புதன், 30 செப்டம்பர், 2009

அன்னலாரோ மரணப்படுக்கையிலே! அவர்தம் தோழர்களோ ஆட்சி பற்றிய ஆலோசனையிலே..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
இஸ்லாத்தை தூய வடிவில் சொல்லும்[?] இணைய தளத்தில் ஒரு கேள்வி;நீங்கள் சகாபாக்களை 'கிரிமினல்' என்று சொன்னதாகவும் மேலும், 'அண்ணன் எப்ப போவான்; திண்ணை எப்ப காலியாகும்' போன்றவாறு பேசியுள்ளீர்கள் என்று கூறுகிறார்களே உண்மையா?


பதில்; [இரண்டாம் பகுதி]
நபி[ஸல்] அவர்கள் மரணப்படுக்கையில் கிடக்கும்போது அவர்களின் குடும்பத்து நபித்தோழர்கள் ஆட்சிப்பொறுப்பை பற்றி ரகசிய ஆலோசனை நடத்தியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நபிகள் நாயகம் மரணப்படுக்கையில் கிடக்கும்போதே அதை நமக்காக கேட்போம் என்று பேசியது அருவருப்பாகவே தெரிகிறது.திண்ணை எப்போது காலியாகும் என்ற மனப்பான்மை இதில் தெள்ளத்தெளிவாக தெரியும்போது என் விமர்சனத்தில் தவறும் இல்லை. நபிகள் நாயகம் மரணப்படுக்கையில் கிடக்கும்போது இப்படி நடக்கலாமா என்று நபியை நேசிப்பவர்கள் எண்ணுவார்கள். நபியை விட்ட நபித்தோழரை நேசிப்பவர்கள் எப்படி ஸஹாபியை விமர்சிக்கலாம் என்பார்கள். எனது இந்த விமர்சனத்தை உரிய முறையில் கவனிக்காதவர்களுக்காக நான் எனக்கு சரி என்று பட்டதை மாற்றிக்கொள்ளமுடியாது. உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மார்க்க ஆதாரத்துடன் எனது விமர்சனம் தவறு என்று சுட்டிகாட்டினால் அது சரியாகவும் இருந்தால் நான் மாற்றிக்கொள்வேன்.

அன்பானவர்களே! அந்த 72 கூட்டம் யார் என்ற தலைப்பில் உரையாற்றிய இந்த அறிஞர் அதில், 'அண்ணன் எப்ப சாவான்; திண்ணை எப்ப காலியாகும்' என்று காத்துக்கிடந்தவர்களாக அன்சாரித்தோழர்களை அடையாளம் காட்டினார். இப்போது அதை மறந்தோ-அல்லது மறைத்தோ, 'திண்ணை எப்போது காலியாகும் என்ற மனநிலையில் நபி[ஸல்] அவர்களின் குடும்பத்து நபித்தோழர்கள் இருந்ததாக இப்போது கூறுகிறார். சரி! இதற்காகவது உரிய சான்றுகளை வைத்திருக்கலாம் அதையும் செய்யவில்லை. எனவே நபி[ஸல்] அவர்களின் குடும்பத்து நபித்தோழர்கள் அத்தகைய மனநிலையில் இருந்தார்களா என்று ஹதீஸ்களை பார்த்தால் இந்த அறிஞரின் கூற்றுக்கு மாற்றமான கருத்தே கிடைக்கிறது. இதோ;

முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார் அப்துல்லாஹ் இப்னு கஅப் இப்னு மாலிக் அல் அன்சாரி(ரலி) - (இவருடைய தந்தை) கஅப்பின் மாலிக்(ரலி) (தபூக் போரில் கலந்துகொள்ளத் தவறியதற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஒருவராயிருந்தார். அன்னார் எனக்கு அறிவித்தார்கள்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) எனக்குத் தெரிவித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களிடமிருந்து அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) (அவர்களை நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், 'அபுல் ஹசனே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?' என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்'' என்று கூறினார்கள். உடனே அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), அலீ(ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாள்களுக்குப் பிறகு, (பிறரின்) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆki விடப்போகிறீர்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரைவில் தம் இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே கருதுகிறேன். மரணத்தின்போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாணம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். 'இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?' என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்'' என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரலி), 'நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன்'' என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 4447

இந்த ஹதீஸை கவனமாக படியுங்கள்;
 • நபி[ஸல்] அவர்களின் மரணம் நிச்சயம் என்பதைகருதிய அப்பாஸ்[ரலி] அவர்கள், 'இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?' என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்'' என்றுதான் கூறுகிறார்கள். சுருங்க சொன்னால் அடுத்த ஆட்சியாளர் யார் என்பதை கேட்டு தெரிந்து கொள்வோம் என்பதுதான் அப்பாஸ்[ரலி] அவர்களின் நிலைப்பாடு. அதைக்கூட அலீ[ரலி] மறுத்துவிடுகிறார்கள். ஆக இறுதி உபதேசம் என்ற அடிப்படையில் தகவலாக கேட்போம் என்று அப்பாஸ்[ரலி] அவர்கள் கருதியதை,

'நபிகள் நாயகம் மரணித்து விட்டால் ஆட்சிப்பொறுப்பை நம்மிடம் தரமாட்டார்கள்;நபிகள் நாயகம் மரணப்படுக்கையில் அதை நமக்காக கேட்போம் என்று நபி[ஸல்] அவர்கள் குடும்பத்து நபித்தோழர்கள் பேசினார்கள் என்பது அப்பட்டமான அவதூரல்லவா? அந்த உத்தமர்களை இன்றைய அரசியல்வாதிகள் போல் கருதிய காரணத்தால் வந்த வர்ணனையல்லவா? இதுதான் சகாபாக்களை கண்ணியப்படுத்தும் வழிமுறையோ..?

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

தொடர்புடைய இடுகை;http://sahaabaakkal.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%5B%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%5D

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

அம்ர் இப்னு அல்ஆஸ் அவர்களை 'கிரிமினல்' என்று சொன்னதில் தவறில்லை..?

இஸ்லாத்தை தூய வடிவில் சொல்லும்[?] இணைய தளத்தில் ஒரு கேள்வி;நீங்கள் சகாபாக்களை 'கிரிமினல்' என்று சொன்னதாகவும் மேலும், 'அண்ணன் எப்ப போவான்; திண்ணை iஎப்ப காலியாகும்' போன்றவாறு பேசியுள்ளீர்கள் என்று கூறுகிறார்களே உண்மையா?

பதில்; அந்த 72 கூட்டம் என்ற உரையை முழுமையாக கேளுங்கள். உண்மையை நீங்களே உணர்வீர்கள். அலீ[ரலி] அவர்களுக்கும்-முஆவியா[ரலி] அவர்களுக்கும் இடையே நடந்த யுத்தம் சமாதானத்தில் முடிந்தது. இருவர் சார்பிலும் தலா ஒருவர் நடுவராக நியமிக்கப்பட்டனர். அலீ[ரலி] அவர்களின் சார்பில் நடுவராக இருந்த அபூ மூஸா நேர்மையாக வெளிப்படையாக நடந்து கொண்டார். முஆவியா[ரலி] சார்பில் நடுவராக இருந்த அம்ர் இப்னு ஆஸ் அப்படி நடக்கவில்லை. நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல்,மோசடி ஆகியன மார்க்கத்தில் தடுக்கப்பட்டிருந்தும் அதை அவர் செய்தார். அபூ மூஸா அப்பாவியாக நடந்துகொண்டார். ஆனால் அம்ர் இப்னு ஆஸ் நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் நடந்துகொண்டார். கிரிமினலாக சிந்தித்தார் என்ற கருத்தில் நான் பேசினேன்.இவ்வாறு நடந்துகொண்ட நபரை கவனத்தில் கொண்டவர்கள் சகாபியை இப்படி விமர்சிக்கலாமா என்று கேட்கின்றனர். நடந்து கொண்ட செயலை கவனிப்பவர்கள் இந்த செயலை இந்த வார்த்தையால்[கிரிமினல்] வர்ணிப்பது சரிதான் என்று புரிந்து கொண்டனர். அம்ர் இப்னு ஆஸ் செய்தது போன்ற செயலை இன்றைக்கு ஒருவர் செய்தால் அதை எந்த வார்த்தையால் விமர்சிப்பார்கள்.? அவர் நடந்துகொண்டது போல் இப்போது ஒருவர் நடந்து கொண்டால் அது அனுமதிக்கப்பட்டது என்று கூறுவார்களா? என்னுடய பார்வையில் நான் செய்த விமர்சனத்தில் மார்க்க அடிப்படையில் எந்த தவறும் இல்லை.

அன்பானவர்களே! உயர்வான நபித்தோழர் அம்ரு அப்னு ஆஸ்[ரலி] அவர்களை 'கிரிமினல்' என்று சொன்னபோது, பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தபோது 'நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை' என்று இந்த அறிஞர் ஒரு மேடையில் விளக்கம் சொன்னார். அதையொட்டி 'கிரிமினல்' என்ற பேச்சு பற்றி விமர்சனம் வரும்போதெல்லாம் அந்த அறிஞருக்கு ஆதரவாக ததஜ சகோதர்களில் சிலர் 'கிரிமினல்' பற்றி தமிழ் அகராதி பாடம் நடத்தி விமர்சனங்களை முனை மழுங்க செய்தார்கள். ஆனால் இப்போது சம்மந்தப்பட்டவர் நான் அம்ர் இப்னு ஆஸ் அவர்களை 'கிரிமினல்' என்று சொன்னதில் தவறில்லை என்று சொன்னதோடு, நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல், மோசடி, கழுத்தறுப்பு வேலையையும் அம்ரு இப்னு ஆஸ் செய்தார் என்று அந்த சகாபிக்கு புகழ் மாலை[?] சூட்டியுள்ளார். இதுகாறும் ' அந்த அர்த்தமில்லை, இந்த அர்த்தமில்லை என்று 'அகராதியாக' சப்பை கட்டு கட்டியவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்..? மேலும், அம்ரு இப்னு ஆஸ்[ரலி] அவர்கள் செய்த காரியத்தை இன்று ஒருவர் செய்தால் என்ன நிலை..? என்று அந்த அறிஞர் கேட்கிறார். அப்படியாயின் சகாபாக்களும் நாமும் ஒன்று என்ற பிளாட்பாரம் உருவாக்கப்பட்டு விட்டதோ..?

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டியபின் தடம்புரளச்செய்து விடாதே!
திண்ணை எப்ப காலியாகும்..? பதிலும்-பார்வையும் இன்ஷா அல்லாஹ் நாளை.

திங்கள், 28 செப்டம்பர், 2009

இறைத்தூதரின் உடையே இறுதி உடையாக விருப்பம் கொண்டவர்..!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அபூ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) 'ஒரு பெண்மணி (நபி(ஸல்) அவர்களிடம்) புர்தாவைக் கொண்டு வந்தார்!' எனக் கூறிவிட்டு, 'புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். 'ஆம்! அது ஓரப்பகுதி நெய்யப்பட்ட ஒரு சால்வை!" என்று கூறப்பட்டது. தொடர்ந்து ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். அப்பெண்மணி, 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு அணிவிப்பதற்காக இதை நான் என் கையால் நெய்தேன்!" என்றார். நபி(ஸல்) அவர்கள் தமக்கு அது தேவைப்பட்டதால் அதைப் பெற்றார்கள். (அவர்கள் உள்ளே சென்றுவிட்டு) எங்களிடம் திரும்பி வந்தபோது அதை வேட்டியாக அணிந்திருந்தார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருமனிதர். 'இறைத்தூதர் அவர்களே! இதை நான் அணிவதற்காக எனக்குத் தாருங்கள்!" என்றார். நபி(ஸல்) அவர்கள் 'சரி தருகிறேன்!" என்று சொல்லிவிட்டு, சபையில் அமர்ந்திருந்தார்கள். பிறகு (உள்ளே சென்றுவிட்டுத்) திரும்பி வந்து அதைச் சுருட்டி, (அதைத் தமக்குத் தரும்படி) கேட்ட மனிதருக்கு அதை அனுப்பி வைத்துவிட்டார்கள். அப்போது அவரிடம் மக்கள், 'நீர் செய்தது நன்றன்று; கேட்பவரை வெறுங்கையாக திருப்பியனுப்ப மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே அவர்களிடம் அதைக் கேட்டு விட்டீரே!' எனக் கூறினார். அதற்கு அம் மனிதர், 'நான் மரணிக்கும் நாளில் அது எனக்குக் கஃபனாக ஆக வேண்டும் என்பதற்காகவே அதைக் கேட்டேன்!" என்றார். அது அவ்வாறே, அவரின் கஃபனாக ஆனது!
ஆதாரம்;புஹாரி எண் 2093

இந்த பொன்மொழியில், நபி[ஸல்] அவர்கள் அணிந்த ஆடையை கேட்டு வாங்கிய ஸஹாபி, அதை தான் அணிந்துகொள்வதற்காக வாங்கவில்லை. மாறாக தனது இறுதி ஆடையாக [கஃபனாக] இறைத்தூதர் அணிந்த ஆடை இருக்கவேண்டும் என்று விரும்பியே வாங்கியதாக கூறுகிறார்கள் என்றால், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது இந்த தோழர்கள் கொண்ட அன்பிற்கு எல்லையும் உண்டோ..?

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

இறைத்தூதரின் கட்டளைக்கு கட்டுப்பட்டார்; இணைவைப்பாளர்களின் கட்டுடைத்தார்..!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார்கள்;
ஹுதைபிய்யா நிகழ்ச்சியின்போது நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களுடன் மூன்று நிபந்தனைகளின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். அவையாவன:
1. நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களிடையேயிருந்து தம்மிடம் (மதீனாவுக்கு) வருபவரை (அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட) அவர்களிடமே திருப்பியனுப்பி விட வேண்டும். தங்களிடம் (மக்காவிற்கு) வரும் முஸ்லிம்களை இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் திருப்பியனுப்ப மாட்டார்கள்.
2. நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அடுத்த ஆண்டு (உம்ரா செய்ய) மக்காவினுள் நுழைந்து மூன்று நாள்கள் தங்கலாம்.
3. (ஆனால்,) வாள், வில் போன்ற ஆயுதங்களை உறையிலிட்டுக் கொண்டே உள்ளே நுழைய வேண்டும்.
இந்த சமாதான ஒப்பந்தம் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது அபூ ஐந்தல்(ரலி), தம் (கால்) சங்கிலிகளுடன் தத்தித் தத்தி (நடந்து) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களிடமே அவர்களைத் திருப்பியனுப்பிவிட்டார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 2700

பிறகு, நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி வந்தார்கள். அப்போது குறைஷிகளில் ஒருவரான அபூ பஸீர் என்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் (மதீனாவுக்கு வருகை தந்தார். உடனே, அவரைத் தேடி(ப் பிடிக்க) குறைஷிகள் இரண்டு பேரை அனுப்பி வைத்தனர். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம் வந்து), 'நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுங்கள்" என்று கேட்டனர். உடனே, அவரை அந்த இருவரிடமும் நபி(ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அவர்கள் இருவரும் அபூ பஸீர் அவர்களை அழைத்துக் கொண்டு துல்ஹுலைஃபாவை அடைந்தனர். அவர்கள், தம் பேரீச்சம் பழங்களைத் தின்றுகொண்டே (ஒரு மரத்தடியில்) தங்கினார்கள். அபூ பஸீர்(ரலி) அவ்விரு நபர்களில் ஒருவரிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னானே! உன்னுடைய இந்த வாளை நான் மிக நல்லதாகக் காண்கிறேன்" என்றார். உடனே மற்றொருவர் வாளை உருவி, 'ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! இது மிக நல்ல வாள்தான். நான் இதைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன், மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்" என்றார். அபூ பஸீர் அவர்கள், 'எனக்கு(அதை)க் காட்டு. அதை நான் பார்க்கிறேன்" என்று கேட்டு அவரைத் தன் வசத்தில் கொண்டு வந்து (அந்த வாளால்) குத்திக் கொன்றுவிட்டார். மற்றொருவர் விரண்டோடி மதீனா வரை சென்றார்; ஓடிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் புகுந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரைக் கண்டபோது, 'இவர் ஏதோ பீதியேற்படுத்தும் விஷயத்தைக் கண்டு விட்டிருக்கிறார்" என்று கூறினார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று நின்றபோது, 'அல்லாஹ்வின் மீதாணையாக! என் சகோதரர் கொல்லப்பட்டுவிட்டார். (நீங்கள் அபூ பஸீரைத் தடுக்காவிட்டால்) நானும் கொல்லப்பட்டு விடுவேன்" என்று கூறினார். உடனே அபூ பஸீர் அவர்கள் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் தங்கள் பொறுப்பை நிறைவேற்றிவிட்டான். தாங்கள் என்னை அவர்களிடம் திருப்பியனுப்பி விட்டீர்கள். பிறகு அல்லாஹ், என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றிவிட்டான்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவரின் தாய்க்குக் கேடுண்டாகட்டும். உதவுபவர் எவராவது இவருக்குக் கிடைத்தால் இவர் போர்த் தீயை மறுபடியும் மூட்டி விடுவார்" என்று கூறினார்கள். இதைச் செவியுற்றவுடன் அபூ பஸீர் அவர்கள், நபி(ஸல்) அவர்கள் தம்மை (மீண்டும்) குறைஷிகளிடம் திருப்பியனுப்பி விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென்றார்கள். சுஹைலின் மகன் அபூ ஜந்தல்(ரலி) அவர்களும் குறைஷிகளிடமிருந்து தப்பியோடி அபூ பஸீர் அவர்களுடன் சேர்ந்தார்கள். பிறகு, குறைஷிகளில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தப்பிச் சென்று) அபூ பஸீர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தொடங்கினார். இறுதியில், (சிறிது சிறிதாக இப்படி இஸ்லாத்தை ஏற்றவர்கள் மக்காவிலிருந்து தப்பியோடி வந்து) ஒரு குழுவினராக ஒன்று திரண்டுவிட்டனர். அல்லாஹ்வின் மீதாணையாக! ஷாம் நாட்டை நோக்கி குறைஷிகளின் ஒரு (வியாபாரப்) பயணக் குழு புறப்பட்டிருப்பதாகக் கேள்விப்படும் போதெல்லாம் அதை அவர்கள் இடைமறித்து அவர்களைக் கொன்று அவர்களின் செல்வங்களை (வியாபாரப் பொருட்களை)ப பறித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். எனவே, குறைஷிகள் (அபூ பஸீரும் அவரின் சகாக்களும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க வேண்டுமென்று) இருவருக்கும் ஆளனுப்பி உத்தரவிடும்படி அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுத் தூதனுப்பினார்கள். மேலும், 'குறைஷிகளில், முஸ்லிமாக நபி(ஸல்) அவர்களிடம் வருகிறவர் அச்சமின்றி இருக்கலாம் (அவரை எங்களிடம் திருப்பியனுப்பி வேண்டாம்)" என்று கூறிவிட்டனர். அப்போதுதான் அல்லாஹ், 'அவனே மக்காவின் பள்ளத்தாக்கில் அவர்களின் கைகள் உங்களுக்கெதிராக உயர்வதையும் தடுத்துவிட்டான்; அப்போது அவர்களின் மீது உங்களுக்கு வெற்றியையும் கொடுத்தான். மேலும், நீங்கள் செய்து கொண்டிருந்த யாவற்றையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான்... இறை மறுப்பாளர்கள், தங்கள் உள்ளங்களில் வைராக்கியத்தை (அஞ்ஞான கால மூடச் சிந்தனையை) ஏற்படுத்தியபோது அல்லாஹ், தன் தூதர் மீதும் நம்பிக்கையாளர்களின் மீதும் நிம்மதியை இறக்கியருளினான்.
[ஹதீஸ் சுருக்கம்,புஹாரி;எண் 2731 ]

மக்காவில் முஸ்லிம்களாக ஆகி பல்வேறு தடைகளை தாண்டி அல்லாஹ்வின் தூதரை நாடி அடைக்கலம் தேடி ஹுதைபிய்யா நாளில் வந்த அபூ ஜந்தல்[ரலி] அவர்களையும், மதீனா வரை வந்த அபூ பஷீர்[ரலி] அவர்களையும், ஹுதைபியா ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள காரணத்தால் ஒப்பந்தத்தை பேணவேண்டும் என்பதால் நபி[ஸல்] அவர்கள் திருப்பி அனுப்புகிறார்கள். இஸ்லாத்தை ஏற்ற காரணத்தால் பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இவ்விருவரும் இறைத்தூதர் அவர்கள் ஒப்பந்தத்தை காரணம் காட்டி அபயமளிக்க மறுத்தபோதும், இறைத்தூதர் மீது சிறிதும் அதிருப்தி அடையாமல் அவர்களின் கட்டளைப்படி இணைவைப்பாளர்களுடன் திரும்பிச்சென்ற இவ்விரு சகாபிகளிடமும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கட்டளையிட்டு விட்டால் அது தனக்கு பாதகமாகவே இருந்தாலும் கட்டுப்படவேண்டும் என்ற படிப்பினை நமக்கு உள்ளது. ஆனால் இன்றைக்கு என்ன நிலை..? இறைத்தூதரின் பொன்மொழிகள் அறிவுக்கு பொருந்தவில்லை என்று நிராகரிக்கும் அறிஞர்கள்[?] வாழும் காலம். அடுத்து இவ்விரு சகாபிகள் அடங்கிய குழு ஏற்படுத்திய நெருக்கடி காரணமாகத்தான் குறைஷிகள், நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களிடையேயிருந்து தம்மிடம் (மதீனாவுக்கு) வருபவரை (அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட) அவர்களிடமே திருப்பியனுப்பி விட வேண்டும். என்ற ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தாங்கள் ஒரு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தாலும், இஸ்லாத்தை ஏற்று மதீனா நோக்கி வரும் முஸ்லிம்கள் மதீனாவில் அடைக்கலம் பெறும் அழகிய வழிமுறைக்கு வழிகாட்டிய இந்த வீரர்களின் தியாகம் மெய்சிலிர்க்க செய்கிறது.

வியாழன், 24 செப்டம்பர், 2009

ஆட்சியாளர்களுக்கு அஞ்சுபவர்களா சகாபாக்கள்...?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சகாபாக்களை மட்டம் தட்டும் நூலில் பின்வரும் செய்தியை பதிவு செய்துள்ளார்கள்;
அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிடவேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ, ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும் வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழுமூ திடலுக்கு வந்தபோது கஸீர் இப்னு ஸல்த் என்பவர் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏறமுயன்றார். நான் அவரின் ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தலானார். அப்போது நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றி விட்டீர்கள் என்று கூறினேன். அதற்கு மர்வான் 'நீ விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறிவிட்டது' என்றார். நான் விளங்காத (இந்தப் புதிய) நடைமுறையை விட நான் விளங்கி வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாகமிகச் சிறந்ததாகும் என கூறினேன். அதற்கு மர்வான் 'மக்கள் தொழுகைக்ப் பிறகு இருப்பதில்லை' எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன்' என்று கூறினார். [புஹாரி எண் 956 ]

இந்த செய்தி மிகச்சரியானதே! இச்செய்திக்கு அவர்கள் தந்துள்ள விளக்கம்தான் சகாபாக்களை கொச்சைப்படுத்துகிறது.
 • சிறந்த காலம் என்று நபி[ஸல்] அவர்களால் புகழ்ந்து கூறிய நபித்தோழர்களும், தாபியீன்களும் வாழும் காலத்தில் ஒட்டுமொத்த சமுதாயமும் குழுமியுள்ள பெருநாள் தொழுகையில் நபி[ஸல்] அவர்களின் நடைமுறை அப்பட்டமாக மீறப்படுகிறது. ஒரே ஒருவர் மட்டும் அதை எதிர்க்கிறார் என்பதை காண்கிறோம். ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு பயந்து கூட மார்க்கத்திற்கு முரணான செயல்களை அன்றைய மக்கள் சகித்துக்கொண்டிருக்கக்கூடும்.

என்று எழுதியுள்ளார்கள். திருக்குர்ஆண் விளக்க உரை என்ற பெயரில், உழைப்புக்கு உதாரணமாக நபி[ஸல்] அவர்களால் சொல்லப்பட்ட நபி தாவூத் [அலை] அவர்கள் குறித்து, சாமான்யர்களின் நிலங்களை கையகப்படுத்தியிருக்கக்கூடும் என்று கற்பனையை அள்ளித்தெளித்தது போன்று சகாபாக்கள் விசயத்திலும் 'ஆட்சியாளர்களுக்கு பயந்து மார்க்கத்திற்கு முரணான சட்டத்தை சகித்துக்கொண்டிருக்கக்கூடும் என்ற கற்பனையை அள்ளித் தெளித்து சகாபாக்கள் 'கோழைகள்' என்ற கருத்தை மறைமுகமாக விதைத்துள்ளார்கள். சகாபாக்கள் ஆட்சியாளர்களுக்கு அஞ்சி மார்க்கத்தை விடும் கோழைகள் அல்ல என்பதை மேற்கண்ட இந்த ஹதீஸில் அபூசயீத்[ரலி] அவர்களின் நடவடிக்கை நிரூபிக்கிறது. மர்வான் ஒரு ஆளுநராக இருந்தும்கூட அவர் நபிவழியை மாற்றுகிறார் என்ற மாத்திரத்தில் சட்டையை பிடிக்கும் துணிவு நபித்தோழருக்கு இருந்தது. ஆனால், இன்றும் கூட ஹனபியாக்கள் மர்வானின் வழியில் தொழுகைக்கு முன்பாகவே உரை நிகழ்த்துகிறார்களே! நாம் எத்துனை பேர் போய் அவர்களின் சட்டையை பிடித்து தடுத்து நிறுத்தினோம்..? இன்று ஆட்சியாளரும் இல்லையே நாம் அஞ்சுவதற்கு..? ஆக சாதாரண ஆலிம்ஷா நபிவழியை அப்பட்டமாக ஒவ்வொரு பெருநாளின் போதும் மீறுவதை தடுக்கமுடியாதவர்கள் , ஒரு ஆளுநரை சட்டையை பிடித்த சமுதாயத்தைச் நோக்கி 'ஆட்சியாளர்களுக்கு பயந்தவர்கள்' என்று முத்திரை குத்துவது வியப்பிற்குரியது.

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

பிளேக் நோய் பரவியிருந்த சிரியாவுக்கு செல்ல தயாரானார்களா உமர்[ரலி]...?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
உமர்[ரலி] அவர்கள் சிரியாவை நோக்கி பயணமானார்கள். சஃர்க் எனும் இடத்தை அடைந்தபோது அபூ உபைதாவும், அவரது சகாக்களும் வந்து சிரியாவில் பிளேக் நோய் ஏற்பட்டுள்ளதாக கூறினார்கள். என்ன செய்வது என்று உமர்[ரலி] அவர்கள், முஹாஜிர்களிடமும்-அன்சாரிகளிடமும் ஆலோசனை கேட்டபோது யாருக்கும் அதுபற்றிய விளக்கம் தெரியவில்லை.எனவே சிரியாவுக்கு செல்ல உமர்[ரலி] ஆயத்தமானார்கள். அப்போது வெளியூரிலிருந்து திரும்பி வந்த அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] அவர்கள் உமர்[ரலி] அவர்களை சந்தித்து ப்ளேக் நோய் தொடர்பான நபிமொழியை சொன்னார்கள். உமர்[ரலி] அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு மதீனா திரும்பினார்கள் என்ற புஹாரியின் 5729 ஹதீஸை அரைகுரைகுறையாக போட்டுவிட்டு,
 • சில விஷயங்கள் ஒரே ஒரு நபித்தோழருக்கு மட்டும் தெரிந்து மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
 • அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] அவர்கள் இந்த நபிமொழியை எடுத்துக்காட்டி இருக்காவிட்டால் உமர்[ரலி] உள்ளிட்ட நபித்தோழர்கள் சிரியா சென்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

என்று தங்களின் சொந்த கருத்தை திணித்துள்ளார்கள். முதலில் அவர்கள் பதிவு செய்த ஹதீஸின் முழுமையை கீழே படியுங்கள்;

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்;

உமர் இப்னு கத்தாப்(ரலி) ஷாம் நாட்டை நோக்கி (மக்களின் நிலையை ஆராய்வதற்காக)ப் புறப்பட்டார்கள். 'சர்ஃக்' எனும் இடத்தை அடைந்தபோது (மாகாண) படைத் தளபதிகளான அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள். அதற்கு உமர்(ரலி) 'ஆரம்பக் கால முஹாஜிர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்' என்று சொல்ல அவர்களை நான் (உமர்(ரலி) அவர்களிடம்) அழைத்து வந்தேன். அவர்களிடம் ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்து (அங்கு போகலாமா? மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா? என்று) ஆலோசனை கேட்டார்கள். இது தொடர்பாக முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்களில் சிலர், 'நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டுவிட்டோம். அதிலிருந்து பின்வாங்குவதை நாங்கள் பொறுத்தமாகக் கருதவில்லை' என்று கூறினார்கள். வேறு சிலர், 'உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளைநோயில் தள்ளி விடுவதை நாங்கள் சரியென்று கருதவில்லை' என்று கூறினார்கள். அப்போது உமர்(ரலி), 'நீங்கள் போகலாம்' என்று சொல்லிவிட்டுப்பிறகு, 'என்னிடம் (மதீனாவாசிகளான) அன்சாரிகளை அழைத்து வந்தார்கள்' என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களிடம் உமர்(ரலி) ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்களின் வழியிலேயே சென்று அவர்களைப் போன்றே கருத்து வேறுபட்டார்கள். அப்போதும் உமர்(ரலி), 'நீங்கள் போகலாம்' என்று சொல்லிவிட்டுப் பிறகு, மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களில் இங்கு உள்ளவர்களை என்னிடம் அழைத்துவாருங்கள்' என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களில் எந்த இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் (அனைவரும்), 'மக்களுடன் நீங்கள் திரும்பி விட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளைநோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகிறோம்' என்றனர். எனவே, உமர்(ரலி) மக்களிடையே 'நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா) புறப்படவிருக்கிறேன்; நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்' என்று அறிவித்தார்கள். அப்போது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி), 'அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?' என்று கேட்க, உமர்(ரலி), 'அபூ உபைதா! இதை உங்களைத் தவிர வேறேவரேனும் சொல்லியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆம் நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரண்டு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படி தான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா?' என்று கேட்டார்கள். அப்போது தம் தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அங்கு) வந்தார்கள். அவர்கள், 'இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல கேட்டேன்' என்று கூறினார்கள். உடனே உமர்(ரலி), (தம் முடிவு நபி(ஸல்) அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். [புஹாரி எண் 5729 ]

அன்பானவர்களே! நாம் 'ஹைலைட்' செய்துள்ளவைகளை கவனமாக படியுங்கள். சஃர்க் எனும் பகுதியில் உள்ள [அல்லது தன்னுடன் வந்த] முஹாஜிர் களிடமும்- அன்சாரிகளிடமும் மட்டுமன்றி, அப்பகுதியில் உள்ள மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்துவந்த குறைஷி பெரியவர்களிடமும் ஆலோசனை நடத்திய உமர்[ரலி] அவர்கள், மதீனா திரும்ப முடிவெடுத்து அறிவித்தபோது, அபூ உபைதா[ரலி] அவர்கள் உமர்[ரலி] அவர்களின் முடிவை ஆட்சேபித்து, அல்லாஹ்வின் விதியை கண்டா வேருண்டோடுகிறீர்கள் என்று கூறுகிறார்கள். இதிலிருந்து தெளிவாக தெரிகிறது உமர்[ரலி] அவர்கள் , அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] அவர்களை சந்திப்பதற்கு முன்பாகவே மதீனா செல்லும் முடிவை எடுத்துவிட்டார்கள் என்று! மேலும் தனது முடிவுக்கேற்ப நபிமொழியை செவிமடுத்தவுடன் ஆனந்தத்தில் அல்லாஹ்வை புகழ்ந்து மதீனா திரும்புகிறார்கள். ஆக, அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] அவர்கள் ஹதீஸை சொல்ல்லியிருக்காவிட்டால் உமர்[ரலி] அவர்கள் உள்ளிட்ட சகாபாக்கள் சிரியா சென்றிருப்பார்கள் என்று 'சகாபாக்களை மடம் தட்டும் நூலில் எழுதியது' தவறு என்பது தெளிவாகும். மேலும் இந்த பிளேக் நோய் பற்றிய ஆலோசனையை எதோ ஒட்டுமொத்த முஹாஜிர்களையும்- ஒட்டுமொத்த அன்சாரிகளையும் அழைத்துவைத்து உமர்[ரலி] ஆலோசனை செய்தது போலவும் அவர்களில் யாருக்குமே இந்த ஹதீஸ் தெரியவில்லை என்பது போலவும், அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] என்ற ஒரே ஒரு[?] சகாபிக்கு மட்டுமே இந்த ஹதீஸ் தெரிந்ததாகவும் வர்ணித்துள்ளார்கள். ஆனால் இதே கருத்துடைய ஹதீஸை வேறு சில சகாபிகளும் அறிவித்துள்ளார்கள்.
 • ஆமிர் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்கள்; (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு உஸாமா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது. அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது.... (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்" என்று கூறினார்கள்" என்று பதிலளித்தார்கள்.ஆதாரம் புஹாரி எண் 3473 ]

இந்த ஹதீஸ் மூலம், ஆமிர் இப்னு ஸஅத்(ரலி),ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) உஸாமா இப்னு ஸைத்(ரலி) ஆகியோர்க்கு தெரிந்துள்ளதை அறியமுடிகிறது.

 • நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார்கள்; நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்" என்று தெரிவித்தார்கள். மேலும், 'கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்" என்று கூறினார்கள். [ஆதாரம்;புஹாரி எண் 3474 ]

இந்த ஹதீஸ் மூலம் , அன்னை ஆயிஷா[ரலி] அவர்களும் அறிந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. இதே பிளேக் நோய் பற்றி வேறு கருத்துகள் அடங்கிய ஹதீஸ்கள் பல நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்ட ஏராளமான ஹதீஸ்கள் உண்டு. எனவே உமர்[ரலி] அவர்கள் ஆலோசனை செய்த சஃர்க் எனும் இடத்தில் இருந்த நபித்தோழர்கள் இந்த ஹதீஸ் பற்றி அறியாமல் இருந்திருக்கலாம். அதை வைத்து அப்துர் ரஹ்மான்[இப்னு] அவூப்[ரலி] அவர்களைத்தவிர வேறு எந்த சகாபிக்கும் தெரியவில்லை என்பது அப்பட்டமான பிழையாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

அன்னையின் கருத்துக்கு 'அபத்தம்' கற்பிப்பதா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சகாபாக்களை மட்டம் தட்டும் நூலில் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் சம்மந்தப்பட்ட கருத்தை பதிவு செய்துவிட்டு, அந்த ஹதீஸுக்கு தங்களின் அபரீத கற்பனையை விரிவுரையாக்கி அன்னையின் கருத்திற்கு அபத்தம் கற்பித்துள்ளார்கள். அந்த ஹதீஸ் இதோ;
 • ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்; பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி(ஸல்) அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள்.[புஹாரி எண் 869 ]

இந்த ஹதீஸுக்கு அவர்களின் வர்ணனை;

 • ஆயிஷா[ரலி] கூறுவது போன்ற மாற்றங்கள் ஏற்படும் என்பது இறைவனுக்கு நன்கு தெரியும்.பெண்களிடம் ஏற்படும் தவறான நடவடிக்கை காரணமாக பெண்களை பள்ளியில் அனுமதிக்கக்கூடாது என்று இறைவன் நினைத்திருந்தால் அதை அவன் தெளிவாக சொல்லியிருப்பான்.அதையறியாமல் இறைவன் சட்டமியற்றிவிட்டான் என்பது போன்ற கருத்து ஆயிஷா[ரலி] அவர்களின் கூற்றில் அடங்கியுள்ளது.
 • மேலும் மார்க்கம் முழுமையாகிவிட்டது என்று திருக்குர்ஆண் கூறுகிறது. மார்க்கம் முழுமையாகிவிட்டது என்றால் அதற்குப்பின் எந்த மாற்றமும் வராது என்பதுதான் பொருள்.இதற்கு எதிராகவும் ஆயிஷா[ரலி] அவர்களின் கூற்று அமைந்துள்ளது.

நபி[ஸல்] அவர்களின் காலத்திற்கு பின்னால் பெண்களின் நடவடிக்கையில் எதோ ஒரு மாற்றத்தை கண்ட அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் ,நபி[ஸல்]அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள். என்று சாதாரணமாக சொன்ன வார்த்தை இது. ஏனெனில், நபி[ஸல்] அவர்கள் மீண்டும் உலகுக்கு வரப்போவதுமில்லை. பெண்களின் நடவடிக்கையை பார்க்கப்போவதுமில்லை. பள்ளியை விட்டு தடுக்கப்போவதுமில்லை.முழுமையான மார்க்கத்தில் எந்த மாற்றமும் வரப்போவதுமில்லை. அப்படியிருக்க, பெண்களின் நடவடிக்கையை கண்டு ஆதங்கத்தில் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் சொன்ன வார்த்தையை அல்லாஹ்விற்கு முரணான சிந்தனை என்று வர்ணித்து அன்னையை குற்றவாளியாக்கிவிட்டு, கடைசியாக அந்த நூலில் இப்படி சமாளித்துளார்கள்;

 • ஆயிஷா [ரலி] இந்த கருத்தை மனதில் கொண்டுதான் இவ்வார்த்தைகளை கூறினார்கள் என்று புரிந்து கொள்ளக்கூடாது.பெண்களின் நடவடிக்கைகளை கண்டு மனம் வெதும்பி இந்த சொல்லை பயன்படுவிடார்கள் என்றுதான் நாம் நல்லெண்ணம் வைக்கவேண்டும்.

அன்னை[ஆயிஷா[ரலி] அவர்களின் மீதான இவர்களின் நல்லெண்ணம் உண்மையானால், அந்த ஹதீஸை அதுவும் 'பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை தடுத்தல்' என்ற பாடத்தின் கீழ் கொண்டு வந்தது ஏன்? பெண்கள் பள்ளிக்கு வந்ததை அன்னைஆயிஷா[ரலி] அவர்கள் தடுத்து போன்ற தோற்றத்தையும் தந்து, அன்னையவர்களின் கருத்துக்கு சுய கற்பனை வர்ணனை செய்துவிட்டு இறுதியாக 'நல்லெண்ணம் ' கொள்ளவேண்டுமாம்! சகாபாக்களின் கண்ணியம் எவ்வாறு பேணப்படுகிறது என்பதை மக்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம்.

திங்கள், 21 செப்டம்பர், 2009

சஹாபாக்களை பின்பற்றக்கூடாது என்பதற்கு அவர்களது 'அறியாமை' அளவுகோளாகுமா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
இஸ்லாத்தின் அடிப்படை அல்-குர்ஆனும்-ஹதீஸும்தான். இவை இரண்டை மட்டுமே ஒரு முஸ்லிம் பின்பற்ற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்ககூடாது. இவையிரண்டும் அல்லாத வேறு எதனையும்-யாரையும் குறிப்பாக சகாபக்களைக்கூட பின்பற்றக்கூடாது என்பதற்கு சஹாபாக்களின் தவறுகள் என்று கருதப்படுபவைகளை பட்டியலிடவேண்டிய அவசியமில்லை. மாறாக குர்ஆனையும்-ஹதீஸையும் பின்பற்றுவதை வலியுறுத்தும் வசனங்களும், நபிமொழிகளும் ஏராளம் உண்டு. அவைகளை எடுத்துவைத்தே குர்ஆண்-ஹதீஸ் மட்டுமே பின்பற்றப்பட வேண்டியது என்பதை நிலை நாட்டமுடியும். நிலை இவ்வாறிருக்க சகாபாக்களை பின்பற்றக்கூடாது என்பதற்கு அவர்கள் செய்ததாக கருதப்படும் தவறுகளை மட்டுமல்லாது இன்னொரு முக்கியமான[?] அளவுகோலை வைக்கிறார்கள். அதாவது சஹாபாக்களில் பலருக்கு பல சட்டங்கள் தெரியவில்லை. எனவே இவர்களை எப்படி பின்பற்றுவீர்கள் என்று சொல்லி ஒரு பட்டியல் போடுகிறார்கள்;
 • ருஹுஉ செய்யும்போது கைகளை முட்டுக்கால் மீது வைக்கவேண்டும் என்ற சட்டம் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களுக்கு தெரியவில்லை.
 • முத்ஆ திருமணம் தடை செய்யப்பட்டது இப்னு அப்பாஸ்[ரலி] அவர்களுக்கு தெரியவில்லை.
 • தமத்துவு ஹஜ் அனுமதி பற்றி உமர்[ரலி] மற்றும் உஸ்மான்[ரலி] ஆகியோருக்கு தெரியவில்லை.
 • விந்து வெளியானாலும் வெளியாகாவிட்டாலும் குளிப்பு கடமை என்ற சட்டம் உஸ்மான்[ரலி], அலீ[ரலி] போன்ற சகாபக்களுக்கு தெரியவில்லை.
 • இஹ்ராம் கட்டிய நிலையில் திருமணம் செய்யக்கூடாது என்ற சட்டமிருக்க, இஹ்ராம் கட்டிய நிலையில் நபி[ஸல்] அவர்கள் திருமணம் செய்ததாக இப்னு அப்பாஸ்[ரலி] கூறுகிறார்.
 • குளிப்புக்கடமையான நிலையில் ஸஹர் நேரத்தை அடைந்தால் அதே நிலையில் ஸஹர் செய்யலாம் என்ற சட்டம் அபூ ஹுரைரா[ரலி], இப்னு அப்பாஸ்[ரலி] ஆகியோருக்கு தெரியவில்லை.
 • லுஹாத்தொழுகையை நபி[ஸல்] அவர்கள் தொழுதது ஆயிஷா[ரலி] மற்றும் இப்னு உமர்[ரலி] ஆகியோருக்கு தெரியவில்லை.
 • பிறரது இல்லத்தில் நுழைவது குறித்த சட்டம் உமர்[ரலி] அவர்களுக்கு தெரியவில்லை.
 • தயம்மும் சலுகை இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களுக்கு தெரிந்தும் மறுக்கிறார்.
 • பிளேக் நாய் வந்தால் என்ன செய்வது என்ற சட்டம் ஒரு ஸஹாபியை தவிர[?]யாருக்கும் தெரியவில்லை.
 • இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசலாம் என்ற சட்டம் இன்னு உமர்[ரலி] அவர்களுக்கு தெரியவில்லை.

இவ்வாறாக பட்டியல் நீள்கிறது. தவ்ஹீதை அடிப்படையாக கொண்ட யாரும் நாம் அறிந்தவரை சகாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, குர்ஆணிலும்-ஹதீஸிலும் தெளிவாக கூறப்பட்ட விஷயங்கள் நீங்கலாக, எதற்கு விளக்கம் தேவையுள்ளதோ அவைகளுக்கு இன்றைய அறிஞர்களின் கருத்தைவிட சஹாபாக்களின் கருத்துக்கு முன்னுரிமை தரவேண்டும். ஏனெனில் அவர்கள் அரபியை தாய்மொழியாக கொண்டவர்கள்- நபி[ஸல்] அவர்களிடம் நேரடி பாடம் பயின்ற, நபி[ஸல்] அவர்களால் சிலாகித்து சொல்லப்பட்டவர்கள். இறையச்சத்திலும்-பேனுதளிலும்சிறந்தவர்கள் என்பதால்தான். சஹாபாக்களை பின்பற்றவேண்டும் என்று சொல்லும் சுன்னத் வல் ஜமாத்தினரில் சில பிரிவினர் கூட ஒரு குறிப்பிட்ட ஸஹாபியை பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. ஒட்டுமொத்த சகாபிகளையும் பின்பற்றவேண்டும் என்றே சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸஹாபியை பின்பற்ற வேண்டும் என்று சொன்னால்தான் 'நீங்கள் பின்பற்ற சொல்லும் சகாபிக்கு இன்னின்ன சட்டங்கள் தெரியவில்லை. எனவே எப்படி பின்பற்ற முடியும் என்று கேள்வி எழுப்ப வழியுண்டு. ஆனால் ஒட்டுமொத்த சகாபிகளையும் பின்பற்ற வேண்டும் எனும்போது ஒரு சகாபியிடம் கிடைக்காத சட்டத்தை வேறு ஒரு சகாபியிடம் பெற்றுக்கொள்ள முடியும். எனவே சகாபாக்களுக்கு பல்வேறு சட்டங்கள் தெரியவில்லை. எனவே அவர்களை பின்பற்ற கூடாது என்ற வாதம் சரியல்ல. மாறாக குர்ஆணை-ஹதீஸை பின்பற்ற வலியுறுத்தும் கருத்துக்களை எடுத்துக்காட்டியதோடு நிறுத்தப்படிருக்கவேண்டும்.

அடுத்து சகாபாக்களுக்கு சில சட்டங்கள் தெரியாமல் போனது அவர்களின் குற்றமா என்றால் இல்லை. எல்லா சகாபாக்களும் எல்லா நேரமும் நபி[ஸல்] அவர்களோடு ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை. சில நேரம் நபியவர்களோடு இருக்கும் அவர்கள் சில நேரம் தொழில்-உழைப்பு என்றும் சென்றிருக்கிறார்கள் . நபியவர்களின் அவையில் இல்லாத நேரத்தில் நபி[ஸல்] அவர்களால் கூறப்படும் சட்டத்தை ஆர்வத்தோடு கேட்டுத்தெரிந்து கொண்ட சான்றுகளும் உண்டு. மேலும் ஒரு சட்டத்தில் ஆரம்பநிலை ஒன்றாக இருக்கும்- பின்னர் மாற்றப்பட்ட நிலை ஒன்றாக இருக்கும். இதில் ஆரம்ப நிலையை மட்டுமே அறிந்த ஸஹாபி , மாற்றப்பட்ட நிலை அறியாத நிலையில், முதல் சட்டத்தை அமுல்படுத்துவதோ -அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதோ குற்றமாகுமா என்பதை சம்மந்தப்பட்டவர்கள் விளக்க கடமைப்பட்டுள்ளார்கள். எனவே சகாபாக்களை பின்பற்றக்கூடாது என்பதை வரவேற்கிறோம். அதற்காக சகாபாக்களை 'அறியாதவர்கள்' 'அறிந்தும் முரணாக செயல்பட்டார்கள் ' என்ற ரீதியில் வார்த்தைப் பிரயோகங்களை கையாள்வது யாராக இருந்தாலும் அதை தவிர்ந்து கொள்ள உபதேசிக்கிறோம். ஏனெனில் அனைத்தையுமறிந்த ஒருவர் இவ்வுலகில் இதுவரை பிறக்கவுமில்லை. இனி பிறக்கப்போவதுமில்லை. அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே!

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

லுஹாத் தொழுகையை மறுத்தார்களா அன்னை ஆயிஷா[ரலி]யும்-இப்னு உமர்[ரலி]யும்..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

லுஹாத் தொழுகை நபி[ஸல்] அவர்களால் காட்டித்தரப்பட்ட ஒரு தொழுகையாகும்.
 • அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். "ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும். 'ளுஹா' நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும். உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுது விடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்!" நூல்;புஹாரி எண் 1981 ]

இந்த பொன்மொழி லுஹாத் தொழுகை உண்டு என்பதையும் அத்தொழுகை 2 ரக்அத்துகள் என்பதையும் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. விஷயம் என்ன என்றால் , சகாபாக்களை மட்டம் தட்டும் நூலில், இந்த தொழுகையை சில நபித்தோழர்கள் அறியாததன் காரணத்தினால் அடியோடு மறுத்துள்ளார்கள் என்று கூறி அவ்வாறு மறுத்தவர்கள் அன்னை[ஆயிஷா[ரலி], இப்னு உமர்[ரலி] என்று போட்டு சில ஹதீஸ்களையும் போட்டுள்ளார்கள்.

அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் லுஹாத்தொழுகை குறித்து கூறிய தாக அவர்கள் வெளியிட்டுள்ள இரு ஹதீஸ்கள்;

 • ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழ நான் பார்த்ததில்லை. ஆனால் தொழுவேன்.[புஹாரி எண் 1177 ]

 • ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சில அமல்களைச் செய்ய விரும்புவார்கள். (ஆனால்) சில சமயம் அவற்றைச் செய்ய மாட்டார்கள். மக்களும் அதைச் செய்து அவர்களின் மீது அது அச்சமே இதற்கு காரணம். நபி(ஸல்) அவர்கள் ஒருபோதும் லுஹாத் தொழுததில்லை. நான் லுஹாத் தொழுது வருகிறேன். [புஹாரி எண் 1128 ]

இந்த இரு ஹதீஸ்களை கவனமாக பாருங்கள். லுஹாத் தொழுகை இல்லை என்று அன்னைஆயிஷா[ரலி] அவர்கள் சொல்லவில்லை. நபி[ஸல்] அவர்கள் லுஹாத் தொழுகை தொழுததில்லை அதற்கு காரணம் மக்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம்தான். என்று கூறிவிட்டு நான் லுஹாத் தொழுகை தொழுகிறேன் என்று கூறுகிறார்கள். ஆக அன்னையின் கருத்து லுஹாத்தொழுகை இல்லை என்பதல்ல. நபி[ஸல்] அவர்கள் தொழவில்லை என்பதுதான். உண்மை இவ்வாறிருக்க 'அடியோடு' மறுத்தார்கள் என்று கூறுவது எப்படி என்பதை சம்மந்தப்பட்டவர்கள் விளக்கவேண்டும்.

இப்னு உமர்[ரலி] அவர்கள் சம்மந்தமாக உள்ள ஹதீஸ்;

முவர்ரிக் அறிவித்தார். நீங்கள் லுஹாத் தொழுவது உண்டா? என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'இல்லை' என்றார்கள். உமர் தொழுவார்களா? என்று கேட்டேன். அதற்கவர்கள் 'இல்லை' என்றார்கள். அபூ பக்ர்(ரலி தொழுவார்களா? என்று கேட்டேன். அதற்கும் 'இல்லை' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுவார்களா? என்று கேட்டேன். 'அது தெரியவில்லை' என்றார்கள். [புஹாரி எண் 1175 ]

இந்த செய்தியில் லுஹாத் தொழுகை இல்லை என்று இப்னு உமர்[ரலி] அவர்கள் சொல்லவில்லை. நபி[ஸல்] அவர்கள் தொழுதார்களா என்ற கேள்விக்கு 'தெரியவில்லை' என்று தான் பதிலளிக்கிறார்கள் . இது எப்படி மறுத்ததாக ஆகும்..?

நபி[ஸல்] அவர்கள் லுஹாத் தொழுகை தொழுதார்களா.. இல்லையா?

நபி[ஸல்] அவர்கள் லுஹாத்தொழுகை தொழுததாக உம்மு ஹானி[ரலி] அவர்களைத்தவிர வேறு யாரும் எமக்கு அறிவிக்கவில்லை என்று இப்னு அபீ லைலா(ரஹ்) என்பார் கூறுகிறார் [புஹாரி எண் 4292 ] மேலும், உம்மு ஹானி [ரலி] அவர்கள் சம்மந்தப்பட்ட ஹதீஸில்,

மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி(ஸல்) அவர்களை, அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) மறைத்துக் கொண்டிருக்க, அவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது, அவர்களுக்கு நான் சலாம் உரைத்தேன். அவர்கள், 'யார் அது?' என்று கேட்டார்கள். நான், 'அபூ தாலிபின் மகள் உம்மு ஹானீ" என்று பதிலளித்தேன். உடனே அவர்கள், 'உம்மு ஹானீயே! வருக! வருக! (உங்களுக்கு நல்வரவு கூறுகிறேன்)" என்றார்கள். அவர்கள் குளித்து முடித்ததும் ஒரே ஆடையை (மேனியில்) சுற்றியவர்களாக எழுந்து நின்று எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என் தாயின் மகன் (என் சகோதரர்) அலீ, நான் புகலிடம் அளித்திருக்கும் ஒரு மனிதரை ஹுபைராவின் மகனான இன்னாரை தான் கொல்லப் போவதாகக் கூறுகிறார்" என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உம்மு ஹானியே! நீ அபயம் அளித்தவருக்கு நாமும் அபயம் அளித்து விட்டோம் (எனவே கவலை வேண்டாம்)" என்று கூறினார்கள். (நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்ற) அந்த நேரம் முற்பகல் நேரமாக இருந்தது. [புஹாரி எண் 3171 ]

இந்த பொன்மொழியில், நபி[ஸல்]அவர்கள் எட்டுரக்அத்துகள் தொழுததாக வருகிறது. ஆனால் லுஹா தொழுகை இரு ரக்அத்துகள் என்று அபூ ஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கும் செய்தி கூறுகிறது. எனவே நபி[ஸல்] அவர்கள் தொழுதது லுஹாத்தொழுகை அல்ல என்றும், உம்முஹானி[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களிடம் சென்ற நேரத்தையே இங்கே குறிப்பிடுகிறார்கள் என்றும் இந்த ஹதீஸுக்கு நிகழ்கால அறிஞர் ஒருவர் விளக்கமளித்தார். ஆக நபி[ஸல்] அவர்கள் லுஹாத்தொழுகை தொழுமாறு ஏவியதை எந்த சகாபியும் குறிப்பாக அன்னை ஆயிஷா[ரலி]யும்-இப்னு உமர்[ரலி]யும் மறுக்கவில்லை. ஆனால் நபி[ஸல்] அவர்கள் லுஹாத் தொழுகை தொழுதார்களா என்பதில் தான் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மட்டும் மாற்றுக்கருத்து கொள்கிறார்கள். எனவே 'அடியோடு'மறுத்தார்கள் என்பது தவறாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

சனி, 19 செப்டம்பர், 2009

நபித்தோழர்கள் ஃபித்அத்தை உண்டாக்குவார்கள் என்று நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்தார்களா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நபி[ஸல்] அவர்களின் மறைவுக்கு பின்னால் நபித்தோழர்கள் சிலர் தவறான பாதைக்கு சென்றுவிடுவார்கள். அதற்காக தண்டிக்கப்படுவார்கள் என்று நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்திருப்பதாக கூறி சில ஹதீஸ்களை சகாபாக்களை மட்டம் தட்டும் நூலில் வெளியிட்டுள்ளார்கள்.

 • இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் (மறுமை நாளில்) காலில் செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும் விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்" என்று கூறிவிட்டு, பிறகு, 'எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீட்டுவோம். இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும. அதனை நாம் நிறைவேற்றியே தீருவோம்" என்னும் (திருக்குர்ஆன் 21:104) இறைவசனத்தை ஓதினார்கள். முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆவார்கள். பிறகு, என் தோழர்களில் சிலர் (சொர்க்கத்திற்காக) வலப்பக்கமும், (சிலர் நரகத்திற்காக) இடப்பக்கமும் கொண்டு செல்லப்படுவார்கள். நான், 'இவர்கள் என் தோழர்கள்" என்று கூறுவேன். 'இவர்களைவிட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள், தம் கால் சுவடுகளின் வழியே (எங்கிருந்து) வந்தார்களோ அந்த மதத்திற்குத்) திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்" என்று சொல்லப்படும். அதற்கு நான் நல்லடியாரான மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே, '(இறைவா!) நான் இவர்களிடையே (உயிருடன்) வாழ்ந்து வந்த வரை நான் இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்தபோது நீயே இவர்களைக் கண்கானிப்பவனாகி விட்டாய். ஒவ்வொரு விஷயத்தையும் நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய். நீ அவர்களைத் தண்டித்தாலும் அவர்கள் உன் அடிமைகள் தாம். (அதற்கும் உனக்கும் முழு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்துவிட்டால் (அது உன் கருணையாகும். ஏனெனில்,) நீ வல்லோனும் விவேகம் மிக்கோனும். ஆவாய்" (திருக்குர்ஆன் 05: 117, 118) என்று சொல்வேன். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். [புஹாரி எண் 3349 ]

 • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்' என்பேன். அதற்கு இறைவன் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்' என்று சொல்வான். என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸ் மட்டுமன்றி இதுபோன்ற கருத்தைத்தரும் பல ஹதீஸ்களின் நம்பரையும் போட்டுள்ளார்கள். இந்த இரு ஹதீஸ்களும்[ அவர்களின் கருத்துப்பிரகாரம்] நபி[ஸல்] அவர்களின் மறைவுக்கு பின்னால் சகாபாக்கள், புதியவைகளை உருவாக்கியதோடு மதம் மாறியதாகவும் அதாவது இஸ்லாத்தை விட்டு சென்றதாகவும் கூறுகிறது. இந்த ஹதீஸ்களில் சொல்லப்பட்டவர்கள் சகாபாக்கள் என்றால், மதம் மாறிய ஒரு சகாபியின் பெயரையாவது அவர்கள் வெளியிட வேண்டும். ஆனால் இந்த ஹதீஸில் நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்தது சஹாபாக்களை அல்ல. மாறாக அபூபக்கர்[ரலி] ஆட்சிக் காலத்தில் மதம் மாறிய நயவஞ்சகர்களைத்தான் குறிக்கும் என்பதை புஹாரி 3447 வது ஹதீஸின் தொடரில் ,
தம் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றவர்கள் யாரெனில், அபூ பக்ர்(ரலி) அவர்களின் காலத்தில் மதமாறியவர்கள் தாம்! அபூ பக்ர்(ரலி) (போராடி) அவர்களை வீழ்த்திவிட்டார்கள். என்று கபீஸா இப்னு உக்பா(ரஹ்) அவர்கள் கூறிய கருத்தை இமாம் புஹாரி[ரஹ்] அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். மேலும் 'கவ்ஸர்' அருகே தடுக்கப்படும் சிலரை பார்த்து அவர்கள் என் தோழர் களாயிற்றே! என்று நபி[ஸல்] அவர்கள் சொல்லியதால் இது கண்டிப்பாக சகாபாக்களையே குறிக்கும் என்று வாதிடுவார்களானால், கீழ்கண்ட ஹதீஸையும் பார்க்கட்டும்;
 • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நான் ('அல்கவ்ஸர்') தடாகத்தின் அருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்கவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்' என்பேன். அதற்கு 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் தங்கள் குதிகால்களின் மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பச் சென்று கொண்டேயிருந்தார்கள்' என்று கூறப்படும். இதை அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் 6593 ]

இந்த ஹதீஸில் கவ்ஸரில் தடுக்கப்படுபவர்களை பற்றி ,' என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்' என்று நபி[ஸல்] அவர்கள் கூறுகிறார்கள். கவ்ஸரில் தடுக்கப்படுபவர்கள் சகாபாக்கள்தான் என்றால், சகாபாக்கள் மட்டும்தான் நபி[ஸல்] அவர்களின் சமுதாயமா? நாமெல்லாம் ஏன் உலகம் அழியும் வரை தோன்றவிருக்கும் முஸ்லிம்கள் நபியவர்களின் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இல்லையா? என்பதையும் விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

வியாழன், 17 செப்டம்பர், 2009

தயம்மும் சலுகையை மறுத்தார்களா இப்னு மஸ்வூத்[ரலி]..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) மற்றும் அபூ மூஸல் அஷ்அரி(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தேன். அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரலி) அவர்களிடம், 'குளிப்புக் கடமையானவர் ஒரு மாத காலம் வரை தண்ணீரைப் பெறவில்லையானால் அவர் தயம்மும் செய்து தொழ வேண்டியதில்லையா? 'மாயிதா' என்ற அத்தியாயத்தில் வரும், 'நீங்கள் தண்ணீரைப் பெறவில்லையானால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்யுங்கள்' என்ற வசனத்தை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் பொது அனுமதி கொடுக்கப்பட்டால், தண்ணீர் கொஞ்சம் குளிராக இருக்கும் போதெல்லாம் (மக்கள்) தண்ணீரில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு மண்ணில் தயம்மும் செய்து விடுவார்கள்' என்று அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். அப்போது 'இதற்காகத்தான் தயம்மும் செய்வதை நீங்கள் வெறுத்தீர்களா?' என்று நான் கேட்டதற்கு 'ஆம்!' என்று பதிலளித்தபோது, 'என்னை ஒரு வேலைக்காக நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தபோது எனக்குக் கிடைக்கவில்லை. எனவே பிராணிகள் மண்ணில் புரளுவது போன்று புரண்டேன். இச்செய்தியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் இரண்டு கைகளையும் தட்டிவிட்டு, தங்களின் வலக்கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தங்களின் இடக்கரத்தால் வலப்புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரண்டு கைகளால் தங்களின் முகத்தைத் தடவிவிட்டு 'இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாக இருந்தது' என்று கூறினார்கள்' என்ற செய்தியை 'உமர்(ரலி) அவர்களிடம், அம்மார் சொன்னதை நீங்கள் கேள்விப்படவில்லையா?' என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'அம்மார் சொன்னதில் உமர்(ரலி) திருப்திப்படவில்லை' என்பது உமக்குத் தெரியாதா? என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) திரும்பக் கேட்டார்" என ஷகீக் அறிவித்தார்.
நூல்; புஹாரி எண் 347

இந்த ஹதீஸை முன்வைத்து, அல்லாஹ்வும் அவனது தூதர்[ஸல்] அவர்களும் வழங்கிய சலுகையான தயம்மும் செய்வதை இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் மறுக்கிறார்கள். உரிய ஆதாரங்களை அபூமூஸா[ரலி] அவர்கள் முன்வைத்தபின்னும் தவறான காரணம் கூறி இப்னு மஸ்வூத் [ரலி] அவர்கள் தன் முடிவில் நீடிக்கிறார்கள். சொந்த யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் மனப்பான்மை தலை சிறந்த நபித்தோழரிடம் காணப்பட்டால் அது எத்தகைய விளைவை ஏற்ப்படுத்தும்..? இன்னும் இதுபோல் எத்தனை தீர்ப்புகள் அவரால் அளிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாதா? என்றெல்லாம் சகாபாக்களை மட்டம் தட்டும் ஒரு நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். நன்றாக கவனிக்கவேண்டும். முதலாவதாக தயம்மும் சம்மந்தமான வசனத்தையோ, அதுதொடர்பான நபிமொழியையோ இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் மறுக்கவில்லை. இந்த சலுகை இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர்கள்,
'இந்த விஷயத்தில் பொது அனுமதி கொடுக்கப்பட்டால், தண்ணீர் கொஞ்சம் குளிராக இருக்கும் போதெல்லாம் (மக்கள்) தண்ணீரில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு மண்ணில் தயம்மும் செய்து விடுவார்கள்' என்று பேணுதல் அடிப்படையில் தன் கருத்தை சொல்கிறார்கள். இவ்வாறு நபி[ஸல்] அவர்களால் சொல்லப்பட்ட சட்டத்திற்கு பேணுதல் அடிப்படையில் சகாபாக்கள் கருத்து சொல்லி அதை நபி[ஸல்] அவர்கள் அங்கீகரித்த சான்று உண்டு. இதோ;

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அபூஹுரைரா!" (என்று என்னை அழைத்து,) தம் காலணிகள் இரண்டையும் என்னிடம் கொடுத்து, "இவ்விரு காலணிகளையும் கொண்டு செல்! வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பி சான்று கூறுகின்ற எவரையும் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்கு சுவர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!" என்று கூறினார்கள்.நான் திரும்பி வந்தபோது உமர் (ரலி) அவர்களையே முதலில் சந்தித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், "இந்தக் காலணிகள் யாவை அபூஹுரைரா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலணிகள். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சாட்சியம் கூறுகின்ற எவரை நான் சந்தித்தாலும் அவருக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுமாறு சொல்லி இக்காலணிகளை (அடையாளமாக)க் கொடுத்து என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்" என்று சொன்னேன்.உடனே உமர் (ரலி) அவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள். நான் மல்லாந்து விழுந்தேன். "திரும்பிச் செல்லுங்கள் அபூஹுரைரா!" என்று சொன்னார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்னைப் பின் தொடர்ந்து வந்த உமரும் அங்கே எனக்குப் பின்னால் வந்து நின்றார். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஹுரைரா! உமக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். நான் "உமரைச் சந்தித்து நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் என் மார்பில் ஓர் அடி அடித்தார். நான் மல்லாந்து விழுந்து விட்டேன். பிறகு ‘திரும்பி செல்லுங்கள்’ என்று கூறினார்" என்றேன். அப்போது உமர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்?" என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று உள்ளத்தால் உறுதிகொண்ட நிலையில் சாட்சியம் சொல்பவர் எவரைச் சந்தித்தாலும் அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுமாறு கூறி உங்கள் காலணிகளைக் கொடுத்து நீங்கள்தாம் அபூஹுரைராவை அனுப்பிவைத்தீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,"ஆம்" என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "அவ்வாறு செய்யாதீர்கள்! ஏனெனில், மக்கள் அந்த ஒன்றையே சார்ந்து (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன்; அவர்கள் (நற்)செயல் புரிய விட்டு விடுங்கள்" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறே அவர்களை விட்டு விடுங்கள் (அவர்கள் நற்செயல்கள் செய்யட்டும்)" என்று சொன்னார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).
ஆதாரம்;முஸ்லிம்எண் 46

இந்த பொன்மொழியை கவனமாக படியுங்கள்! நபி[ஸல்] அவர்கள் ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அதை மக்கள் மத்தியில் வைக்கப்பட்டால், நாம்தான் ஏகத்துவத்தை உறுதியாக நம்பி அதற்குசாட்சி சொல்லக் கூடியவர்களாக இருக்கிறோமே! நமக்குத்தான் சொர்க்கம் உறுதி என்று நபி[ஸல்] அவர்களே சொல்லிவிட்டார்களே! என்ற மெத்தனத்தின் காரணமாக அமல் செய்வதில் மக்கள் பாராமுகமாக இருந்துவிடுவார்கள் என்று அஞ்சிய உமர்[ரலி] அவர்கள் தன் சொந்த கருத்தைத்தான் 'பேணுதல்' அடிப்படையில் நபி[ஸல்] அவர்களிடம் சொன்னபோது அதை நபி[ஸல்] அவர்கள் அங்கீகரிக்கிறார்கள் என்றால், நபித்தோழர்கள் சட்டத்தை மறுக்காமல் பேணுதல் அடிப்படையில் சொல்லும் கருத்துக்கு நபி[ஸல்] அவர்களின் அங்கீகாரம் உள்ளது என்பதை விளங்கிக்கொள்ளலாம். ஒரு வாதத்திற்கு இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் சொன்னது இந்த விசயத்தில் தவறு என்று வைத்துக்கொண்டாலும், 'இன்னும் இது போன்று எத்தனை விசயத்தில் தவறான தீர்ப்பு வழங்கினார்களோ..? என்ற சந்தேகத்தை ஒரு நபித்தோழர் மீது ஏற்படும் வகையில் வார்த்தை பிரயோகங்கள் கையாளப்பட்டிருப்பது உள்ளபடியே வேதனைக்குரியது.

சஹாபாக்கள் தொழுகையை பாழடித்தார்களா?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சஹாபாக்களை மட்டம் தட்டும் ஒரு நூலில், நபி[ஸல்] அவர்களின் காலத்திற்கு பின்னால் சஹாபாக்கள் தொழுகையை பாழடித்துவிட்டார்கள் என்று கூறி அதற்கு சான்றாக அனஸ்[ரலி] அவர்கள் சம்மந்தப்பட்ட இரு ஹதீஸ்களை வெளியிட்டுள்ளார்கள்.
 • கைலான் அறிவித்தார். 'நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தவற்றில் எதனையும் (இன்று) என்னால் காண முடியவில்லை' என்று அனஸ்(ரலி) குறிப்பிட்டார்கள். 'தொழுகை இருக்கிறதே' என்று அவர்களிடம் கேட்கப் பட்டது. 'அதில் கூட செய்வதையெல்லாம் நீங்கள் (கூடக் குறைய) செய்து விடவில்லையோ? எனத் திருப்பிக் கேட்டார்கள்.

ஆதாரம்; புஹாரி எண் 529

 • ஸுஹ்ரீ அறிவித்தார். அனஸ் இப்னு மாலிக்(ரலி) 'டமாஸ்கஸ்' நகரிலிருக்கும்போது நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் அழுது கொண்டிருந்தனர். 'ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் கண்டவைகளில் இந்தத் தொழுகையைத் தவிர வேறு எதனையும் என்னால் (இன்றைய சமூகத்தில்) காண முடியவில்லை. அந்தத் தொழுகையும் கூட பாழ்படுத்தப் பட்ட நிலையிலுள்ளது' என அனஸ்(ரலி) கூறினார்.

ஆதாரம்;புஹாரி எண் 530

நபித்தோழர்கள் தொழுகையை பாழடித்துவிட்டார்கள் என்பதற்கு சான்றாக வைத்த இரு ஹதீஸ்களில் இரண்டவாது ஹதீஸில், தொழுகையை பாழடித்தது எந்த சமூகம் என்று தெளிவாக விளங்குகிறது. அனஸ்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்கள் மரணத்திற்கு பின்னால் வாழ்ந்த மக்களிடையே 'நபி[ஸல்] அவர்கள் காலத்திய நடைமுறைகள் இல்லாமையை குறிப்பிடும்போது, தொழுகையும் பாழடிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். நபி[ஸல்] அவர்கள் காலத்திற்கு பின்னால் வாழ்ந்த சமூகம் அதிலும் குறிப்பாக டமாஸ்கஸில் வாழ்ந்த சமூகத்தினர் முழுக்க முழுக்க நபித்தோழர்கள் என்று நிரூபிக்கமுடியுமா? நபித்தோழர்கள் சிலர் இருந்திருக்கலாம். ஆக, அடுத்த தலைமுறையினர் செய்த தவறை சகாபாக்களோடு முடிச்சுப்போட்டு 'பார்த்தீர்களா நபித்தோழர்கள் செய்த வேலையை' என்று கூறுவது, அமல்களே வாழ்க்கையாக கொண்ட அந்த நல்லடியார்களை இழிவுபடுத்துவதல்லவா? மேலும் சில மஸாயில்களில் மாறு செய்துவிட்டார்கள் என்று சில நபித்தோழர்கள் பெயரை குறிப்பிட்டு சொல்லும் அந்த நூலாசிரியர், இதில் சஹாபாக்கள் தொழுகையை பாழடித்தார்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்வதன் மூலம் , நபி[ஸல்] அவர்கள் காலத்திற்கு பின்னால் வாழ்ந்த நபித்தோழர்கள் அனைவரையும் இழிவுபடுத்துவதல்லவா இது? மேலும், உமர்[ரலி] அவர்கள் ஆட்சிக்காலத்தில் மக்கள் 20 ரக்அத்துகள் தராவீ ஹ தொழுதார்கள் என்று மாற்று கருத்துடையவர்கள் எடுத்துவைத்தபோது, மக்கள் செய்தால் அதற்கு எப்படி உமர்[ரலி] பொறுப்பாக முடியும் என்று மறுப்புசொன்னவர்கள், இன்று நபி[ஸல்] அவர்களுக்கு பின்னால் வாழ்ந்த சமூகத்தில் யாரோ செய்த செயலுக்கு அன்றைய காலத்தில் வாழ்ந்த சஹாபாக்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்று சிந்திக்க மறந்ததேன்..? மேலும் இப்படி ஒரு நிலை உள்ளதே என்று வருந்தும் அனஸ்[ரலி] அவர்களும் ஒரு சகாபிதானே! ஆக, கண்பார்வையில்லா நிலையிலும் கடமையை செய்யும் அளவுக்கு சஹாபாக்கள் அமல்களில் கவனமுடையவர்கள். அப்படிப்பட்ட அந்த மேதைகளை அமல்களை பெயரளவுக்கு செய்துவரும் நாம் 'அமல்களை பாழாக்க்கியவர்கள்' என்று விமர்சிப்பது வேடிக்கையானது வியப்பிற்குரியது!

புதன், 16 செப்டம்பர், 2009

இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசுவதை தடுத்தார்களா இப்னு உமர்[ரலி]..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
இஹ்ராம் அணிந்த பின் நறுமணம் பூசக்கூடாது என்பது அனைவரும் அறிந்த விஷயமே! ஆனால் இஹ்ராம் அணிவதற்கு முன்பாக நறுமணம் பூசுவதற்கு எந்த தடையும் இல்லாத நிலையில், இப்னு உமர்[ரலி] அவர்கள் 'இஹ்ராமுக்கு முன்னால் நறுமணம் பூசுவது கூடாது என்று தீர்ப்பளித்து வந்தார்கள் என்று எழுதிவிட்டு அதற்கான எந்த ஆதாரத்தையும் முன் வைக்காமல் , சகாபாக்களை மட்டம் தட்டும் ஒரு நூலில் குறிப்பிட்டுவிட்டு, அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் இப்னு உமர்[ரலி] அவர்களின் நிலைப்பாட்டை மறுக்கும் மூன்று ஹதீஸ்களை குறிப்பிட்டுள்ளார்கள். அதில் ஒன்று கீழே;

("நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை" என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறியபோது) 'அல்லாஹ் அப்துர் ரஹ்மானின் தந்தைக்கு ரஹ்மத் செய்வானாக! நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப் பொருட்களைப் பூசுவேன். அவர்கள் தங்களின் மனைவியருடன் இரவு தங்கிவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து நறுமணம் கமழும்' என ஆயிஷா(ரலி) கூறினார்" என முஹம்மத் இப்னு முன்தஷிர் அறிவித்தார்.

ஆதாரம்;புஹாரி எண் 267

இந்த பொன்மொழியை கவனமாக படியுங்கள். இப்னு உமர்[ரலி] அவர்கள் இஹ்ராமுக்கு முன்னால் நறுமணம் பூசக்கூடாது என்று யாரையேனும் தடுத்ததாக அல்லது அப்படிப்பட்ட கேள்விக்கு தீர்ப்பளித்ததாக இருக்கிறதா? இல்லை. மாறாக, ("நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை"
என்று தன்னளவில் சொல்கிறார்கள். இது எப்படி மார்க்கத்திற்கு முரணாகும்..? மார்க்கம் அனுமதித்த ஒரு பொருளை தனக்கு விருப்பமில்லை என்பதால் தவிர்ந்து கொள்வது மார்க்க அடிப்படையில் ஹராமா? என்பதை சகாபாக்களை மட்டம் தட்டுபவர்கள் உரிய சான்றுகளுடன் முன்வைப்பார்களா?

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

படைக்களத்திலும் பாசத்தை பொழிந்தவர்!

பத்ர் போரின் போது நபி[ஸல்] அவர்கள் முஸ்லிம்களின் படையை அணிவகுத்து நிற்கச்செய்தார்கள். படையினரை சரிசெய்வதற்காக ஒரு குச்சியை எடுத்து, வரிசையில் சரியாக நிற்காத ஸவ்தா இப்னு கஸிய்யா[ரலி] அவர்களின் வயிற்றில் குச்சியால் லேசாக குத்தி சரியாக நிற்கும்படி பணித்தார்கள். அப்போது ஸவ்தா இப்னு கஸிய்யா[ரலி] அவர்கள், இறைத்தூதரே! எனக்கு நீங்கள் துன்பம் தந்துவிட்டீர்கள்! எனவே நான் அதற்கு பரிகாரம் காண நாடுகிறேன் என்றார்கள். உடனே நபி[ஸல்] அவர்கள் தனது வயிற்றைக்காட்டிபரிகாரம் தேடிக்கொள்ளுங்கள் என்றார்கள். உடனே ஸவ்தா இப்னு கஸிய்யா[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களை கட்டியணைத்து அவர்களின் வயிற்றில் முத்தமிட்டார்கள். இதைக்கண்ட நபி[ஸல்] அவர்கள், இப்படி செய்ய உம்மை தூண்டியது எது? என்று வினவினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதரே! இன்றைய நிலையை நீங்கள் அறிவீர்கள். எனவே உங்களின் தோலுடன் இணைந்து பிரிவதையே நான் விரும்பினேன் என்று ஸவ்தா இப்னு கஸிய்யா[ரலி] அவர்கள் கூறினார்கள். நபி[ஸல்] அவர்கள் ஸவ்தா இப்னு கஸிய்யா[ரலி] அவர்களுக்காக துஆ செய்தார்கள்.

ஆதாரம்; தப்ரானி
பத்ர் களத்தில் முஸ்லீம் அணியினர் வெற்றி அல்லது வீரமரணம் என்ற இரண்டில் ஒன்றை எதிர்பார்த்தவர்களாக நின்ற நேரத்தில், ஒரு வேளை மரணம் நம்மை தழுவும் நிலை வரலாம் . எனவே நம்முடைய இறப்பிற்கு முன்பாக நம் உயிரினும் மேலான இறைத்தூதர் அவர்களின் திருமேனியை ஆரத்தழுவி நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்வோம் என்று ஸவ்தா இப்னு கஸியா[ரலி] அவர்கள் என்னி, நபி[ஸல்] அவர்களை ஆரத்தழுவி முத்தமிடுகிறார்கள் எனில், தங்களின் உயிர் இந்த பத்ர் களத்தில் போவதை பற்றி அவர்களுக்கு கவலையில்லை. தங்களின் உயிரினும் மேலான நபியை பிரிவது குறித்தே அங்கே சிந்தித்தார்கள் என்பதை பார்க்கும் போது அந்த தியாக சீலர்களின் வாழ்க்கை உள்ளபடியே நம்மை மெய் சிலிர்க்கச்செய்கிறது.

திங்கள், 14 செப்டம்பர், 2009

சஹாபாக்கள் ஹதீஸ்களுக்கு முரணான சட்டத்தை சொல்பவர்களா?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
'ஒருவர் தம் மனைவியுடன் உறவு கொள்ளும்போது இந்திரியம் வெளியாகாமலிருந்தால் அவரின் மீது குளிப்புக் கடமையாகுமா?' என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'தொழுகைக்குச் செய்வது போன்ற உளூவைச் செய்து கொள்ள வேண்டும்; தம் உறுப்பைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் நபி(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்' என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) பதிலளித்தார். மேலும், இது விஷயமாக அலீ இப்னு அபீ தாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம், தல்ஹா இப்னு உபைதில்லாஹ், உபை இப்னு கஅப்(ரலி) ஆகிய நபித்தோழர்களிடம் கேட்டேன். அவர்களும் இவ்வாறுதான் கூறினார்கள். இவ்வாறே நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ அய்யூப் அல் அன்ஸாரி(ரலி) கேட்டதாக உர்வா கூறினார்" என ஜைத் இப்னு காலித் அல் ஜுஹைனி(ரலி) அறிவித்தார்.ஆதாரம்;புஹாரி எண் 292

நபித்தோழர்கள் தவறிழைக்கக்கூடியவர்கள்; அவர்கள் பல்வேறு சட்டங்களில் ஹதீஸுக்கு மாற்றமான கருத்தை சொல்லியிருக்கிறார்கள் என்று கூறும் ஒரு சிலர், மேற்கண்ட ஹதீஸை எடுத்துவைத்து, பார்த்தீர்களா! உடலுறவு கொண்டால் குளிப்பு கடமை என்று சாமான்யர்கள் கூட வெளங்கி வச்சுருக்கிறோம். ஆனா உஸ்மான் என்ன சொல்றாரு? ஒளு செஞ்சா போதும்கிராரு! அப்ப சஹாபாக்களை பின்பற்ருறதா இருந்தா இத ஏத்துக்கிருவீகளா? என்று சிலர் விமர்சிப்பதுண்டு.[சகாபாக்களை பின்பற்றுவதா இல்லையா? என்பது தனி விஷயம்] இந்த ஹதீஸை சொல்லும் இவர்கள் பாதியை சொல்லிவிட்டு மீதியை மறைத்து சகாபாக்கள் மீது தவறான தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறார்கள். இந்த சட்டத்தை சொன்ன உஸ்மான்[ரலி]] அவர்கள்அதை தனது சொந்த கருத்தாக சொல்லவில்லை. சொல்லிவிட்டு அதிலிருந்து திசைதிருப்ப சொந்த வியாக்கியானங்களை வாரிக்கொட்டவில்லை. மாறாக 'இதை நபி[ஸல்] அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்' என்று சொல்வதன் மூலம் இது உஸ்மான்[ரலி] அவர்களின் கருத்தல்ல. மாறாக நபி[ஸல்] அவர்களின் கருத்து என்பதை விளங்கிக்கொள்ளலாம். மேலும், இதே கருத்தை உஸ்மான்[ரலி] அவர்கள் மட்டுமல்ல. அலீ இப்னு அபீ தாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம், தல்ஹா இப்னு உபைதில்லாஹ், உபை இப்னு கஅப்(ரலி) அபூ அய்யூப் அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர்களும் உஸ்மான்[ரலி] அவர்கள் சொன்ன கருத்தையே சொன்னதாக இதே ஹதீஸ் கூறுகிறது. அப்படியாயின், இத்துணை சகாபாக்களும் ஹதீஸுக்கு முரணானவர்களா? எனவே, சஹாபாக்கள் ஒரு மஷாயில் விசயத்தில் ஒரு கருத்தை சொல்கிறார்கள் எனில், தனது கருத்தாக சொல்கிறார்களா? அல்லது நபி[ஸல்] அவர்களின் கருத்தாக சொல்கிறார்களா? எந்த காலகட்டத்தில் இந்த கருத்தை சொன்னார்கள்? என்றெல்லாம் பார்க்காமல், மேலோட்டமாக பாதி ஹதீஸை வைத்து சஹாபாக்கள் தவறான சட்டத்தை சொன்னவர்கள் என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முனைவது, அந்த நல்லறத்தோழர்களுக்கு செய்யும் துரோகமாகும்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

இறைவனின் எதிரியை வாளுக்கு இரையாக்கிய இளைஞர்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்கள்;
பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்றிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் பார்த்தேன். என்னருகே (இரண்டு பக்கங்களிலும்) இளவயதுடைய அன்சாரிச் சிறுவர்கள் இருவர் நின்றிருந்தார்கள். அப்போது, 'அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா' என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிச் கண் சாடையிட்டு, 'என் பெரிய தந்தையே! நீங்கள் ஆபூ ஜஹ்லை அறிவீர்களா?' என்று கேட்டார். நான், 'ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!" என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர், 'அவன் இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனுடைய உடலை என்னுடைய உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்)" என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, 'இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!" என்று கூறினேன். உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்து போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் யார் அவனைக் கொன்றது?' என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொரு வரும், 'நானே (அவனைக் கொன்றேன்)" என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா?' என்று கேட்டார்கள். இருவரும், 'இல்லை" என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்துவிட்டு, 'நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் இப்னு அம்ர்டைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) 'அபூ ஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருள்கள் முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹுக்கு உரியவை" அவர்களும் முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹ்(ரலி) அவர்களும் ஆவர்.

ஆதாரம்;புஹாரி எண் 3141
இந்த பொன்மொழியில் முஆத் என்ற பெயருடைய இரு சிறுவர்கள்[வேறு அறிவிப்புகளில் இளைஞர்கள்] அபூ ஜஹ்ல், அல்லாஹ்வின் தூதரை திட்டுகிறான் என்பதையறிந்து அவனை அழிப்பதற்காக அல்லாஹ்வின் மீது சபதமேற்று அதை பத்ர்களத்தில் நிறைவேற்றுகிறார்கள் என்றால், இந்த இளைஞர்கள் எந்த அளவுக்கு இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது நேசம் வைத்துள்ளார்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம். ஆனால், இன்றைய இளைஞர்களில் ஒரு சாரார் உடல் மண்ணுக்கு-உயிர் ரஜினிக்கு என்றும் , ஒரு சாரார் அரசியல்வாதிகள் மீது நேசம் கொண்டு அவர்கள் சொல்வதே வேதவாக்கு என்றும் அலைவதை பார்க்கிறோம். ஒரு முஸ்லிம் இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது மற்ற எவரையும் விட ஏன் தன் உயிரையும் விட நேசம் கொள்ளாதவரை உண்மையான ஈமான் கொண்டவர்கள் ஆக முடியாது என்று அந்த இரு இளைஞர்களும் உணர்ந்ததால்தான் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பலம்வாய்ந்த எதிரியை வெட்டி வீழ்த்தும் வலிமையை பெற்றார்கள். அந்த இளைஞர்களைப்போல் நாமும் இறைத்தூதரை நேசிப்போம். இம்மை-மறுமை வெற்றி பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

சனி, 12 செப்டம்பர், 2009

இறைவழியில் தன்மகனை இழந்த ஒருதாயின் பொறுமை!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்;
ஹாரிஸா இப்னு சுராக்கா அல்அன்சாரி(ரலி) அவர்கள் பத்ருப் போரில் யாரோ எறிந்த அம்பு தாக்கி இறந்தார்கள். இந்நிலையில் அவரின் தாயார் இறைத்தூதர் அவர்களே! (என் மகன்) ஹாரிஸாவுக்கு என் இதயத்தில் உள்ள இடத்தைத் தாங்கள் அறிவீர்கள். அவர் (இப்போது) சொர்க்கத்தில் இருந்தால் அவருக்காக நான் அழப்போவதில்லை. அவ்வாறில்லையேல், நான் என்ன செய்வேன் என்பதைத் தாங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்' என்று கூறினார். அப்போது அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இழப்பால் துடிக்கிறாயா? அதுவென்ன, சொர்க்கம் ஒன்றுதான் உள்ளதா? சொர்க்கங்களின் படித்தரங்)கள் நிறைய உள்ளன. உன் மகன் 'ஃபிர்தவ்ஸ்' எனும் உயர்ந்த சொர்க்கத்தில் உள்ளார்' என்று கூறினார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 6567

இந்த பொன்மொழியில், பத்ர் போரில் ஷஹீதான ஹாரிஸா[ரலி] அவர்களின் தாயார் அவர்கள், தன் மகன் போரில் கொல்லப்பட்டு விட்டாரே என்பதற்காக கவலைப்படவில்லை. மாறாக தன்மகனின் மறுமை நிலை குறித்து கவலை கொள்கிறார்கள். சுவனத்தில் மிக உயர்வான படித்தரமான 'ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில்' ஹாரிஸா[ரலி] இருக்கிறார்கள் என்பதை நபி[ஸல்] அவர்களின் திருவாயால் கேட்டபின்பே அவர்கள் அமைதியடைகிறார்கள். தன்மகனின் உயிரைவிட மகனின் மறுமை வாழ்விற்கு முக்கியத்துவம் அளித்த ஹாரிஸா[ரலி] அவர்களின் அன்னையையும்-இன்றைய நம் தாய்மார்களையும் ஒப்பிட்டுப்பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுகளை காணலாம். பிள்ளையை கொடுத்த இறைவன் அந்த பிள்ளையின் உயிரை எடுத்துவிட்டால், அதுகுறித்து பொறுமை கொள்ளாமல் அல்லாஹ்வின் தீர்ப்பை பொருந்திக்கொள்ளாமல் யா அல்லாஹ்! உனக்கு என் பிள்ளைதான் கண்ணுக்கு தெரிந்ததா..? என்று ஒப்பாரிவைத்து கூப்பாடு போடும் தாய்மார்களை நாம் பார்க்கிறோம். ஆனால் ஹாரிஸா[ரலி] அவர்களின் தாயார் அவர்கள் தான் மிகவும் நேசித்த மகனை பெரும்பாலும் மரணத்திற்கே சாத்தியமுள்ள போருக்கு அனுப்பிவைத்து, அந்த போரில் தன்மகன் கொள்ளப்பட்டபின்னும் அதுகுறித்து கவலைகொள்ளாமல் தன்மகனின் மறுமைநிலை குறித்தே கவலைகொன்டார்கள் எனில், அந்த தாயின் உள்ளத்தை அல்லாஹ் எந்த அளவுக்கு விசாலாமக்கியுள்ளான் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ளமுடியும்.

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

பத்ர் சிங்கங்களுக்கு நாடியதை செய்துகொள்ள அருளாளன் தந்த அனுமதி!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அலீஇப்னு அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூ மர்ஸத் (ம்னாஸ் இப்னு ஹுஸைன்) அவர்களையும், ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களையும், 'நீங்கள் 'ரவ்ளத்து காக்' என்னுமிடம் வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகச் சிவிகையில் இணைவைப்பவர்களில் ஒருத்தி இருக்கிறாள். இணைவைப்பவர்(களின் தலைவர்)களுக்கு ஹாதிப் இப்னு அபீ பல்தஆ அனுப்பியுள்ள (நம்முடைய ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும்; (அவளிடமிருந்து கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)" என்று கூறினார்கள். (பிறகு நாங்கள் புறப்பட்டுப் போனோம்.) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க, அவளை நாங்கள் அடைந்தோம். அவளிடம், 'கடிதம் (எங்கே? அதை எடு)" என்று கேட்டோம். அவள், 'எம்மிடம் கடிதம் எதுவுமில்லை" என்று பதிலளித்தாள். (அவள் அமர்ந்திருந்த) ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். எந்தக் கடிதத்தையும் நாங்கள் காணவில்லை. அப்போது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். ஒன்று, நீயாக கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை(ச் சோதிப்பதற்காக உன்னுடைய ஆடையை) நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும்" என்று நாங்கள் சொன்னோம். விடாப் பிடியாக (நாங்கள்) இருப்பதை அவள் கண்டபோது, (கூந்தல் நீண்டு தொங்கும்) தன்னுடைய இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அ(ந்தக் கடிதத்)தை வெளியில் எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அப்போது உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹாதிப் இப்னு அபீ பல்தஆ) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; அவரின் கழுத்தைக் கொய்துவிடுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஹாதிப் அவர்களை நோக்கி ), 'ஏன் இப்படிச் செய்தீர்கள்!" என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாதவனாக நடந்து கொள்ள வேண்டுமென்பது என் நோக்கமல்ல. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்குக் கிடைத்து, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும், என் செல்வத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களின் மனைவி மக்களையும், அவர்களின் செல்வத்தையும் எவரின் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் இருக்கின்றனர்" என்று கூறினார். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'இவர் உண்மை கூறினார். இவரைப் பற்றி நல்லதையே சொல்லுங்கள்" என்று (தோழர்களைப் பார்த்துக்) கூறினார்கள். அப்போது உமர்(ரலி), 'இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்" என்று (மீண்டும்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவர் பத்ருப் போரில் பங்கெடுத்தவர் அல்லவா? பத்ரில் பங்கெடுத்தவர்களை நோக்கி அல்லாஹ், 'நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது'... அல்லது 'உங்கள் பாவங்களை நான் மன்னித்து விட்டேன்'... என்று கூறி விட்டிருக்கலாம் அல்லவா?' என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) தம் கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று கூறினார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 3983
இந்த பொன்மொழியில், நபி[ஸல்] அவர்களின் ரகசியங்களை மக்கத்து இணைவைப்பாளர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் தகவல் அனுப்பிய குற்றத்திற்காக ஹாதிப்[ரலி] அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர். அதனால்தான் உமர்[ரலி] அவர்கள் இறைத்தூதரே! எனக்கு அனுமதியளியுங்கள் இவரது தலையை நான் கொய்து விடுகிறேன் என்று கூறினார்கள். ஆனாலும் ஹாதிப்[ரலி] அவர்கள், பத்ர் போரில் பங்கெடுத்தவர் என்பதால் அவருக்கு நபி[ஸல்] அவர்கள் மன்னிப்பளிக்கிறார்கள் எனில், குறைவான எண்ணிக்கையில் இருந்தபோதும், நிறைவான ஆயுதமோ தளவாடங்களோ இல்லாத நிலையில் தங்கள் படையை விட மூன்று மடங்கு அதிகமான எதிரியின் படையை, ஏக இறைவனுக்காக எதிர்கொண்டு தீரமுடன் போராடிய மாவீரர்கள் இந்த பத்ரியீன்கள். எனவேதான் வல்ல ரஹ்மான்,
பத்ரில் பங்கெடுத்தவர்களை நோக்கி அல்லாஹ், 'நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது'... அல்லது 'உங்கள் பாவங்களை நான் மன்னித்து விட்டேன்'... என்று கூறுகிறான். இதன் மூலம் அந்த மாவீரர்களின் தியாகத்தை இறைவன் பொருந்திக்கொண்டதை புரிந்து கொள்ளமுடிகிறது.மேலும், பத்ரில் பங்கெடுத்த ஸகாபிகள் என்ன தவறு செய்திருந்தாலும் அதை விமர்சிக்கும் உரிமை எந்த முஃமீனுக்கும் இல்லை எனபதையும் புரிந்துகொள்ளமுடிகிறது.

வியாழன், 10 செப்டம்பர், 2009

மார்க்க சட்டத்திற்காக மனைவியை பிரிந்தவர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
'நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, 'நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்' என்றார். அதற்கு நான் 'நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே' என்று கூறினேன். உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?' என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாகரத்து செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்" என உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 88

ஒரு ஆணும் பெண்ணும் முறையே வெவ்வேறு பெற்றோருக்கு பிறந்திருந்தாலும், அவ்விருவரும் ஒரு செவிலித்தாயிடம் பாலருந்தியிருந்தால் அவ்விருவரும் சகோதர-சகோதரியாகிவிடுவர். அவ்விருவரும் திருமணம் செய்துகொள்ள இஸ்லாத்தில் அனுமதியில்லை. உக்பா இப்னு ஹாரிஸ் [ரலி] அவர்களும், அவர் மணந்துள்ள அவரது மனைவியும் சிறு பிராயத்தில் ஒரே செவிலித்தாயிடம் பாலருந்தியவர்கள். இருப்பினும் அந்த விஷயம் உக்பா[ரலி] அவர்கள் திருமணம் செய்யும்வரை அவர்களுக்கு தெரியவில்லை. பின்னாளில் அவ்விருவருக்கும் பாலூட்டிய அந்த செவிலித்தாயின் மூலமாக அறிந்தபோது, கல்யாணம் முடிந்துவிட்டது இனிமேல் என்ன செய்யமுடியும் என்று வாளாவிருக்கவில்லை. மாறாக இதுபற்றிய மார்க்கத்தீர்ப்பு அறிய மக்காவிலிருந்து பயணமாகி மதீனா நோக்கி மாநபி[ஸல்] அவர்களிடம் வந்து வினவியபோது, (நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)? என்று நபியவர்கள் கூறிய உடனே தனது மனைவியை மணவிலக்கு அளிக்கிறார் எனில், நன்றாக சிந்திக்கவேண்டும். அவ்விரு தம்பதிகளிடையே எவ்வித மன கசப்புமில்லை. ஆனாலும், மார்க்கம் தடுத்த முறையில் தம்முடைய திருமணம் அமைந்துவிட்டதால் உடனடியாக அந்த செயலிலிருந்து விடுதலை பெறுகிறார்கள் எனில், இன்றைய திருமணத்தில் மார்க்கத்திற்கு புறம்பான வரதட்சனை தொடங்கி எத்துணையோ சடங்கு சம்பிரதாயங்கள் அரங்கேறுகிறதே! அதை மார்க்கத்தை கற்ற அறிஞர் பெருமக்களும் கண்டுகொள்ளாமல் 'அல்லாஹும்ம அல்லிஃப் பைன' ஓதி அங்கீகரிக்கிறார்களே! இப்போது சொல்லுங்கள் யார் மேன்மக்கள்..? இறைச்சட்டத்திற்கு மாற்றம் என்றவுடன் அதற்கு பரிகாரம் தேடிய சகாபாக்களா? அல்லது மஹர்கொடுக்க சொன்ன மறையோனுக்கு மாற்றமாக வரதட்சனை வாங்கும் நாமா? சிந்திப்போம்...திருந்துவோம்.

புதன், 9 செப்டம்பர், 2009

ஹதீஸின் விஷயத்தில் கவனம் செலுத்திய மேதை!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
'(தந்தையே! உங்களைப் போன்று நபி(ஸல்) அவர்களுடன் நட்புகொண்ட) இன்னின்னாரெல்லாம் நபி(ஸல்) அவர்கள் பற்றி (அதிகமாக) அறிவிப்பது போல், தாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான் கேள்விப்பட்ட தேயில்லையே! ஏன்?' என்று என்னுடைய தந்தை ஸுபைர்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'இதோ பார்! நான் (பெரும்பாலும்) நபி(ஸல்) அவர்களைப் பிரிந்திருந்ததே இல்லை. ஆயினும் 'என் மீது இட்டுக் கட்டிச் செல்பவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்' (எனவேதான் நான் அதிகமாக அறிவிக்கவில்லை)' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்.

ஆதாரம்; புஹாரி எண் 107

ஸுபைர்[ரலி] அவர்கள் அல்லாஹ்வின் தூதரின் நெருக்கமான தோழர்களில் ஒருவர். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் பொன்மொழிகளை அதிகம் செவியுறும் வாய்ப்பை பெற்றவர். இருப்பினும் குறைவான செய்திகளையே அறிவிக்கிறார்கள். அதுபற்றி அவரது மகனார் அப்துல்லா இப்னு ஸுபைர்[ரலி] அவர்கள் வினவியபோது, என் மீது இட்டுக்கட்டி சொல்பவர்கள் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும் என்று நபியவர்கள் சொன்னதுதான் நான் செய்திகளை குறைவாக அறிவிப்பதற்கு காரணம் என்கிறார்கள். நன்றாக கவனிக்கவேண்டும். ஸுபைர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்கள் மீது பொய்யுரைக்கமாட்டார்கள். இருப்பினும் நபி[ஸல்] அவர்கள் சம்மந்தமாக நாம் சொல்லும் செய்தியில் ஏதேனும் ஒரு பிழை ஏற்பட்டு அதற்காக நாம் மறுமையில் தண்டிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சுகிறார்கள் எனில், இன்று பார்க்கிறோம் சர்வ சாதரணமாக நபிமொழிகளை பலமானது என்றும், பலவீனமானது என்றும், பலமானதுதான் ஆனாலும் அறிவுக்கு பொருந்தவில்லை என்றும், பலமானதுதான் ஆனாலும் குர்ஆனோடு மோதுகிறது எனவே இது 'தள்ளுபடி' என்றும் நபி[ஸல்] அவர்களின் பொன்மொழிகள் போதிய ஞானம் இல்லாதவர்களால் கையாளப்படுவதை காண்கிறோம். ஆனால், நபித்தோழராக இருந்தும் இறைத்தூதரின் பொன்மொழி விசயத்தில் அதிகப்படியான கவனம் செலுத்திய ஸுபைர்[ரலி] அவர்களின் வாழ்க்கையிலிருந்து 'எடுத்தேன்-கவிழ்த்தேன்' என்று நபிமொழியை கையாள்பவர்கள் பாடம் படிக்கவேண்டும்.

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

இம்மை செல்வத்தை மறுமையில் சேமிப்பாக்கியவர்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்;

அபூ தல்ஹா(ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ன்னபவி)க்கு எதிரில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம். 'நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்" என்ற (திருக்குர்ஆன் 03:92) இறைவசனம் அருளப்பட்டதும். அபூ தல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹு தஆலா, 'நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்' எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் என்னுடைய மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே 'இறைத்தூதர் அவர்களே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுததிக் கொள்ளுங்கள்' எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் பொறுத்தமாகக் கருதுகிறேன்' எனக் கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! நான் அவ்வாறே செய்கிறேன்!' எனக் கூறிவிட்டு, அத் தோட்டத்தைத் தம் நெருங்கிய உறவினருக்கும் தம் தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளும் பங்கிட்டுவிட்டார்.

ஆதாரம்;புஹாரிஎண் 1461

இந்த பொன்மொழியில், 'நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்' என்ற வசனம் இறங்கிய மாத்திரமே அபூதல்ஹா[ரலி] அவர்கள் தான் மிகவும் நேசிக்கும், நபி[ஸல்] அவர்கள் வாயாலேயே அதிகம் லாபம் தரக்கூடிய செல்வம் என்று சிலாகித்து சொல்லப்பட்ட தோட்டத்தை இறைவழியில் தானமாக வழங்குகிறார்கள் எனில், இம்மையின் செல்வத்தை இழந்தால்தான் மறுமையில் இறைவனின் நன்மையை பெறமுடியும் என்றால் அதற்காக செல்வத்தை இழப்போமே தவிர, மாறாக இறைவனின் நன்மையை இழந்துவிடமாட்டோம் என்று அபூதல்ஹா[ரலி] அவர்கள் வாழ்த்து காட்டிய வரலாற்றை பார்க்கிறோம். ஆனால் இன்று இறைவனால் செல்வம் வழங்கப்பட்ட நம்மில் பலர் அந்த செல்வம் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு ஜக்காத் கொடுக்கக்கூட மனமில்லாமல் செல்வத்தை பதுக்குவதை பார்க்கிறோம். இப்படிப்பட்டவர்கள் அபூதல்ஹா[ரலி] அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை பெறவேண்டும்.

திங்கள், 7 செப்டம்பர், 2009

இவர்கள்,ஆளை அல்ல; ஆதாரத்தையே அடிப்படையாக கொண்டவர்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்;

நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூ மூஸா(ரலி) அவர்கள் வந்து, 'நான் உமர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எனவே, நான் திரும்பிவிட்டேன். பின்பு உமர்(ரலி) அவர்கள் (உங்களை நான் வரச்சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை' என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், '(தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எனவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பிவிடட்டும்' என்று கூறினார்கள்' என்றேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு நபியவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வரவேண்டும்' என்றார்கள். இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?' என்று கேட்டார்கள். அதற்கு (அங்கிருந்த) உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்' என்றார்கள். அங்கு நான்தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூ மூஸா(ரலி) அவர்களுடன் சென்று 'நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்' என்று உமர்(ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்'

ஆதாரம்;புஹாரி எண் 6245
இந்த செய்தியில் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவெனில், நபி[ஸல்] அவர்கள் சொன்னதாக ஒரு செய்தியை அபூமூஸா[ரலி] அவர்கள் சொல்கிறார்கள். அபூமூஸா[ரலி] அவர்கள் யார்.? ஒரு மூத்த நபித்தோழர். அப்படியிருந்தும் உமர்[ரலி] அவர்கள், நீங்கள் சொன்ன இந்த செய்தியை நபி[ஸல்] அவர்கள் சொன்னதற்கான சான்றை சமர்ப்பிக்கவேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள் எனில், மார்க்கத்தில் யாரேனும் ஒரு செய்தியை சொன்னால் அந்த நபர் மீது கொண்ட அபிமானத்தால் அப்படியே நம்பிவிடாமல் அதற்குரிய சான்றை சம்மந்தப்பட்டவரிடம் கேட்டுப்பெறவேண்டும். ஆனால் நடைமுறையில் என்ன நிலை..? நாமாக ஆளுக்கொரு அறிஞர் மீது அபிமானம்கொள்வது; பின்பு அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்று நம்புவதோடு மட்டுமல்லாமல், அவர் சொல்வது மட்டுமே சரியாக இருக்குமென்று நம்புவது. இதனால்தானே நமக்குள்ளே இத்தனை பிரிவுகள்.? எனவே , சொல்லும் ஆளைவைத்து எதையும் எடைபோடாமல் [சகாபாக்களைப்போல்]சொல்லும் ஆதாரத்தை வைத்து எடைபோட முன்வரவேண்டும்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

நபித்தோழர்கள் மீது பொய்யுரைத்தால்...?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார்கள்;


(கூஃபாவில் அதிகாரியாக இருந்த) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) மீது கூபா வாசிகளில் சிலர் உமர்(ரலி) அவர்களிடம் புகார் கூறினார்கள். அவர் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்பதும் அவர்களின் புகார்களில் ஒன்றாக இருந்தது. உடனே உமர்(ரலி) அவரை நீக்கிவிட்டு அம்மார்(ரலி)ஜ அதிகாரியாக நியமித்தார்கள். ஸஃதை (மதீனாவுக்கு) வரவழைத்து 'அபூ இஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று கூஃபா வாசிகளில் சிலர் கூறுகின்றனரே! என்று கேட்டார்கள். அதற்கு ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப் படியே தொழுகை நடத்தினேன். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இஷாவுடைய முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுகை நடத்துகிறேன்' என்று பதிலளித்தார்கள். 'உம்மைப் பற்றி நம்முடைய கருத்தும் அதுவே' என்று உமர்(ரலி) கூறினார். அதன்பின்னர் ஒரு நபரை அல்லது சில நபர்களை ஸஃது(ரலி) உடனே

கூஃபாவுக்கு அனுப்பி, ஸஃதைப் பற்றிக் கூஃபா வாசிகளிடம் விசாரிக்கச் சொன்னார்கள். விசாரிக்கச் சென்றவர் ஒரு பள்ளிவாசல் விடாமல் அவரைப் பற்றி விசாரித்தபோது அனைவரும் ஸஃதைப் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள். 'பனூஅபஸ்' கூட்டத்தாரின் பள்ளி வாசலில் விசாரித்தபோது, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த அபூ ஸஃதா எனப்படும் உஸாமா இப்னு கதாதா என்பவர் எழுந்து, 'நீங்கள் விசாரிப்பதால் நான் சொல்கிறேன். ஸஃது அவர்கள் தமது படையிலுள்ளவர்களிடம் எளிமையாக நடப்பதில்லை; (பொருட்களை) சமமாகப் பங்கிடுவதில்லை; தீர்ப்பு வழங்குவதில் நீதியாக நடப்பதில்லை' என்று புகார் கூறினார்.

இதைக் கேட்ட ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மேல் ஆணையாக! மூன்று பிரார்த்தனைகளை (உமக்கெதிராக) நான் செய்யப் போகிறேன்' என்று கூறிவிட்டு, 'இறைவா! உன்னுடைய இந்த அடியார் (அவரின் புகாரில்) பொய்யராகவும் புகழ் விரும்பிப் புகார் கூறுபவராகவும் இருந்தால் அவரின் ஆயுளை அதிகப் படுத்துவாயாக! அவரின் வறுமையையும் அதிகப் படுத்துவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!' என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இதன் பிறகு அந்த மனிதரிடம் எவரேனும் நலம் விசாரித்தால், 'சோதனைக்கு ஆளான முதுபெரும் வயோதிகனாகி விட்டேன். ஸஃதின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்துவிட்டது' எனக் கூறக் கூடியவராகி விட்டார்.
ஜாபிர்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அப்துல் மலிக் இப்னு உமைர் 'அதன் பிறகு நானும் அவரைப் பார்த்திருக்கிறேன்; முதுமையினால் அவரின் புருவங்கள் அவரின் கண்களை மறைத்திருந்தன. பாதைகளில் நடந்து செல்லும் பெண்களின் மீது (பார்வை பறி போனதால்) மோதிக் கொள்வார்; இந்த நிலையில் அவரை பார்த்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டார். ஆதாரம்; புஹாரி எண் 755

ஸஃது இப்னு அபீவக்காஸ்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களால் சொர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட சிறந்த நல்லடியார். அப்படிப்பட்ட ஸஃது[ரலி] அவர்கள் மீது அபாண்டமாக பொய்யுரைத்ததன் விளைவாக தனக்குத்தானே சோதனையை தேடிக்கொண்ட உஸாமா இப்னு கதாதா என்பவரின் நிலையை பார்த்து, சஹாபாக்களை சாதாரணமாக பேசுபவர்களும், அவர்கள் மீது பொய்யுரைப்பவர்களும் தங்களை திருத்திக்கொள்ளவேண்டும். மேலும் சகாபாக்கள் மட்டுமன்றி, எந்த தனி நபரின் மீதும் அபாண்டமான புகார்களை கூறுவதிலிருந்தும் நாம் விலகி நடக்க முன்வரவேண்டும்.

சனி, 5 செப்டம்பர், 2009

இறைவனுக்கு எதிரி எனக்கும் எதிரியே!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
பத்ர் யுத்தத்தின் முடிவில் எழுபது இணைவைப்பாளர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இவர்கள் குறித்து[இவர்களை என்ன செய்யலாம்..?] நபி[ஸல்] அவர்கள் தமது தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். அப்போது அபூபக்கர்[ரலி] அவர்கள், இறைத்தூதரே! இவர்கள் நம் சிறிய தந்தையின் சந்ததிகள். நமது கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.எனவே இவர்களிடம் பிணைத்தொகையை பெற்றுக்கொண்டு இவர்களை விடுவித்துவிடுவோம் . இவர்கள் மூலம் கிடைக்கும் பொருளைக்கொண்டு நாம் போர்கருவிகள் வாங்கலாம்.இறைவன் நாடினால் இவர்கள் பின்னாளில் இஸ்லாத்தை கூட ஏற்கலாம் என்றார்கள். பின்பு நபி[ஸல்] அவர்கள் கத்தாபின் மகனே [உமரே] உமது கருத்து என்ன என்றார்கள். அப்போது உமர்[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்கர்[ரலி] அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. இவர்களை [கைதிகளை] எங்கள் பொறுப்பில் விடுங்கள்..அவர்களின் கழுத்தை நாங்கள் எடுத்துவிடுகிறோம். அலீ[ரலி]யின் உறவினரான அகீலை அலீ[ரலி] இடம் ஒப்படையுங்கள். அகீலின் கழுத்தை அவர் வெட்டட்டும். எனது உறவினர்களை என்னிடம் ஒப்படையுங்கள். அவர்களின் கழுத்தை நான் துண்டிக்கிறேன். ஏனெனில் இவர்கள் இறை நிராகரிப்பின் தலைவர்களாகவும் அதற்கு சொந்தக்காரர்களாகவும் விளங்குபவர்கள் என்று உமர்[ரலி] கூறினார்கள். ஆனால் நபி[ஸல்] அவர்கள் அபூபக்கர்[ரலி] அவர்களின் கருத்தை ஏற்று பிணைத்தொகையை பெற்று கைதிகளை விடுதலை செய்யுமாறு பணித்தார்கள்.

ஆதாரம்; முஸ்லிம்.

இந்த பொன்மொழியை சற்று கவனமாக படித்தோமானால், உறவா அல்லது உயிரான மார்க்கமா என்ற நிலை வரும்போது, தமது ரத்த சொந்தமாகவே இருந்தபோதிலும் அவர்கள் சத்திய மார்க்கத்தின் தடைக்கற்களாக இருந்தவர்கள். அதோடு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக படை திரட்டி வந்தவர்கள். இனைவைப்புக்கு சாட்சியாக திகழ்பவர்கள் எனவே இவர்களின் தலை இந்த மண்ணில் உருள்வதுதான் சிறந்தது என்று சூளுரைத்த உமர்[ரலி] அவர்களின் அந்த வீரம் இந்த புவியும்-வானும் நிலைத்த்திருக்கும் காலமெல்லாம் நல்லோரால் போற்றப்படும் என்பதில் ஐய்யமில்லை.

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

கொடுத்த வாக்குறுதிக்காக தன்னை தியாகம் செய்தவர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்;

என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர்(ரலி) பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றார். அவர் (திரும்பி வந்தவுடன்) 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் இணைவைப்பவர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை; இணைவைப்பவர்களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான். பின்பு உஹுதுப் போரின்போது முஸ்லிம்கள் தோல்வியுற்ற நேரத்தில் அவர், 'இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்" என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார். ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவருக்கெதிரில் வரக்(கண்டு), 'ஸஅத் இப்னு முஆத் அவர்களே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். என் தந்தை நள்ருடைய இறைவன் மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுது மலையிலிருந்து பெறுகிறேன்" என்று கூறினார். ஸஅத்(ரலி) இதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு, 'அவர் செய்த (வீராவேசமான) போரை வர்ணிக்க என்னால் முடியவில்லை, இறைத்தூதர் அவர்களே!" என்று கூறினார். நாங்கள் அவர் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். மேலும், இணைவைப்பவர்கள் அவரின் உடல் உறுப்புகளைச் சிதைத்து விட்டிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டிருக்கக் கண்டோம். அவரின் சகோதரியைத் தவிர வேறெவரும் அவரை (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியவில்லை; அவரின் சகோதரி கூட அவரின் விரல்(நுனி)களை வைத்துத் தான் அவரை அடையாளம் காண முடிந்தது.

"அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களிடையே உள்ளனர்." என்கிற (திருக்குர்ஆன் 33:23) இறைவசனம் இவர் விஷயத்திலும் இவரைப் போன்ற மற்ற உயிர்த் தியாகிகள் விஷயத்திலும் தான் அருளப்பட்டது என்றே நாங்கள் கருதி வந்தோம்.

ஆதாரம்;புஹாரி எண் 2805

இந்த பொன்மொழியில், அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்கள் இறைத்தூதர்[ஸல்] அவர்களிடம், இணைவைப்பவர்களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான் என்று கூறியதோடு அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் உஹதில், இறைவன் மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுது மலையிலிருந்து பெறுகிறேன்" என்று சூளுரைத்து களமிறங்கி அல்லாஹ்வின் பகைவர்களை வேட்டையாடி அதில் தானும் ஷகீதாகி இறைவனிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதின் காரணமாக அல்லாஹ் இந்த நல்லறத்தோழரை கண்ணியப்படுத்தி வசனமே இறக்குகிறான் எனில், இவர்கள்தான் சொர்க்கத்திற்கு பகரமாக தங்களுடைய உயிரை விற்றவர்கள். அல்ஹம்துலில்லாஹ்!

வியாழன், 3 செப்டம்பர், 2009

மூஸா[அலை] அவர்களுக்கு ஹாரூன்[அலை] போன்று நபியிடத்தில் அந்தஸ்துடையவர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக் கொள்வதற்காக மதீனாவில்) அலீ(ரலி) அவர்களை (தாம் திரும்பிவரும் வரை தமக்கு)ப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ(ரலி), 'குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னைவிட்டுச் செல்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மூஸாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு என்னவெனில்), எனக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் இல்லை'' என்று கூறினார்கள்.


ஆதாரம்;புஹாரி எண் 4416


இந்த பொன்மொழியில், எல்லோரும் போரில் பங்கெடுக்க, என்னை மட்டும் பெண்களையும்-குழந்தைகளையும் பாதுகாக்கும் சாதாரணt பணிக்காக விட்டு செல்கிறீர்களா? என்ற ரீதியில் அலீ[ரலி] அவர்கள் ஆதங்கப்பட, அதற்கு நபி[ஸல்] அவர்கள், மூஸா [அலை] அவர்களுக்கு ஹாரூன்[அலை] அவர்கள் இருந்த அந்தஸ்தில் என்னிடத்தில் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா என்று கேட்கிறார்கள். மூஸா[அலை] அவர்களிடத்தில் ஹாரூன்[aஅவர்களுக்கு இருந்த அந்தஸ்த்து என்ன? அல்லாஹ் கூறுகின்றான்;


وَوَاعَدْنَا مُوسَى ثَلاَثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً وَقَالَ مُوسَى لأَخِيهِ هَارُونَ اخْلُفْنِي فِي قَوْمِي وَأَصْلِحْ وَلاَ تَتَّبِعْ سَبِيلَ الْمُفْسِدِينَ
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழமை பெற்றது. அப்போது மூஸா தம் சதோதரர் ஹாரூனை நோக்கி, "நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!" என்று கூறினார்.[7:142 ]மூஸா[அலை] அவர்கள் வேதத்தை பெற அல்லாஹ்வை நாடி சென்ற நேரத்தில் தனது கலீபாவாக எப்படி ஹாரூன்[அலை] அவர்களை நியமனம் செய்தார்களோ, அதுபோன்று தபூக் யுத்தத்திற்கு சென்ற நபி[ஸல்]அவர்கள் மதீனாவில் தனது பிரதிநியாக அலீ[ரலி] அவர்களை நியமித்து, எனக்கு பின்னால் நபியில்லை. அதேநேரத்தில் என்னிடத்தில், மூஸா[அலை]அவர்களுக்கு ஹாரூன்[அலை] அவர்களைப்போல் நீங்கள் அந்தஸ்த்தை பெற்றவர் என்று கூறுகிறார்கள் எனில், அல்லாஹ்வின் தூதர் அவர்களிடத்தில் அலீ[ரலி] அவர்களுக்குரிய மதிப்பையும் கண்ணியத்தையும் இதன்மூலம் புரியமுடிகிறது.

புதன், 2 செப்டம்பர், 2009

இவர் 'எடுப்பார் கைப்பிள்ளை அல்ல' ஏகத்துவ படையின் சேனாதிபதி!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்கள்;
(கைபர் போரின் போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நானை (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப் போகிறேன். அல்லாஹ் அவரின் கரங்களில் வெற்றியை அளிப்பான்" என்று சொன்னார்கள். எனவே, மக்கள் தம்மில் எவரிடம் அது கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கியிருந்தனர். காலையானதும மக்களில் ஒவ்வொருவரும் தன்னிடம் அது கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட வண்ணம் அல்லாஹ்வின் தூதரிடம் சென்றனர். நபி(ஸல்) அவர்கள், 'அலீ இப்னு அபீ தாலிப் எங்கே?' என்று கேட்டார்கள். மக்கள், 'அவருக்குக் கண்வலி, இறைத்தூதர் அவர்களே!" என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி) வந்தவுடன் அவர்களுடைய இரண்டு கண்களிலும் (தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காக (நலத்திற்கு) பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அவர்கள் (வலி நீங்கி) குணமடைந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் நம்மைப் போன்று (ஒரே இறைவனுக்கு கீழ்படிந்தவர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா? என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவர்களின் களத்தில் இறங்கும் வரை நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு (வரும்படி) அழையுங்கள். மேலும், இஸ்லாத்தில் அவர்களின் மீது கடமையாகிற அல்லாஹ்விற்குச் செய்யவேண்டிய கடமைகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியை அளிப்பது (அரபுகளின் அருஞ் செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 3701

அமீருல் முஃமினீன் உஸ்மான்[ரலி] அவர்களை கொன்றவர்களை கைது செய்யும் துணிவு அலீ[ரலி] அவர்களுக்கு இருக்கவில்லை. அலீ[ரலி] ஒரு எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தார் என்றெல்லாம் சிலர் அலீ[ரலி] அவர்களை விமர்சித்ததுண்டு. மேலே உள்ள பொன்மொழியை பாருங்கள். இஸ்லாமிய சேனையின் கொடியை ஒவ்வொருவரும் நம்மிடத்திலே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தந்துவிட மாட்டார்களா என்று ஆசைப்பட்ட நேரத்தில், இஸ்லாமிய சேனையின் சேனாதிபதியாக அலீ[ரலி] அவர்களை நியமித்து அவர்கள் கையில் இஸ்லாமிய கொடியை நபி[ஸல்] அவர்கள் வழங்குகிறார்கள் எனில், அலீ[ரலி] அவர்களின் வீரத்தையும்-சிறப்பையும் புரிந்து கொள்ளலாம். அதோடு, கொடியை பெற்றுக்கொண்ட அலீ[ரலி] அவர்கள், 'நம்மை போன்று முற்றிலும் அல்லாஹ்வுக்கு கீழ்படியும் வரை அவர்களோடு நான் போரிடட்டுமா? என்ன்று கர்ஜித்தார்களே! இது அவர்களின் வீரத்திற்கு எடுத்துக்காட்டல்லவா? ஆக, உஸ்மான்[ரலி] அவர்களை கொலை செய்த பாவிகளை தண்டிப்பதில் அலீ[ரலி] பயந்தவர்கள் அல்ல. மாறாக அன்றைய சூழல் காரணமாக இருக்கலாம்.[அல்லாஹ் அறிந்தவன்] இதை வைத்தது ஒரு மாவீரரை 'எடுப்பார் கைப்பிள்ளை' என்று விமர்சிப்பவர்கள் இறைவனுக்கு அஞ்சிக்கொள்ளட்டும்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

மற்றவர்களுக்கு அள்ளியும் தன் மகனுக்கு கிள்ளியும் கொடுத்த அமீருல்முஃமினீன்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;
(என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) முதன் முதலாக ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்கு (பொதுநிதியிலிருந்து) நான்காண்டுகளுக்கு நான்காயிரம் (திர்ஹம்) தீனார்) கொடுக்க வேண்டுமென நிர்ணயித்தார்கள். (தம் மகனான) எனக்கு மூவாயிரத்து ஐநூறு கொடுக்க வேண்டும் என நிர்ணயித்தார்கள். அவர்களிடம், '(தங்க மகன்) இப்னு உமர் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் ஒருவர் தாமே! நான்காயிரம் கொடுக்காமல் அவருக்கு மட்டும் ஏன் குறைத்து நிர்ணயித்தீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அவரை அழைத்துக் கொண்டு ஹிஜ்ரத் செய்து வந்ததெல்லாம் அவரின் தாய் தந்தையர் தாம்" என்று கூறினார்கள். "அவர் சுயமாக ஹிஜ்ரத் செய்து வந்தவர்களைப் போன்றவரல்லர்" என்றும் உமர்(ரலி) சொல்வார்கள்.

ஆதாரம் புஹாரி;எண் 3912

இந்த செய்தியில் ஆட்சித்தலைவராக இருந்த உமர்[ரலி] அவர்கள், இஸ்லாத்திற்காக நாடு துறந்த தியாகிகளுக்கு உதவித்தொகை நிர்ணயித்தபோது, முஹாஜிரான தமது மகன் அப்துல்லாஹ் இப்னு உமர்[ரலி] அவர்களுக்கு குறைவான தொகையை தீர்மானித்துவிட்டு அது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் சுயமாக வந்தவரல்ல. அவரது பெற்றோரே அதாவது நானே அவரை அழைத்து வந்தேன். எனவே மற்ற முஹாஜிருக்கு சமமாக மாட்டார் என்று கூறியதை பார்க்கிறோம். இன்றைய ஆட்சியாளர்களை பார்த்தால் பல்வேறு தகுதியுடையவர்கள் தம்முடன் இருந்தாலும் அவர்களை புறந்தள்ளி, அல்லது அவர்களை விட ஒரு படி உயர்வான அந்தஸ்த்தையும், உதவிகளையும் தன் மகனுக்கு வாரி வழங்குவதோடு தனக்கு பின்னால் தன்னுடைய அரியாசனத்தை ஆக்கிரமிக்க தன் மகனுக்கு அனைத்து வழிவகைகளையும் செய்வதை பார்க்கிறோம். இப்படிப்பட்ட மன நிலை உமர்[ரலி] அவர்களுக்கு வரமால் பாதுகாத்தது இறையச்சம் அல்லவா? அதனால்தான் காந்தி சொன்னார்;
'இந்தியாவில் உமருடைய ஆட்சிபோல் ஆட்சி அமையவேண்டும்' என்றார்.