திங்கள், 31 ஆகஸ்ட், 2009

அண்ணன் எப்ப சாவான் என்று காத்துக்கிடந்தவர்கள் இவர்களா..?

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் (நபி - ஸல் - அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த சமயம்) அன்சாரிகள் தம் சபைகளில் ஒன்றில் (அமர்ந்தபடி) அழுது கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் அந்த வழியாகச் சென்றார்கள். அப்போது, அப்பாஸ்(ரலி) (அல்லது அபூ பக்ர்(ரலி), 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் நபி(ஸல்) அவர்களுடன் (கூடி) அமர்ந்திருந்த அவையை நினைத்துப் பார்த்தோம். (அதனால் அழுகிறோம்)" என்று பதிலளித்தார்கள். அப்பாஸ்(ரலி) (அல்லது அபூ பக்ர்(ரலி)), நபி(ஸல்) அவர்களிடம் சென்று, இந்த விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் சால்வையின் ஓரத்தைத் தம் தலையில் கட்டியிருந்த நிலையில் வெளியே வந்து, (உரை நிகழ்த்துவதற்காக) மிம்பரில் (மேடையில்) ஏறினார்கள் - அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் மிம்பரில் ஏறவில்லை - அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றிய பிறகு, 'அன்சாரிகளின் விஷயத்தில் (நல்லவிதமாக நடந்துக் கொள்ளும்படி) உங்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன். ஏனெனில், அவர்கள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். தம் மீதிருந்த பொறுப்பை, அவர்கள் நிறைவேற்றிவிட்டார்கள். இனி அவர்களுக்குரிய உரிமை தான் எஞ்சியுள்ளது. எனவே, அவர்களில் நன்மை புரிவோரிடமிருந்து (அந்த நன்மையை) ஏற்றுக் கொண்டு, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்து விடுங்கள்" என்று கூறினார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 3799

நபி[ஸல்] அவர்களின் மரணத்திற்கு பின்னால் ஆட்சித்தலைவரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், அன்சாரிகள் ஆரம்பகட்டத்தில் சற்று பிடிவாதம் காட்டியதை வைத்து அன்சாரிகள் பதவி வெறி பிடித்தவர்கள் போன்று,'அண்ணன் எப்ப சாவான்; திண்ணை எப்ப கிடைக்கும்' என்று காத்து கிடந்தார்கள் என்று சிலர் அன்சாரிகளை விமர்சித்ததுண்டு. மேற்கண்ட பொன்மொழியை சற்று கவனமாக பார்த்தோமானால், அண்ணன்[ரசூல்[ஸல்] சாக கிடக்கும்போது அன்சாரிகள் அதை விரும்புபவர்களாக இருந்தால், தாங்கள் நபி[ஸல்] அவையில் இருந்த நாட்களை எண்ணி கண்ணீர் வடித்தார்களே! அது எப்படி..? அன்சாரிகள் அழுது வாடியதை நடிப்பு என்று கூற வருவார்களா? [அஸ்தஃபிருல்லாஹ்]. அன்சாரிகள் குறித்து இறுதி உபதேசம் செய்த நபி[ஸல்] அவர்கள் கூறியதென்ன?
இனி அவர்களுக்குரிய உரிமை தான் எஞ்சியுள்ளது. எனவே, அவர்களில் நன்மை புரிவோரிடமிருந்து (அந்த நன்மையை) ஏற்றுக் கொண்டு, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்து விடுங்கள்" என்று கூறினார்கள்.
நபி[ஸல்] அவர்களின் கூற்றுப்படி ஆட்சித்தலைவர் விசயத்தில் தங்களின் உரிமையை எடுத்துரைத்ததனால் அன்சாரிகள் பதவி பித்தர்களா? ஆரம்பகட்டத்தில் அன்சாரிகளுக்கு ஒரு தலைவர்-முஹாஜிர்களுக்கு ஒரு தலைவர் என்று அன்சாரிகள் சொன்னாலும், பின்பு அபூபக்கர்[ரலி] அவர்கள் தொடங்கி பின்னால் வந்த அத்துணை ஆட்சியாளர்களையும் பொருந்திக்கொண்ட தியாகிகள் அல்லவா அன்சாரிகள்..? இதை மறுக்கமுடியுமா? எனவே சகாபாக்கள் விசயத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். இல்லையேல், அந்த தியாகிகள் விசயத்தில் முரண்பட்ட தகவலை சமுதாயத்திற்கு சொன்ன குற்றத்திற்கு இறைவனிடம் பதிலளிக்கும் நிலைவரும் என்பதை நாம் உணரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக