திங்கள், 31 ஆகஸ்ட், 2009

அண்ணன் எப்ப சாவான் என்று காத்துக்கிடந்தவர்கள் இவர்களா..?

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் (நபி - ஸல் - அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த சமயம்) அன்சாரிகள் தம் சபைகளில் ஒன்றில் (அமர்ந்தபடி) அழுது கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் அந்த வழியாகச் சென்றார்கள். அப்போது, அப்பாஸ்(ரலி) (அல்லது அபூ பக்ர்(ரலி), 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் நபி(ஸல்) அவர்களுடன் (கூடி) அமர்ந்திருந்த அவையை நினைத்துப் பார்த்தோம். (அதனால் அழுகிறோம்)" என்று பதிலளித்தார்கள். அப்பாஸ்(ரலி) (அல்லது அபூ பக்ர்(ரலி)), நபி(ஸல்) அவர்களிடம் சென்று, இந்த விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் சால்வையின் ஓரத்தைத் தம் தலையில் கட்டியிருந்த நிலையில் வெளியே வந்து, (உரை நிகழ்த்துவதற்காக) மிம்பரில் (மேடையில்) ஏறினார்கள் - அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் மிம்பரில் ஏறவில்லை - அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றிய பிறகு, 'அன்சாரிகளின் விஷயத்தில் (நல்லவிதமாக நடந்துக் கொள்ளும்படி) உங்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன். ஏனெனில், அவர்கள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். தம் மீதிருந்த பொறுப்பை, அவர்கள் நிறைவேற்றிவிட்டார்கள். இனி அவர்களுக்குரிய உரிமை தான் எஞ்சியுள்ளது. எனவே, அவர்களில் நன்மை புரிவோரிடமிருந்து (அந்த நன்மையை) ஏற்றுக் கொண்டு, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்து விடுங்கள்" என்று கூறினார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 3799

நபி[ஸல்] அவர்களின் மரணத்திற்கு பின்னால் ஆட்சித்தலைவரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், அன்சாரிகள் ஆரம்பகட்டத்தில் சற்று பிடிவாதம் காட்டியதை வைத்து அன்சாரிகள் பதவி வெறி பிடித்தவர்கள் போன்று,'அண்ணன் எப்ப சாவான்; திண்ணை எப்ப கிடைக்கும்' என்று காத்து கிடந்தார்கள் என்று சிலர் அன்சாரிகளை விமர்சித்ததுண்டு. மேற்கண்ட பொன்மொழியை சற்று கவனமாக பார்த்தோமானால், அண்ணன்[ரசூல்[ஸல்] சாக கிடக்கும்போது அன்சாரிகள் அதை விரும்புபவர்களாக இருந்தால், தாங்கள் நபி[ஸல்] அவையில் இருந்த நாட்களை எண்ணி கண்ணீர் வடித்தார்களே! அது எப்படி..? அன்சாரிகள் அழுது வாடியதை நடிப்பு என்று கூற வருவார்களா? [அஸ்தஃபிருல்லாஹ்]. அன்சாரிகள் குறித்து இறுதி உபதேசம் செய்த நபி[ஸல்] அவர்கள் கூறியதென்ன?
இனி அவர்களுக்குரிய உரிமை தான் எஞ்சியுள்ளது. எனவே, அவர்களில் நன்மை புரிவோரிடமிருந்து (அந்த நன்மையை) ஏற்றுக் கொண்டு, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்து விடுங்கள்" என்று கூறினார்கள்.
நபி[ஸல்] அவர்களின் கூற்றுப்படி ஆட்சித்தலைவர் விசயத்தில் தங்களின் உரிமையை எடுத்துரைத்ததனால் அன்சாரிகள் பதவி பித்தர்களா? ஆரம்பகட்டத்தில் அன்சாரிகளுக்கு ஒரு தலைவர்-முஹாஜிர்களுக்கு ஒரு தலைவர் என்று அன்சாரிகள் சொன்னாலும், பின்பு அபூபக்கர்[ரலி] அவர்கள் தொடங்கி பின்னால் வந்த அத்துணை ஆட்சியாளர்களையும் பொருந்திக்கொண்ட தியாகிகள் அல்லவா அன்சாரிகள்..? இதை மறுக்கமுடியுமா? எனவே சகாபாக்கள் விசயத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். இல்லையேல், அந்த தியாகிகள் விசயத்தில் முரண்பட்ட தகவலை சமுதாயத்திற்கு சொன்ன குற்றத்திற்கு இறைவனிடம் பதிலளிக்கும் நிலைவரும் என்பதை நாம் உணரவேண்டும்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

பகைமையை வேரறுத்து பாசத்தை விதைத்தவர்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அபூதர்தா (ரலி) அறிவித்தார்கள்;
நான் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) தம் முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தோழர் வழக்காட வந்துவிட்டார்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (நபி - ஸல் - அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருககும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். எனவே, உங்களிடம் வந்தேன்" என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அபூ பக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர்(ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, 'அங்கே அபூ பக்ர்(ரலி) இருக்கிறார்களா?' என்று கேட்க வீட்டார், 'இல்லை" என்று பதிலளித்தார்கள். எனவே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூ பக்ர்(ரலி) பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிளைத்தவனாகி விட்டேன்." என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். 'பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூ பக்ர் அவர்களோ, 'நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டு விடுவீர்களா?' என்று இரண்டு முறை கூறினார்கள். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி) மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.

ஆதாரம்; புஹாரி எண் 3661

இந்த பொன்மொழியை கவனமாக படியுங்கள். அபூபக்கர்[ரலி] அவர்களும், உமர்[ரலி] அவர்களும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் இரு தூன்களாவர். இவ்விருவருக்கிடையே மனிதர்கள் என்ற அடிப்படையில் சிறு மனக்கசப்பு ஏற்படுகிறது. இதில் அபூபக்கர்[ரலி] அவர்கள் சற்றே உமர்[ரலி] அவர்களின் மனம் புண்படும்படி நடந்துவிடுகிறார்கள். பின்பு நம்மை போன்று 'உமறு வீட்லயா எனக்கு சாப்பாடு' என்று வாளாவிருக்கவில்லை. மாறாக தனது தவறை உணர்ந்து உமர்[ரலி] அவர்களிடம் மன்னிப்பு கேட்க அவர்களின் இல்லம் நோக்கி விரைகிறார்கள். அங்கே உமர்[ரலி] அவர்கள் அபூபக்கர்[ரலி] அவர்களை மன்னிக்க மறுக்கவே, எங்கே உமர்[ரலி] விஷயத்திற்காக இறைவனிடம் குற்றம் பிடிக்கப்படுவோமோ என்று பயந்தவர்களாக தனது ஆடையை இழுத்துக்கொண்டு இறைத்தூதர்[ஸல்] அவர்களிடம் ஒடி வருகிறார்கள். விஷயத்தை சொல்கிறார்கள். அப்போது அபூபக்கரே உங்களை அல்லாஹ் மன்னிப்பான் என்று அல்லாஹ்வின் தூதர்[ஸல்] ஆறுதல் அளிக்கிறார்கள்.

மறுபுறம் உமர்[ரலி] அவர்களின் நிலை என்ன? அபூபக்கர்[ரலி] அவர்கள் மனம் வருந்தி நம்மிடம் மன்னிப்பு கேட்கவந்தபோது நாம் புறக்கனித்துவிட்டோமே என்று மனம் வருந்தி அபூபக்கர்[ரலி] அவர்களின் வீட்டை நோக்கி ஓடுகிறார்கள். அங்கே அபூபக்கர்[ரலி] இல்லாததையறிந்து, இறைத்தூதர்[ஸல்] அவர்களின் அவைக்கு வந்தபோது, உமர்[ரலி] அவர்களை கண்டவுடன் நபி[ஸல்] அவர்களின் முகம் கோபத்தால் சிவந்தவுடன், மீண்டும் அபூபக்கர்[ரலி] அல்லாஹ்வின் தூதரே! அதிகப்படியான தவறு என்மீதுதான் என்று கூறி அங்கே உமர்[ரலி] அவர்களை கண்ணியப்படுத்துகிறார்கள்.

இப்போது நம்மையும் நம் சமுதாய தலைவர்களையும் அதிலும் குறிப்பாக தவ்ஹீதை முழங்கக்கூடிய நமது தலைவர்களின் நிலைமையை சற்று மனத்திரையில் கொண்டுவாருங்கள். மனக்கசப்பால் பிரிந்த பல்வேறு அணித்தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்ததுண்டா? ஸலாம் கூறியதுண்டா? விட்டுக்கொடுத்ததுண்டா? மாறாக, பகிரங்க விவாதத்திற்கு வாரியா? முபாஹலாவிர்கு வாரியா? என்று தங்களுக்கிடையில் பகைமையை விரிவுபடுத்தி வருவதையே தலையாய பணியாய கொண்டுள்ள தலைவர்களை பார்க்கிறோம். சரி! தலைவர்களை விடுங்கள். நம்முடைய நிலை என்ன? பெற்றோருக்கும்-பிள்ளைகளுக்கும் ஏற்ப்பட்ட மனக்கசப்பு நீடிக்கிறது. இரண்டற கலந்த கணவனுக்கும்-மனைவிக்கும் மத்தியில் ஏற்பட்ட மனக்கசப்பு நீடிக்கிறது. உறவினர்களுக்கு மத்தியில் ஏற்படும் மனக்கசப்பு தலைமுறை தாண்டியும் நீடிக்கிறது. இதற்கெல்லாம் என்னகாரணம்? ஒன்று தத்தம் தவறை உணர தயாரில்லை அல்லது மன்னிக்கும் /விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையில்லை. இப்படிப்பட்டவர்கள் அபூபக்கர்[ரலி]-உமர்[ரலி] ஆகியோரின் வாழ்விலிருந்து படிப்பினை பெறவேண்டும்.

சனி, 29 ஆகஸ்ட், 2009

தமக்கு தேவை இருந்தபோதும் பிறரின் பசி தீர்த்த கருணையாளர்கள்!


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், 'எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை" என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), 'இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?.".. அல்லது 'இவருக்கு விருந்தளிப்பவர் யார்?.".. என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நான் (விருந்தளிக்கிறேன்)" என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விருந்தாளியைக் கண்ணியப்படுத்து" என்று கூறினார். அதற்கு அவரின் மனைவி, 'நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை" என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், 'உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு" என்று கூறினார். அவ்வாறே அவரின் மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கைச்சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான் அல்லது வியப்படைந்தான்" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், 'தமக்கே தேவை இருந்தும் , தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், தம் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றியாளர்கள்" என்றும் (திருக்குர்ஆன் 59:9ம்) வசனத்தை அருளினான்.

ஆதாரம் புஹாரி எண் 3798

இந்த பொன்மொழியில், நபி[ஸல்] அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விருந்தாளியை அழைத்துச்சென்ற அன்சாரித்தோழரின் வறுமை நிலை பாரீர். அவரது வீட்டில் குழந்தைகளுக்கான உணவு மட்டுமே உள்ளது. அன்சாரி தோழருக்கும் அவரது மனைவிக்கும் கூட அங்கே உணவில்லை. இந்த நிலையிலும், தனது குழந்தைகளை தூங்கவைத்து விட்டு குழந்தைகளின் உணவை அந்த விருந்தினருக்கு வழங்கி தனது வள்ளல் தன்மையை காட்டிய அந்த அன்சாரித்தோழர் அவர்களின் வாழ்க்கையே தியாகமாக இருந்தது. அதனால் அல்லாஹ் ஒரு வசனத்தையே இறக்கி இந்த தோழரின் ஈகை குணத்தை கண்ணியப்படுத்தி, இத்தகைய குணமுடையவரே வெற்றியாளர்கள் என்று தன் அருள்மறையில் கூறும் அளவுக்கு அன்சாரித்தோழரின் வாழ்க்கை அமைந்ததை பார்த்து உள்ளபடியே இத்தகைய நற்குணத்தை நாமும் பெறவேண்டும் என்ற சிந்தனை நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். ஆனால் இன்று நடப்பதென்ன? நமது வீட்டிற்கு நமது உறவினர்கள் யாரேனும் வந்துவிட்டால் அவனை பார்த்த மாத்திரமே 'வந்துட்டான்யா வந்துட்டான்யா' என்று மனதில் கருவும் எத்துணையோ பேரை பார்க்கிறோம். வந்த விருந்தாளியை வேண்டா வெறுப்பாக கவனிப்பதையும் 'எப்படா எடத்த காலி பன்னுவான்' என்று நினைப்பவர்களையும் பார்க்கிறோம். கணவனின் உறவினர்கள் வந்துவிட்டால் மனைவிக்கு எரிகிறது. மனைவியின் உறவினர்கள் வந்துவிட்டால் கணவனுக்குஎரிகிறது. இவ்வாறான மன நிலையுள்ளவர்கள் இன்றைய நவீன உலகில் இருக்க, அன்றோ யார் என்றே தெரியாத ஒருவருக்கு விருந்தளித்து கண்ணியப்படுத்திய அன்சாரித்தோழரின் வாழ்வில் நமக்கு மிகப்பெரிய படிப்பினை உள்ளது.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

அறியாமல் உண்ட ஹராமான உணவை வாந்தி எடுத்த வாய்மையாளர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு (ஓர் எஜமானனுக்கு அடிமை செலுத்த வேண்டிய சம்பாத்தியத்தில்) நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தி வந்த அடிமையொருவன் இருந்தான். அபூ பக்ர்(ரலி) அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டு வந்தார்கள். ஒரு நாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான். அதிலிருந்து அபூ பக்ர்(ரலி) சிறிது உண்டார்கள். அப்போது அந்த அடிமை அவர்களிடம், 'இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டான். அபூ பக்ர்(ரலி), 'இது என்ன?' என்று கேட்டார்கள். அவன், 'நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது; ஆயினும் (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாகக் கிடைத்த அந்தப் பொருளிலிருந்து தான்" என்று சொன்னான். உடனே அபூ பக்ர்(ரலி) தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 3842

இந்த செய்தியில்அபூபக்கர்[ரலி] ,அவர்கள் தனது அடிமை மூலம் தனக்கு கிடைக்கவேண்டிய வேண்டிய அடிமை தொகையை உண்கிறார்கள். பின்பு அந்த அடிமை ஹராமான வழியில் பொருளீட்டியதைதான்நம்மிடத்தில் தந்துள்ளான். அதைத்தான் நாம் சாப்பிட்டுவிட்டோம் என்பதை அறிந்தவுடன் தனது வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுக்கிறார்கள் என்றால், அபூபக்கர்[ரலி] அவர்களின் வாய்மையை எண்ணிப்பாருங்கள்.

சமீபத்தில் ஒரு அறிஞர் இடம், என் தந்தை வட்டியின் மூலம் சம்பாதித்த சொத்து எனக்கு வாரிசு அடிப்படையில் கிடைத்துள்ளது. இது எனக்கு ஆகுமானதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, அது உங்களுக்கு ஆகுமானதுதான்; ஏனெனில் தவறான வழியில் பொருளீட்டியது உங்கள் தந்தைதான். அந்த பாவத்திற்கு அவர்தான் பொறுப்பாளி. உங்களுக்கு அதில் சம்மந்தமில்லை. எனவே வாரிசு அடிப்படையில் கிடைத்த அந்த சொத்து உங்களுக்கு ஆகுமானதே! என்று அந்த அறிஞர் பதிலளித்தார்.
நன்றாக கவனிக்கவேண்டும் கொடிய வட்டியின் மூலம் சேர்த்த பொருள் ஆள் மாறும்போது ஆகுமாகிவிடுகிறது என்று ஃபத்வா வழங்கும் அறிஞர்கள் வாழும் காலத்தில் நாம் இருக்கிறோம்.
ஆனால், தனது அடிமை தவறான வழியில் பொருளீட்டிய தொகையில் உண்பதை வெறுத்த அபூபக்கர் ரலி அவர்கள் எங்கே!
வரதட்சனை உணவு வீட்டு தேடி வந்தால் அது அன்பளிப்பு; ஆள்மாறி விட்டால் [அது எந்த வழியில் சம்பாதித்ததாக இருந்தாலும்] ஆகுமானது என்று பத்வா வழங்கும் மேதைகள் எங்கே!
யார் மேன்மக்கள்..? அந்த சத்திய ஸகாபாக்கள் அல்லவா!

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

இன்றைய உலகில் எவ்வரும் செய்யமுடியா தியாகமல்லவா இது..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
"(நபிமொழிகளை) அதிகமாக அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறாரே" என்று மக்கள் (என்னைப் பற்றிக் குறை) கூறிக் கொண்டிருந்தார்கள். நான் என் பசி அடங்கினால் போதும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களுடனேயே எப்போதும் இருந்து வந்தேன். புளித்து உப்பிய (உயர்தரமான) ரொட்டியை நான் உண்பதுமில்லை; கோடுபோட்ட அழகிய (உயர்ந்த) துணியை அணிவதுமில்லை. இன்னவனோ, இன்னவளோ எனக்குப் பணிவிடை செய்வதுமில்லை. பசியின் காரணத்தால் நான் என் வயிற்றில் கூழாங்கற்களை வைத்துக் கட்டிக் கொண்டிருந்தேன். என்னை ஒருவர் (தன் இல்லத்திற்கு) அழைத்துச் சென்று, எனக்கு அவர் உணவளிக்க வேண்டும் என்ப(தை உணர்த்துவ)தற்காக (' எனக்கு விருந்தளியுங்கள்' என்ற பொருள் கொண்ட 'அக்ரினீ' என்னும் சொல்லை சற்று மாற்றி)' அக்ரிஃனீ' எனக்கு ஓர் இறை வசனத்தை ஓதிக்காட்டுங்கள் - என்பேன். அவ்வசனம் என்னுடன் (முன்பே மனப்பாடமாக) இருக்கும் . ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) ஏழைகளுக்கு மிகவும் உதவுபவராயிருந்தார். அவர் எங்களை அழைத்துச் சென்று தம் வீட்டில் இருக்கும் உணவை எங்களுக்கு அளிப்பார். எந்த அளவிற்கென்றால் அவர் எதுவுமில்லாத (காலியான) நெய்ப் பையை எங்களிடம் கொண்டு வந்து அதைப் பிளந்து விடுவார். நாங்கள் அதில் (ஒட்டிக் கொண்டு) இருப்பதை நக்கி உண்போம்.

ஆதாரம்;புஹாரி எண் 3708

நபிமொழிகளில் பெரும்பான்மையான செய்திகளை மனனம் செய்து அதை வருங்கால சமூகத்திற்கு தந்த சிறப்பிற்குரிய அபூஹுரைரா[ரலி] அவர்களின் வறுமைநிலையை நினைத்தாலே கல்நெஞ்சமும் கண்ணீர் வடிக்கும். இந்த நிலையிலும் எனக்கு உணவளியுங்கள் என்று வாய்திறந்து கேட்காத அவர்களின் தன்மான உணர்வு மெய்சிலிர்க்கவைக்கிறது. இந்த தியாக சீலரின் அந்தஸ்தை பெற நாம் கோடிகளை கொட்டினாலும் எட்டமுடியுமோ..?

புதன், 26 ஆகஸ்ட், 2009

இறைத்தூதரின் பெரிய தந்தையின் சிறப்பு!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்;
மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்படும்போது உமர் இப்னு கத்தாப்(ரலி), அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) அவர்களை (அல்லாஹ்விடம்) மழை கோரிப் பிரார்த்திக்கும்படி கேட்பார்கள். (அத்தகைய சந்தர்ப்பங்களில்) உமர்(ரலி), 'இறைவா! நாங்கள் எங்கள் நபி(ஸல்) உயிருடன் இருந்த போது) அவர்கள் (உன்னிடம் பிரார்த்தித்தன்) மூலம் உன்னிடம் நாங்கள் உதவி கோரி வந்தோம். அப்போது (அதை ஏற்று) நீயும் எங்களுக்கு மழை பொழிவித்து வந்தாய். இப்போது எங்கள் நபியின் பெரிய தந்தை (அப்பாஸ் - ரலி - அவர்கள் உன்னிடம் பிரார்த்திப்பதன்) வாயிலாக உன்னிடம் (மழை பொழியும்படி) கோருகிறோம். எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக!" என்று கேட்பார்கள். அதன்படியே மக்களுக்கு மழை பொழிவிக்கப்பட்டு வந்தது.

ஆதாரம்;புஹாரி எண் 3710
இந்த செய்தியில், நபி[ஸல்] அவர்களின் மரணத்திற்கு பின்னால் அவர்களின் பெரியதந்தை அப்பாஸ்[ரலி] அவர்களை முன்னிறுத்தி மழைவேண்டி பிரார்த்தித்தவுடன் இறைவன் மழையை இறக்குகிறான் எனில், அப்பாஸ்[ரலி] அவர்களின் சிறப்பையும்- அவர்களின் இறையச்சத்தையும் விளங்கமுடிகிறது. அதோடு அந்த உத்தமத்தோழர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டதும் புலப்படுகிறது.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

நபி[ஸல்] அவர்களால் அடுத்த வழிகாட்டியாக அடையாளம் காட்டப்பட்டவர்!

ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, 'நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லையென்றால்...?' என்று, - நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பது போல்- கேட்டாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ என்னைக் காணவில்லையென்றால் அபூபக்ரிடம் செல்" என்று பதில் கூறினார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 3659

இந்த பொன்மொழியில் நபி[ஸல்] அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தனக்கு பின்னால் தகுதியுடைய வழிகாட்டியாக அபூபக்கர்[ரலி] அவர்களை அடையாளம் காட்டியதன் மூலம் நபி[ஸல்] அவர்களின் சமுதாயத்தில் எட்டிப்பிடிக்க முடியாத சிறப்புக்குரியவர் அபூபக்கர்[ரலி] அவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளதை புரிந்து கொள்ளலாம்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

இறைத்தூதரின் இனிய தோழர்களோடு தோழமை கொண்டாலே வெற்றிதான்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போருக்குச் செல்வார்கள். அப்போது, (அவர்கள் யார் மீது படையெடுத்துச் செல்கிறார்களோ) அவர்கள், 'உங்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா?' என்று கேட்பார்கள். 'ஆம், இருக்கிறார்கள்" என்று (போரிடச் சென்ற) அவர்கள் பதில் செல்வார்கள். உடனே, போருக்குச் சென்ற அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்வார்கள். (அவர்களிடம்), 'உங்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கிறார்களா?' என்று கேட்கப்படும். போருக்குச் சென்றவர்கள், 'ஆம், இருக்கிறார்கள்" என்று சொல்வார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதருடைய தோழர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களுடன், தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கின்றனரா?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், 'ஆம், இருக்கிறார்கள்" என்று பதிலளிப்பார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்.

ஆதாரம் புஹாரி;எண் 3649

இந்த பொன்மொழியில், நபி[ஸல்] அவர்களின் காலத்திற்கு பின்னால் போருக்கு செல்லும் படையில் நபித்தோழர்கள் இடம்பெற்றிருந்தால் அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும் என்றும், பின்னாளில் போருக்கு செல்லும் படையில் சகாபாக்களோடு தோழமை கொண்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும் என்றும், பின்னாளில் சகாபாக்களின் தோழர்களோடு தோழமை கொண்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும் என்றும் விளங்கமுடிகிறது. பூவோடு சேர்ந்த நாறும் மனம் பெறும் என்பது போன்று சகாபாக்கள் என்ற உத்தமர்களின் தோழமையால்-சகாபாக்களோடு தோழமை கொண்டவர்களின் தோழமையால் மற்றவர்களுக்கும் சிறப்பு கிடைக்கிறது என்பதை பார்க்கும்போது, நபி[ஸல்] அவர்களின் தோழர்களின் சிறப்பை புரிந்துகொள்ள முடிகிறது.

சனி, 22 ஆகஸ்ட், 2009

இரு கண் எனக்கிருந்தால் இறைவழியில் போரிட்டிருப்பேனே!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார்கள்;
நான் மர்வான் இப்னு ஹகமைப் பள்ளிவாசலில் பார்த்தேன். நான் அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர் எங்களுக்கு அறிவித்தார். ஸைத் இப்னு ஸாபித்(ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு, 'இறைநம்பிக்கை கொண்டவர்களில் (அறப்போர் புரியச் செல்லாமல் தங்கள் இருப்பிடத்திலேயே) தங்கிவிட்டவர்களும் இறைவழியில் போரிடச் சென்றவர்களும் சமஅந்தஸ்துடையவர்களாக மாட்டார்கள்" என்னும் (திருக்குர்ஆன் 04:95) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக் காட்டிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னால் அறப்போரில் கலந்து கொள்ள முடியுமென்றால் நான் அறப்போரில் பங்கெடுத்திருப்பேன்" என்று கூறினார்கள். அவர் கண்பார்வையற்ற மனிதராக இருந்தார். எனவே, அப்போது அல்லாஹ் தன் தூதருக்கு (வேத வெளிப்பாட்டை) அருளினான். நபி(ஸல்) அவர்களின் தொடை அப்போது என் தொடையின் மீதிருந்தது. (வேத வெளிப்பாடு வரத் தொடங்கிய காரணத்தால்) அது என் மீது (கனத்துப் போய்) கடுமையாக (அழுத்த) ஆரம்பித்தது. எந்த அளவிற்கென்றால் நான் என் தொடையின் மீதிருந்தது. (வேத வெளிப்பாடு வரத் தொடங்கிய காரணத்தால்) அது என் மீது (கனத்துப் போய்) கடுமையாக (அழுத்த) ஆரம்பித்தது. எந்த அளவிற்கென்றால் நான் என் தொடை நசுங்கி விடும் என்று அஞ்சினேன். பிறகு அவர்களுக்கு (இந்நிலை நீக்கப்பட்டு) லேசாக்கப்பட்டது. அப்போது அல்லாஹ், 'தகுந்த காரணமின்றி (தங்கிவிட்டவர்கள்)" என்னும் வாசகத்தை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.

ஆதாரம்;புஹாரி எண் 2832

இறைவழியில் போரிட்டவர்களும்-போருக்கு செல்லாமல் தங்கிவிட்டவர்களும் சம அந்தஸ்துடையவர்கள் ஆகமாட்டார்கள் என்ற இறைவசனம் இறங்கிய மாத்திரமே, இரு கண்களும் தெரியாத அப்துல்லா இப்னு உம்மிமக்தும்[ரலி] அவர்கள், அந்த அறப்போர் புரிந்த தியாகிகளுடைய அந்தஸ்து நமக்கு கிடைக்காமல் போய்விட்டதே என்ற வேதனையோடு இறைத்தூதரிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னால் அறப்போரில் கலந்து கொள்ள முடியுமென்றால் நான் அறப்போரில் பங்கெடுத்திருப்பேன்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது வல்ல ரஹ்மான், அப்துல்லாஹ் இப்னு உம்மிமக்தூம்[ரலி] அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் 'தகுந்த காரணமின்றி' என்ற வாசகத்தை வசனமாக இறக்கி அருள்கிறான் என்றால், இந்த செய்தியில் நாம் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்[ரலி] அவர்களின் ஆர்வத்தை கவனிக்க கடமைப்பட்டுள்ளோம். கண்பார்வையில்லா நிலையிலும் அறப்போரில் பங்கெடுக்க முடியவில்லையே என்று வேதனை பட்டார்களே! அதுதான் ஈமானிய உறுதி! இன்றைக்கு நாடுகளாலும், செல்வத்தாலும், வலிமையாலும், தளவாடங்களாலும் ஓரளவு வலிமை பெற்ற நிலையிலும், 'எதிரியின் படையின் எண்ணிக்கையில் பாதி அளவு படை இருந்தாலே போர் கடமை' என்று நமக்கு நாமே ஃபத்வா வழங்கிக்கொண்டு, உலக அளவில் முஸ்லிம்களின் ரத்தம் ஆறாக ஓட்டப்படுவதை பார்த்து கண்மூடி இருக்கிறோமே நாம் தான் கண்ணிருந்தும் குருடர்கள். ஆனால் கண் பார்வையில்லாத நிலையிலும் தனது எண்ணத்தால் அப்துல்லாஹ் இப்னு உம்மிமக்தூம் [ரலி] அவர்கள், எங்கோ உச்சத்திற்கு சென்றுவிட்டார்கள்.

அல்லாஹ் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்[ரலி] அவர்களை பொருந்திக்கொள்வானாக!

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

சிறந்த செல்வமாக இருப்பினும் அதை இறைவழியில் செலவு செய்தவர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;
(என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) கையில் கைபரில் ('ஃதம்ஃக்' என்னும்) ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அதன் விஷயத்தில் ஆலோசனை பெறுவதற்காக நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. எனவே, அதை நான் என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொண்டு அதன் விளைச்சலை தர்மம் செய்யுங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்களும் 'அதை (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப்பாக வழங்கக் கூடாது; வாரிசுச் சொத்தாகவும் எவருக்கும் அதை வழங்கக் கூடாது' என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கினார்கள். அ(தன் வருமானத்)தை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப் போக்கர்களுக்கும், விருந்தினர்களுக்கும் தர்மம் செய்தார்கள். அதைப் பராமரிக்கப் பொறுப்பேற்றிருப்பவர், அதிலிருந்து நியாயமான அளவில் உண்பதிலும் (அதிலிருந்து எடுத்துத் தனக்கென்று) சேகரித்து வைக்காமல், படாடோபமாகச் செலவிடாமல் பிறருக்கு உணவளிப்பதிலும் குற்றமில்லை (என்றும் எழுதி வைத்தார்கள்.)

ஆதாரம்;புஹாரி எண் 2737

நமக்கு ஒரு செல்வம் கிடைக்குமென்றால் அந்த செல்வத்தை மட்டுமன்றி அதன்மூலம் தொடர்ந்து கிடைக்கும் வருவாயையும் நம் வாரிசுகள் அனுபவிக்க வகை செய்து உயில் எழுதுவோம். ஆனால் உமர்[ரலி] அவர்கள், ஒரு சிறந்த செல்வம் தமக்கு கிடைத்தபோது, இதை இறைவழியில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து நபி[ஸல்] அவர்களிடம் கேட்டு, நப[ஸல்] அவர்கள் தந்த ஆலோசனைப்படி, அந்த செல்வத்தை தனது வாரிசுகளுக்கு உடமையாக்கிவிடாமல், அந்த செல்வத்தின் மூலம் வரும் வருமானத்தை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப் போக்கர்களுக்கும், விருந்தினர்களுக்கும் தர்மம் செய்தார்கள் எனில், உமர்[ரலி] என்ற இந்த உத்தமத்தோழர் இவ்வுலக செல்வத்தை பிரதானமாக கருதவில்லை. மாறாக அச்செல்வத்தை இறைவழியில் செலவு செய்வதன் மூலம் மறுவுலக செல்வத்தை சேமிப்பதையே விரும்பியிருக்கிறார்கள். அதில் திருப்தியும் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து நாமும் உமர்[ரலி] அவர்களின் வழியில் இறைவழியில் செலவிட முயற்ச்சிப்போமாக!

புதன், 19 ஆகஸ்ட், 2009

மரணவேளையிலும் மகத்தான இறைவனை வணங்கிய மாவீரர்!


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் (பத்துப் பேர் கொண்ட) உளவுப் படையொன்ற (ஓரிடத்திற்கு) அனுப்பினார்கள். உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களின் புதல்வர் ஆஸிமீன்(தாய் வழிப்)பாட்டனார் ஆஸிம் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை அப்படையினருக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து) மக்காவுக்கும் உஸ்ஃபானுக்கும் இடையிலுள்ள ('ஹத்தா' என்ற) இடத்தில் இருந்தபோது 'ஹுதைல்' குலத்தைச் சேர்ந்த பனூ லிஹ்யான் என்றழைக்கப்பட்ட கிளையினருக்கு அவர்களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், அப்பெய்யும் வீரர்கள் சுமார் நூறு பேருடன் (கிளம்பி உளவுப்படையினரைப் பிடிப்பதற்காக) அவர்களின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்தனர். உளவுப்படையினர் இறங்கித் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். படையினர் மதீனாவிலிருந்து உணவாகக் கொண்டுவந்திருந்த பேரீச்சம் பழங்களின் கொட்டைகளை அங்கே கண்டனர். அப்போது 'இது 'யஸ்ரிப்' (மதீனா நகரின்) பேரீச்சம் பழம்" என்று சொல்லிக் கொண்டனர். எனவே, உளவுப்படையினரின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்து, இறுதியில் அவர்களை அடைந்தேவிட்டனர். ஆஸிம்(ரலி) அவர்களை அடைந்தேவிட்டனர். ஆஸிம்(ரலி) அவர்களும், அவர்களின் நண்பர்களும் இதை அறிந்தபோது (மலைப்பாங்கான) உயரமான ஓரிடத்தில் தஞ்சம் புகுந்தனர். அப்போது (துரத்தி வந்த) அந்தக் கிளையினர் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து, 'நீங்கள் எங்களிடம் இறங்கி வந்துவிட்டால், உங்களில் யாரையும் நாங்கள் கொலை செய்ய மாட்டோம் என்று உங்களுக்கு உறுதிமொழியும் வாக்குறுதியும் தருகிறோம்" என்று கூறினர். அப்போது ஆசிம் இப்னு ஸாபித்(ரலி), 'நான் ஓர் இறை மறுப்பாளனின் (வாக்குறுதியை நம்பிஅவனுடைய) பாதுகாப்பில் இறங்கிச் செல்ல மாட்டேன். இறைவா! எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்குத் தெரிவித்து விடு" என்று கூறினார்கள். அப்போது அக்கிளையினர் உளவுப்படையினருடன் சண்டையிட்டு ஆஸிம்(ரலி) அவர்கள உட்பட ஏழுபேரை அம்பெய்து கொன்றுவிட்டனர். இறுதியில் குபைப், ஸைத்(ரலி), மற்றொருவர் மட்டுமே எஞ்சியிருந்தனர். இம்மூவருக்கும் உறுதிமொழியும் வாக்குறுதியின் பேரில் இறங்கி வந்தனர். அவர்கள் (மூவரும்) கையில் கிடைத்தவுடன் (எதிரிகள்) தங்களின் அம்பின் நாணை அவிழ்த்து அதன் மூலம் அவர்களைப் பிணைத்தனர். (இதைக் கண்ட) அந்த மூன்றாம் மனிதர், 'இது முதலாவது நம்பிக்கைத் துரோகம்." என்று கூறி, அவர்களுடன் வர மறுத்துவிட்டார், எனவே, அவரை (அடித்து)த் துன்புறுத்தி தம்முடன் வரும்படி நிர்பந்தித்தனர். ஆனால், அவர் உடன்படவில்லை. எனவே, அவரை அவர்கள் கொலைசெய்துவிட்டனர். பிறகு, குபைப்(ரலி) அவர்களையும், ஸைத் இப்னு தஸினா(ரலி) அவர்களையும் கொண்டு சென்று மக்காவில் விலைக்கு விற்றுவிட்டனர். ஹாரிஸ் இப்னு ஆமிர் இப்னி நவ்ஃபல் என்பவருடைய மக்கள், குபைப்(ரலி) அவர்களை (பழிதீர்ப்பதற்காக) விலைக்கு வாங்கிக் கொண்டனர். (ஏனெனில்,) குபைப்(ரலி) ஹாரிஸ் இப்னு ஆமிரை பத்ருபபோரின்போது கொன்றிருந்தார். ஹாரிஸின் மக்களிடத்தில் குபைப்(ரலி) (புனித மாதங்கள் முடீந்தது) அவரைக் கொல்ல அவர்கள் ஒன்று திரளும் (நாள் வரும) வரையில் கைதியாக இருந்தது வந்தார். (கொல்லப்படும நாள் நெருங்கியபோது தன்னுடைய மறைவான உறுப்புகளிலிருந்த முடிகளை) மழிப்பதற்காக ஹாரிஸின் மகள் ஒருத்தியிடம் சவரக்கத்தி ஒன்றை குபைப்(ரலி) இரவலாகக் கேட்டார். அவளும் அவருக்கு இரவலாகத் தந்தாள். (அதற்குப் பின் நடந்ததை அப்பெண்மணியே விளக்கிக்) கூறுகிறார்கள்:
நான் என்னுடைய சிறிய மகனைக் கவனிக்காமல் இருந்துவிடவே, அவன் (விளையாடிக் கொண்டே) தவழ்ந்து குபைப் அவர்களிடம் வந்து சேர்ந்தான். அவனை குபைப் அவர்கள் தங்களின் மடியில் வைத்தார்கள். (இந்நிலையில்) அவரை நான் பார்த்து பலமாக அதிர்ந்தேன். இதை அவர் புரிந்து கொண்டார். அவரின் கையில் கத்தி இருந்தது. அப்போது அவர், 'இவனை நான் கொன்று விடுபவன் என்று அஞ்சுகிறாயா? அல்லாஹ்வின் நாட்டப்படி நான் அப்படிச் செய்பவன் அல்லன்" என்று கூறினார். குபைபை விடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) கண்டதில்லை. ஒரு நாள் அவர் தம் கையிலிருந்த திராட்சைப் பழக் குலையிலிருந்து (பழங்களைப் பறித்து) சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அந்நாளில் மக்காவில் எந்தப் பழவகையும் இருக்கவில்லை. மேலும், அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். (பிற்காலத்தில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து)" அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு" என்று அந்தப் பெண் கூறிவந்தார். (அவரைக் கொல்வதற்காக - மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே அவரை அவர்கள் கொண்டு வந்தபோது, 'இரண்டு ரக்அத்துகள் நான் தொழுது கொள்ள என்னை விடுங்கள்" என்று குபைப் கேட்டார். (அவர்களும் அனுமதிக்க, குபைப் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்.) பிறகு, அவர்களின் பக்கம் thirumbi , 'நான் மரணத்தைக் கண்டு அஞ்கிறேன் என்று நீங்கள் எண்ணி விடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் (தொழுகையை) அதிகமாக்கியிருப்பேன்" என்று கூறினார். அவர்தான் (இறைவழியில்) கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவதை முன்மாதிரியாக்கியவராவார். பிறகு 'இறைவா! இவர்களை நீ எண்ணி வைத்துக் (கொண்டு, தனித்தனியாக இவர்களைக் கவனித்துக்) கொள்வயாக!" என்று பிரார்த்தித்தார். அதன் பிறகு? 'நான் முஸ்லீமாகக் கொல்லப்படுமபோது எதைப் பற்றியும் நான் பொருட்படுத்தமாட்டேன். எந்த இடத்தில் நான்இறந்தாலும் இறைவனுக்காகவே நான் கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே). நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் தான் எனும்போது, அவன் நாடினால் என்னுடைய துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது தன் அருள்வளத்தைப் பொழிவான்" என்று (கவிபாடிக்) கூறினார்கள். பிறகு, உக்பா இப்னு ஹாரிஸ் என்பவன் குபைப்(ரலி) அவர்களிடம் வந்து, அவர்களைக் கொன்றுவிட்டான். மேலும், (ஆஸிம் இப்னு ஸாபித்(ரலி) கொல்லப்பட்டுவிட்ட செய்தி குறைஷிகளுக்குக் கிடைத்தபோது அவர்கள் அவரை அடையாளம் கண்டு கொள்வதற்காக அவரின் உடலில் ஓர் உறுப்பை எடுத்து வரும்படி ஆளனுப்பினார்கள். (ஏனெனில்,) ஆஸிம்(ரலி) பத்ருப் போரின்போது அவர்களின் தலைவர்களில் ஒருவரை கொலை செய்திருந்தார். (அவரின் உடலின் ஒரு முக்கிய உறுப்பை வெட்ட போன போது) ஆஸிம்(ரலி) அவர்களுக்கு மேல் (அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில்) அல்லாஹ் மேகத்தைப் போன்று ஆண் தேனீக்களை அனுப்பினான். குறைஷிகளின் தூதர்களிடமிருந்து ஆஸிம்(ரலி) அவர்களை (சூழ்ந்து கொண்டு) அவை பாதுகாத்தன. எனவே, அவரிடமிருந்து எதையும் எடுக்க அவர்களால் இயலவில்லை.

ஆதாரம் புஹாரி எண் 4086
இந்த செய்தியில் பல படிப்பினைகள் உள்ளன. முதலாவது ஒரு இறை மறுப்பாளனை நம்பி, அவனது வாக்குறுதியை நிறைவேற்றுவான் என்று நம்பி அவனிடம் சரணடைவதைவிட, அவனுடன் போரிட்டு வீரமரணம் அடைவது சிறந்தது. அதைத்தான் இக்குழுவின் தலைவர் ஆஸிம் இப்னு ஸாபித்[ரலி] அவர்கள் உளிட்ட ஏழு பேர் செய்து ஷகீதானார்கள்.

இரண்டாவதாக, ஒரு இறை மறுப்பாளனை நம்பி சரணடைந்தால் கூட, அவன் வாக்குறுதி மீறும்போது அதற்கு கட்டுப்படாமல், உயிர்த்தியாகம் செய்வது சிறந்தது. அதைத்தான் அந்த மூன்றாமவர் செய்தார்.

மூன்றாவதாக ஒரு இறை மறுப்பாளனிடம் சரணடைந்தால்கூட தம் உயிர் பிரியும் நிலைவந்தாலும் நாம் இறைவனுக்காகவே உயிர் துறக்கிறோம் என்ற சிந்தனை வரவேண்டும். அது குபைப்[ரலி] அவர்களுக்கு அதிகமாகவே இருந்தது. மேலும், அந்த கயவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு குபைப்[ரலி] அவர்களுக்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது. அது என்னவெனில், குபைப்[ரலி] அவர்களை கொல்லப்போகும் குடும்பத்தை சேர்ந்த குழந்தை குபைப்[ரலி] அவர்களிடம் வந்தபோது அதை பணயமாக வைத்து குபைப்[ரலி] தப்பியிருக்கமுடியும். ஆனாலும் அது ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு அழகல்ல என்பதால் உயிர் துரப்பதையே உயர்வாக கருதினார்கள் குபைப்[ரலி] அவர்கள். மேலும், எனது உயிர் எங்கு பிரிந்தாலும் அது என் இறைவனுக்காகவே பிரிகிறது என்பதால் எனக்கு மகிழ்ச்சியே என்றார்கள். அதோடு மரணம் எதிர்நோக்கியுள்ள இறுதி மணித்துளியிலும் இறைவனை இரு ரக்அத்துகள் தொழுது பிரார்த்திக்கிறார்கள் எனில், அந்த குபைப்[ரலி] அவர்களின் தியாக மனப்பான்மை-இறையச்சம் நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். தொழுகையை வேண்டுமென்றே கோட்டைவிட்டுவிட்டு வருடத்தில் இருநாள் தொழுபவர்களும் , வாரத்தில் ஒருநாள் தொழுபவர்களும் குபைப்[ரலி] அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை பெறவேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் குபைப்[ரலி] உள்ளிட்ட இந்த பத்து வீரர்களையும் பொருந்திக்கொள்வானாக!

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

இறைத்தூதரின் பெயரை இதயத்தில் மட்டுமல்ல. எழுத்திலும் அழிக்கமாட்டேன்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாக்காரர்களிடம் (மக்காவாசிகளான குறைஷிகளிடம் ஹுதைபிய்யா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்தபோது அலீ இப்னு அபீ தாலிப்(ரலி), அவர்களிடையிலான ஒப்பந்தப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று அவர்கள் எழுத, இணைவைப்பவர்கள், 'அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று எழுதாதீர்கள்" (என்று சொல்லிவிட்டு) முஹம்மத்(ஸல்) அவர்களை நோக்கி), 'நீர் அல்லாஹ்வின் தூதரக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்க மாட்டோம்" என்று கூறினர். எனவே, நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம், 'அதை அழித்து விடுங்கள்" என்று கூறினார்கள். அலீ(ரலி), 'நான் அதை (ஒருபோதும்) அழிக்கப் போவதில்லை" என்று கூறிவிட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் திருக்கரத்தால் அதை அழித்தார்கள்.

ஆதாரம்;புகாரி எண் 2698

ஹுதைபியா உடன்படிக்கையை எழுதிய அலீ[ரலி] அவர்கள், அதில் எழுதப்பட்ட அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் என்ற வாசகத்தை அழிக்குமாறு குறைஷிகளின் வேண்டுகோளின்படி நபி[ஸல்] அவர்கள் அழிக்குமாறு கட்டளையிட்டபின்னும் அல்லாஹ்வின் தூதர் என்ற வாசகத்தை அழிக்கமாட்டேன் என்று உறுதியாக கூறிய அலீ[ரலி] அவர்களின் உள்ளத்தில்தான் எத்துனை ஈமானிய உறுதி பாருங்கள்! அல்லாஹ்வின் தூதராக நபி[ஸல்] அவர்களை ஏற்றபின், அவர்களின் பெயரை எங்கள் இதயத்திலிருந்து மட்டுமல்ல ஏட்டிலிருந்து கூட அழிக்கமாட்டோம் என்ற அலீ[ரலி] அவர்களின் இந்த ஈமானிய உறுதி நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

சஹாபாக்களின் தவறுகளை மேலோட்டமாக பார்க்கலாகாது!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
உஸ்மான் இப்னு மவ்ஹப்(ரலி) அறிவித்தார்கள்;
எகிப்துவாசியான ஒருவர் வந்து, (கஅபா எனும்) இறையில்லத்தை ஹஜ் செய்தார் அப்போது ஒரு கூட்டம் அமர்ந்திருப்பதைக் கண்டு, 'இந்தக் கூட்டத்தார் யார்?' என்று கேட்டதற்கு மக்கள், 'இவர்கள் குறைஷிகள் என்று பதில் கூறினார்கள். அப்போது, 'இவர்களில் முதிர்ந்த அறிஞர் யார்" என்று அவர் கேட்டதற்கு மக்கள், ' அப்துல்லாஹ் இப்னு உமர்" என்று பதில் அளித்தார்கள். உடனே அவர் அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களை நோக்கி,
'இப்னு உமர் அவர்களே நான் உங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்கிறேன். நீங்கள் எனக்கு அதைப்பற்றிச் சொல்லுங்கள். உஸ்மான்(ரலி) உஹுதுப் போர்க்களத்திலிருந்து வெருண்டோடியதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) 'ஆம் அறிவேன்" என்று பதில் அளித்தார்கள். அப்போது அவர் 'உஸ்மான்(ரலி) பத்ர் போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டார்கள் என்பது தங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டடார். அற்கு இப்னு உமர்(ரலி) 'ஆம் தெரியும்" என்று பதில் அளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் அவர், 'ஹுதைபியாவில் நடந்த பைஅத்துர் ரிள்வான் சத்தியப் பிரமாணத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பது தங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்க ஆம் தெரியும் என்று பதில் அளித்தார்கள். (இவற்றைக் கேட்டுவிட்டு உஸ்மான்(ரலி) தாம் நினைத்தது போன்றே இவ்வளவு குறைகளுள்ளவர்தாம் என்று தொனிக்கும் படி) அந்த மனிதர், அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப்பெரியவன் என்று என்று கூறினார். அப்போது இப்னு உமர்(ரலி),
'வாரும்! (இவற்றிலெல்லாம் உஸ்மான்(ரலி) ஏன் பங்கு பெறவில்லை என்பதை உனக்கு நான் விளக்குகிறேன். அவர்கள் உஹத் போரின்போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரின் பிழையைப் பொறுத்து மன்னித்துவிட்டான் என்று நானே சாட்சியாக இருக்கிறேன். பத்ர் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், நபி(ஸல்) அவர்களின் மகள் (ருகய்யா(ரலி)) உஸ்மான்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (அவர்கள்) அப்போது நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் பத்ர் போரில் பங்கெடுத்த ஒருவருக்குரிய (மறுமைப்) பலனும், (போர்ப் பொருளில்) உங்களுக்கான பங்கும் கிடைக்கும் (நீங்கள் உங்களுடைய மனைவியைக் கவனியுங்கள்) என்றார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை.) பைஅத்துர் ரிள்வான் சத்தியப்பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம் உஸ்மான்(ரலி) அவர்களையும் விட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) அப்படி இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்கள், குறைஷிகளிடம் பேசுவதற்கு தம் தூதராக அவரை) அனுப்பி இருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை.) எனவேதான், நபி(ஸல்) அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும் இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான்(ரலி) மக்காவிற்குள் போனபின்னர்தான் நடந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் வலக்கரத்தை சுட்டிக் காண்பித்து இது உஸ்மானுடைய கை என்று கூறி அதை தம் இடக்கரத்தின் மீது தட்டினார்கள். பிறகு, இப்போது நான் செய்யும் சத்தியப்பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்" என்றார்கள். என இப்னு உமர்(ரலி) கூறிவிட்டு, (உஸ்மான்(ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணி வைத்திருந்த) அந்த மனிதரிடம், 'நான் இப்போது சொன்ன பதில்களை நீ எடுத்துச் செல்லலாம்" என்று கூறினார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 3699

உஸ்மான்[ரலி] அவர்கள் சம்மந்தமாக சில விசயங்களை மேலோட்டமாக அறிந்து அதன் காரணமாக உஸ்மான்[ரலி] அவர்களை தாழ்வாக எண்ணியவருக்கு, உஸ்மான்[ரலி] அவர்கள் அந்த காரியங்களை எதற்காக செய்யநேர்ந்தது என்பதை இப்னு உமர்[ரலி] அவர்கள் விளக்கி கூறி அங்கே உஸ்மான்[ரலி] அவர்களின் கண்ணியத்தை சம்மந்தப்பட்டவருக்கு உணர்த்துகிறார்கள். இதிலிருந்து புரிவது என்ன? சகாபாக்கள் சம்மந்தமாக அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்று மேலோட்டமாக கூறப்படுவதை நம்பி அவர்களை இழிவாக கருதக்கூடாது. அவர்களின் கண்ணியத்திலும், மேன்மையிலும் சந்தேகம் கொள்ளக்கூடாது. மாறாக, சகாபாக்கள் விஷயத்தில் சொல்லப்படுவதை தீர ஆராயவேண்டும். அறிந்தவர்களிடம் கேட்டு தெளிவு பெறவேண்டும். அதையும் தாண்டி அவர்கள் தவறு செய்தார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டாலும் அவர்களை குற்றவாளிகளாக அடையாளம் காட்டவோ, அல்லது விமர்சிக்கவோ நமக்கு அனுமதி இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

சமாதானத்தின் இலக்கணம் ஹஸன்(ரலி)!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
ஹஸன் பஸரீ(ரஹ்) அறிவித்தார்;
அலீ(ரலி) அவர்களின் மகனான ஹஸன்(ரலி), முஆவியா(ரலி) அவர்களை மலைகளைப் போன்ற (பிரம்மாண்டமான) படையணிகளுடன் எதிர்கொண்டார்கள். (அவற்றைக் கண்ட முஆவியா(ரலி) அவர்களின் ஆலோசகர்) அம்ர் இப்னு ஆஸ்(ரலி), 'இவற்றில் உள்ள (போரிடுவதிலும், வீரத்திலும்) சமபலம் வாய்ந்தவர்களை நீங்கள் கொன்று விடாதவரை இந்தப் படைகள் பின்வாங்கிச் செல்லாது என்று கருதுகிறேன்" என்று கூறினார்கள். அவருக்கு முஆவியா(ரலி) அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்விருவரில் முஆவியாவே, சிறந்தவராக இருந்தார்..." அம்ரே! இவர்கள் அவர்களையும் அவர்கள் இவர்களையும் கொன்று விடுவார்களாயின் மக்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்க என்னிடம் வேறு யார் இருப்பார்கள்? (என் குடி) மக்களின் பெண்களைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் இருப்பார்கள்? அவர்களின் சொத்துகளைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் தான் இருப்பார்கள்?' என்று பதிலளித்தார்கள். எனவே, ஹஸன்(ரலி) அவர்களிடம் குறைஷிகளில் பனூ அப்தி ஷம்ஸ் கிளையாரைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னி குரைஸ்(ரலி) அவர்களையும் அனுப்பி, 'நீங்கள் இருவரும் இந்த மனிதரிடம் சென்று விபரத்தை எடுத்துரைத்துப் பேசி, அவரிடம் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) கோருங்கள்" என்று கூற, அவ்விருவரும் (அவ்வாறே) ஹஸன்(ரலி) அவர்களிடம் சென்று, அவர்களின் அறைக்குள் நுழைந்து பேசினார்கள்; ஹஸன்(ரலி) அவர்களிடம் (முஅவியா(ரலி) அவர்களின் தூதை எடுத்துச்) சொல்லி (அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வரும்படி) கோரினார்கள். அதற்கு அவ்விருவரிடமும் ஹஸன்(ரலி), 'நாங்கள் அப்துல் முத்தலிபின் மக்கள்; இந்த செல்வத்தை (எங்கள் தலைமைத்துவத்தின் காரணத்தால்) பெற்றிருக்கிறோம். (அதை எங்கள் குடிமக்கள், படைவீரர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே செலவு செய்து வருகிறோம்.) இந்தச் சமுதாயமோ தன் இரத்தத்தை சிந்திப் பழகிவிட்டது" என்று கூறினார்கள். இதற்கு அவ்விருவரும், 'முஆவியா(ரலி) உங்களுக்கு இவ்வளவு (மானியம்) தருவதாகக் கூறுகிறார்கள்; மேலும் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) உங்களிடம் கோருகிறார்கள்" என்று கூறினர். அதற்கு ஹஸன்(ரலி), 'இந்த விஷயத்தில் எனக்குப் பொறுப்பு யார்?' என்று கேட்க, அவ்விருவரும் 'இதில் உங்களுக்கு நாங்கள் பொறுப்பு" என்று கூறினர். ஹஸன்(ரலி) கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள், 'நாங்கள் உங்களிடம் இதற்குப் பொறுப்பேற்கிறோம்" என்றே கூறினார்கள். இறுதியாக, ஹஸன்(ரலி), முஆவியா(ரலி) அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். மேலும், '(ஒரு முறை) இறைத்தூதர் மிம்பர் மீதிருக்க, அவர்களின் ஒரு பக்கத்தில் ஹஸன் இப்னு அலீ(ரலி) அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களை நோக்கியும், மற்றொரு முறை ஹஸன்(ரலி) அவர்களை நோக்கியும் (உரை நிகழ்த்திய வண்ணம்), 'இந்த என்னுடைய புதல்வர் (கண்ணியத்திற்குரிய) தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு பெரும் கூட்டத்தாரிடையே இவரின் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைக்க விரும்புகிறான்" என்று கூறிக் கொண்டிருந்ததை பார்த்தேன்" என்று அபூ பக்ரா(ரலி) கூறியதை கேட்டேன்.
ஆதாரம்;புஹாரி எண் 2704

இந்த செய்தியில் பெரும்படையுடன் முஆவியா[ரலி] அவர்களை முற்றுகையிட்ட ஹசன்[ரலி] அவர்கள், போர் தவிர்த்து முஆவியா[ரலி] அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து இணக்கத்திற்கு வழிகாணுகிறார்கள் எனில், அந்த நல்லறத்தோழர்கள் என்றுமே தங்களுக்குள் பிரிவினையை விரும்பியதில்லை என்பதை அறியமுடிகிறது. ஆனால், இஸ்லாத்தை தூய வடிவில் சொல்கிறோம் என்று கிளம்பிய தவ்ஹீத்வாதிகளாகிய நமக்குள்தான் குறுகிய காலத்தில் எத்துனை பிளவுகள்..? காரணம் ஹசன்[ரலி] அவர்களைப்போல் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை சமுதாயத்தலைவர்களிடம் இல்லை. பின்பு எப்படி அவர்களது தொண்டர்களிடம் இத்தகைய பண்பை எதிபார்க்கமுடியும்..? ஹசன்[ரலி] அவர்களின் இந்த வரலாறு இயக்கவெறியர்களுக்கு மிகப்பெரிய படிப்பினையாகும்.

அல்லாஹ் ஹசன்[ரலி] மற்றும் முஆவியா[ரலி] ஆகியோரை பொருந்திக்கொள்வானாக!

சனி, 15 ஆகஸ்ட், 2009

உமர்[ரலி] அவர்களின் என்னத்திற்கு ஏற்ப இறைவன் இறக்கிய வசனங்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
'மூன்று விஷயங்களில் இறைவன் என் கருத்துக்கேற்ப 'வஹி' அருளியுள்ளான். அவை, 'இறைத்தூதர் அவர்களே! மகாமு இப்ராஹீம் என்ற இடத்தில் தொழுமிடத்தை நாம் ஆக்கிக் கொள்ளலாமே!' என்று நான் கூறியபோது, 'மகாமு இப்ராஹீமில் நீங்கள் தொழுமிடத்தை ஆக்கிக் கொள்ளுங்கள்!" (திருக்குர்ஆன் 02:125) என்ற வசனம் அருளப்பட்டது. 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் மனைவியருடன் உரையாட வருபவர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர். எனவே தங்களை அன்னிய ஆண்களிடமிருந்து மறைத்துக் கொள்ளுமாறு தங்களின் மனைவியருக்கு தாங்கள் உத்திரவிடலாமே!' என்றேன். அப்போது ஹிஜாப் (பர்தா) பற்றிய வசனம் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் மனைவியர் அனைவரும் சேர்ந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஆத்திரமூட்டும் விதமாக நடந்தபோது நபி(ஸல்) அவர்கள் 'உங்களை விவாகரத்துச் செய்தால் உங்களை விடச் சிறந்த மனைவியரை உங்களுக்குப் பதிலாக இறைவன் அவர்களுக்கு ஆக்கிவிடுவான்' என்று கூறினேன். நான் கூறியவாறே (திருக்குர்ஆன் 66:05) வசனம் அருளப்பட்டது" என உமர்(ரலி) அறிவித்தார்.

ஆதாரம்;புஹாரி எண் 402

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

பதவி மறுமையில் பாதகத்தை ஏற்படுத்திவிடுமோ என்று அஞ்சிய உமர்[ரலி]!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;
உமர்(ரலி) அவர்களிடம் (அன்னார் தாக்கப்பட்டபோது) 'நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமிக்கக் கூடாதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது); ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவரான அபூ பக்ர்(ரலி) அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள். (எவரையும் ஆட்சித் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான்விட்டுவிட்டாலும் (அதுவும் தவறாகாது); ஏனெனில், என்னைவிடச் சிறந்தவர்களான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்விதம் தான் (யாரையும் நியமிக்காமல்)விட்டுச் சென்றிருக்கிறார்கள்' என்றார்கள். உடனே நபித்தோழர்கள் உமர்(ரலி) அவர்களைப் பாராட்டினார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள், '(என் கருத்து) பிடித்தோ பிடிக்காமலோ (என்னை நீங்கள் பாராட்டுகிறீர்கள். நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிலிருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போது (தான் பதவியைச் சுமந்தேன் என்றால், எனக்குப் பின் ஒருவரை நியமிப்பதன் மூல)ம் இறந்த பிறகும் இதைச் சுமக்க நான் தயாராயில்லை' என்று கூறினார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 7218

பதவிக்கு வருபவர்கள் அந்த பதவியை இந்த உலகில் சுகவாழ்க்கை வாழ்வதற்கான கருவியாக பயன்படுத்திவரும் நிலையை பார்க்கிறோம். ஆனால் சுவனம் வாக்களிக்கப்பட்ட உமர்[ரலி] அவர்கள், இந்த பதவி எனக்கு மறுமையில் பாதகத்தை ஏற்படுத்தாமல் நான் தப்பித்தாலே போதும் என்று கூறியதோடு, அடுத்த ஆட்சி தலைவராக நான் யாரையாவது தேர்ந்தெடுத்து அதற்காகவும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல நான் விரும்பவில்லை என்ற ரீதியில் பதிலளித்ததை பார்க்கும்போது, அந்த நல்லற தோழர்கள் பதவியை முள் படுக்கையாகவே கருதிவந்துள்ளனர். நம்மைபோல் சுகம்தரும் மஞ்சமாக அதை கருதவில்லை என்பதை உணரவேண்டும். மேலும், இன்று நம்முடைய அறிஞர்களில் சிலரும், தவ்ஹீத்வாதிகளில் சிலரும் மற்றவர்களை தனக்கு சமமாக கருதுவதில்லை.மதரசாவில் படித்து பட்டம் வாங்காத ஒருவன் ஒரு அறிஞரை நோக்கி கேள்வி எழுப்பினால், 'இவனுக்கு நான் பதிலளிப்பதா? என்னுடய தொண்டர்கள் பதிலளிப்பார்கள் என்று மாற்றாரை இழிவாக கருதுவதை பார்க்கமுடிகிறது. ஆனால் 'உமரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான்' என்று நபியவர்களால் சிலாகித்து சொல்லப்பட்ட உமர்[ரலி] அவர்கள், அபூபக்கர்[ரலி] அவர்களை பற்றி குறிப்பிடும்போது, 'என்னை விட சிறந்தவர்' என்று கூறி தன்னுடைய சக தோழரை கண்ணியப்படுத்திய உமர்[ரலி அவர்களின் இந்த வாழ்க்கையில், 'தலைக்கனம்' பிடித்து திரிபவர்களுக்கு தக்க படிப்பினை உள்ளது.

அல்லாஹ் உமர்[ரலி] அவர்களை பொருந்திக்கொள்வானாக!

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

அடக்கத்தின் உறைவிடம் அஸ்மா[ரலி]

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ


அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்;
என்னை ஸ¤பைர் இப்னு அவ்வாம்(ரலி) (மக்காவிலிருக்கும் போதே) மணந்துகொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரின் குதிரையையும் தவிர வேறு எச்சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரின் தோல் சுமலையைத்தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து - நானே பேரிச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலை மீது வைத்துச் சுமந்துவருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது.

(ஒரு நாள்) நான் என் தலை மீது பேரிச்சங்கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந்தேன். (வழியில்) நான், இறைத்தூதர்(ஸல்) அவர்களை, (அவர் தம் தோழர்களான அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். என்னை தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக, 'இஃக், இஃக்' என்ற சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும், நான் (என் கணவர்) ஸ¤பைர்(ரலி) அவர்களையும், அவரின் ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக்காரராக இருந்தார். நான் வெட்கப்படுவதைப் புரிந்துகொண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள்.
நான் (என் கணவர்) ஸ¤பைரிடம் வந்து '(வழியில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தலையில் பேரிச்சங்கொட்டைகளிருக்க என்னைச் சந்தித்தார்கள். அவர்களுடன் அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தனர். நான் ஏறிக்கொள்வதற்காக(த் தம் ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன்'' என்று கூறினேன். அதற்கு என் கணவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதைவிட பேரிச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்தது தான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது'' என்று கூறினார்.

ஆதாரம்;புஹாரி எண் 5224

இந்த பொன்மொழியில், சுமார் இரண்டு மைல் தொலைவிலிருந்து தலையில் சுமையுடன் வரும் அஸ்மா[ரலி] அவர்களை தனது ஒட்டகையில் தன்னுடன் வருமாறு நபி[ஸல்] அவர்கள் அழைக்கிறார்கள். நபி[ஸல்] அவர்கள் யார்? அஸ்மா[ரலி] அவர்களின் தந்தை அபூபக்கர்[ரலி] அவர்களின் உற்ற தோழர் மேலும் அஸ்மா[ரலி] அவர்களின் கணவர் ஸுபைர்[ரலி] அவர்களின் தோழரும் கூட. அதுமட்டுமன்றி அஸ்மா[ரலி] அவர்களின் தங்கை அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் கணவர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடுகளவும் கெட்ட எண்ணம் இல்லா இறைத்தூதர். அப்படியிருந்தும் அஸ்மா[ரலி] அவர்கள் வெட்கப்பட்டு,தன் கணவர் ஸுபைர்[ரலி] அவர்களின் ரோசத்தையும் மனதில் கொண்டு நபி[ஸல்] அவர்களோடு பயணிப்பதை தவிர்த்துவிட்டார்கள் எனில், இதுதான் இறையச்சம் கலந்த கற்புநெறி.

இன்றைய நவநாகரீக மங்கையர்களில் பெரும்பாலோர், கணவனின் அண்ணனோடு அல்லது தம்பியோடு அல்லது உடன்பிறவா சகோதரர்களோடு மட்டுமன்றி கணவரின் நண்பர்களோடும் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதையும், மேற்கண்டவர்களோடு சில நேரங்களில் தனியாக பஸ்/ரயில் போன்றவற்றிலும் பயணிப்பதை பார்க்கிறோம். இவ்வாறான செயல்களையுடைய முஸ்லிம் பெண்களும்,

சென்னை போன்ற பெருநகரங்களில் 'ஷேர்ஆட்டோ' வில் அடுத்த ஆண்களோடு பயணிப்பது, நெருக்கடி மிகுந்த பஸ்களில் பயணிப்பது இவ்வாறான செயல்களையுடைய முஸ்லிம் பெண்களும்,

சமுதாய அமைப்புகள் அழைப்பு விடுக்கும் போராட்டங்களுக்கு சென்று, ரோட்டிலே நின்று கொண்டு,அங்கே ஆண்களுக்கு சமாமாக குரலை உயர்த்தி கோஷம் போடுவதோடு அந்நியர்களின் பார்வைக்கும் இலக்காகும் முஸ்லிம் பெண்களும்,

இந்த அஸ்மா[ரலி] அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை பெறவேண்டும். அல்லாஹ், அஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] அவர்களை பொருந்திக்கொள்வானாக!

புதன், 12 ஆகஸ்ட், 2009

இறைத்தூதரின் விருப்பமறிந்து ஒதுங்கிக்கொண்ட உயர்வாளர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் (என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவரை வேறொருவருக்கு மணமுடித்து வைக்க எண்ணினார்கள்.) -குனைஸ்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவராவார். மேலும், அவர் மதீனாவில் இறந்தார்.
உமர் இப்னு கத்தாப்(ரலி) கூறினார்கள்;
எனவே, நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன். அதற்கு உஸ்மான்(ரலி), '(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான்(ரலி) என்னைச் சந்தித்து 'இப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்றே எனக்குத் தோன்றியது'' என்று கூறினார்கள். எனவே, நான் அபூபக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) 'நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். அபூ பக்ர்(ரலி) அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான்(ரலி) அவர்களை விட அபூ பக்ர்(ரலி) மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு(ஒருநாள்) அபூபக்ர்(ரலி) என்னைச் சந்தித்து, 'நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்கு பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக்கூடும்'' என்று கூறினார்கள். நான், 'ஆம்'' என்று சொன்னேன். (அதற்கு) அபூபக்ர்(ரலி), 'நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்கு பதிலேதும் கூறவில்லை). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருப்பேன்.

ஆதாரம்;புஹாரி எண் 5122
உமர்[ரலி] அவர்கள் தன் மகளை மணந்து கொள்ளுமாறு அபூபக்கர்[ரலி] அவர்களிடம் கூறியபோது, ஹப்ஸா[ரலி] அவர்களை மணக்கும் விருப்பம் தனக்கு இருந்ததும் அன்னை ஹப்ஸா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் திருமணம் செய்ய நாடியுள்ளார்கள் என்று அறிந்தபோது அமைதியாக ஒதுங்கிக்கொண்டதோடு, இறைத்தூதரின் இந்த விருப்பத்தை இறைத்தூதர்[ஸல்] அவர்கள் அன்னை ஹப்ஸா[ரலி] அவர்களை மணம் புரியும்வரை ரகசியமாக வைத்திருந்த அபூபக்கர்[ரலி] அவர்களின் தியாகத்தையும்- அவர்களின் ரகசியம் காக்கும் தன்மையையும் என்னும்போது இப்படியும் ஒரு இறைநேசரா..? என்று வியப்பின் உச்சிக்கு செல்கிறோம்!

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

அருமை மகள் மீது 'அவதூறு' சொன்னவருக்கும் அள்ளித்தந்த வள்ளல்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் விஷயத்தில் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் என்ற நயவஞ்சகன் பரப்பிய அவதூறை நம்பி, அதை மக்கள் மத்தியில் பரப்பியவர்களில் மிஸ்தஹ் இப்னு உஸாஸா[ரலி] என்ற நபித்தோழரும் ஒருவர். இவர் பத்ர் போரில் பங்கெடுத்த வீரர்களில் ஒருவர். மேலும் இவர் அபூபக்கர்[ரலி] அவர்களின் உறவினர் என்பதால், அபூபக்கர்[ ரலி] அவர்கள் இவருக்கு[இவர் அவதூறு பரப்புவதற்கு முன்னர்] பல்வேறு உதவிகளை செய்து வந்தார்கள். இந்நிலையில், தன் அருமை மகள் ஆயிஷா[ரலி] அவர்கள் மீது தன்னிடத்தில் உதவி பெற்று வாழும் மிஸ்தஹ் அவதூறு பரப்புவதை அறிந்த அபூபக்கர்[ரலி] அவர்கள் கூறியதையும் பின்னர் நடந்தவைகளையும் கீழ்கண்ட ஹதீஸில் பாருங்கள்;

அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹ¤க்காக எதையும் செலவிடமாட்டேன்' என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். -மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். -அப்போது அல்லாஹ், 'உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்' எனும் (திருக்குர்ஆன் 24:22 வது) வசனத்தை அருளினான்.
அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள்,
'ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்' என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்' என்றும் கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 6679

தன் மகள் விஷயத்தில் அவதூறு கூறியவர் என்ற அடிப்படையில், ஒரு தந்தை என்ற ரீதியில் கோபம் கொண்டாலும், அல்லாஹ்வின் கட்டளை இறங்கியவுடன் அதற்கு முற்றிலும் கட்டுப்பட்டவராக மீண்டும் மிஸ்தஹ்[ரலி] அவர்களை அரவணைத்த அபூபக்கர்[ரலி] அவர்கள், பிறரை மன்னிப்பதிலும், இறைவன் தன்னை மன்னிக்கவேண்டும் என்று விரும்புவதிலும் தனது இறையச்சத்தை வெளிப்படுத்திய விதத்தை வர்ணிக்க வார்த்தைகளும் உண்டோ..?

உயிர் பிரியும் நேரத்திலும் 'உயர்ந்தோனின்' வேதனைக்கு அஞ்சிய உத்தமர் உமர்[ரலி]


மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்;
உமர்(ரலி) (பிச்சுவாக்கத்தியினால்) குத்தப்பட்டபோது அவர்கள் வேதனையடைலானார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), உமர்(ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறுவதைப் போன்று, 'நம்பிக்கையாளர்களின் தலைவரே! இதைப் பெரிதுப்படுத்திக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டு அத்தோழமையில் நல்லவிதமாக நடந்து கொண்டீர்கள். பிறகு, அவர்கள் உங்களைக் குறித்துத் திருப்தி கொண்டிருந்த நிலையிலேயே (அவர்கள் இறந்துவிட,) அவர்களைப் பிரிந்தீர்கள். பிறகு, அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் தோழமை கொண்டு அந்தத் தோழமையிலும் நல்ல விதமாக நடந்து கொண்டீர்கள். பிறகு உங்களின் மீது அவர்கள் திருப்தி கொண்டிருந்த நிலையிலேயே (அவர்கள் இறந்து விட,) அவர்களைப் பிரிந்தீர்கள். பிறகு அவர்களின் மற்ற தோழர்களுடன் தோழமை கொண்டு அந்தத் தோழமையிலும் நல்ல விதமாக நடந்து கொண்டீர்கள். அவர்களை நீங்கள் பிரிவதாயிருந்தால் நிச்சயம் அவர்கள் உங்களைக் குறித்துத் திருப்தி கொண்டிருக்கும் நிலையிலேயே பிரிவீர்கள்" என்று கூறினார்கள். உமர்(ரலி), '(இப்னு அப்பாஸே!) அல்லாஹ்வின் தூதருடன் நான் கொண்டிருந்ததாக நீங்கள் சொன்ன தோழமை, அவர்கள் என் மீது கொண்டிருந்த திருப்தி ஆகியவையெல்லாம் அல்லாஹ் என் மீது பொழிந்த அருட்கொடையாகும். மேலும், அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் நான் கொண்டிருந்ததாக நீங்கள் சொன்ன தோழமை, அவர்கள் என் மீது கொண்டிருந்த திருப்தி ஆகியனவும் புகழுயர்ந்த அல்லாஹ் என் மீது பொழிந்த அருடகொடையாகும். என்னிடம் நீங்கள் காண்கிற பதற்றமோ (பிற்காலத்தில் குழப்பங்களில் சிக்கவிருக்கும்) உங்களுக்காகவும் உங்கள் தோழர்களுக்காகவும் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு பூமி நிரம்பத் தங்கம் இருந்தால் கூட, கண்ணியமும் உயர்வுமுடைய அல்லாஹ்வின் வேதனையை நான் காண்பதற்கு முன்பாகவே அதற்குப் பகரமாக அந்தத் தங்கத்தைப் பிணைத் தொகையாகத் தந்து விடுவேன்" என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 3692

உமர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் வாழ்நாளில் நபியவர்களால் சுவனத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட ஒரு உத்தமர். அப்படியிருந்தும் இறைவனின் வேதனை ஏதேனும் நமக்கு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, பூமியளவு தங்கம் இருந்தாலும் அதை நான் பிணையாக தந்துவிடுவேன் என்று கூறினார்களே! இதுதான் இறையச்சத்தின் உச்சம்! இன்று பாவங்களை மலையளவும், நன்மைகளை மடுவளவும் செய்யும் நாம் 'நாங்கள் மட்டுமே சொர்க்கத்துக்குரியவர்கள்' என்ற ரீதியில் மார்தட்டி திரியாமல் அந்த உத்தமர் உமர்[ரலி] அவர்களின் மேற்கண்ட உபதேசத்திலிருந்து படிப்பினை பெறுவோம்.

சனி, 8 ஆகஸ்ட், 2009

அன்னலாரிடத்தில் அடைக்கப்படாத அபூபக்கர்[ரலி] அவர்களுக்கான வாசல்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்பட்டிருந்த போது) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள் அதில், 'அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது - இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான். அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்தார்" என்று கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்து) அழுதார்கள். 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுய அதிகாரம் அளிக்கப்பட்ட அடியாரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்?' என்று நாங்கள் வியப்படைந்தோம். இறைத்தூதர் தாம் அந்த சுயஅதிகாரம் அளிக்கப்பட்ட அடியார். (நபி - ஸல் - அவர்களின் இறப்பையே இது குறிக்கிறது என்பதை அபூ பக்ர் - ரலி - அறிந்து கொண்டார். ஏனெனில்,) அபூ பக்ர்(ரலி) எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'தன் நட்பிலும் தன் செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராகஇருப்பவர் அபூபக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான் செய்கின்றன. (என்னுடைய இந்தப்) பள்ளி வாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிர" என்று கூறினார்கள்.
அதாரம்; புஹாரி எண் 3654
நபி[ஸல்] அவர்களின் மரண நேர்க்கத்தில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது யாரையும் சந்திப்பதை தவிர்க்கும் வகையில் வாசல்களை அடைக்குமாறு பணித்தபோது அதில் அபூபக்கர்[ரலி] அவர்களின் வருகைக்கான வாசலை அடைக்கவேண்டாம் என கூறி, தனக்கும்-அபூபக்கர்[ரலி] அவர்களுக்கும் உள்ள நெருக்கத்தை பறைசாற்றுகிறார்கள் எனில், இறைத்தூதரின் இதயம் கவர்ந்த அபூபக்கர்[ரலி] அவர்கள்தான் எத்துனை மகத்தானவர்கள்!

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

இறைத்தூதரின் வாக்கை அப்படியே நம்பும் நல்லறத்தோழர்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, '(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒருவர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில் அதில் ஏறிச் சவாரி செய்து அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, 'நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில்) உழுவதற்காகத் தான்" என்று கூறியது. எனக் கூறினார்கள். மக்கள் 'சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா?' என்று (வியந்து போய்க்) கூறினார்கள். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'நானும் அபூ பக்ரும் உமரும் இதை நம்புகிறோம்" என்று கூறினார்கள். அப்போது அங்கே அபூ பக்ர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் இருக்கவில்லை. தொடர்ந்து, நபி(ஸல்) அவர்கள், 'ஒருவர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக் கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள் புகுந்து) ஓடி, ஆட்டை(த் தாக்கிக் கவ்விக் கொண்டு சென்றது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றிவிட்டார். உடனே, அந்த ஓநாய் அவரைப் பார்த்து, 'இவனே! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றிவிட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே' என்று கூறியது' எனக் கூறினார்கள். இதைக் கேட்ட மக்கள், 'சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) ஓநாய் பேசுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நானும் அபூ பக்ரும், உமரும் இதை நம்புகிறோம்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்கவில்லை.


ஆதாரம்; நூல் புஹாரி எண் 3471


இந்த பொன்மொழியில், நபி[ஸல்] அவர்கள் ஒரு செய்தியை சொல்லும்போது, அதை உறுதிப்படுத்துவதற்காக இந்த செய்தியை நானும் அபூபக்கரும்- உமரும்[ரலியல்லாஹு அன்ஹும்] நம்புகிறோம் என்று சொல்லும் அந்த இடத்தில் இவ்விரு ஸகாபிகளும் இல்லை. இந்த நிலையில் நபியவர்கள் சொல்கிறார்கள் எனில், அல்லாஹ்வின் தூதர் அவர்களின் வாக்கை, அவர்கள் அருகில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்பி நபி[ஸல்] அவர்களை உண்மைப்படுத்தக்கூடியவர்களாக, அமல் செய்யக்கூடிய நல்லறத்தோழர்களாக அபூபக்கர்[ரலி] அவர்களும்- உமர்[ரலி] அவர்களும் இருந்துள்ளார்கள் என்பதை விளங்கமுடிகிறது.

இறைத்தூதரின் இணைபிரியா தோழர்கள்!

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
நான் சில மக்களிடையே நின்று கொண்டிருக்க, அவர்கள் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களுக்காக பிரார்த்திதார்கள். அப்போது உமர் அவர்கள் (இறந்து) கட்டிலின் மீது கிடத்தப்பட்டிருந்தார்கள் - அப்போது என் பின்னாலிருந்து ஒருவர் தன் முழங்கையை என் தோளின் மீது வைத்து (உமர் - ரலி - அவர்களை நோக்கி,) 'அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். அல்லாஹ் (உங்கள் உடல், அடக்கம் செய்யப்படும் போது) உங்களை உங்களுடைய இரண்டு தோழர்க(ளான நபி - ஸல் - அவர்கள் மற்றும் அபூ பக்ர் - ரலி - அவர்க)ளுடன் (அவர்களின் மண்ணறைகளுக்கே அருகே) அடங்கச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பிக் கொண்டிருந்தேன். ஏனெனில், பெரும்பாலான நேரங்களில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நானும் அபூ பக்ரும் உமரும் (இப்படி) இருந்தோம்; நானும் அபூ பக்ரும் உமரும் (இப்படிச்) செய்தோம்; நானும் அபூ பக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்' என்று சொல்ல கேட்டிருக்கிறேன். எனவே, உங்களை அல்லாஹ் அவ்விருவருடன் (அவர்களின் மண்ணறைகளுக்கு அருகே) அடங்கச் செய்திட வேண்டுமென்று விரும்புகிறேன்" என்று கூறினார். நான் திரும்பிப் பார்த்தேன். இப்படிச் சொன்ன அந்த மனிதர் அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களாக இருந்தார்கள்.
ஆதாரம்;நூல்;புஹாரி எண் 3677