ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

பகைமையை வேரறுத்து பாசத்தை விதைத்தவர்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அபூதர்தா (ரலி) அறிவித்தார்கள்;
நான் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) தம் முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தோழர் வழக்காட வந்துவிட்டார்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (நபி - ஸல் - அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருககும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். எனவே, உங்களிடம் வந்தேன்" என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அபூ பக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர்(ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, 'அங்கே அபூ பக்ர்(ரலி) இருக்கிறார்களா?' என்று கேட்க வீட்டார், 'இல்லை" என்று பதிலளித்தார்கள். எனவே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூ பக்ர்(ரலி) பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிளைத்தவனாகி விட்டேன்." என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். 'பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூ பக்ர் அவர்களோ, 'நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டு விடுவீர்களா?' என்று இரண்டு முறை கூறினார்கள். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி) மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.

ஆதாரம்; புஹாரி எண் 3661

இந்த பொன்மொழியை கவனமாக படியுங்கள். அபூபக்கர்[ரலி] அவர்களும், உமர்[ரலி] அவர்களும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் இரு தூன்களாவர். இவ்விருவருக்கிடையே மனிதர்கள் என்ற அடிப்படையில் சிறு மனக்கசப்பு ஏற்படுகிறது. இதில் அபூபக்கர்[ரலி] அவர்கள் சற்றே உமர்[ரலி] அவர்களின் மனம் புண்படும்படி நடந்துவிடுகிறார்கள். பின்பு நம்மை போன்று 'உமறு வீட்லயா எனக்கு சாப்பாடு' என்று வாளாவிருக்கவில்லை. மாறாக தனது தவறை உணர்ந்து உமர்[ரலி] அவர்களிடம் மன்னிப்பு கேட்க அவர்களின் இல்லம் நோக்கி விரைகிறார்கள். அங்கே உமர்[ரலி] அவர்கள் அபூபக்கர்[ரலி] அவர்களை மன்னிக்க மறுக்கவே, எங்கே உமர்[ரலி] விஷயத்திற்காக இறைவனிடம் குற்றம் பிடிக்கப்படுவோமோ என்று பயந்தவர்களாக தனது ஆடையை இழுத்துக்கொண்டு இறைத்தூதர்[ஸல்] அவர்களிடம் ஒடி வருகிறார்கள். விஷயத்தை சொல்கிறார்கள். அப்போது அபூபக்கரே உங்களை அல்லாஹ் மன்னிப்பான் என்று அல்லாஹ்வின் தூதர்[ஸல்] ஆறுதல் அளிக்கிறார்கள்.

மறுபுறம் உமர்[ரலி] அவர்களின் நிலை என்ன? அபூபக்கர்[ரலி] அவர்கள் மனம் வருந்தி நம்மிடம் மன்னிப்பு கேட்கவந்தபோது நாம் புறக்கனித்துவிட்டோமே என்று மனம் வருந்தி அபூபக்கர்[ரலி] அவர்களின் வீட்டை நோக்கி ஓடுகிறார்கள். அங்கே அபூபக்கர்[ரலி] இல்லாததையறிந்து, இறைத்தூதர்[ஸல்] அவர்களின் அவைக்கு வந்தபோது, உமர்[ரலி] அவர்களை கண்டவுடன் நபி[ஸல்] அவர்களின் முகம் கோபத்தால் சிவந்தவுடன், மீண்டும் அபூபக்கர்[ரலி] அல்லாஹ்வின் தூதரே! அதிகப்படியான தவறு என்மீதுதான் என்று கூறி அங்கே உமர்[ரலி] அவர்களை கண்ணியப்படுத்துகிறார்கள்.

இப்போது நம்மையும் நம் சமுதாய தலைவர்களையும் அதிலும் குறிப்பாக தவ்ஹீதை முழங்கக்கூடிய நமது தலைவர்களின் நிலைமையை சற்று மனத்திரையில் கொண்டுவாருங்கள். மனக்கசப்பால் பிரிந்த பல்வேறு அணித்தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்ததுண்டா? ஸலாம் கூறியதுண்டா? விட்டுக்கொடுத்ததுண்டா? மாறாக, பகிரங்க விவாதத்திற்கு வாரியா? முபாஹலாவிர்கு வாரியா? என்று தங்களுக்கிடையில் பகைமையை விரிவுபடுத்தி வருவதையே தலையாய பணியாய கொண்டுள்ள தலைவர்களை பார்க்கிறோம். சரி! தலைவர்களை விடுங்கள். நம்முடைய நிலை என்ன? பெற்றோருக்கும்-பிள்ளைகளுக்கும் ஏற்ப்பட்ட மனக்கசப்பு நீடிக்கிறது. இரண்டற கலந்த கணவனுக்கும்-மனைவிக்கும் மத்தியில் ஏற்பட்ட மனக்கசப்பு நீடிக்கிறது. உறவினர்களுக்கு மத்தியில் ஏற்படும் மனக்கசப்பு தலைமுறை தாண்டியும் நீடிக்கிறது. இதற்கெல்லாம் என்னகாரணம்? ஒன்று தத்தம் தவறை உணர தயாரில்லை அல்லது மன்னிக்கும் /விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையில்லை. இப்படிப்பட்டவர்கள் அபூபக்கர்[ரலி]-உமர்[ரலி] ஆகியோரின் வாழ்விலிருந்து படிப்பினை பெறவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக