ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

நபித்தோழர்கள் மீது பொய்யுரைத்தால்...?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார்கள்;


(கூஃபாவில் அதிகாரியாக இருந்த) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) மீது கூபா வாசிகளில் சிலர் உமர்(ரலி) அவர்களிடம் புகார் கூறினார்கள். அவர் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்பதும் அவர்களின் புகார்களில் ஒன்றாக இருந்தது. உடனே உமர்(ரலி) அவரை நீக்கிவிட்டு அம்மார்(ரலி)ஜ அதிகாரியாக நியமித்தார்கள். ஸஃதை (மதீனாவுக்கு) வரவழைத்து 'அபூ இஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று கூஃபா வாசிகளில் சிலர் கூறுகின்றனரே! என்று கேட்டார்கள். அதற்கு ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப் படியே தொழுகை நடத்தினேன். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இஷாவுடைய முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுகை நடத்துகிறேன்' என்று பதிலளித்தார்கள். 'உம்மைப் பற்றி நம்முடைய கருத்தும் அதுவே' என்று உமர்(ரலி) கூறினார். அதன்பின்னர் ஒரு நபரை அல்லது சில நபர்களை ஸஃது(ரலி) உடனே

கூஃபாவுக்கு அனுப்பி, ஸஃதைப் பற்றிக் கூஃபா வாசிகளிடம் விசாரிக்கச் சொன்னார்கள். விசாரிக்கச் சென்றவர் ஒரு பள்ளிவாசல் விடாமல் அவரைப் பற்றி விசாரித்தபோது அனைவரும் ஸஃதைப் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள். 'பனூஅபஸ்' கூட்டத்தாரின் பள்ளி வாசலில் விசாரித்தபோது, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த அபூ ஸஃதா எனப்படும் உஸாமா இப்னு கதாதா என்பவர் எழுந்து, 'நீங்கள் விசாரிப்பதால் நான் சொல்கிறேன். ஸஃது அவர்கள் தமது படையிலுள்ளவர்களிடம் எளிமையாக நடப்பதில்லை; (பொருட்களை) சமமாகப் பங்கிடுவதில்லை; தீர்ப்பு வழங்குவதில் நீதியாக நடப்பதில்லை' என்று புகார் கூறினார்.

இதைக் கேட்ட ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மேல் ஆணையாக! மூன்று பிரார்த்தனைகளை (உமக்கெதிராக) நான் செய்யப் போகிறேன்' என்று கூறிவிட்டு, 'இறைவா! உன்னுடைய இந்த அடியார் (அவரின் புகாரில்) பொய்யராகவும் புகழ் விரும்பிப் புகார் கூறுபவராகவும் இருந்தால் அவரின் ஆயுளை அதிகப் படுத்துவாயாக! அவரின் வறுமையையும் அதிகப் படுத்துவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!' என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இதன் பிறகு அந்த மனிதரிடம் எவரேனும் நலம் விசாரித்தால், 'சோதனைக்கு ஆளான முதுபெரும் வயோதிகனாகி விட்டேன். ஸஃதின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்துவிட்டது' எனக் கூறக் கூடியவராகி விட்டார்.
ஜாபிர்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அப்துல் மலிக் இப்னு உமைர் 'அதன் பிறகு நானும் அவரைப் பார்த்திருக்கிறேன்; முதுமையினால் அவரின் புருவங்கள் அவரின் கண்களை மறைத்திருந்தன. பாதைகளில் நடந்து செல்லும் பெண்களின் மீது (பார்வை பறி போனதால்) மோதிக் கொள்வார்; இந்த நிலையில் அவரை பார்த்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டார். ஆதாரம்; புஹாரி எண் 755

ஸஃது இப்னு அபீவக்காஸ்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களால் சொர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட சிறந்த நல்லடியார். அப்படிப்பட்ட ஸஃது[ரலி] அவர்கள் மீது அபாண்டமாக பொய்யுரைத்ததன் விளைவாக தனக்குத்தானே சோதனையை தேடிக்கொண்ட உஸாமா இப்னு கதாதா என்பவரின் நிலையை பார்த்து, சஹாபாக்களை சாதாரணமாக பேசுபவர்களும், அவர்கள் மீது பொய்யுரைப்பவர்களும் தங்களை திருத்திக்கொள்ளவேண்டும். மேலும் சகாபாக்கள் மட்டுமன்றி, எந்த தனி நபரின் மீதும் அபாண்டமான புகார்களை கூறுவதிலிருந்தும் நாம் விலகி நடக்க முன்வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக