திங்கள், 7 செப்டம்பர், 2009

இவர்கள்,ஆளை அல்ல; ஆதாரத்தையே அடிப்படையாக கொண்டவர்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்;

நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூ மூஸா(ரலி) அவர்கள் வந்து, 'நான் உமர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எனவே, நான் திரும்பிவிட்டேன். பின்பு உமர்(ரலி) அவர்கள் (உங்களை நான் வரச்சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை' என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், '(தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எனவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பிவிடட்டும்' என்று கூறினார்கள்' என்றேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு நபியவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வரவேண்டும்' என்றார்கள். இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?' என்று கேட்டார்கள். அதற்கு (அங்கிருந்த) உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்' என்றார்கள். அங்கு நான்தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூ மூஸா(ரலி) அவர்களுடன் சென்று 'நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்' என்று உமர்(ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்'

ஆதாரம்;புஹாரி எண் 6245
இந்த செய்தியில் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவெனில், நபி[ஸல்] அவர்கள் சொன்னதாக ஒரு செய்தியை அபூமூஸா[ரலி] அவர்கள் சொல்கிறார்கள். அபூமூஸா[ரலி] அவர்கள் யார்.? ஒரு மூத்த நபித்தோழர். அப்படியிருந்தும் உமர்[ரலி] அவர்கள், நீங்கள் சொன்ன இந்த செய்தியை நபி[ஸல்] அவர்கள் சொன்னதற்கான சான்றை சமர்ப்பிக்கவேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள் எனில், மார்க்கத்தில் யாரேனும் ஒரு செய்தியை சொன்னால் அந்த நபர் மீது கொண்ட அபிமானத்தால் அப்படியே நம்பிவிடாமல் அதற்குரிய சான்றை சம்மந்தப்பட்டவரிடம் கேட்டுப்பெறவேண்டும். ஆனால் நடைமுறையில் என்ன நிலை..? நாமாக ஆளுக்கொரு அறிஞர் மீது அபிமானம்கொள்வது; பின்பு அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்று நம்புவதோடு மட்டுமல்லாமல், அவர் சொல்வது மட்டுமே சரியாக இருக்குமென்று நம்புவது. இதனால்தானே நமக்குள்ளே இத்தனை பிரிவுகள்.? எனவே , சொல்லும் ஆளைவைத்து எதையும் எடைபோடாமல் [சகாபாக்களைப்போல்]சொல்லும் ஆதாரத்தை வைத்து எடைபோட முன்வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக