செவ்வாய், 6 அக்டோபர், 2009

இறை வசனத்தை செவியேற்றார்- அதற்கு முழுமையாக கட்டுப்பட்டார்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
'உயைனா இப்னு ஹிஸ்ன் இப்னி ஹுதைஃபா'(ரலி) (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம் தங்கினார். உமர்(ரலி) தம் அருகில் அமர்த்திக்கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு இப்னு கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர்(ரலி) அவர்களின் அவையினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர். எனவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், 'என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடம் செல்வாக்கு உள்ளது. எனவே, அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா' என்று கூறினார். அதற்கு அவர், 'உமர்(ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்' என்று கூறினார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர்(ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள். உயைனா அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம் சென்றபோது, 'கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை' என்று கூறினார். உமர்(ரலி) கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு அவர்கள் உமர்(ரலி) அவர்களை நோக்கி, 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோனான அல்லாஹ் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு, '(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களைவிட்டு விலகியிருப்பீராக!' (திருக்குர்ஆன் 07:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்' என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர்(ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர்(ரலி) அதை மீறவில்லை. (பொதுவாக) உமர்(ரலி) இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக்கூடியவர்களாய் இருந்தார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 4642

இந்த செய்தியை நாம் படித்துப் பார்க்கும்போது, நபி[ஸல்] அவர்களின் உற்ற தோழரும், சொர்க்கம் உறுதி செய்யப்பட்டவருமான உமர்[ரலி] அவர்கள், தான் ஒரு அதிகாரம் பொருந்திய ஆட்சியாளராக இருந்ததும், தனக்கு எதிராக குற்றம் சுமத்தியவர் மீது ஆரம்பத்தில் கோபம் கொண்டாலும், அவர்கள் முன் இறைவசனம் ஒதிக்கட்டப்பட்டவுடன் அதற்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக அமைதியடைகிறார்கள் எனில், அதுதான் சகாபாக்கள்! இன்று மதரசாவில் சில ஆண்டுகள் பெஞ்சை தேய்த்துவிட்டு பட்டம் என்ற பெயரில் ஒரு பேப்பரை வாங்கிவிட்டால், நான் தன் உலகமகா அறிவாளி என்றும், நான் சொல்வது மட்டுமே இஸ்லாம் என்றும், மற்ற அனைவரும் அவர்கள் அறிஞர்களாக இருந்தாலும் அறிவிலிகள் என்று வசைபாடுவதோடு, திருக்குர்ஆண் வசனத்தை மேற்கோள் காட்டினாலும் அதை தனது சொந்த வியாக்கியானங்களின் மூலம் மழுப்பும் சில அதிமேதாவிகள், அல்லாஹ்வின் வார்த்தைக்கு முன் தான் ஜனாதிபதியே ஆனாலும் சாமான்யன் என்று சரணடைந்த உமர்[ரலி] அவர்களிடம் பாடம் படிக்கவேண்டும்.
மேலும், சமான்யராண நம்மில் சிலரும் , அறிந்தும் அறியாமலும் அல்லாஹ்வின் வார்த்தையான அல்குர்ஆணுக்கு மாற்றமான வரதட்சனை-மது-மாது-புகை-சினிமா-பொய்-அவதூறு- இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவதை பார்க்கிறோம். ஒரு முஸ்லிமின் கடமை, அல்லாஹ்வும்-அவனது தூதரும் கட்டளையிட்டுவிட்டால் அதற்கு பரிபூரணமாக கட்டுப்படுவது. அதில் நமக்கு உமர்[ரலி] அவர்களிடத்தில் அருமையான படிப்பினை உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக