வியாழன், 10 செப்டம்பர், 2009

மார்க்க சட்டத்திற்காக மனைவியை பிரிந்தவர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
'நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, 'நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்' என்றார். அதற்கு நான் 'நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே' என்று கூறினேன். உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?' என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாகரத்து செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்" என உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 88

ஒரு ஆணும் பெண்ணும் முறையே வெவ்வேறு பெற்றோருக்கு பிறந்திருந்தாலும், அவ்விருவரும் ஒரு செவிலித்தாயிடம் பாலருந்தியிருந்தால் அவ்விருவரும் சகோதர-சகோதரியாகிவிடுவர். அவ்விருவரும் திருமணம் செய்துகொள்ள இஸ்லாத்தில் அனுமதியில்லை. உக்பா இப்னு ஹாரிஸ் [ரலி] அவர்களும், அவர் மணந்துள்ள அவரது மனைவியும் சிறு பிராயத்தில் ஒரே செவிலித்தாயிடம் பாலருந்தியவர்கள். இருப்பினும் அந்த விஷயம் உக்பா[ரலி] அவர்கள் திருமணம் செய்யும்வரை அவர்களுக்கு தெரியவில்லை. பின்னாளில் அவ்விருவருக்கும் பாலூட்டிய அந்த செவிலித்தாயின் மூலமாக அறிந்தபோது, கல்யாணம் முடிந்துவிட்டது இனிமேல் என்ன செய்யமுடியும் என்று வாளாவிருக்கவில்லை. மாறாக இதுபற்றிய மார்க்கத்தீர்ப்பு அறிய மக்காவிலிருந்து பயணமாகி மதீனா நோக்கி மாநபி[ஸல்] அவர்களிடம் வந்து வினவியபோது, (நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)? என்று நபியவர்கள் கூறிய உடனே தனது மனைவியை மணவிலக்கு அளிக்கிறார் எனில், நன்றாக சிந்திக்கவேண்டும். அவ்விரு தம்பதிகளிடையே எவ்வித மன கசப்புமில்லை. ஆனாலும், மார்க்கம் தடுத்த முறையில் தம்முடைய திருமணம் அமைந்துவிட்டதால் உடனடியாக அந்த செயலிலிருந்து விடுதலை பெறுகிறார்கள் எனில், இன்றைய திருமணத்தில் மார்க்கத்திற்கு புறம்பான வரதட்சனை தொடங்கி எத்துணையோ சடங்கு சம்பிரதாயங்கள் அரங்கேறுகிறதே! அதை மார்க்கத்தை கற்ற அறிஞர் பெருமக்களும் கண்டுகொள்ளாமல் 'அல்லாஹும்ம அல்லிஃப் பைன' ஓதி அங்கீகரிக்கிறார்களே! இப்போது சொல்லுங்கள் யார் மேன்மக்கள்..? இறைச்சட்டத்திற்கு மாற்றம் என்றவுடன் அதற்கு பரிகாரம் தேடிய சகாபாக்களா? அல்லது மஹர்கொடுக்க சொன்ன மறையோனுக்கு மாற்றமாக வரதட்சனை வாங்கும் நாமா? சிந்திப்போம்...திருந்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக