ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

இறைவனின் எதிரியை வாளுக்கு இரையாக்கிய இளைஞர்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்கள்;
பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்றிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் பார்த்தேன். என்னருகே (இரண்டு பக்கங்களிலும்) இளவயதுடைய அன்சாரிச் சிறுவர்கள் இருவர் நின்றிருந்தார்கள். அப்போது, 'அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா' என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிச் கண் சாடையிட்டு, 'என் பெரிய தந்தையே! நீங்கள் ஆபூ ஜஹ்லை அறிவீர்களா?' என்று கேட்டார். நான், 'ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!" என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர், 'அவன் இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனுடைய உடலை என்னுடைய உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்)" என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, 'இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!" என்று கூறினேன். உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்து போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் யார் அவனைக் கொன்றது?' என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொரு வரும், 'நானே (அவனைக் கொன்றேன்)" என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா?' என்று கேட்டார்கள். இருவரும், 'இல்லை" என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்துவிட்டு, 'நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் இப்னு அம்ர்டைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) 'அபூ ஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருள்கள் முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹுக்கு உரியவை" அவர்களும் முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹ்(ரலி) அவர்களும் ஆவர்.

ஆதாரம்;புஹாரி எண் 3141
இந்த பொன்மொழியில் முஆத் என்ற பெயருடைய இரு சிறுவர்கள்[வேறு அறிவிப்புகளில் இளைஞர்கள்] அபூ ஜஹ்ல், அல்லாஹ்வின் தூதரை திட்டுகிறான் என்பதையறிந்து அவனை அழிப்பதற்காக அல்லாஹ்வின் மீது சபதமேற்று அதை பத்ர்களத்தில் நிறைவேற்றுகிறார்கள் என்றால், இந்த இளைஞர்கள் எந்த அளவுக்கு இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது நேசம் வைத்துள்ளார்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம். ஆனால், இன்றைய இளைஞர்களில் ஒரு சாரார் உடல் மண்ணுக்கு-உயிர் ரஜினிக்கு என்றும் , ஒரு சாரார் அரசியல்வாதிகள் மீது நேசம் கொண்டு அவர்கள் சொல்வதே வேதவாக்கு என்றும் அலைவதை பார்க்கிறோம். ஒரு முஸ்லிம் இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது மற்ற எவரையும் விட ஏன் தன் உயிரையும் விட நேசம் கொள்ளாதவரை உண்மையான ஈமான் கொண்டவர்கள் ஆக முடியாது என்று அந்த இரு இளைஞர்களும் உணர்ந்ததால்தான் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பலம்வாய்ந்த எதிரியை வெட்டி வீழ்த்தும் வலிமையை பெற்றார்கள். அந்த இளைஞர்களைப்போல் நாமும் இறைத்தூதரை நேசிப்போம். இம்மை-மறுமை வெற்றி பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக