரியா நேசம் இறைத்தூதர்[ஸல்] அவர்களின் பிரார்த்தனையால் இறைவன் உருவாக்கியதாகும் என்பதை பொன்மொழி வாயிலாக அறியமுடிகிறது. அதோடு இந்த பொன்மொழியில் மற்றொரு படிப்பினை என்னவெனில், இணைவைப்பு கொள்கையில் இருக்கும் தன்னுடைய தாய் நேர்வழி பெறவேண்டும் என்ற அபூஹுரைரா[ரலி] அவர்களின் ஆவல், நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். ஏனெனில், நம்முடைய பெற்றோர்களோ, உறவினர்களோ, நண்பர்களோ தர்காக்களில் விழுந்து கிடப்பவர்களாக இருக்கலாம். அப்படிப் பட்டவர்களுக்கு தினமும் நாம் சத்தியத்தின் பால் அழைப்பு விடுப்பதோடு, அவர்கள் நேர்வழி பெறவேண்டும் என்ற உண்மையான நோக்கோடு இறைவனிடமும் இறைஞ்சினால், இறைவன் நாடினால் அவர்கள் நேர்வழி பெறக்கூடும். அதைவிடுத்து அறியாமையில் தர்காக்களுக்கு செல்பவர்களுக்கு 'முஷ்ரிக்கீன்கள்' என ஃபத்வா வழங்குவதால் எந்த பயனும் இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அபூஹுரைரா[ரலி] அவர்களைப்போல் உண்மையான நோக்கோடு அழைப்புப் பணியாற்றுபவர்களாக நம்மை ஆக்கி அருள்வானாக!

இறைத்தூதரின் ரகசியத்தை இறுதிவரை காத்தவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நான்[ரசூல்[ஸல்]அவர்களிடம் சேவகனாக இருந்தபோது] என்னிடம் வந்தார்கள். நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். நபி[ஸல்] அவர்கள் எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு ஒரு அலுவல் நிமித்தமாக என்னை ஒரு இடத்திற்கு அனுப்பினார்கள். நான் என் தாயாரிடம் தாமதமாகவே வந்தேன். அப்போது என்தாயார், உன் தாமதத்திற்கு காரணம் என்ன..? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் ஒரு அலுவலுக்காக என்னை அனுப்பி வைத்திருந்தார்கள் என்று சொன்னேன். அப்போது என் தாயார் என்ன அலுவல்? என்று கேட்டார்கள். நான் அது 'ரகசியம்' என்று சொன்னேன். அப்போது என்தாயார், அல்லாஹ்வின் தூதரின் ரகசியத்தை நீ யாரிடம் சொல்லாதே என்றார்கள்.[ நூல்;முஸ்லிம் 4891 ].

மற்றொரு அறிவிப்பில்;
நபி[ஸல்] அவர்கள் என்னிடம் ஒரு ரகசியம் சொன்னார்கள். அவர்களின் இறப்பிற்கு பிறகு கூட அதை நான் ஒருவரிடமும் தெரிக்கவில்லை. என் தாயார் உம்மு சுலைம்[ரலி] அவர்கள் அது குறித்து கேட்டபோது நான் அவர்களுக்கும் தெரிவிக்கவில்லை. [நூல்;முஸ்லிம் 4892 ]

இந்த பொன்மொழியில் நபி[ஸல்]அவர்களிடம் சேவகராக இருந்த அனஸ்[ரலி] அவர்களின் பண்பு நமக்கு மிகப்பெரிய படிப்பினையாக உள்ளது. சிறுவர்களுடன் விளையாடும் அளவுக்கு சிறிய வயதுடைய அனஸ்[ரலி]அவர்கள், இறைத்தூதரின் ரகசியம் விசயத்தில் எந்த அளவுக்கு கவனமாக இருந்துள்ளார்கள் எனில், அவர்களது தாயார் கேட்டபோதும் கூட சொல்லவில்லை. அதுமட்டுமன்றி, அந்த ரகசியத்தை இறைத்தூதர்[ஸல்] அவர்களின் மரணத்திற்கு பின்னால் கூட எவரிடமும் சொன்னதில்லை என்றால், ரகசியமும் அமானிதமே என்பதை அனஸ்[ரலி] அவர்கள்வாழ்வு எமக்கு உணர்த்துகிறது. ஆனால் இன்று பெரும்பாலான பிரச்சினைக்கு ரகசியங்கள் வெளிப்படுவதே காரணமாக அமைகிறது. இயக்கம், அமைப்பு, தொழில், பாதுகாப்பு போன்றவை மட்டுமன்றி, கணவன் மனைவிக்குள் நடக்கும் இல்லறம் வரை பேணப்படவேண்டிய ரகசியங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு அதனால் பல்வேறுவகையான பின்னடைவை சந்திக்கிறோம். எனவே அனஸ்[ரலி] அவர்களின் இந்த உயரிய பண்பை நம்முடைய வாழ்விலும் கடைபிடிக்க முன்வருவோமாக!