புதன், 14 அக்டோபர், 2009

நண்மைக்கு ஏங்கிய நன்மக்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
ஏழை மக்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகிறார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்;உம்ராச் செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்; தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை)' என்று முறையிட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகிறேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்திவிட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள். (அந்த காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33முறை இறைவனைத் துதியுங்கள்; 33 முறை இறைவனைப் புகழுங்கள்; 33 முறை இறைவனைப் பெருமைப படுத்துங்கள்' என்று கூறினார்கள். நாங்கள் இது விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் ஸுப்ஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும் அல்லாஹு அக்பர் 33 முறையும் கூறலானோம். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்" என்று 33 முறை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 முறை கூறினார்கள் என அமையும்'. என்று விளக்கம் தந்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 843
இந்த பொன்மொழியில் பல படிப்பினை நமக்கு உள்ளது. ஏழைகளான சகாபாக்கள், வசதி படைத்தவர்களைப்போல் நாம் மாளிகை கட்டமுடியவில்லையே, ஆடை- ஆபரணங்களால் நம்மை அழகு படுத்திக்கொள்ள முடியவில்லையே, அவர்களைப்போன்று வாகனங்கள் வைத்துக்கொள்ள முடியவில்லையே, அவர்களைப்போன்று அறுசுவை உணவுகளை உட்கொண்டு சுகவாழ்க்கை வாழ முடியவில்லையே என்று அவர்கள் ஆதங்கப்பட்டு நபி[ஸல்] அவர்களிடம் கோரிக்கை வைக்கவில்லை. நபியவர்களே! அவர்களெல்லாம் செல்வ செழிப்பில் மிதக்கும்போது நாங்கள் மட்டும் வறுமையில் வாடவேண்டுமா? எனவே எங்களுக்கு செல்வம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக, வசதி படைத்தவர்கள் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்;உம்ராச் செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்; தர்மமும் செய்கின்றனர். இதன் மூலம் நன்மையில் அவர்கள் முந்துகிறார்களே என்றுதான் நபியவர்களிடம் முறையிடுகிறார்கள். இதை பார்க்கும்போது இந்த உலகத்தில் அவர்களை ஆட்கொண்டிருந்த வறுமையை மறுமைக்காக பொறுத்து, அமல்களின் மூலம் அந்த மறுமையை அடையமுயற்சித்த அவர்களின் அடங்காத தாகம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. இன்றும் கூட நம்மில் சிலர் தங்களுக்கு ஏதேனும் வறுமை வந்துவிடுமானால், என்ன அல்லாஹ்! நான் அவனை ஐவேளை தொழுகிறேன்; எனக்கு வறுமையை தந்துள்ளான். ஆனால் பெருநாள் மட்டுமே பள்ளிவாசல் பக்கம் எட்டிப்பார்க்கும் மூஸாவுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுத்துள்ளானே என்று அங்கலாய்ப்பவர்களையும் பார்க்கிறோம். நம்முடைய சிந்தனை அவனைவிட நாம் எப்படி பணக்காரனாக ஆவது என்று; ஆனால் நபியவர்களால் பண்படுத்தப்பட்ட அந்த சத்திய சகாபாக்களுக்கோ என்ன செய்தால் நாம் மற்றவர்களைவிட நன்மையில் முந்தமுடியும் என்ற சிந்தனை. அதுதான் அந்த மேன்மக்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு.

இது ஒருபுறமிருக்க, அந்த ஏழை சகாபாக்களுக்கு நன்மையில் முந்துவதற்கு ஒரு செயலை, அதாவது தொழுகைக்கு பிறகு 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்" என்று 33 முறை கூறுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் சொன்னார்களே! இது இன்றைக்கு நம்மில் எத்துனை பேரிடம் நடைமுறையில் உள்ளது..? விரலை அசைப்பதிலும்-சத்தமிட்டு ஆமீன் சொல்வதிலும் காட்டும் ஆர்வம் இதில் காட்டப்படுகிறதா? என்றால் இல்லை. இமாம் ஸலாம் கொடுத்தவுடன் மடைதிறந்த வெள்ளம்போல் அடுத்தவர்களை தாண்டிக்குதித்து வெளியேறுவதே நம்மில் பலரின் இன்றைய நிலை. இதில் பர்ல் மட்டுமே தொழும் தவ்ஹீத் வாதிகளும் உண்டு. இவ்வாறெல்லாம் இருக்கும் நமது நிலை மாறவேண்டும். சகாபாக்கள் எப்படி நன்மையை தேடி, தேடி செய்தார்களோ, அதுபோல் நாமும் செய்யமுன்வந்தால்தான் மறுமையில்,அந்த சத்திய சகாபாக்கள் அளவுக்கு 'மெரிட்'டில் பாஸ் பன்ன முடியாவிட்டாலும், எதோ 'பெயில்' ஆகாமலாவது தப்பிக்கலாம்.

என்ன! அடுத்த தொழுகையில் இறைவனை 33முறை இறைவனைத் துதிக்கவும் ; 33 முறை இறைவனைப் புகழவும் ; 33 முறை இறைவனைப் பெருமைப்படுத்தவும் ரெடியா..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக