புதன், 9 செப்டம்பர், 2009

ஹதீஸின் விஷயத்தில் கவனம் செலுத்திய மேதை!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
'(தந்தையே! உங்களைப் போன்று நபி(ஸல்) அவர்களுடன் நட்புகொண்ட) இன்னின்னாரெல்லாம் நபி(ஸல்) அவர்கள் பற்றி (அதிகமாக) அறிவிப்பது போல், தாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான் கேள்விப்பட்ட தேயில்லையே! ஏன்?' என்று என்னுடைய தந்தை ஸுபைர்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'இதோ பார்! நான் (பெரும்பாலும்) நபி(ஸல்) அவர்களைப் பிரிந்திருந்ததே இல்லை. ஆயினும் 'என் மீது இட்டுக் கட்டிச் செல்பவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்' (எனவேதான் நான் அதிகமாக அறிவிக்கவில்லை)' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்.

ஆதாரம்; புஹாரி எண் 107

ஸுபைர்[ரலி] அவர்கள் அல்லாஹ்வின் தூதரின் நெருக்கமான தோழர்களில் ஒருவர். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் பொன்மொழிகளை அதிகம் செவியுறும் வாய்ப்பை பெற்றவர். இருப்பினும் குறைவான செய்திகளையே அறிவிக்கிறார்கள். அதுபற்றி அவரது மகனார் அப்துல்லா இப்னு ஸுபைர்[ரலி] அவர்கள் வினவியபோது, என் மீது இட்டுக்கட்டி சொல்பவர்கள் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும் என்று நபியவர்கள் சொன்னதுதான் நான் செய்திகளை குறைவாக அறிவிப்பதற்கு காரணம் என்கிறார்கள். நன்றாக கவனிக்கவேண்டும். ஸுபைர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்கள் மீது பொய்யுரைக்கமாட்டார்கள். இருப்பினும் நபி[ஸல்] அவர்கள் சம்மந்தமாக நாம் சொல்லும் செய்தியில் ஏதேனும் ஒரு பிழை ஏற்பட்டு அதற்காக நாம் மறுமையில் தண்டிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சுகிறார்கள் எனில், இன்று பார்க்கிறோம் சர்வ சாதரணமாக நபிமொழிகளை பலமானது என்றும், பலவீனமானது என்றும், பலமானதுதான் ஆனாலும் அறிவுக்கு பொருந்தவில்லை என்றும், பலமானதுதான் ஆனாலும் குர்ஆனோடு மோதுகிறது எனவே இது 'தள்ளுபடி' என்றும் நபி[ஸல்] அவர்களின் பொன்மொழிகள் போதிய ஞானம் இல்லாதவர்களால் கையாளப்படுவதை காண்கிறோம். ஆனால், நபித்தோழராக இருந்தும் இறைத்தூதரின் பொன்மொழி விசயத்தில் அதிகப்படியான கவனம் செலுத்திய ஸுபைர்[ரலி] அவர்களின் வாழ்க்கையிலிருந்து 'எடுத்தேன்-கவிழ்த்தேன்' என்று நபிமொழியை கையாள்பவர்கள் பாடம் படிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக