ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

இறைத்தூதரின் கட்டளைக்கு கட்டுப்பட்டார்; இணைவைப்பாளர்களின் கட்டுடைத்தார்..!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார்கள்;
ஹுதைபிய்யா நிகழ்ச்சியின்போது நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களுடன் மூன்று நிபந்தனைகளின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். அவையாவன:
1. நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களிடையேயிருந்து தம்மிடம் (மதீனாவுக்கு) வருபவரை (அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட) அவர்களிடமே திருப்பியனுப்பி விட வேண்டும். தங்களிடம் (மக்காவிற்கு) வரும் முஸ்லிம்களை இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் திருப்பியனுப்ப மாட்டார்கள்.
2. நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அடுத்த ஆண்டு (உம்ரா செய்ய) மக்காவினுள் நுழைந்து மூன்று நாள்கள் தங்கலாம்.
3. (ஆனால்,) வாள், வில் போன்ற ஆயுதங்களை உறையிலிட்டுக் கொண்டே உள்ளே நுழைய வேண்டும்.
இந்த சமாதான ஒப்பந்தம் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது அபூ ஐந்தல்(ரலி), தம் (கால்) சங்கிலிகளுடன் தத்தித் தத்தி (நடந்து) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களிடமே அவர்களைத் திருப்பியனுப்பிவிட்டார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 2700

பிறகு, நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி வந்தார்கள். அப்போது குறைஷிகளில் ஒருவரான அபூ பஸீர் என்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் (மதீனாவுக்கு வருகை தந்தார். உடனே, அவரைத் தேடி(ப் பிடிக்க) குறைஷிகள் இரண்டு பேரை அனுப்பி வைத்தனர். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம் வந்து), 'நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுங்கள்" என்று கேட்டனர். உடனே, அவரை அந்த இருவரிடமும் நபி(ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அவர்கள் இருவரும் அபூ பஸீர் அவர்களை அழைத்துக் கொண்டு துல்ஹுலைஃபாவை அடைந்தனர். அவர்கள், தம் பேரீச்சம் பழங்களைத் தின்றுகொண்டே (ஒரு மரத்தடியில்) தங்கினார்கள். அபூ பஸீர்(ரலி) அவ்விரு நபர்களில் ஒருவரிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னானே! உன்னுடைய இந்த வாளை நான் மிக நல்லதாகக் காண்கிறேன்" என்றார். உடனே மற்றொருவர் வாளை உருவி, 'ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! இது மிக நல்ல வாள்தான். நான் இதைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன், மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்" என்றார். அபூ பஸீர் அவர்கள், 'எனக்கு(அதை)க் காட்டு. அதை நான் பார்க்கிறேன்" என்று கேட்டு அவரைத் தன் வசத்தில் கொண்டு வந்து (அந்த வாளால்) குத்திக் கொன்றுவிட்டார். மற்றொருவர் விரண்டோடி மதீனா வரை சென்றார்; ஓடிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் புகுந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரைக் கண்டபோது, 'இவர் ஏதோ பீதியேற்படுத்தும் விஷயத்தைக் கண்டு விட்டிருக்கிறார்" என்று கூறினார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று நின்றபோது, 'அல்லாஹ்வின் மீதாணையாக! என் சகோதரர் கொல்லப்பட்டுவிட்டார். (நீங்கள் அபூ பஸீரைத் தடுக்காவிட்டால்) நானும் கொல்லப்பட்டு விடுவேன்" என்று கூறினார். உடனே அபூ பஸீர் அவர்கள் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் தங்கள் பொறுப்பை நிறைவேற்றிவிட்டான். தாங்கள் என்னை அவர்களிடம் திருப்பியனுப்பி விட்டீர்கள். பிறகு அல்லாஹ், என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றிவிட்டான்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவரின் தாய்க்குக் கேடுண்டாகட்டும். உதவுபவர் எவராவது இவருக்குக் கிடைத்தால் இவர் போர்த் தீயை மறுபடியும் மூட்டி விடுவார்" என்று கூறினார்கள். இதைச் செவியுற்றவுடன் அபூ பஸீர் அவர்கள், நபி(ஸல்) அவர்கள் தம்மை (மீண்டும்) குறைஷிகளிடம் திருப்பியனுப்பி விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென்றார்கள். சுஹைலின் மகன் அபூ ஜந்தல்(ரலி) அவர்களும் குறைஷிகளிடமிருந்து தப்பியோடி அபூ பஸீர் அவர்களுடன் சேர்ந்தார்கள். பிறகு, குறைஷிகளில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தப்பிச் சென்று) அபூ பஸீர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தொடங்கினார். இறுதியில், (சிறிது சிறிதாக இப்படி இஸ்லாத்தை ஏற்றவர்கள் மக்காவிலிருந்து தப்பியோடி வந்து) ஒரு குழுவினராக ஒன்று திரண்டுவிட்டனர். அல்லாஹ்வின் மீதாணையாக! ஷாம் நாட்டை நோக்கி குறைஷிகளின் ஒரு (வியாபாரப்) பயணக் குழு புறப்பட்டிருப்பதாகக் கேள்விப்படும் போதெல்லாம் அதை அவர்கள் இடைமறித்து அவர்களைக் கொன்று அவர்களின் செல்வங்களை (வியாபாரப் பொருட்களை)ப பறித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். எனவே, குறைஷிகள் (அபூ பஸீரும் அவரின் சகாக்களும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க வேண்டுமென்று) இருவருக்கும் ஆளனுப்பி உத்தரவிடும்படி அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுத் தூதனுப்பினார்கள். மேலும், 'குறைஷிகளில், முஸ்லிமாக நபி(ஸல்) அவர்களிடம் வருகிறவர் அச்சமின்றி இருக்கலாம் (அவரை எங்களிடம் திருப்பியனுப்பி வேண்டாம்)" என்று கூறிவிட்டனர். அப்போதுதான் அல்லாஹ், 'அவனே மக்காவின் பள்ளத்தாக்கில் அவர்களின் கைகள் உங்களுக்கெதிராக உயர்வதையும் தடுத்துவிட்டான்; அப்போது அவர்களின் மீது உங்களுக்கு வெற்றியையும் கொடுத்தான். மேலும், நீங்கள் செய்து கொண்டிருந்த யாவற்றையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான்... இறை மறுப்பாளர்கள், தங்கள் உள்ளங்களில் வைராக்கியத்தை (அஞ்ஞான கால மூடச் சிந்தனையை) ஏற்படுத்தியபோது அல்லாஹ், தன் தூதர் மீதும் நம்பிக்கையாளர்களின் மீதும் நிம்மதியை இறக்கியருளினான்.
[ஹதீஸ் சுருக்கம்,புஹாரி;எண் 2731 ]

மக்காவில் முஸ்லிம்களாக ஆகி பல்வேறு தடைகளை தாண்டி அல்லாஹ்வின் தூதரை நாடி அடைக்கலம் தேடி ஹுதைபிய்யா நாளில் வந்த அபூ ஜந்தல்[ரலி] அவர்களையும், மதீனா வரை வந்த அபூ பஷீர்[ரலி] அவர்களையும், ஹுதைபியா ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள காரணத்தால் ஒப்பந்தத்தை பேணவேண்டும் என்பதால் நபி[ஸல்] அவர்கள் திருப்பி அனுப்புகிறார்கள். இஸ்லாத்தை ஏற்ற காரணத்தால் பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இவ்விருவரும் இறைத்தூதர் அவர்கள் ஒப்பந்தத்தை காரணம் காட்டி அபயமளிக்க மறுத்தபோதும், இறைத்தூதர் மீது சிறிதும் அதிருப்தி அடையாமல் அவர்களின் கட்டளைப்படி இணைவைப்பாளர்களுடன் திரும்பிச்சென்ற இவ்விரு சகாபிகளிடமும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கட்டளையிட்டு விட்டால் அது தனக்கு பாதகமாகவே இருந்தாலும் கட்டுப்படவேண்டும் என்ற படிப்பினை நமக்கு உள்ளது. ஆனால் இன்றைக்கு என்ன நிலை..? இறைத்தூதரின் பொன்மொழிகள் அறிவுக்கு பொருந்தவில்லை என்று நிராகரிக்கும் அறிஞர்கள்[?] வாழும் காலம். அடுத்து இவ்விரு சகாபிகள் அடங்கிய குழு ஏற்படுத்திய நெருக்கடி காரணமாகத்தான் குறைஷிகள், நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களிடையேயிருந்து தம்மிடம் (மதீனாவுக்கு) வருபவரை (அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட) அவர்களிடமே திருப்பியனுப்பி விட வேண்டும். என்ற ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தாங்கள் ஒரு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தாலும், இஸ்லாத்தை ஏற்று மதீனா நோக்கி வரும் முஸ்லிம்கள் மதீனாவில் அடைக்கலம் பெறும் அழகிய வழிமுறைக்கு வழிகாட்டிய இந்த வீரர்களின் தியாகம் மெய்சிலிர்க்க செய்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக