புதன், 12 ஆகஸ்ட், 2009

இறைத்தூதரின் விருப்பமறிந்து ஒதுங்கிக்கொண்ட உயர்வாளர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் (என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவரை வேறொருவருக்கு மணமுடித்து வைக்க எண்ணினார்கள்.) -குனைஸ்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவராவார். மேலும், அவர் மதீனாவில் இறந்தார்.
உமர் இப்னு கத்தாப்(ரலி) கூறினார்கள்;
எனவே, நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன். அதற்கு உஸ்மான்(ரலி), '(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான்(ரலி) என்னைச் சந்தித்து 'இப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்றே எனக்குத் தோன்றியது'' என்று கூறினார்கள். எனவே, நான் அபூபக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) 'நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். அபூ பக்ர்(ரலி) அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான்(ரலி) அவர்களை விட அபூ பக்ர்(ரலி) மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு(ஒருநாள்) அபூபக்ர்(ரலி) என்னைச் சந்தித்து, 'நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்கு பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக்கூடும்'' என்று கூறினார்கள். நான், 'ஆம்'' என்று சொன்னேன். (அதற்கு) அபூபக்ர்(ரலி), 'நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்கு பதிலேதும் கூறவில்லை). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருப்பேன்.

ஆதாரம்;புஹாரி எண் 5122
உமர்[ரலி] அவர்கள் தன் மகளை மணந்து கொள்ளுமாறு அபூபக்கர்[ரலி] அவர்களிடம் கூறியபோது, ஹப்ஸா[ரலி] அவர்களை மணக்கும் விருப்பம் தனக்கு இருந்ததும் அன்னை ஹப்ஸா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் திருமணம் செய்ய நாடியுள்ளார்கள் என்று அறிந்தபோது அமைதியாக ஒதுங்கிக்கொண்டதோடு, இறைத்தூதரின் இந்த விருப்பத்தை இறைத்தூதர்[ஸல்] அவர்கள் அன்னை ஹப்ஸா[ரலி] அவர்களை மணம் புரியும்வரை ரகசியமாக வைத்திருந்த அபூபக்கர்[ரலி] அவர்களின் தியாகத்தையும்- அவர்களின் ரகசியம் காக்கும் தன்மையையும் என்னும்போது இப்படியும் ஒரு இறைநேசரா..? என்று வியப்பின் உச்சிக்கு செல்கிறோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக