சனி, 13 ஆகஸ்ட், 2011

அழைப்பாளர்களுக்கு ஒரு முன்மாதிரி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரலி]

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் 'அபூ அப்துர் ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்' என்றார். அதற்கு (உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைவிட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். அவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள்' என்றார்" எனஅபூ வாயில் அறிவித்தார். நூல்;  புகாரி  எண் 70
 
மேற்கண்ட பொன்மொழியில் மிகச்சிறந்த நபித்தோழரான 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் உரையை அனுதினமும் கேட்க ஆவல் கொண்டு ஒருவர் வேண்டுகோள் விடுக்க, அப்படியா! இதோ நான் தயார் எத்தனை மணி நேரங்கள் வேண்டுமானாலும் தண்ணீர் குடிக்காமல் பேசுகிறேன் என்று துள்ளிக் குதித்து வராமல், பேசுவது நல்ல விஷயமாக இருந்தாலும் அதை கேட்பவரின் மனநிலையை உணர்ந்து, கேட்பவருக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்த அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள், ''நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன் என்று கூறுகிறார்கள். அதுமட்டுமன்றி இவ்வாறு தான் இறைத்தூதரின் வழிமுறையும் இருந்தது என்றும் கூறி அறிவுரை என்பது அளவுக்கு மிஞ்சியதாக அமைந்துவிடக் கூடாது என்ற பாடத்தை அழகாக முன் வைக்கிறார்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள்.
 
ஆனால் இன்றைக்கு பேச்சாளர்கள் பலர் 'மைக்' கிடைத்தால் போதும் என கடித்து துப்புவதையும், அவருக்குரிய நேரம் முடிந்துவிட்டது என நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குபவர் சுட்டிக்காட்டினாலும் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்கிறார்கள். இவ்வாறான இவர்களின் நிலைக்கு காரணம், நமது பேச்சை  மக்கள்  விரும்புகிறார்கள் என்று இவர்கள் நம்புவதுதான். ஆனால் மக்களே விரும்பினாலும் அளவோடு பேசுவதும், அறிவுரை சொல்வதும்தான் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் காட்டிய வழிமுறை என்பதைக் காட்டிய அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் வாழ்வு அழைப்புப் பணியில் உள்ளவர்களுக்கு ஒரு அருமருந்தாகும். ஏனெனில்,
'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்பது  அல்லாஹ்வின் தூதர்[ஸல்) அவர்களின் கட்டளையாகும் [நூல்;  புகாரி  எண் 69 ]

2 கருத்துகள்:

  1. உண்மையான விடயம் நன்பரே!!! பகிர்வுக்கு நன்றி...
    அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக...

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    தங்களின் கருத்துரைக்கு நன்றி. அல்லாஹ் உங்களுக்கும் ரஹ்மத் செய்வானாக....

    பதிலளிநீக்கு