வெள்ளி, 29 அக்டோபர், 2010

உயர்வான அல்லாஹ் நடத்திவைத்த, 'அன்னையின்' உன்னத திருமணம்'!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று ஒரு சொல் வழக்கு உண்டு. இது சரியோ- தவறோ நாமறியோம். ஆனால் சொர்க்கத்தை உருவாக்கிய உயர்ந்தோனாகிய அல்லாஹ் நடத்தி வைத்த ஒரே திருமணம் என்ற பெருமை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை மணந்த அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்[ரலி] அவர்களின் திருமணத்திற்கே சேரும்.

இறைத்தூதர்[ஸல்] அவர்கள் தனது மாமி மகள் ஸைனப்[ரலி] அவர்களை தனது வளர்ப்பு மகனாக இருந்த ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி)[ரலி] அவர்களுக்கு மணமுடித்து வைத்தார்கள். அவ்விருவருக்கும் பிணக்கு ஏற்படவே, பின்பு நடந்த சம்பவத்தை திருக்குர்ஆனில் அல்லாஹ் விளக்குகிறான்;
وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَاهُ فَلَمَّا قَضَى زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا لِكَيْ لَا يَكُونَ عَلَى الْمُؤْمِنِينَ حَرَجٌ فِي أَزْوَاجِ أَدْعِيَائِهِمْ إِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا وَكَانَ أَمْرُ اللَّهِ مَفْعُولًا


(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். [33 ;37 ]

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வால் நடத்தப்பட்ட இந்த திருமணம் குறித்து  ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். 'உங்களை (நபி(ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத்தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்' என்று சொல்வார்கள். [புகாரி 7240 ]

இறைத்தூதருக்கும் இத்திருமணத்தில் எல்லையில்லா ஆனந்தம்;

ஸாபித் அல்புனானீ(ரஹ்) அறிவித்தார்

(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் திருமணம் குறித்து அனஸ்(ரலி) முன்னிலையில் பேசப்பட்டது. அப்போது அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ஸைனப்(ரலி) அவர்களுக்காக (அன்னாரை மணந்து பின்) வலீமா - மணவிருந்தளித்த அளவு வேறு எவரை மணந்தபோதும் அவர்கள் மணவிருந்தளிக்க நான் கண்டதில்லை; நபி(ஸல்) அவர்கள் (ஸைனப்(ரலி) அவர்களை மணந்ததற்காக) ஓர் ஆட்டை (அறுத்து) வலீமா விருந்தளித்தார்கள்.[புகாரி 5171 ]



அல்லாஹ், ஸைனப் பின்த் ஜஹ்ஷ்[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக!

இறைத்தூதரின் மனைவியரில் ஆயிஷா[ரலி]க்கு தனிச்சிறப்பு!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மனைவியரில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருந்தாலும், அவர்களில் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதைக்  காணலாம். அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் தனிச்சிறப்புக்கு காரணம் அவர்களின் சீரிய  அறிவாற்றலும், நினைவாற்றலும் என்றாலும் கூட, இவையல்லாத வேறு சில தனிச்சிறப்புகளும் அண்ணைக்கு உண்டு.

அண்ணையோடு இருக்கும் வேளையில்தான் அல்லாஹ்வின் வஹீ அருளப்படுதல்;

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்கள்;


மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபியவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுத்து வந்தனர். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து) ஆயிஷா(ரலி) கூறினார்: (நபியவர்களின் துணைவியரான) என் தோழிகள் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் ஒன்று கூடி, 'உம்மு ஸலமாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபிகளார் ஆயிஷாவிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆயிஷா நபி(ஸல்) அவர்களுக்கு நலம் நாடுவதைப் போன்றே நாமும் அவர்களுக்கு நலம் நாடுகிறோம். எனவே, தமக்கு (தரவிரும்பும்) அன்பளிப்புகளை தாம் இருக்குமிடத்தில்... அல்லது செல்லுமிடத்தில்... (அது எவருடைய வீடாக இருந்தாலும் அங்கு) அனுப்பி வைத்து விடவேண்டும் என்று மக்களுக்குக் கட்டளையிடுமபடி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்" என்று கேட்டுக் கொண்டனர்.

(உம்மு ஸலமா(ரலி) கூறினார்கள்:)

நான் நபி(ஸல்) அவர்களிடம் இதைச் சொல்ல, நபி(ஸல்) அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் திரும்பி வந்தபோது நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அப்போதும் அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மூன்றாம் முறை வந்த போதும் நான் அவர்களிடம்  இதே கோரிக்கையைச் சொன்னேன். அப்போது அவர்கள், 'உம்மு ஸலமாவே! ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு மனவேதனை தராதே. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் அவரல்லாத வேறெந்தப் பெண்ணின் போர்வைக்குள் நான் இருக்கும் போதும் எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) அருளப்பட்டதில்லை" என்று பதிலளித்தார்கள்.
நூல்; புகாரி எண்; 3775

மேற்கண்ட பொன்மொழி, அன்னை ஆயிஷா[ரலி] நீங்கலாக, வேறு மனைவியரின் போர்வைக்குள் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதர் [ஸல்]அவர்களுக்கு வஹீ அருளப்படவில்லை என்று கூறுவதின் மூலம் அன்னையின் சிறப்பை உணரலாம்.

அண்ணைக்கு அமரரின்[வானவர்] ஸலாம்;
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள், 'ஆயிஷே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்" என்று கூறினார்கள். நான், சலாமுக்கு பதில் கூறும் முகமாக 'வ அலைஹிஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு' அவரின் மீதும் சலம் (இறை சாந்தி) பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும்" என்று பதில் முகமன் சொல்லிவிட்டு, 'நான் பார்க்க முடியாதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினேன்.
 
நூல்;புகாரி எண்;  3768 
 
மலக்குகள் சுயமாக எதையும் செய்யக்கூடியவர்கள் அல்ல. அல்லாஹ்வின் கட்டளையை மட்டுமே செய்யக்கூடியவர்கள். எனவே அன்னை ஆயிஷா[ரலி] அவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைப்படியே ஜிப்ரீல்[அலை]  அவர்கள் ஸலாம் சொல்லியுள்ளார்கள். எனவே இதிலும் அண்ணைக்கு தனிச்சிறப்பு இருப்பதை உணரலாம்.
 
'ஸரீத்' என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் பெற்றவர்;
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"


(உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) உணவுகளைக் காட்டிலும் 'ஸரீத்' என்றும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்.

நூல்;புகாரி எண்; 3770 

அன்னையின்  சிறப்புகள் இன்னும் ஏராளம் உண்டு. அவைகளை அவ்வப்போது அசைபோடுவோம். அல்லாஹ்வின் அருள் பெறுவோம்.

வெள்ளி, 22 அக்டோபர், 2010

உஸ்மான்[ரலி] அவர்கள், இரண்டாம் பாங்கை உருவாக்கவில்லை; பீஜே மீண்டும் பல்டி!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
''நபித்தோழர்களும்- நமது நிலையும்'' என்ற நூலில், வஹிக்கு  முரணான நபித்தோழர்களின் நடவடிக்கைகள் என்ற தலைப்பில், உஸ்மான்[ரலி] அவர்கள் ஜும்மாவுக்கு இரண்டு பாங்குகளை உருவாக்கி நபிவழிக்கு மாறு செய்து விட்டார் என்ற வாதத்தை வைத்து,

''வணக்கத்தில் ஒரு நடைமுறையை நபி[ஸல்] அவர்கள் காட்டித்தந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து வந்த இரு கலீபாக்களும் அதை செயல்படுத்தியுள்ளனர் . ஆனால் மக்கள் உரை கேட்க வருவதில்லை என்பதற்காக உஸ்மான்[ரலி] அவர்கள் 'சுயமாக' இன்னொரு அறிவிப்பை அதிகமாக்கினார்கள். எதோ ஒரு காரணத்தால் நபிவழியை கூட சில நபித்தோழர்கள் மாற்றியுள்ளார்கள். அல்லது இல்லாததை அதிகப்படுத்தியுள்ளார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது என்று எழுதியிருந்தார் பீஜே..

உஸ்மான்[ரலி] அவர்கள் இரண்டாம் பாங்கை உருவாக்கவில்லை; மாறாக அவர்கள் கடைத்தெருவில் ஒரு அறிவிப்பைத்தான் செய்தார்கள் என்று, இந்த நூலை வெளியிடுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இலங்கை விவாதத்தில் பீஜே கூறியிருந்தார். ஆனால் அதிலிருந்து பல்டியடித்து, சஹாபாக்களை நபிவழிக்கு முரனானவர்களாக காட்டும் நோக்கில், உஸ்மான்[ரலி] குறித்து தனது மேற்கண்ட நூலில், உஸ்மான்[ரலி] இரண்டாம் பாங்கை உருவாக்கினார் என்று அபாண்டமாக,  சுவனத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட ஒரு நபித் தோழரை குற்றம் சுமத்தினார் பீஜே. அதை அதை விமர்சித்து  நாம் கடந்த  ஓராண்டுக்கு முன் எழுதிய ஆக்கத்தை படிக்க இங்கே கிளிக் செய்க;http://sahaabaakkal.blogspot.com/2009/10/blog-post_11.html

இப்போது மீண்டும் இங்கு இதைப் பற்றி எழுதுவதற்கு காரணம், பீஜே மார்க்க விஷயத்தில் எவ்வாறெல்லாம்  பல்டியடிப்பார் என்று காட்டவே. இப்போது அவரது வலைதளத்தில் ஒரு சகோதரர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பீஜே,  உஸ்மான்[ரலி] அவர்கள் ஜும்மாவுக்கு இரண்டாம் பாங்கை உருவாக்கவில்லை; மக்கள் பயான் கேட்க தாமதமாக வருவதால், கடைத்தெருவில் ஒரு அறிவிப்பைத்தான்  செய்தார்கள். எனவே உஸ்மான்[ரலி] அவர்கள் பித்அத்தை உருவாக்கவில்லை  என்று கூறி மீண்டும் பல்டியடித்துள்ளார். அவரது உரையை கேட்க இங்கு கிளிக் செய்க; http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/jummavil_usman_2bangu/

உஸ்மான் ரெண்டு பாங்கை உண்டாக்கிவிட்டார் என்று மேடை தோறும் நீங்களும், உங்கள் ஆதரவாளர்களும் முழங்கி, எழுத்துக்களில் வடித்து அந்த உயர்வான நபித்தோழரை ஃபித்அத் வாதியாக  காட்டினீர்களே! அதற்கு அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

சத்திய சஹாபாக்கள் குறித்து இவர் சொன்ன அத்துணை அபாண்டங்களையும், இவர் வாயாலேயே மறுக்க வைத்து அந்த நல்லறத்  தோழர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்துவான் இன்ஷா அல்ல்லாஹ். அந்த மனிதநேய செம்மல்கள்  மீது பீஜே போன்றோர் பூசிய கறைகள் கழுவப்பட்ட நாம் அல்லாஹ்விடம் கையேந்துவோம்.

சனி, 16 அக்டோபர், 2010

இவர் சத்தியமிட்டார்; இறைவன் அதை நிறைவேற்றினான்!

بســــم الله الـر حـمـن الرحـــيــم


அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்;


என் தந்தையின் சகோதரி - ருபய்யிஉ பின்த்து நள்ர், - ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தாரிடம் என் குலத்தார், 'இழப்பீட்டுத் தொகையைப் பெறுங்கள்; அல்லது (ருபய்யிஉவை) மன்னித்து விடும்படி சொல்லுங்கள்" என்று கோரினார்கள்.

அவர்கள் (இரண்டில் எதற்குமே ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டார்கள். எனவே, எங்கள் குலத்தார் நபி(ஸல்) அவர்களிடம் (விபரம் கூறி, தீர்ப்புப் பெற) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (ருபய்யிஉவைப்) பழி வாங்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ரு(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? அப்படி நடக்காது. தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவனின் மீது சத்தியமாக! அவளுடைய முன்பல் உடைக்கப்படாது" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும். (எனவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)" என்று கூறினார்கள். பிறகு, அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக் கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்" என்றார்கள்.
ஆதாரம்; புகாரி எண்; 2703

அன்பானவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யும் அனைத்தையும் நம்மில் பலர்  நிறைவேற்றுவதில்லை. ஆனால் இந்த நபித் தோழர் அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்கள் தனது சகோதரி விஷயத்தில், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து, அல்லாஹ்வின் மீது ஆணையாக! என் சகோதரிக்கு தண்டனை நிறைவேற்றப் படாது என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அவர்களின் சத்தியத்தை அங்கீகரித்து, ஏற்கனவே ஈட்டுத்தொகை பெறமாட்டோம் என்று சொன்னவர்களின் மனதை மாற்றி, ஈட்டுத்தொகை பெற வைப்பதன் மூலம், அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்களின் சகோதரியை தண்டனையிலிருந்தும்  பாதுகாத்து, அதன் மூலம் தனது நல்லடியார் அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்களின் சத்தியத்தையும் உண்மைப் படுத்துகிறான் என்றால், அதை நபியவர்களும் சிலாகித்து சொல்கிறார்கள் என்றால், இங்கே சஹாபாக்களின் சிறப்பு அதிலும் குறிப்பாக அனஸ் இப்னு நள்ர்[ரலி][ அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்ட செய்தி நமக்கு புலப்படுகிறது.

மேலும், இந்த  அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்கள், உஹத் களத்திலே முஸ்லிம்களுக்கு தோல்விமுகம் கண்ட நேரத்தில், 'சுவனத்தின் வாசனையை நான் உஹது பள்ளத்தாக்கில் நுகர்கிறேன்'' என்று கூறியவர்களாக எதிரிகளின் கூட்டத்திற்குள் புகுந்து போரிட்டு வீர மரணம் அடைந்த ஒரு ஷஹீத் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 8 அக்டோபர், 2010

உபதேசம் இவர்களுக்கு பயனளித்தது; ஏனெனில் இவர்கள் முஃமீன்கள்!

بســــم الله الـر حـمـن الرحـــيــم
நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல்(ரஹ்) கூறினார்;

 ஆயிஷா(ரலி) (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஆயிஷா(ரலி), 'அவரா இப்படிக் கூறினார்?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றனர். அப்போது ஆயிஷா(ரலி), 'இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்' என்று கூறிவிட்டார்கள்.

 நீண்ட நாள்கள் பேச்சு வார்த்தை நின்றுபோனபோது ஆயிஷா(ரலி) அவர்களிடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு ஸுபைர்(ரலி) கேட்டுக்கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து பேசியபோது) ஆயிஷா(ரலி), 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவுமாட்டேன். என் சத்தியத்தை நான் முறித்துக் கொள்ளவுமாட்டேன்' என்று கூறிவிட்டார்கள்.

ஆயிஷா(ரலி) இப்னு ஸுபைர் அவர்களிடம் பேச்சை நிறுத்தி நீண்ட நாள்களாகி விட்டபோது, பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி யகூஸ்(ரலி) ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர்(ரலி), 'அல்லாஹ்வை முன்வைத்து உங்கள் இருவரிடமும நான் வேண்டுகிறேன். என்னை (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லக்கூடாதா? என் உறவை முறித்துக் கொள்வதாக அவர்கள் செய்துள்ள சத்தியம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்லவே!' என்று கூறினார்கள்.

எனவே, மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களும் தம் மேலங்கிகளை அணிந்துகொண்டு இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுடன் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றார்கள். (அங்கு சென்ற) உடனே 'அஸ்ஸலாமு அலைக்க வ ரஹ்மத்துலலாஹி வ பரகாதுஹு' என்று சலாம் சொல்லிவிட்டு, 'நாங்கள் உள்ளே வரலாமா?' என்று அனுமதி கேட்டனர். அதற்கு ஆயிஷா(ரலி), 'உள்ளே வாருங்கள்' என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள் (மூவரும்) 'நாங்கள் அனைவரும் உள்ளே வரலாமா?' என்று கேட்டனர். ஆயிஷா(ரலி), 'ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள்' என்று அவர்கள் இருவருடனும் இப்னு ஸுபைர்(ரலி) இருப்பதை அறிந்து கொள்ளாமலேயே கூறினார்கள்.

அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர்(ரலி) (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த) திரைக்குள் நுழைந்து அவர்களைத் தழுவிக்கொண்டு அவர்களிடம் முறையிட்டு அழத் தொடங்கினார்கள். மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்களும் (வெளியே இருந்தபடி) இப்னு ஸுபைர்(ரலி) அவர்களிடம் பேசியே தீரவேண்டும் என்றும் அவருக்காகத் தாங்கள் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தனர்.

மேலும், அவர்கள் இருவரும், 'ஒரு முஸ்லிம் தம் சகோதரிடம் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளதை தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்' என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்களிடம் (உறவைப் பேணுவதன் சிறப்பு குறித்து) நினைவூட்டியும்  அவர்கள் அதிகமாகப் பேசியபோது (தாம் செய்த சத்தியத்தைப் பற்றி) அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா(ரலி) அழலானார்கள். மேலும், '(நான் அவரிடம் பேசமாட்டேன் என) சத்தியம் செய்து விட்டேன். சத்தியம் மிகவும் கடுமையானதாகும்' என்று (அவர்கள் இருவரிடமும் திரும்பக் திரும்பக்) கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆயிஷா(ரலி)அவர்களிடம், இருவரும் (தங்கள் கருத்தை) வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர். இறுதியில் ஆயிஷா(ரலி) (தம் சகோதரியின் புதல்வர்) இப்னு ஸுபைரிடம் பேசிவிட்டார்கள். தம் சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதற்குப் பிறகும் கூடத் தம் சத்தியத்தை நினைவுகூர்ந்து தம் முகத்திரை நனையுமளவிற்கு அவர்கள் அழுவார்கள்.


நூல்;புஹாரி,எண் 6073

அன்பானவர்களே! மனிதர்கள் என்றால் மனக்கசப்பு ஏற்படுவது இயல்புதான். அந்த வகையில் சிலர் சிலரோடு பினங்கிக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். இவ்வாறு மனக்கசப்போடு வாழ்பவர்கள் சாமான்யர்கள் மட்டும்தான் என்று கருதி விடாதீர்கள். 'ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என்ற நபிமொழியை மேடைதோறும் முழங்கும் தலைவர்களிலும் இவ்வாறானவர்கள் உண்டு. இவ்வாறான இவர்களின் மனக்கசப்பு நாள்கள் தாண்டி, மாதங்கள் தாண்டி வருடங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது.

இப்படி உறவுகளுக்கு மத்தியிலும், சமூகத்திற்கு மத்தியிலும் பிணங்கிக்  கொண்டிருக்கும் சாமான்யர்களும் சரி, தலைவர்களும் சரி அதுகுறித்து கவலை கொள்கிறார்களா என்றால் இல்லை. இன்னும் சொல்லப்போனால், மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது  என்ற நபிமொழியை சில தலைவர்களிடம் நினைவூட்டினால், தங்களின்  நிலையை மாற்றுவதற்கு பதிலாக 'அல்லாஹ்விற்காக ஒருவரை வெறுப்பதற்கு அனுமதி உள்ளது' என்று தங்களின் வார்த்தை ஜால பத்வாக்கள்  மூலம் தங்களின் பகைமையை தொடர்கிறார்கள். இத்தகைய தலைவர்களை பின்பற்றும் சகோதரர்களும் தங்களது சக அமைப்பினரை சேர்ந்த முஸ்லிம் சகோதரர்களை எதிரி போல் பார்க்கும் நிலையை நாம் பார்க்கிறோம். சஹாபாக்களை  விட அல்லாஹ் நம்மை மேன்மையாக்கி வைத்துள்ளான்[!] என்று சஹாபாக்களுக்கும் மேலாக நம்மை நினைக்கும் நாம், அந்த சஹாபாக்கள் பகைமையை எவ்வாறு வென்றார்கள் என்பதை மட்டும் வசதியாக மறந்து அல்லது மறைத்து விடுகிறோம்.

தனது சகோதரி மகன் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்[ரலி] அவர்களோடு பேசமாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்த அன்னையவர்கள், பின்னாளில் சில சஹாபிகளால் நபிமொழியை நினைவூட்டி உபதேசம் செய்யப்பட்டபின், உடனடியாக தனது சத்தியத்தை முறித்து, சகோதரி மகனுடன் தனது உறவை புதுப்பித்ததோடு, தனது தவறான சத்தியத்தை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர்விட்டு அழுது கைசேதப்படும் அன்னையவர்களின் பண்பு எங்கே..? நாம் எங்கே..? சிந்திக்கவேண்டும்.

மறுபுறம் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்[ரலி] அவர்கள், தனது சிற்றன்னை பேசாவிட்டால் என்ன..? அவர் வீட்டிலா நமக்கு சாப்பாடு..? என்று கண்டும் காணாமல் இருந்தார்களா என்றால் இல்லை. மாறாக தனது சிற்றன்னை தன்னோடு பேசாமல் இருப்பது ஒருபுறம் அவர்களுக்கு கவலையளிப்பதாக இருந்தாலும், மறுபுறம் தன்னோடு  பேசாமல் இருப்பது சிற்றன்னைக்கு மார்க்கத்தில் ஆகுமானதில்லையே என்றும் கவலை கொண்டவர்களாக,

தனது சிற்றன்னையை தன்னோடு பேசிட பரிந்துரைக்குமாறு முஹாஜிர்கள்  சிலரை நாடுகிறார்கள். முஹாஜிர்கள் சிலரின் பரிந்துரை அன்னையிடம் மாற்றத்தை உண்டாக்கவில்லை. தனது முயற்சி  பலனளிக்காததை  கண்டு இப்னு ஜுபைர்[ரலி] அவர்கள், நம்பிக்கையிழந்து விடவில்லை. மீண்டும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி யகூஸ்(ரலி) ஆகிய இருவர் மூலமாக சமாதனம் பேசி அன்னையவர்களின்  உறவை உயிர்ப்பிக்கிறார்கள்  என்றால், இங்கே உயிர்ப்பிக்கப்பட்டது அன்னையவர்கள்  மற்றும் இப்னு ஜுபைரின் உறவு மட்டுமல்ல. மூன்று நாட்களுக்கு மேலாக பேசாமல் இருக்கக் கூடாது என்ற மாநபியின் மணிமொழியும் தான்.

எனவே அன்பானவர்களே! சஹாபாக்களுக்கு அறிவுரை பலனளித்தது ஏனென்றால்,
மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்[51:55 ] என்ற இறைவாக்கின் படி, அவர்கள் முஃமின்களாக இருந்ததால் சஹாபாக்களுக்கு உபதேசம் பயனளித்தது. அத்தகைய சஹாபாக்கள் வழியில், நாமும் பகைமை
மறந்து பாசம் காட்டி முஃமீன்களாக வாழ்வோமா..?

வியாழன், 7 அக்டோபர், 2010

பாசத்தலைவனின் பசியறிந்து பரிமாறிய பரிவுமிக்க தம்பதிகள்!

بســــم الله الـر حـمـن الرحـــيــم
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்;


அபூ தல்ஹா (ஸைத் அல்அன்சாரி(ரலி) தம் துணைவியார் உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம், 'நான் நபி(ஸல்) அவர்களின் குரலைப் பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கு இருக்கும்) பசியை அறிந்துகொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். எனவே, உம்மு சுலைம்(ரலி) வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்து வந்தார்கள். பிறகு, உம்மு சுலைம் அவர்கள் தங்களின் முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் ரொட்டியைச் சுருட்டி என்னுடைய கை (அக்குளு)க்குக் கீழே மறைத்து வைத்துவிட்டு, மற்றொரு பகுதியை எனக்கு மேல்துண்டாக ஆக்கினார்கள்.

பிறகு என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்கு முன்னால் (போய்) நின்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உன்னை அபூ தல்ஹா அனுப்பினாரா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்' என்று சொன்னேன். 'உணவுடனா அனுப்பியுள்ளார்?' என்று அவர்கள் கேட்க, நான் 'ஆம்' என்றேன்.




அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம், 'எழுந்திருங்கள்' என்று சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் வந்(து விவரத்தைத் தெரிவித்)தேன். உடனே அபூ தல்ஹா(ரலி) (என் தாயாரிடம்) 'உம்மு சுலைமே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உணவளிக்க நம்மிடம் உணவு இல்லையே!' என்று கூறினார்கள். (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி), 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா(ரலி) (தாமே நபி(ஸல்) அவர்களை முன்சென்று வரவேற்பதற்காகப்) போய் இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அபூ தல்ஹா அவர்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் வந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டுவா!' என்று கூறினார்கள். உடனே உம்மு சுலைம் அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம்(ரலி) தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறைவன் நாடிய (பிஸ்மில்லாஹ் மற்றும் இதர பிரார்த்தனை வரிகள் சில)வற்றைக் கூறினார்கள். பிறகு 'பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதியுங்கள்' என்று (அபூ தல்ஹாவிடம்) கூறினார்கள்.


அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதியளித்தார்கள். அப்போது அவர்கள் (பத்துப் பேரும்) வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே) வர அனுமதி அளியுங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே அபூ தல்ஹா(ரலி) அனுமதியளிக்க, அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, 'மேலும் பத்துப் பேருக்கு அனுமதியுங்கள்' என்று கூற, அபூ தல்ஹாவும் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு பத்துப் பேருக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதி கொடுத்தார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். (அப்படி உண்ட) அந்த மக்கள் எண்பது பேர் ஆவர்.

ஆதாரம் புஹாரி எண்; 5381
 
அன்பானவர்களே! பொதுவாக உணவு பரிமாறல் என்பது ஒருவரின் பசியறிந்து பரிமாறுதல் என்பது அரிதாகும். ஒவ்வொரு வீட்டிலும் காலை டிபன், மதிய உணவு, இரவு உணவு என வேளாவேளைக்கு உணவு பரிமாறுதல் என்பதுதான் நடைமுறையில் உள்ளதேயன்றி, ஒருவரின் பசியறிந்து உணவு பரிமாறுதல் இல்லை. வாய் திறந்து கேட்காமலேயே பிள்ளையின் முகத்தைப் பார்த்து பறிமாறுபவள் தாய் மட்டுமே.
 
அத்தகைய தாய்மை உணர்வோடு தனது தலைவனை பார்த்தவர்கள் சஹாபாக்கள் மட்டுமே. இறைத்தூதர்[ஸல்] அவர்களின் உண்மை வரலாறை எழுத நினைக்கும் எவராகிலும், ஆபூதல்ஹா-உம்மு சுலைம்[ரலி] தம்பதிகளை புறந்தள்ளி எழுதிட முடியாது. அந்த அளவுக்கு இறைத்தூதர்[ஸல்] அவர்களின் வாழ்க்கையில் இரண்டற  கலந்தவர்கள். இத்தகைய அபூதல்ஹா[ரலி] அவர்கள், இறைத்தூதர்[ஸல்] அவர்களின் பலவீனமான  குரலை கேட்டு அதன் மூலம் அல்லாஹ்வின் தூதரின் பசியை உணர்ந்து, அந்த பசியை போக்குவது நமது பாக்கியம் என உணர்ந்தவர்களாக தமது இல்லம் நோக்கி விரைந்து தமது மனைவியை நோக்கி உணவுண்டா எனக் கேட்கிறார்கள். 
 
மறுபுறம் அன்னை உம்முசுலைம்[ரலி] அவர்களோ, இறைத்தூதருக்கு பசியா..? என எண்ணியவர்களாக ரொட்டியை தனது மகன் மூலம் கொடுத்து அனுப்புகிறார்கள். இப்படி தங்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அருட்கொடையான இறைத்தூதர் மீது இவர்கள்  பாசம் காட்ட, மறுபுறம் இறைத்தூதர்[ஸல்] அவர்களோ, அனஸ் அவர்கள் ரொட்டி கொண்டுவந்தவுடன் தான் மட்டும் பசியாறி ஏப்பம் விடாமல், ''யாரேனும் உணவு கொடுத்தால்தான் சாப்பாடு; இல்லையேல் பட்டினி''  என மார்க்கத்திற்காக வாழும் 'திண்ணைத் தோழர்கள' குறித்து அவர்களின் பசி குறித்து கவலை கொண்டவர்களாக அவர்களையும் அழைத்துக்கொண்டு உம்முசுலைம்[ரலி] அவர்களின் இல்லம்  நோக்கி விரைகிறார்கள். 
 
ஒருவரை நாம் விருந்துக்கு அழைக்க அவர் ஒரு படையோடு நம் வீடு தேடி வந்தால் நமது வாயிலிருந்து வரும் வார்த்தை என்னவாக இருக்கும்..? ' எதோ இந்த ஆளு பசியோட இருக்கார்னு ரெண்டு ரொட்டிய குடுத்தா தின்னுட்டு போகாம; இப்படி ஊரையே கூப்பிட்டுகிட்டு வாராரே! என்று தான் சொல்வோம். ஆனால் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள்  தமது தோழர்கள் என்பது பேருடன் வருவதையறிந்து கலங்கிய அபூதல்ஹா[ரலி] அவர்கள் 'நம்மிடம் அவ்வளவு  பேருக்கும் உணவளிக்க உணவில்லையே என கைசேதப்பட, அங்கே அன்னை உம்முசுலைம்[ரலி] அவர்கள் சொன்ன வார்த்தை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். அது இதுதான்; 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று கூறினார்கள். 
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் ஒரு காரியத்தை செய்கிறார்கள் எனில், அதில் நாம் அறியாத விஷயம் இருக்கும்; அது குறித்து நாம் கருத்துக் கூறுவது கூடாது. அதுபற்றி அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிந்தவர்கள் என கூறி, தான் ஈகைக் குணத்தில் மட்டுமல்ல; ஈமானிலும் முழுமையடந்தவர்கள்  என்று காட்டினார்களே அன்னை உம்முசுலைம்[ரலி] அவர்கள்.
 
ஆனால் இன்று  மெத்தப்படித்த மேதாவிகள்[!] சிலர், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொன்னதாக, செய்ததாக வரும் ஆதாரப் பூர்வமான நபிமொழிகளை தங்களின்  சிற்றறிவோடு உரசிப்ப்பார்த்து, 'முரண்படுகிறது' என தூக்கி வீசுகிறார்களே! இப்போது தெரிகிறதா..? மார்க்கத்தின் நிறைகுடங்களான சஹாபாக்கள் 'தளும்பவில்லை' தலைக்கனம் கொள்ளவில்லை. ஆனால் இன்று 'குறைகுடங்கள்' கூத்தாடுகின்றன. தியாக சீலர்களான சஹாபாக்கள் எம்மைப் போன்றவர்களே! அல்ல. அல்ல. அவர்களை விட அல்லாஹ் எங்களை மேன்மையாக்கி வைத்து விட்டான் என குதிக்கின்றன. 
 
அணையும் நெருப்பு பிரகாசமாக எரியலாம். அதுபோல இவர்கள் சஹாபாக்கள் குறித்து கூறும் குற்றப் பத்திரிக்கைகள் இன்று பளிச்சிடலாம். ஆனால் என்றைக்கும் நட்சத்திரமாக  ஜொலிப்பவர்கள்  சஹாபாக்கள் என்பதை  உலகம் உள்ளளவும் அவர்களின் தியாக வரலாறு சான்று பகர்ந்து கொண்டிருக்கும் இன்ஷா அல்லாஹ்.

புதன், 6 அக்டோபர், 2010

மார்க்கத்தில் மட்டுமல்ல; உலக வாழ்க்கையிலும் தியாகம்!

بســــم الله الـر حـمـن الرحـــيــم
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) 'ஏழு பெண் குழந்தைகளை' அல்லது 'ஒன்பது பெண் குழந்தைகளை'விட்டுச் சென்றார்கள். எனவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'ஜாபிரே! நீ மணமுடித்துக்கொண்டாயா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்று சொன்னேன்.

அப்போது நபி[ஸல்] அவர்கள், 'கன்னிப் பெண்ணையா? கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத் தான் (மணந்தேன்)' என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!' என்று கூறினார்கள்.

அதற்கு நான் நபி(ஸல்) அவர்களிடம், '(என் தந்தை) அப்துல்லாஹ்(ரலி), பல பெண் மக்களைவிட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அந்தப் பெண் மக்களைப் போன்ற ஒரு (இளம் வயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை. எனவே, நான் அவர்களைப் பராமரித்துச் சீராட்டி வளர்க்கும் (அனுபவமுள்ள) ஒரு பெண்ணை மணந்துகொண்டேன்' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு 'சுபிட்சத்தை அளிப்பானாக' அல்லது 'நன்மையைப் பொழிவானாக' என்று கூறினார்கள்.
 
ஆதாரம் நூல்; புஹாரி எண் 5367 

அன்பானவர்களே! சத்திய சஹாபாக்கள் மார்க்கத்திற்காக தங்களது இன்னுயிரையும் இழக்கும் தியாக சீலர்கள் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அதே நேரத்தில் மார்க்கத்தின் மற்றொரு அம்சமான உலக வாழ்க்கையிலும் இறைவன் விதித்துள்ள கட்டளைகளை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட பொன்மொழி நமக்கு உணர்த்துகிறது.

ஒரு ஆண்மகனுக்கு தனது பெற்றோரை, தனது உடன் பிறந்தோரை, உறவினரை பராமரிக்கும் கடமை உள்ளது. பெற்றோர் மரணித்து விட்டால்  உடன்பிறந்தோரை பராமரிக்கும் முழுப் பொறுப்பும் ஆண்மகன் மீது விதியாகி விடுகிறது. ஆனால் இன்றைய நிலையோ, திருமணம் ஆகும்வரை பெற்றோரை தூக்கி வைத்து கொண்டதும் ஆண்மகன், திருமணம் முடிந்த கையோடு, மனைவி சொல்லே மந்திரம் என மனைவியின் முந்தானை நுனியை பிடித்துக் கொண்டு தனிக்குடித்தனம்  சென்றுவிடுகிறான்.

தனிக்குடித்தனம் தவறல்ல. ஆனால் அதற்கு பின் தனது பெற்றோரையோ, உடன் பிறந்தோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுப்பதில்லை. இதன் விளைவாக உழைக்கமுடியாத பெற்றோர்கள் 'கையேந்தி' வயிற்றை நிரப்புகிறார்கள். உடன்பிறந்த சகோதரிகளுக்கு திருமண வயதை கடந்த பின்னும் திருமணம் நடத்திட நாதியில்லை. இதன் விளைவாக முதிர்கன்னிகளின் ஏக்க மூச்சு எமது வீட்டு ஜன்னல் கம்பிகளையும் துருப்பிடிக்க செய்துவிட்டது.

இந்நிலைக்கு என்ன காரணம்..? மார்க்கம் என்றால் வெறுமனே தொழுகை நோன்பு போன்ற சில அமல்களே  என்ற குறுகிய வட்டத்தை தாமாகவே கற்பனை செய்து கொண்டு, இவைகளை சரியாக செய்தால் போதும். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரை கவனிப்பது கட்டாயமுமல்ல. மார்க்கத்திற்கு உட்பட்டதுமல்ல எனக்  கருதும் மனநிலைதான்.

ஆனால் சத்திய சஹாபாக்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் என்பது, அமல்களில் மட்டுமல்ல, அன்பானவர்களை கவனிப்பதிலும்தான் உள்ளது என்பதை  விளங்கியிருந்தார்கள். எனவேதான் இளைஞரான ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள், கன்னிப்பெண்ணை மணக்க வேண்டிய கட்டிளம் காளை; சகோதரிகளின் நலனை கவனத்தில் கொண்டு, விதவையான பக்குவமான பெண்ணை மணந்து, தனது உடன்பிறந்தோர் மீதான தனது கடமையையும் முழுமையாக நிறைவேற்றுகிறார்கள் என்றால்,

இங்குதான் சஹாபாக்கள் நிற்கிறார்கள்; அவர்களின் தியாக உள்ளம்- இறையச்சம் முன்னே நிற்கிறது.
 ' உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.
என்ற திருத்தூதரின் பொன்மொழியை மெய்பிக்கும் வாய்மையாளர்களாக திகழ்கிறார்கள் சஹாபாக்கள்.

எனவேதான சொல்கிறோம். அந்த நல்லறத் தோழர்களை ஒருபோதும் நாம் எட்டிப் பிடிக்கமுடியாது என்று.

சனி, 25 செப்டம்பர், 2010

இறப்பின் சோகம் இதயத்தில் இருந்தாலும்; இறைத்தூதர் சொல்லிவிட்டால்...

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்கள்;
தம் தந்தை (அபூ சுஃப்யான்(ரலி) அவர்களின் இறப்புச் செய்தி வந்தபோது (அன்னை) உம்மு ஹபீபா(ரலி) நறுமணத்தைக் கொண்டுவரச் சொல்லி அதனைத் தம் இரண்டு கைகளிலும் தடவினார்கள். மேலும், (பின்வருமாறு) கூறினார்கள்: எனக்கு இந்த நறுமணம் தேவையே இலை. ஆயினும், நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர' என்று சொல்லக் கேட்டுள்ளேன்.

ஆதாரம்; நூல் புஹாரி எண் 5345


ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்கள்;

(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் சகோதரர் இறந்த சமயம் அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி பூசிக்கொண்டார்கள்.

பிறகு, 'இதோ! (பாருங்கள்.) அல்லாஹ்வின் மீதாணையாக எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சொற்பொழிவு) மேடையில் இருந்தபடி 'அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தன் கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர!' என்று கூறக் கேட்டுள்ளேன்' என்றார்கள்.

அன்பானவர்களே! மேற்கண்ட இரு பொன்மொழிகளையும் நாம் பலமுறை படித்திருப்போம். ஆனால் நடைமுறையில் கொண்டுவரவில்லை என்பதே உண்மை. தமது தந்தை- சகோதரர்- கணவர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர் மரணிக்கும்போது, அதனால் அதிகம் வேதனைப்படுவது பெண்கள்தான்.

கணவர் நீங்கலாக , மற்றவர்களின் இறப்பு விஷயத்தில் நம்முடைய சோகம் எத்தனை நாட்கள் நீடிக்கவேண்டும் என்பது கூட நமது பெண்களில் பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. தெரிந்தவர்களும் அமுல்படுத்துவதில்லை. காரணம் அங்கே அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புதான் பெரிதாக தெரிகிறதே தவிர, இறைத்தூதர்[ஸல்] அவர்களின் கட்டளை என்பது பெரிதாக தெரிவதில்லை.


பொறுமை என்பதே துன்ப நேரத்தில் கடைபிடிப்பதுதான் என்ற நபிகளாரின் பொன்மொழியை மறந்து, தனது சோகத்தை மாதக்கணக்கில் கொண்டு, கணவன் மற்றும் பிள்ளைகள் நலனை புறக்கணிக்கும் பெண்களைப் பார்க்கிறோம். ஆனால் மேற்கண்ட ஹதீஸ்களில் நம்முடைய அன்னையர்கள், தனது தந்தை இறந்த சோகத்தைவிட , தனது சகோதரன் இறந்த சோகத்தைவிட, இறைத்தூதர்[ஸல்] அவர்களின் கட்டளையை பெரிதாக கருதி, மூன்று நாட்கள் முடிந்தவுடன் கணவருக்காக தனைகளை அலங்கரித்துக் கொள்கிறார்கள் எனில், அதுதான் சஹாபியர்கள்.

நம்முடைய அன்னையர்களை முன்மாதிரியாக கொண்டு நாமும் குறிப்பாக நமது சமுதாய பெண்கள் இழப்பு விஷயத்தில் பொறுமையை மேற்கொள்வோமாக! எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு அருள்புரிவானாக!!

சனி, 18 செப்டம்பர், 2010

பொறுமையை கொண்டு சுவனத்தை வென்ற பெண்மணி!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்;


இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர்.
 
இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி ) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி ) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
நூல்; புஹாரி எண் 5652
 
அன்பானவர்களே! நமக்கு நோய் வருமென்றால், அதற்காக மருத்துவம் செய்வோம்; அதோடு அல்லாஹ்விடம் துஆ செய்வோம். அந்த நோய் சில நாட்களில் தீர்ந்துவிடும் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் நோய் தீர தாமதமாகும் நிலை ஏற்பட்டால், அல்லது நோய் தீராமலேயே போய்விட்டால் அங்கே அல்லாஹ்வின் நாட்டம் என பொறுமை கொள்வதை விடுத்து, அல்லாஹ்வின் அருள்மீது நம்பிக்கையிழந்து அல்லாஹ்வின் மீதே வெறுப்புறுவதை  பார்க்கிறோம்.
 
இன்னும் சிலர் அல்லாஹ்விடம் கேட்டு எந்த பலனுமில்லை என்று தீர்மானித்து, தர்காவிடம்  சரணடைந்து அங்கே ஈமானையும் பறிகொடுத்து, சில நேரங்களில் கற்பு- பொருளாதாரம் இவ்வாறாக பல்வேறு இழப்புகளை தமக்கு தாமே ஏற்படுத்திக் கொள்வதை பார்க்கிறோம்.
 
ஆனால், மேலே உள்ள பொன்மொழியில், ஒரு பெண்மணி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர், தனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நபியவர்களிடம் வேண்ட, அப்பெண்மணியின்  இம்மை வாழ்வின்   சுகத்தை விட மறுமை பாக்கியம் அப்பெண்ணிற்கு கிடைக்கவேண்டும் என விரும்பிய இறைத்தூதர்[ஸல்] அவர்கள், உனக்கு நிவாரணம் வேண்டுமா; அல்லது சொர்க்கம் வேண்டுமா என்று கேட்ட மாத்திரமே,
 
தான் நோயால் வாடினாலும் பரவாயில்லை தனக்கு அல்லாஹ் தந்த நோயை போருந்திக்கொண்டு, அழகிய பொறுமையை மேற்கொண்டு சுவனத்தை  பெறவே விரும்புகிறேன் என்றார்களே! அதோடு, தனது நோயின் போது கூட, தான் அறியாத நிலையில் கூட  தனது ஆடை விலகிவிடக் கூடாது என விரும்பி, அதற்காக மட்டும் துஆ செய்யுமாறு அப்பெண்மணி இறைத்தூதரிடம் வேண்டுகிறார்களே! அதுதான் நபித் தோழியர்களின் இறையச்சம்.
 
ஆனால், இன்றைக்கு நம்முடைய பெண்களில் பெரும்பாலோர், பர்தா அணிவதில்லை. அதோடு அணிந்திருக்கும் சேலை தலையிலிருந்து நழுவினாலோ, அல்லது முன்பகுதியிலிருந்து விலகினாலோ கூட பெரும்பாலும் அலட்டிக்கொள்வதில்லை. காரணம் நம்முடைய பெண்களை நவீனம் அந்த அளவுக்கு நாசமாக்கியுள்ளது. இத்தகைய பெண்களுக்கு மட்டுமின்றி, அழகிய பொறுமைக்கும் இந்த நபித் தோழியின்  வாழ்வில்   மிகப்பெரும் படிப்பினை உள்ளது.
 
எல்லாம் வல்ல அல்லாஹ், நிறத்தால் கருப்பான, உள்ளத்தால் வெண்மையான அந்த நபித் தோழியை சுவனத்தில் பார்க்கும் பாக்கியத்தை நமக்குத் தந்தருள்வானாக!

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

விபச்சாரம் செய்தபோதும் விரும்பி வந்து தண்டனை ஏற்ற இறையடியார்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஜாபிர்(ரலி) அறிவித்தார்;


பனூஅஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (மாஇஸ் இப்னு மாலிக்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது நபி(ஸல) அவர்கள் அவரை விட்டு  தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம்அளித்தார். அப்போது அவரிடம் நபி(ஸல) அவர்கள், 'உமக்குப் பைத்தியமா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை' என்றார். எனவே நபி(ஸல்) அவர்கள், அவருக்கத் தண்டனை வழங்குமாறு உத்தரவிட பெருநாள் தொழுகைத் திடல் (முஸல்லா) அருகில் அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரைக் குறித்து நல்லதைக் கூறியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தார்கள்.
நூல்;புஹாரி எண் 6820
 
மற்றொரு அறிவிப்பில்,
 
மாஇஸ் இப்னு மாலிக் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்(து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக வாக்குமூலம் அளித்)தபோது, அவரிடம் நபி(ஸல்) அவர்கள், '(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!' என்றார்கள். அவர், '(அவ்வாறெல்லாம்) இல்லை; இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், சாடைமாடையாகக் கேட்காமல் 'அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?' என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், 'ஆம்' என்று கூறினார். அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
ஆதாரம்; புஹாரி எண் 6824
 
அன்பானவர்களே! சஹாபாக்கள் சாமான்யர்கள்; அவர்கள் பல்வேறு குற்றங்களை செய்தவர்கள் என்று சஹாபாக்களை விட தம்மையும், தமது கருத்தையும் முன்னிலைப்  படுத்துபவர்கள் இடும் பட்டியலில் மாயிஸ்[ரலி] அவர்களின் மேற்கண்ட சம்பவமும் இடம்பெற்றிருக்கும். ஆனால், உண்மை நிலை  என்ன..?
 
சஹாபாக்கள் இயன்றவரை பாவம் செய்வதை தவிர்ந்து வாழ்ந்தவர்கள். இருப்பினும் மனிதன் என்ற அடிப்படையில் அவர்களிடத்தில் தப்பித்தவறி தவறு ஏற்படுமேயானால், அந்த தவறுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனையைக் குறித்து அஞ்சியிருக்கிறார்கள். மறுமைத் தண்டனையை விட  இம்மையில் கிடைக்கும் தண்டனை இலகுவானது என்று எண்ணி, தாமாக விரும்பி வந்து தண்டனையை  ஏற்றுள்ளார்கள் என்பதற்கு மேற்கண்ட மாயிஸ்[ரலி] அவர்களின் சம்பவமே சான்று. மாயிஸ்[ரலி] அவர்கள் விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டவர் அல்ல. மாறாக,
 
தான் செய்த பாவத்தை யாரும் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அவர்களின் இறையச்சம்தான் இறைத்தூதர்[ஸல்] அவர்களை நோக்கி இழுத்து வந்தது. அங்கே மாயிஸ்[ரலி] குற்றத்தை சொல்லி தண்டனை கேட்டபோது, மாயிஸ்[ரலி] அவர்களின் நற்குணத்தை அறிந்த  நபியவர்கள்,
 
'உமக்குப் பைத்தியமா..? என்கிறார்கள், பின்பு நீர் முத்தமிட்டிருக்கலாம்; அல்லது சைகை செய்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லி மாயிஸ்[ரலி] அவர்களை திருப்பி அனுப்ப முயற்ச்சிக்கிறார்கள். இறுதியாக மாயிஸ்[ரலி] அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால்தான் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
 
தான் செய்த பாவத்தை யாரும் பார்க்காத நிலையிலும், இறைவன் பார்க்கிறான் என்ற அச்சத்தில் ஒரு வேதனை மிகுந்த தண்டனையை  ஏற்கும் அளவுக்கு சஹாபாக்கள் இறையச்சம் மிகுந்தவர்களாக திகழ்ந்துள்ளார்கள். அனால் இன்றைக்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோர் அதை ஏற்க மனமின்றி 'சப்பைக்கட்டு'  கட்டுவதைக் காண்கிறோம்.  காரணம் நாம் செய்த தவறை ஒப்புக்கொண்டால் இந்த உலகில் நம்முடைய 'இமேஜ்' அடிபட்டுப் போகுமே என்று கருதுகிறர்கள்.
 
ஆனால் சஹாபாக்கள் இந்த உலகில் தமது 'இமேஜ்' பாதிக்கப்படுவதையோ, அல்லது தண்டனையின் வேதனை குறித்தோ அஞ்சவில்லை. மாறாக மறுமையின் விசாரணையும், அவமானத்தையும், வேதனையையும் குறித்தே அஞ்சினார்கள். அன்று அவர்கள் விரும்பி ஏற்ற தணடனை இன்று அவர்களை சரித்திர புருஷர்களாக பலநூறு ஆண்டுகள் கடந்த பின்னும் நினைவு கூற செய்கிறது. எனவேதான் அந்த நல்லறத்  தோழர்களின் இடத்தை ஒருபோதும் நாம் எட்டிட முடியாது எனபது திண்ணம்.
 
எல்லாம் வல்ல அல்லாஹ் மாயிஸ்[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக!

இறைத்தூதர் [ஸல்] வெறுத்த உணவு எனக்கும் வெறுப்பானதே!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.
அபூ அய்யூப் அல் அன்ஸாரி[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

இறைத்தூதர்[ஸல்] அவர்கள் [மதீனா வந்த போது] எனது வீட்டிலேயே தங்கினார்கள். நபி[ஸல்] அவர்கள் கீழ் தளத்திலும், நாங்கள் மேல் தளத்திலும் தங்கியிருந்தோம்.  ஓர் இரவில் நான்  உணர்வு பெற்று, நாம் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் தலைக்கு  மேலாக நடமாடுவதா..? என்று சொல்லிக்கொண்டு [தலைக்கு  நேரான பகுதியை தவிர்த்து] மற்றொரு பகுதியில் [நானும் எனது வீட்டாரும்] இரவைக் கழித்தோம்.

பின்னர் நபி[ஸல்] அவர்களிடம் சொன்னபோது அவர்கள், 'கீழ் தளமே மிகவும் வசதியானது' என்று கூறினார்கள். நான் 'நீங்கள் கீழே இருக்க நான் மேலே இருக்கமாட்டேன்' என்று கூறினேன். எனவே நபி[ஸல்] அவர்கள்  மேல்தலத்துக்கும், நான் கீழ்தளத்திற்கும் இடம் மாறிக்கொண்டோம்.

நான் நபி[ஸல்] அவர்களுக்காக உணவு தயாரித்தேன். அது [நபி[ஸல்] அவர்களிடம் சென்றுவிட்டு] என்னிடம் கொண்டுவரப்பட்டபோது, [உணவுப் பாத்திரத்தில்] நபி[ஸல்] அவர்கள் விரல் பட்ட இடத்தைப் பற்றிக்கேட்பேன். அவர்கள் விரல்பட்ட இடத்தைக் கண்டறிந்து  அந்த இடத்தில்  நான்  சாப்பிடுவேன்.

இவ்வாறாக  [ஒருநாள்] வெள்ளைப் பூண்டு உள்ள ஓர் உணவைத் தயாரித்தேன். [நபி[ஸல்] அவர்களிடம்  சென்றுவிட்டு] அது திருப்பிக் கொண்டுவரப் பட்டபோது, நபி[ஸல்] அவர்களின் விரல்பட்ட இடத்தைக் கேட்டேன். அப்போது நபி[ஸல்] அவர்கள் உண்ணவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது. அதைக் கேட்டு  நான்  பதறினேன்.

மேல்தளத்திற்கு சென்று அது[வெள்ளைப்  பூண்டு உணவு] தடை செய்யப்பட்டதா..? என்று நபி[ஸல்] அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை. ஆயினும் நான் அதை விரும்பவில்லை என்று கூறினார்கள்.

'அவ்வாறாயின் தாங்கள் வெறுப்பதை அல்லது வெறுத்ததை நானும் வெறுக்கிறேன் என்று கூறினேன்'. அப்போது நபி[ஸல்] அவர்களிடம் [வேத அறிவிப்பு] வந்துகொண்டிருந்தன.

ஆதாரம்; முஸ்லிம்.

அன்பானவர்களே! இந்த பொன்மொழி, இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது அருமை சஹாபாக்கள் கொண்டிருந்த நேசத்திற்கு மற்றொரு சான்றாகும். இதில் சம்மந்தப்பட்ட அபூ அய்யூப்[ரலி] அவர்கள் நபியவர்கள் மீது கொண்ட அபரீதமான மதிப்பும், நேசமும் வெளிப்படுவதைக் காணலாம். இறைத்தூதர் [ஸல்] அவர்களுக்கு மேலாக நாம் தங்குவதா; அவர்களின் தலைக்கு  மேலாக நாம் நடமாடுவதா என்று அஞ்சியதாகட்டும், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் பூண்டு சம்மந்தப்பட்ட உணவை சாப்பிடாதது கண்டு பதறியதாகட்டும், மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டு, இறைத்தூதர்[ஸல்]  அவர்கள் மனம் விரும்பாத ஒரு உணவு தனக்கு தடையில்லை என்றாலும், அல்லாஹ்வின் தூதருக்கு விருப்பமில்லாத உணவு எனக்கும் வெறுப்பானதே  என்று முடிவெடுத்ததாக்கட்டும், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கரம்பட்ட இடத்தில் உண்ணும் அந்த பாங்காகட்டும்; இவையெல்லாம் அபூ அய்யூப்[ரலி] அவர்களின் பண்பையும், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது கொண்ட நேசத்தையும் பதிவு செய்யும் வரலாற்று சுவடுகள்.

ஆம்! அந்த இனிய தோழர்களுக்கு இன்பம் என்றால் இறைத்தூதரின் சிரிப்பும்; துன்பம் என்றால், இறைத்தூதரின் வாட்டமும் தானே!
அல்லாஹ் அந்த தோழர்களை பொருந்திக் கொள்வானாக!

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

எமது சொல்லும், செயலும் இஸ்லாமே என வாழ்ந்தவர்!

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்;

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'பச்சை
குத்திவிடும் பெண்கள், பச்சை
குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?' என்று கூறினார்கள். இச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, 'உம்மு யஅகூப்' எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து, 'இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், '(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!' என்று கேட்டதற்கு அவர்கள், 'நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். 'இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகி இருங்கள்' எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?' என்று கேட்டார்கள். அந்தப் பெண், 'ஆம் (ஒதினேன்)' என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, 'உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்' என்று கூறினார். அப்துல்லாஹ்(ரலி), 'சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!' என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்' என்று கூறினார்கள். நூல்;புஹாரி எண் 4886
 
அன்பானவர்களே! நபித் தோழர்களில் மிகச்சிறந்தவர்களில் ஒருவரான இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள், பச்சை குத்துவது உள்ளிட்ட அல்லாஹ் வடிவமைத்ததை மாற்றுபவர்களை சபிக்கிறார்கள். இச்செய்தி ஒரு பெண்மணிக்கு எட்டுகிறது. சரி! சொன்னவர் சாமான்யர் அல்ல. ஒரு உயர்வான நபித்தோழர். எனவே அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று அப்படியே நம்பிவிடவில்லை. மாறாக, இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களிடம் வந்து உங்களின் கூற்றுக்கு என்ன ஆதாரம்..? என்கிறார். இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப் பட்டுள்ளவர்களை நான் சபிக்கக் கூடாதா என்கிறார்கள். அப்போதும் அப்பெண்மணி விடவில்லை. குர்ஆணை முழுமையாக ஒதியுள்ளேன் எனவே நீங்கள் கூறுவது போல இல்லையே என்கிறார். இந்த அளவுக்கு சஹாபிப் பெண்கள் தெளிவாக இருந்துள்ளார்கள். குர்ஆணோடு முழு தொடர்போடு இருந்துள்ளார்கள். ஒருவர் கூறும் சட்டம் குர்ஆனில் இல்லை என்று அடித்து சொல்லும் அளவுக்கு குர்ஆணை முழுமையாக மனனம் செய்துள்ளார்கள். ஆனால் இன்று நம்முடைய பெண்கள்  மட்டுமல்ல; ஆண்களில் கூட  பெரும்பாலோருக்கு குர்ஆண்  ஓத தெரிவதில்லை. காரணம் போடுபோக்குத்தான். எதுவா இருந்தாலும் ஆலிம்ஷாக்களிடம் கேட்டுக்கொள்வோம். அவர்கள் சொல்வதை அப்படியே அமுல்படுத்துவோம் என்ற மெத்தனப்போக்குத்தானே  இத்தனை குழப்பங்களுக்கு வழிவகுத்தது..? இது ஒருபுறமிருக்க, இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களிடம் அப்பெண்மணி, 'எல்லாம் சரிதான் ஆனா ஒங்க வீட்டுல ஒங்க துணைவியார் செய்கிறாகளாமே' என இழுக்க, சட்டென இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் என் வீட்டில் போய் பாருங்கள் என்கிறார்கள். அதோடு இறுதியாக, என் மனைவி மட்டும் அப்படி செய்பவளாக இருந்தால் அவளோடு நான் சேர்ந்து வாழமாட்டேன் என்கிறார்கள் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள். இன்றைக்கு வெளியிலே மார்க்க சட்டம் பேசக்கூடிய நம்மில் பலரின் வீட்டில் நாம் பேசக்கூடிய சட்டங்கள் பெரும்பாலும் நமது குடும்பத்தாரால் அமுல்படுத்தப்படுவதில்லை. ஆனாலும் நாம் அதை கண்டுகொள்வதில்லை. அவ்வளவு ஏன்..? பல நேரங்களில் நாமே பல அமல்களை கோட்டை விடக்கூடியவர்களாக இருக்கிறோம். 'ஊருக்குத்தான் உபதேசம்'  என்பதற்கு ஏற்ப நமது செயல்பாடுகள் உள்ளன.ஆனால் அருமை சஹாபா பெருமக்கள் சொல்லிலும் செயலிலும் தூய்மையாளர்களாக திகழ்ந்ததோடு, தந்து குடும்பத்தார் விசயத்திலும் அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களின் இந்த செய்தி உணர்த்துகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் மார்க்கத்தை சொல்லில் மட்டுமல்ல; செயலிலும் கடைபிடிக்க அருள்புரிவானாக!

'பட்டு' இவரது கைக்குட்டைக்கு கிட்ட நிற்குமா ...?

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம் .
அகழ்ப்போரின்போது ஸஅத் இப்னு முஆத்(ரலி) தாக்கப்பட்டார்கள். அன்னாரின் கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் இப்னு அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி)விட்டான். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்குக்) கூடாரமொன்றை அமைத்தார்கள். அகழ்ப் போரை முடித்துக் கொண்டு வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் தங்களின் தலையிலிருந்து புழுதியைத் தட்டிய வண்ணம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'நாங்கள் இன்னும்  ஆயுதங்களைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கி (படை நடத்தி)ச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு 'எங்கே? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது 'பனூ குறைழா' குலத்தினர் (வசிப்பிடம்) நோக்கி ஜிப்ரீல் (அலை) அவர்கள் சைகை செய்தார்கள். உடனே,  உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பனூ குறைழா நோக்கிச் சென்றார்கள்.(பல நாள் முற்றுகைக்குப் பின்னர்) ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக் கொண்டு (யூதர்களான) 'பனூ குறைழா' குலத்தார் (கைபரிலிருந்த தங்கள் கோட்டையிலிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களுக்கு ஆளனுப்பிட, அன்னார் கழுதையின் மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபிகளார் தாற்காலிமாக அமைத்திருந்த) தொழுமிடத்திற்கு அருகே அன்னார் வந்து சேர்ந்ததும், நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தலைவரை... அல்லது உங்களில் சிறந்த வரை... நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கி விடுங்கள்" என்று அன்சாரிகளிடம் கூறினார்கள். பிறகு, '(சஅதே!) இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறீர்கள்?') என்று கேட்டார்கள். ஸஅத்(ரலி), 'இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்களை நீங்கள் கொன்று விட வேண்டும்; இவர்களுடைய பெண்களையும் குழந்தைகளையும் நீங்கள் கைது செய்திட வேண்டும் என்று நான் தீர்ப்பளிக்கிறேன்" என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்."... அல்லது 'அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்" என்று கூறினார்கள்.
நூல்; புஹாரி எண் 4121 எண் 4122
 
ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்கள் மதீனாவில் அவ்ஸ் கோத்திரத்தாரின் தலைவராக இருந்தார்கள். இந்த கோத்திரத்தாரோடு பனூகுறைளா கோத்திரத்தார் நட்புறவு பாராட்டி வந்தனர். எனவே அவ்ஸ் கோத்திரத்தின் தலைவரான ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்கள் நமக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவார்கள் என கருதினார்கள். ஆனால் அல்லாஹ்வின் நேசரான ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களோ, இறைவனின் பொருத்தத்தை மட்டும் நாடியவர்களாக, அவன் விரும்பும் தீர்ப்பை பனூகுறைலாக்கள் விசயத்தில் வழங்குகிறார்கள். அதற்காக அல்லாஹ்வின் தீர்பபுப் படியே தீர்ப்பளித்தீர்கள் என்று நபியவர்களால் பாராட்டப் படுகிறார்கள். மேலும் ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் நேசம் கொண்டவர்களாக திகழ்ந்தார்கள். அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்டபோது, இறைத்தூதர் அவர்களே! அவதூறு சொன்னவர்களில்  எனது கோத்திரத்தார் இருந்து, நீங்கள் உத்தரவிட்டால் அவனது கழுத்தை நான் துண்டிக்கிறேன் என்று முழங்கியவர். அதுபோலவே ஸஅத் ரலி அவர்கள் மீது நபி[ஸல்] வர்களும் மிகுந்த நேசம் கொண்டவர்களாக இருந்தார்கள். எனவேதான் போரில் ஸஅத் [ரலி] அவர்கள் காயமுற்றவுடன்  அவர்களை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்காக மஸ்ஜிதுன் நபவியிலேயே அவருக்காக கூடாரம் அமைத்து கவனித்தார்கள். நபியவர்கள் மட்டுமன்றி, அல்லாஹ்வும் ஸஅத்[ரலி] அவர்களை நேசித்தான் என்பதற்கு, ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் அசைந்தது [புஹாரி] சான்றாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களுக்கு மகத்தான சுவன பதவிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அது குறித்து அறிந்துகொள்ள ஒரு பொன்மொழி;
 
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்;

நபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்து வந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆ
துக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிடத் தரமானவையாயிருக்கும்" என்று கூறினார்கள்.[புஹாரி எண் 2615 ]
 
எங்கள் இறைவா! உனது திருப்தியே இலக்காக கொண்டு வாழ்ந்த அந்த நல்லறத்தோழர்களின் வழியில் எங்களையும் வாழ அருள்புரிவாயாக!

புதன், 25 ஆகஸ்ட், 2010

இறைவனுக்கு எதிரிகள்; எங்களுக்கும் எதிரிகளே!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
பத்ர் போரில் பிடிபட்ட கைதிகள் குறித்து, நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் ஆலோசித்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் நமது தந்தை வழி உறவினர்கள். நமது சகோதரர்கள் மற்றும் நெருக்கமான குடும்பத்தார்கள். எனவே, (இவர்களை கொலை செய்யாமல்) இவர்களிடம் (ஃபித்யா) ஈட்டுத்தொகை பெற்றுக் கொண்டு இவர்களை விடுதலை செய்வோம். நாம் வாங்கும் ஈட்டுத்தொகை இறைநிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும். அதிவிரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டக் கூடும். அப்போது இவர்களும் நமக்கு உதவியாளர்களாக மாறுவர்" என்று கூறினார்கள்.

பின்பு நபி (ஸல்) உமர் (ரழி) அவர்களிடம் "கத்தாபின் மகனே! நீங்கள் என்ன யோசனை கூறுகிறீர்கள்?" எனக் கேட்டார்கள். "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரழி) அவர்கள் கூறிய ஆலோசனையை நான் விரும்பவில்லை. மாறாக, இவர்களைக் கொலை செய்வதே எனது யோசனை. எனது இன்ன உறவினரை என்னிடம் கொடுங்கள். அவர் கழுத்தை நான் வெட்டுகிறேன். அக்கீல் இப்னு அபூதாலிபை அலீ (ரழி) அவர்களிடம் கொடுங்கள். அலீ (ரழி) அவர் கழுத்தை வெட்டட்டும். ஹம்ஸா (ரழி) அவர்களிடம் அவரது இன்ன சகோதரரை கொடுங்கள். ஹம்ஸா (ரழி) அவரது கழுத்தை வெட்டட்டும். இதன்மூலம் இணைவைப்பவர்கள் மீது எங்களது உள்ளத்தில் எந்தப் பிரியமும் இல்லை என்று அல்லாஹ் தெரிந்து கொள்வான். அது மட்டுமா! இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் குறைஷிகளின் தலைவர்களும் அவர்களை வழி நடத்தும் கொடுங்கோலர்களும் ஆவார்கள்" என்று உமர் (ரழி) கூறினார்கள்.

அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) ஏற்று கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். உமர் (ரழி) கூறுகிறார்கள்:
 
அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) விரும்பினார்கள். நான் கூறியதை விரும்பவில்லை. எனவே கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். அதற்கு அடுத்த நாள் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரழி) அவர்களும் அழுதவர்களாக இருந்தார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்களது தோழரும் ஏன் அழுகிறீர்கள்? அழுகைக்குரிய செய்தி எதுவும் இருப்பின், முடிந்தால் நானும் அழுகிறேன். முடியவில்லையென்றால் நீங்கள் அழுவதற்காக நானும் அழ முயல்கிறேன்" என்றேன். அதற்கு நபி (ஸல்) "ஈட்டுத்தொகை வாங்கியதின் காரணமாக உமது தோழர்களுக்கு ஏற்பட்டதை எண்ணி நான் அழுகிறேன். அருகில் உள்ள ஒரு மரத்தை சுட்டிக் காண்பித்து இம்மரத்தை விட நெருக்கமாக அவர்களுக்குரிய வேதனை எனக்குக் காண்பிக்கப்பட்டது" என்றார்கள்.

இது தொடர்பாகவே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:

(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளைக் கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்வை விரும்புகிறான். அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்லாஹ்விடம் (பத்ர் போரில் கலந்த முஸ்லிம்களுக்கு மன்னிப்பு உண்டு என்ற) விதி ஏற்கனவே உறுதி செய்யப்படாமலிருப்பின் நீங்கள் (பத்ர் போரில் கைதிகளிடமிருந்து ஈட்டுத் தொகையை) வாங்கியதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும். (அல்குர்ஆன் 8:67, 68)
நூல்; முஸ்லிம்.
 
அன்பானவர்களே! அல்லாஹ்வின் பகைவர்களை முதன்முதலில் வெற்றிகொண்டு இம்மண்ணில் ஏகத்துவத்தை நிலை நாட்டிய பத்ர் போரில் உயிரோடு பிடிக்கப்பட்ட கைதிகள்  குறித்து நபி[ஸல்] அவர்கள் ஆலோசித்தபோது, உமர்[ரலி] அவர்கள் கூறிய வார்த்தைகள் அவர்களது ஈமானிய உறுதியையும், இறைவன் மீது கொண்ட அளப்பரிய நேசத்தையும் வெளிப்படுத்துவதோடு, இறைவனது பகைவர்கள்  என்னதான் எங்களின் ரத்தபந்தமாக இருந்தாலும் அவர்கள் எங்களுக்கு எதிரிகளே என்று கர்ஜித்த அந்த வீரமும், அல்லாஹ் பெரியவன்! அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப உமர்[ரலி] அவர்கள் மொழிந்தவையாகும். அதற்கு உமர்[ரலி] அவர்களின் கருத்தை ஆதரித்து அல்லாஹ் இறக்கிய வசனம் சான்றுபகர்கிறது. மேலும், இந்த வசனம் இறங்கிய மாத்திரமே அல்லாஹ்வின்தூதர்[ஸல்] அவர்களும், தோழர்களும் அழுவதைக் கண்ட உமர்[ரலி] அவர்கள், இறைத்தூதர் அவர்களே! ஏன் அழுகிறீர்கள் என்று சொன்னால் நானும் அழுவேன். அழ முடியவில்லையாயின் அழுக முயற்ச்சிக்கிறேன் என்றார்களே உமர் அவர்கள். இதில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள்  மீது உமர்[ரலி] கொண்டிருந்த அளப்பரிய நேசம் வெளிப்படுவதை காணலாம். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் சிரித்தால் சிரித்து; அவர்கள் அழுதால் அழுது, எங்களுக்கென தனி சந்தோசம் எதுவுமில்லை; எங்கள் தலைவரின் மகிழ்ச்சியே எங்களின் மகிழ்ச்சி என்று வாழ்ந்த அந்த உத்தமத் தோழர்களை உலகம் உள்ளளவும் உண்மை முஃமின்களின் உள்ளம் நினைவு கூறும் இன்ஷா அல்லாஹ்.
 
எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த நல்லறத் தோழர்களுக்கு சுவனத்தில் உயர்வான அந்தஸ்த்தை வழங்கிடுவானாக!

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

தங்கத்தை விட தாஹா நபியின் கட்டளைக்கு முன்னுரிமை தந்தவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 
அம்ர் இப்னு ஷரீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான், ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) வந்து, தம் கையை என்னுடைய தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூ ராஃபிஉ(ரலி) வந்து, 'ஸஅதே! எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக!' எனக் கூறினார்கள். அதற்கு ஸஅத்(ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்!" என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர்(ரலி) அவர்கள், ஸஅத்(ரலி) அவர்களிடம் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!" என்றார்கள். அப்போது ஸஅத்(ரலி), 'அல்லாஹ்வீன் மீது ஆணையாக! தவணை அடிப்படையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தரமாட்டேன்!" என்று கூறினார்கள். அதற்கு அபூ ராஃபிவு(ரலி), 'ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது; அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்' என்று கூறிவிட்டு ஸஅதுக்கே விற்றார்.
ஆதாரம் புஹாரி எண் 2258
 
அன்பானவர்களே! நாம் நம்முடைய வீட்டை விற்பதாக இருந்தால் நமது வீட்டை வாங்கிக்கொள்கிறீர்களா என்று அண்டைவீட்டாரிடம் கேட்கத் தயங்குவோம். காரணம் பெரும்பாலும் அண்டை வீட்டினரோடு நமக்கு நல்லுறவு  இருப்பதில்லை. மேலும் நமது வீடோ அல்லது நிலமோ  மற்றவர்களுக்கு பயனளிப்பதைவிட நமது அண்டை வீட்டினருக்கே அதிக பயன்தரக் கூடியதாக இருக்கும். ஆனாலும் நாம் யார் அதிக விலை தருகிறாரோ அவருக்குத்தான் நமது வீட்டையோ,நிலத்தையோ விற்க முனவருவோம். காரணம் நமக்கு நபிகளாரின் கட்டளைகளை விட உலகத்தின் பொருளாதாரம் பிரதானமாக தெரிகிறது. ஆனால் மேற்கண்ட செய்தியில், அபூ ராஃபிஊ[ரலி] அவர்கள், ஐநூறு தங்க காசுகளுக்கு விலைக்கு கேட்கப்பட்ட தனது வீட்டை தனது அண்டை வீட்டினரான ஸஅத் இப்னு அபி வக்காஸ்[ரலி] அவர்களுக்கு, விலை குறைவாக நான்காயிரம் வெள்ளிக்காசுகளுக்கு அதுவும் தவணை  முறையில் வழங்குவதற்கு காரணம், 'அண்டை வீட்டாரே அதிக உரிமை படைத்தவர்' என்ற நபியவர்களின் கட்டளைதான் என்பதைக் காணும்போது, அந்த நல்லறத் தோழர்களுக்கு முன்னால், உலகின் செல்வாமா..? அல்லது இறைத் தூதரின் கட்டளையா..? என்ற கேள்வி வருமாயின், உலகின் செல்வங்களுக்காக ஒருபோதும் எங்கள் நபியின் கட்டளையை உதாசீனப்படுத்தமாட்டோம் என்ற அவர்களின் கொள்கை உறுதி மெய்சிலிர்க்க செய்வதாக உள்ளது. ஆனால் நாம் இன்றைக்கு உலகின் வசதி வாய்ப்ப்புகளுக்காக இன்னும் பல்வேறு விஷயங்களுக்காக தெளிவான நபியவர்களின் கட்டளையை புறக்கணிப்பவர்களாக இருப்பது உள்ளபடியே வேதனைக்குரியதாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நபியவர்களின் கட்டளைக்கு அணுவளவேனும் மற்றம் செய்யாமல் நடந்த /நடக்க முயன்ற அந்த நல்லறத்தோழர்களை பொருந்திக் கொள்வானாக!

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

புகார் சொல்லும்போதும் 'புனைந்து' சொல்லாத மாதரசி!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இஸ்லாமிய வரலாற்றில் கொள்கையை காக்கும் பொருட்டு முதன் முதலாக செய்யப்பட்ட ஹிஜ்ரத் அபிசீனியா ஹிஜ்ரத்தாகும். இந்த தியாகப் பயணத்தில் ஜாஃபர் இப்னு அபீதாலிப் [ரலி] அவர்களும் அவர்களது அருமை மனைவி அஸ்மா பின்த் உமைஸ் [ரலி] அவர்களும் அடங்குவர். பின்னாளில் நபி[ஸல்] அவர்கள் மதீனா ஹிஜ்ரத் செய்து அங்கு இஸ்லாமிய சாம்ராஜ்யம் நிறுவி, யூதர்களை கைபர் போரில் வெற்றி கொண்ட சமயத்தில் அபிசீனியாவில் இருந்த முஹாஜிர்கள் மதீனாவை வந்தடைந்தனர். அப்படி மதீனாவை வந்தடைந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களுக்கும், தியாக வேங்கை உமர்[ரலி] அவர்களுக்கும் ஒரு வாக்குவாதம். அதாவது அபிசீனியா ஹிஜ்ரத் செய்தவர்கள் இறைத்தூதருக்கு நெருக்கமானவர்களா..? அல்லது மதீனா ஹிஜ்ரத் செய்தவர்கள் இறைத்தூதருக்கு நெருக்கமானவர்களா..? என்று. இனி ஹதீஸில் இருந்து பார்ப்போம்;

[அபிசீனியாவில் இருந்து]மதீனாவிற்கு வந்தவர்களில் ஒருவரான அஸ்மா பின்த் ஹுமைஸ்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களின் மனைவியார் அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை சந்திப்பதற்காக சென்றார்கள். பிறகு உமர்[ரலி] அவர்கள் தமது புதல்வி ஹஃப்ஸா[ரலி] அவர்களை காண அவர்களின் இல்லத்திற்கு சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா[ரலி] அவர்களுக்கு அருகில் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் இருந்தார்கள். உமர்[ரலி] அவர்கள் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களை கண்டபோது இவர் யார்.? என்று [தம் மகளிடம்] கேட்டார்கள். இவர் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] என்று மறுமொழி பகர்ந்தார்கள் ஹஃப்ஸா[ரலி]. இவர் அபிசீனியரா..? கடல் மார்க்கமாக [மதீனா] வந்தவரா என்று உமர்[ரலி] கேட்டார்கள். அதற்கு ஆம் என்று அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் கூறினார்கள். அப்போது உமர்[ரலி] அவர்கள்,

உங்களுக்கு முன்பே நாங்கள் [மதீனாவிற்கு] ஹிஜ்ரத் செய்து வந்துவிட்டோம். எனவே உங்களை விட நாங்களே இறைத்தூதர்[ஸல்] அவர்களுக்கு உரியவர்கள் என்று கூறினார்கள். இதைக்கேட்டு அஸ்மா[ரலி] அவர்கள் கோபப்பட்டு, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அப்படியில்லை. நீங்கள் இறைத்தூதர்[ஸல்] அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவர்களுக்கு அவர்கள் உணவளித்தார்க்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். நாங்களோ வெகு தொலைவில் இருக்கும் பகைவர்கள் உள்ள அபிசீனிய நாட்டில் அல்லது பூமியில் இருந்தோம். அல்லாஹ்வுக்காவும், அவனது தூதருக்காகவுமே இதைச்செய்தோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் சொன்னதை இறைத்தூதர்[ஸல்] அவர்களிடம் தெரிவிக்கும்வரை நான் எதையும் உண்ணவோ, குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம் , அச்சுறுத்தப்பட்டோம். இதை நான் இறைத்தூதரிடம் கூறுவேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் பொய் சொல்லவும் மாட்டேன். திரித்துக் கூறவும் மாட்டேன். நீங்கள் கூறியதை விட எதையும் கூட்டிச்சொல்லவும் மாட்டேன் என்றார்கள்.

பின்பு நபி[ஸல்] அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் 'உமர் [ரலி] இன்னின்னவாறு கூறினார்கள்' என்றார்கள். அதற்கு நபி[ஸல்] அவர்கள், அவருக்கு நீங்கள் என்ன பதிலளித்தீர்கள்..? என்று கேட்டபோது, அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன் என்று அஸ்மா[ரலி] கூறினார்கள். அப்போது நபி[ஸல்] அவர்கள், உங்களைவிட அவர் எனக்கு உரியவர் அல்லர்; அவருக்கும் அவரது சகாக்களுக்கும் ஒரே ஒரு ஹிஜ்ரத் [செய்தசிறப்பு] தான் உண்டு. [அபிசீனியாவிலிருந்து] கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு இரண்டு [அபிசீனியா-மதீனா] ஹிஜ்ரத் [செய்த சிறப்பு] உண்டு என்று கூறினார்கள்.
நூல்;புஹாரி எண் 4230

அன்பானவர்களே! நாம் ஒருவரைப்பற்றி ஒருவரிடம் புகார் அளிக்க செல்வோமாயானால், நாம் யார் மீது புகாரளிப்போமோ அவர்மீது அவர் சொன்னவை மட்டுமன்றி, சொல்லாதவைகளையும் இட்டுக்கட்டி நமது கருத்தை நிலைநாட்டிட, நமக்கு சாதகமான கருத்தை தீர்ப்பாக பெற்றிடவே முனைவது நம்மில் பலரது இயல்பாகவே உள்ளது. இயக்கங்கள் பிரிவுக்குப்பின் பின் ஒருவரை ஒருவர் சேற்றை வாரி வீசிக்கொள்வதும் இந்த அடிப்படையில்தான். ஆனால் இந்த பொன்மொழியிலோ, இறைத்தூதர் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் வந்தபின்னால் மதீனாவுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்களில் தாமே முதலானவர் என்பதை வைத்து, நாங்கள்தான் இறைத்தூதருக்கு உவப்பானவர்கள் என்று எதேச்சையாக உமர்[ரலி] அவர்கள் கூறியதைக் கண்டு சீரும்வேங்கையாக பொங்கி எழுந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி]அவர்கள், உமர்[ரலி] அவர்கள் குறித்து இறைத்தூதரிடம் புகாரளிக்க செல்லும் போது சொன்ன வார்த்தை, பொய்யுரைக்கமாட்டேன்; திரித்துக் கூறமாட்டேன்; நீங்கள் சொன்னதை விட கூடுதலாக ஒரு வார்த்தை கூட கூறமாட்டேன் என்றார்களே! இது சஹாபாக்கள் தியாகிகளாக மட்டுமல்ல; வாய்மையாளர்களாகவும் திகழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாறு கூறும் சான்றாகும். தனக்கு ஒருவனை பிடிக்கவில்லைஎன்றால் அவனை எங்ஙனமேனும் மண்ணை கவ்வவைக்க சபதமேற்று அவனைப்பற்றி 'கையில் மடியில்' போட்டு சொல்லும் கெட்ட குணத்தை கொண்டவர்களுக்கு இந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களின் வாழ்க்கை மிகப்பெரும் படிப்பினையாக உள்ளது.

சனி, 14 ஆகஸ்ட், 2010

பாவத்தைக் கண்டு பதறி பரிகாரம் கண்டவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நாங்கள் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அமர்ந்திருந்த போது, ஒருவர் நபி[ஸல்] அவர்களிடம் வந்து, இறைத்தூதர்[ஸல்] அவர்களே நான் அழிந்துவிட்டேன் என்றார். அப்போது நபி[ஸல்] அவர்கள், உமக்கு என்ன நேர்ந்தது..? என்று கேட்டார்கள். நான் நோன்பு வைத்துக்கொண்டு என்மனைவியிடம் கூடிவிட்டேன் என்று கூறினார். அப்போது நபி[ஸல்] அவர்கள், விடுதலை செய்வதற்கு ஒரு அடிமை உம்மிடம் இருக்கிறாரா..? என்று கேட்டார்கள் . அதற்கு அவர், இல்லை என்று சொன்னார். தொடர்ந்து இரு மாதம் நோன்பு வைக்க உமக்கு சக்தி இருக்கிறதா..? என்று நபி[ஸல்] அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா..? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்று சொன்னார். நபி[ஸல்] அவர்களிடம் பேரிச்சம் பழம் நிறைந்த 'அரக்' எனும் அளவை கொண்டுவரப்பட்டது. அப்போது நபி[ஸல்] அவர்கள், கேள்வி கேட்டவர் எங்கே என்று கேட்டார்கள். நானே என்று அவர் கூறினார். இதைப்பெற்று தர்மம் செய்வீராக! என்று இறைத்தூதர்ஸல்] அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், இறைத்தூதர்[ஸல்] அவர்களே! என்னைவிட ஏழையாக இருப்போருக்கா[நான் தர்மம் செய்யவேண்டும்]..? மதீனாவின் [கருங்கற்கள் நிறைந்த] இரு மலைகளுக்கும் மத்தியில் என் குடும்பத்தை விட பரம ஏழைகள் யாருமில்லை என்று கூறினார். அப்போது நபி[ஸல்] அவர்கள் தங்களின் கடவாய் பற்கள் தெரியும் அளவுக்கு சிரித்தார்கள்; பிறகு இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக! என்றார்கள்.
நூல்;புஹாரி எண்; 1936

அன்பானவர்களே! பாவங்கள் செய்வது மனித இயல்பு. ஆனால் செய்த பாவத்தை எண்ணி வருந்துவது ஒரு இறை நம்பிக்கையாளனின் பண்பு. ஒரு இறை நிராகரிப்பாளன் தான் செய்யும் பாவத்தை தன் மீது அமரும் கொசுக்கு நிகராக கருதுவான்; ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளன் தான் செய்யும் பாவத்தை தன் மீது ஒரு மலை சாய்வதைப் போல கடுமையாக கருதுவான். அதனால்தான், ஆதமின் மகன் பாவம் செய்யக்கூடியவனே; அவர்களில் சிறந்தவன் தவ்பா எனும் பாவமன்னிப்பு கோருபவன் என்ற நபிமொழிக்கேற்ப, இந்த ஸஹாபி உணர்ச்சி மேலிட ஒரு பாவம் செய்கிறார். அதுவும் அந்நியப் பெண்ணிடம் அந்த தவறை செய்யவில்லை. அவருக்கு ஹலாலான மனைவியிடமே செய்கிறார். ஆனாலும் ரமளானில் பகலில் நோன்பு நோற்ற நிலையில் செய்ததால்தான் பாவமாகியது. அந்த பாவம் அவரும்- அவருடைய மனைவியும் தவிர வேறு எவரும் அறியாத நிலையிலும் கூட தான் செய்த பாவத்தால் கைசேதப்பட்டு தான் 'நாசமாகி' விட்டதாக புலம்பிக்கொண்டு நபியவர்களிடம் ஓடோடி வருகிறார். நபியவர்களிடம் பரிகாரம் காண்கிறார். இதுதான் ஒரு இறை நம்பிக்கையாளின் பண்பாகும். சஹாபாக்கள் பாவம் செய்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?
என்று அவர்களை குற்றவாளிகளாக காட்ட இந்த ஹதீஸை சிலர் சொல்வார்கள். ஆனால் இந்த ஹதீஸில் அவர்கள் பாவத்தை செய்து விட்டு துடித்த அந்த துடிப்பை; செய்த பரிகாரத்தை மறைத்து அல்லது மறந்து விடுவார்கள். எனவே சஹாபாக்கள் இயன்றவரை பாவம் தவிர்த்திருக்கிறார்கள். அதையும் தாண்டி மனிதன் என்ற முறையில் தப்பித்தவறி செய்த பாவத்திற்காகவும் வருந்தி தவ்பா செய்துள்ளார்கள். பரிகாரம் கண்டுள்ளார்கள். எனவே பாவம் செய்யும் ஒவ்வொருவரும் பாவத்தை நஞ்சென வெறுக்கவேண்டும். செய்த பாவத்திற்கான மன்னிப்பை அல்லாஹ்விடம் கேட்கவேண்டும். அதன் மூலமே நாம் நஷ்டத்திலிருந்து விடுபடமுடியும் என்பதற்கு இந்த நபித் தோழரின் வாழ்வு மிகச்சிறந்த படிப்பினையாக நமக்கு உள்ளது.

அல்லாஹ், அந்த நபித் தோழரை பொருந்திக்கொள்வானாக! நம்மை பாவத்திலிருந்தும் காப்பானாக!!

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

உம்மஹாத்துல் முஃமினீன்களின் தியாகம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

[ஒருமுறை] அபூபக்கர் அஸ்ஸித்தீக்[ரலி] அவர்கள் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் வீட்டிற்கு வந்து உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்போது மக்களில் பலர் தங்களில் எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடைக்காமல் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் வீட்டின் வாசலிலேயே அமர்ந்திருப்பதை கண்டார்கள். அனுமதி கிடைத்ததும் அபூபக்கர்[ரலி] உள்ளே சென்றார்கள். பிறகு உமர்[ரலி] அவர்கள் வந்து உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் அனுமதி கிடைத்தது.[அவர்களும் உள்ளே நுழைந்தார்கள்] அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தமது மனைவியர் சூழ, பேசமுடியாத அளவிற்கு துக்கம் மேலிட அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.

அப்போது அபூபக்கர்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களை சிரிக்கவைக்க எதையேனும் சொல்லப் போகிறேன் என்று[மனதிற்குள்] சொல்லிக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களே! எனது மனைவி [ஹபீபா]பின்த் காரிஜா என்னிடத்தில் குடும்பச்செலவுத் தொகையை [உயர்த்தித்தருமாறு] கேட்க, நான் அவரது கழுத்தில் அடித்துவிட்டேன் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்..? என்று கேட்டார்கள். இதைக்கேட்டு அல்லாஹ்வின்தூதர்[ஸல்] அவர்கள் சிரித்தார்கள். பிறகு, இதோ நீங்கள் கானுகிண்றீர்களே! இவர்களும் என்னிடம் செலவுத்தொகையை [உயர்த்தித்தரக்]கோரியே என்னைச்சுற்றி குழுமியுள்ளனர் என்று கூறினார்கள். உடனே அபூபக்கர்[ரலி] அவர்கள் [தம் புதல்வி] ஆயிஷா[ரலி] அவர்களை நோக்கி, அவர்களை கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். உமர்[ரலி] அவர்கள், [தம் புதல்வி] ஹப்ஸா[ரலி] அவர்களை நோக்கி, கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் இல்லாததை நீங்கள் கேட்கிறீர்களா என்று அவ்விருவருமே கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மனைவியர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் இல்லாததை ஒருபோதும் நாங்கள் கேட்கமாட்டோம் என்று கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தி ஒன்பது நாட்கள் தம் மனைவியரை விட்டு விலகியிருந்தார்கள். அப்போது,

நபியே! உம்முடைய மனைவிகளிடம், ''நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகியமுறையில் விடுதலை செய்கிறேன். ஆனால் நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமைவீட்டையும் விரும்புவீர்களானால், அப்போது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் நிச்சயமாக மகத்தான நற்கூலியை சித்தம் செய்து வைத்துள்ளான் என்று கூறுவீராக. [33; 28,29 ]
என்ற வசனங்கள் அவர்களுக்கு அருளப்பட்டன.

இதையடுத்து ஆரம்பமாக ஆயிஷா[ரலி] அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் சென்று, ஆயிஷாவே! உன்னிடம் ஒரு செய்தியை சொல்லப்போகிறேன். அது தொடர்பாக உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காதவரை அவசரப்பட்டு[எந்த முடிவுக்கும் வந்துவிடக்]கூடாது என விரும்புகிறேன் என்று கூறினார்கள்.

அதற்கு ஆயிஷா[ரலி] அவர்கள், அது என்ன அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்றார்கள். அப்போது நபியவர்கள் மேற்கண்ட வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அப்போது ஆயிஷா[ரலி] அவர்கள், உங்கள் [உறவை துண்டிக்கும்] விஷயத்திலா என் பெற்றோரின் ஆலோசனையை நான் கேட்கவேண்டும்..? இல்லை! நான் அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும், மறுமையும் நான் தேர்ந்தெடுக்கிறேன் என்றார்கள்.
[நூல்;முஸ்லிம் 2946 ]

அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் முடிவைப் போன்றே நபி[ஸல்] அவர்களின் ஏனைய மனைவியரும் அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும், மறுமை வாழ்வையும் தேர்ந்தெடுத்தார்கள் என்று முஸ்லிமின் 2939 மற்றும் சில அறிவிப்புகளில் உள்ளது]

அன்பானவர்களே! இந்த பொன்மொழி நம்முடைய உள்ளத்தையும் கண்களையும் ஒருசேர நெகிழச்செய்வதாக உள்ளது. வெறும் பேரீச்சம் பழத்தையும், தண்ணீரையும் பெரும்பாலான நேரங்களில் உண்டு வாழ்ந்த அன்னையர்கள், சில நேரங்களில் வெறும் தண்ணீர் மட்டுமே தங்களின் வீடுகளில் இருந்ததாக கூறும் அன்னையர்களின் செய்திகளை படிக்கும்போதெல்லாம் எவ்வாறு இவர்களால் இப்படி ஒரு தியாக வாழ்க்கை வாழமுடிந்தது.?என்று எமக்குள் ஒரு கேள்வி அலை வந்துபோகும். இந்த பொன்மொழியை படித்தபின்புதான் ஆம்! அவர்கள் வறுமை வாழ்வையும் பொருந்திக்கொண்டு கருணை நபியோடு வாழ்ந்ததற்கு காரணம் மறுமைவாழ்வு மீது கொண்ட தேட்டமே என்பதை உணரமுடிந்தது. அன்று அன்னையர்கள் இம்மை சுக போகத்தை பெரிதாக கருதாமல், அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மகத்தானமறுமை வீட்டையும் தேர்ந்தெடுத்ததால்தான் உலகம் அழியும் காலம் வரை தோன்றக்கூடிய நம்பிக்கையாளர்களுக்கு தாய்மார்கள் எனும் மகத்தான சிறப்பை அல்லாஹ்விடம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் இன்றைய நவீன யுவதிகளில் பெருபாலோர் , தனது கணவன் பெரும்பான்மையான தேவைகளை நிறைவேற்றிஇருந்தாலும் , சில வேளைகளில் ஏதேனும் ஒரு விருப்பத்தை நிறைவேற்றமுடியாமல் போகும் பட்சத்தில், 'உனக்கு வாழ்க்கைப்பட்டு என்னத்தை கண்டேன்..? என்று கணவனை எடுத்தெறிந்து பேசுவதை நாம் நடைமுறையில் காண்கிறோம். இப்படிப்பட்டவர்களுக்கு அன்னையர்களின் தியாக வாழ்க்கை மிகப்பெரும் பாடமாகும்.
அதோடு, தமது மகளுக்கும்- மருமகனுக்கும் பிரச்சினை என்றால், பிரச்சினை குறித்து தீர ஆராயாமல் மகளுக்கே 'சப்போர்ட்' செய்யும் பெற்றோர்களைத்தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால் இந்த பொன்மொழியில், அபூபக்கர்[ரலி] உமர்[ரலி] என்ற இரு மாமனார்கள், தம் மகள்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தும்கூட, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மனம் துன்பத்தில் ஆழ்த்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தம்முடைய மகள்களை அடிக்க முற்படுகிறார்கள் என்றால், இங்கே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மகிழ்ச்சியே தமது மகிழ்ச்சியாக எண்ணி இந்த இரு நல்லறத்தோழர்களும் வாழ்ந்துள்ளனர் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ், அபூபக்கர்[ரலி], உமர்[ரலி] ஆகியோரையும், உம்மஹாத்துல் முஃமீன்களான நம்பிக்கையாளர்களின் தாய்மார்களையும் பொருந்திக்கொள்வானாக!

வெள்ளி, 30 ஜூலை, 2010

அல்லாஹ்வின் தூதரையே பெரும் சொத்தாக கருதிய அன்சாரிகள்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அல்லாஹ் தன் தூதர்[ஸல்] அவர்களுக்கு 'ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை [போரின் வெற்றிப் பரிசாக] அளித்தபோது, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் [புதிதாக இஸ்லாத்தை தழுவியிருந்த] சில குறைஷிகளுக்கு நூறு ஒட்ட்டகங்களை கொடுக்கலானார்கள். அப்போது அன்சாரிகளில் சிலர், அல்லாஹ் 'அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை மன்னிப்பானாக! [எதிரிகளான] குறைஷிகளின் ரத்தம் நம் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க [நமக்கு கொடுக்காமல்] இவர்களுக்கு கொடுக்கிறார்களேஎன்று கவலையுடன் சொன்னார்கள்.

அன்சாரிகளின் இந்த பேச்சு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கு எட்டியது. இதையொட்டி அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், அன்சாரிகளை ஒரு இடத்தில் ஒன்று கூட்டினார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், உங்களை குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளிலுள்ள விவரமானவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் கருத்துடையவர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடையவர்கள் சிலர்தாம் அவ்வாறு பேசிக்கொண்டார்கள் என்று அன்சாரிகள் கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், ''இறைமறுப்பை விட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். [இதன் வாயிலாக இஸ்லாத்திற்கும்] அவர்களின் உள்ளங்களுடன் நான் இணக்கம் ஏற்படுத்துகிறேன். மக்கள் உலக செல்வங்களை எடுத்துச்செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரையே கொண்டு செல்வதை விரும்பமாட்டீர்களா..? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்று திரும்பும் செல்வத்தை விட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகள், ஆம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் [எங்களுடன் உங்களை கொண்டு செல்வதையே] விரும்புகிறோம் என்று சொன்னார்கள்.
ஹதீஸ் சுருக்கம் நூல்;முஸ்லிம்.

அன்பானவர்களே! மக்காவை விட்டு மதீனா நோக்கி கொள்கைக்காக நாட்டு துறந்து வந்த முஹாஜிர்களை தாயன்போடு அரவணைத்து தங்களின் சொந்த சகோதரர்களாகவே கருதி சொத்தில் கூட பங்கு கொடுக்கும் அளவுக்கு தயாள உள்ளம் கொண்டவர்கள் அன்சாரிகள் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அத்தகைய அன்சாரிகளில் சிலர், பொருள் பங்கீடு விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் மீது அதிருப்தி கொண்டது போன்ற தோற்றம் மேற்கண்ட ஹதீஸின் ஆரம்பத்தில் தோன்றலாம். ஆனால் அன்சாரிகள் குறுகிய மனம் கொண்டவர்கள் அல்ல. உயிரை பணயம் வைத்து போரிட்டு அதன் மூலம் கிடைத்த பொருட்களை பங்கிடுவதில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு வழங்கிவிட்டு நம்மை புறக்கணிக்கிறார்களே என்ற ஆதங்கம்தான் அன்சாரிகளின் அந்த வார்த்தை பிரயோகங்கள். பின்பு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் விளக்கிச்சொன்ன மாத்திரமே அதை அப்படியே ஏற்றுக்கொண்டதோடு, இறைத்தூதர்[ஸல்] அவர்களை நாங்கள் எங்கள் இல்லங்களுக்கு கொண்டு செல்லவே விரும்புகிறோம் என்று சொல்லி, உலகத்தின் பொருட்கள் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. எங்களின் மிகப்பெரிய சொத்தாக இறைத்தூதர்[ஸல்] அவர்களையே கருதுகிறோம் என்று சொல்லி தங்களின் தயாள குணத்தை மீண்டும் நிருப்பித்த அன்சாரிகள்ஒரு சரித்திர புருஷர்கள் என்றால் மிகையில்லை.

அல்லாஹ் அன்சாரிகளின் தியாகத்தை பொருந்திக்கொள்வானாக!

வெள்ளி, 23 ஜூலை, 2010

கண் மூடும் வேளையிலே கண்ணீர்; அம்ரு இப்னு அல்ஆஸ்[ரலி]!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அப்துர் ரஹ்மான் இப்னு ஷுமாசா அல் மஹ்ரி[ரஹ்] கூறியதாவது;

இறக்கும் தருவாயில் இருந்த அம்ரு இப்னு அல் ஆஸ்[ரலி] அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். பின்பு சுவற்றின் பக்கம் தமது முகத்தை திருப்பிக் கொண்டார்கள். அப்போது அவர்களின் மகன், என் தந்தையே! உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் இன்னின்ன நற்செய்திகள கூறவில்லையா என [அறுதல் சொல்லும் வகையில்] கேட்டார். உடனே அம்ரு இப்னு அல்ஆஸ்[ரலி] அவர்கள் தமது முகத்தை [தம் புதல்வரை நோக்கி] திருப்பி [பின்வருமாறு] கூறினார்கள்;
அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத்[ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்ததாகும். நான்[என் வாழ்நாளில்] மூன்று கட்டங்களை கடந்து வந்துள்ளேன்.

[முதலாவதுகட்டத்தில்] அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மீது கடுமையான வெறுப்பு கொண்டவர் என்னைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது என்று நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களை கொன்றுவிடவேண்டும் என்பதே எனக்கு விருப்பமானதாக இருந்தது. அந்த கால கட்டத்தில் மட்டும் நான் மரணித்திருந்தால் நரகவாதிகளில் ஒருவனாக நான் ஆகியிருப்பேன்.

[இராண்டாவது கால கட்டத்தில்] அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை புகுத்தினான். அப்போது நான் நபியவர்களிடம் சென்று உங்கள் வல்லக்கரத்தை நீட்டுங்கள் நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் [பைஅத்] அளிக்கிறேன் என்றேன். நபி[ஸல்] அவர்கள் தமது வலது கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கரத்தை இழுத்துக் கொண்டேன். நபி[ஸல்] அவர்கள், அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று என்றார்கள். நான் சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். நபி[ஸல்] அவர்கள் என்ன நிபந்தனை விதிக்கப் போகிறீர் என்று கேட்டார்கள். என் [முந்தைய] பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று கூறினேன். அப்போது நபி[ஸல்] அவர்கள் உங்கள் முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும். ஹஜ்ஜும் முந்தையா பாவங்களை அழித்துவிடும் என்பது உமக்கு தெரியாதா என்றார்கள். [பின்பு நான் இஸ்லாத்தை தழுவினேன்] அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை விட மிகவும் பிரியமானவர் எவரும் எனக்கில்லை. எனது பார்வைக்கு அவர்களைவிட கண்ணியமானவர்கள் எவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால் என் கண்கள் நிரம்ப, அவர்களை பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறுமாறு என்னிடம் கேட்கப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில் அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால், என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவில்லை. அந்த நிலையில் நான் மரணித்திருந்தால் நான் சொர்க்கவாசிகளில் ஒருவானாக ஆகியிருப்பேன் என்றே கருதுகிறேன்.

பிறகு [மூன்றவாது கட்டத்தில்] பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலை என்ன என்று எனக்குத்தெரியாது.
[ஹதீஸ் சுருக்கம் நூல்;முஸ்லிம்]

அன்பானவர்களே! அம்ரு இப்னுஆஸ்[ரலி] அவர்களை நாமெல்லாம் அறிந்து வைத்துள்ளோம். இந்த பொன்மொழியில் தமது வாழ்வின் மூன்று கட்டங்களை குறிப்பிடுகிறார்கள் அந்த மேதை. முதல் கட்டம் இஸ்லாத்திற்கு எதிரான நிலை அதாவது நரகத்தின் விளிம்பில்.
இரண்டாவது இஸ்லாத்திற்குள் அதுவும் இறைத்தூதரை உயிருக்கு உயிராக நேசிக்கும் காலகட்டம் அதாவது சொர்க்கத்தின் வாயிலில்.
மூன்றாவது பல்வேறு பொறுப்புகள சுமந்த காலகட்டம். இந்த மூன்று காலகட்டங்கலில் எதைக் குறித்து அம்ரு இப்னு ஆஸ் [ரலி] அவர்கள் கைசேதப் படுகிறார்கள் என்றால்,
மூன்றாவது காலகட்டம் அதாவது பொறுப்புகளை வகித்த காலகட்டம் குறித்துதான். ஏனென்றால் இஸ்லாத்திற்கு முந்தைய காலகட்டம் குறித்து அவர்கள் கவலைப் படவேண்டியதில்லை. ஏனெனில், அதில் செய்த பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும் என்று இறைத்தூதர்[ஸல்] அவர்கள் உத்திரவாதம் அளித்து விட்டார்கள். ஆனால் பொறுப்புகள் வகித்த காலத்தில் நாம் தவறு இழைத்திருந்து அதனால் அல்லாஹ்வால் குற்றம் பிடிக்கப் படுவோமோ என்று கண்ணீர் சிந்தி கவலை கொள்கிறார்கள் எனில்,
பதவி வரும்போது பணிவும்-துணிவும் வந்தால் போதாது; அங்கே பயமும் அதாவது இறைவனின் பயமும் வரவேண்டும். ஏனெனில் பொறுப்பில் உள்ளவர்கள் தாம் செய்வதை குறித்து திருப்தி அடையலாம். ஆனால் அந்த செயல்கள் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்படுமா என்ற அச்சம் ஒவ்வொரு பொறுப்பாளருக்கும் இருக்கவேண்டும். அத்தகைய சிறந்த படிப்பினைக்கு அம்ரு இப்னு ஆஸ்[ரலி] அவர்கள் முன்னுதாரமாக திகழ்கிறார்கள்.
அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக!

வெள்ளி, 16 ஜூலை, 2010

இறையச்சத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு; ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி]!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நம்பிக்கையாளர்களே! நபியின் குரலுக்கு மேலாக உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்; உங்களுக்குள் மற்றொருவர் இரைந்து பேசுவதுபோல் நபியிடம் இரைந்து பேசாதீர்கள்; [இவற்றால்] நீங்கள் அறிந்து கொள்ளமுடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்துபோகும்.[49 ;2 ]

என்ற வசனம் அருளப்பட்டவுடன் ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி] அவர்கள் தமது இல்லத்திலேயே அமர்ந்துவிட்டார்கள். 'நான் நரகவாதிகளில் ஒருவன்' என்று கூறிக்கொண்டு நபி[ஸல்] அவர்களிடம் வராமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தார்கள். எனவே நபி[ஸல்]அவர்கள் [ஸாபித்] குறித்து ஸஅத்இப்னு முஆத் [ரலி] அவர்களிடம் , அபூ அம்ர்! ஸாபித்க்கு என்ன ஆயிற்று..? அவருக்கு உடல் நலமில்லையா.? என்று கேட்டார்கள். அதற்கு ஸஅத் [ரலி] அவர்கள், அவர்[ஸாபித்] எனது அண்டை வீட்டுக்காரர்தான். அவருக்கு எந்த நோயுமிருப்பதாக தெரியவில்லை என்றார்கள். பிறகு ஸஅத்[ரலி] அவர்கள் ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி] அவர்களிடம் நபி[ஸல்] அவர்கள் கேட்டதை பற்றி தெரிவித்தார்கள்.

அப்போது ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி] அவர்கள், [49 ;2 ] வசனம் அல்லாஹ்வால் அருளப்பட்டுள்ளது. உங்களில் இறைத்தூதர்[ஸல்] அவர்கள் முன் நான் குரலை உயர்த்தி பேசுபவன் என்பதை நீங்கள் அறிந்தே வைத்துள்ளீர்கள். ஆகவே நான் நரகவாசிகளில் ஒருவன்தான் என்று கூறினார்கள் . இதை ஸஅத்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி[ஸல்] அவர்கள், இல்லை.அவர்[ஸாபித்] சொர்க்கவாசிகளில் ஒருவர் ஆவார் என்று கூறினார்கள்.

[நூல்; முஸ்லிம்]

அன்பானவர்களே! இந்த பொன்மொழியில், நபியவர்களின் நெருங்கிய தோழர்களில் ஒருவரான ஸாபித்இப்னு ஹைஸ்[ரலி] அவர்கள், அல்லாஹ் மேற்கண்ட வசனத்தை இறக்கிய மாத்திரமே நபி[ஸல்] அவர்களுக்கு முன்னால் குரலை உயர்த்தி பேசியதால், நம்முடைய அமல்கள் அழிந்துவிட்டது; நாம் நரகவாதிதான் என்று கவலைகொண்டவர்களாக நபியவர்களை சந்திக்க வெட்கப்பட்டு ஒதுங்கியதை பார்க்கிறோம். அந்த அளவுக்கு தன்னுடைய தவறு குறித்து, அதுவும் அல்லாஹ் மேற்கண்ட வசனத்தை இறக்கி கட்டளை பிறப்பிப்பதற்கு முன்னால் செய்த தவறு குறித்து கைசேதப்படுகிறார்கள் கவலை கொள்கிறார்கள் என்றால் அதுதான் இறையச்சம்! ஆனால் இன்று நாமோ அல்லாஹ்வின் கட்டளைகள் முழுமையாக அல்-குர்ஆன் வடிவில் இருக்கிறது. அதை பார்த்த பின்னும், படித்த பின்னும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக தவறுகளை செய்துவிட்டு, அந்த தவறு குறித்து எந்தவித சலனமுமின்றி, 'அல்லாஹ் மன்னிக்கக் கூடியவன்' என்று சாதாரணமாக சென்று கொண்டிருக்கிறோம். அல்லாஹ் மன்னிக்க கூடியவன் என்று ஸாபித் இப்னு ஹைஸ் அவர்களுக்கும் தெரியும். அதையும் தாண்டி உள்ளத்தில் இறைவனின் இறையச்சம் . அதனால்தான், 'எங்களிடையே நடமாடும் சொர்க்கவாசியாகவே நாங்கள் ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி] அவர்களை கருதி வந்தோம்' என்று அனஸ்[ரலி] அவர்கள் கூறும் அளவுக்கு சிறப்பு பெற்றார்கள். ஆனால் நாமோ பாவங்களை அற்பமாக கருதுகிறோம், அதற்கு கிடைக்கும் தண்டனைகள் குறித்து பாராமுகமாக இருக்கிறோம். இந்நிலை தொடர்ந்தால் மறுமையில் கைசேதம் அடையவேண்டிய நிலை வரும்.

எனவே இயன்றவரை பாவம் தவிர்ப்போம்; பாவமன்னிப்பு தேடுவோம்; படைத்தவனின் அருள் பெறுவோம்.

புதன், 14 ஜூலை, 2010

அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களின் அருமை மனைவியரும், முஃமீன்களின் தாயுமான ஆயிஷா[ரலி] அவர்களின் சகோதரி அஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] அவர்களின் மகனாவார். நபி[ஸல்] அவர்களின் உற்ற தோழர் அபூபக்கர்[ரலி] அவர்களின் பேரனாவார். நபி[ஸல்] அவர்களின் தோழரும் முஹாஜிரும் சுவனத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவருமான ஸுபைர்[ரலி] அவர்களின் மகனாவார். மதீனா ஹிஜ்ரத்திற்கு பின் பிறந்த முதல் குழந்தையாவார். இத்தகைய சிறப்புமிகு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்கள்,
நபி[ஸல்] அவர்களின் மரணத்திற்கு பின்னால் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளில் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்பவரது படையால் ஷஹீதாக்கப்பட்டு, பேரீச்சம் மரத்தில் சிலுவையில் ஏற்றி தலைகீழாக தொங்கவிடப்பட்ட நிலையில்,

இப்னு உமர்[ரலி] அவர்கள், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் ஜனாஸா அருகே நின்று, அபூ குபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று கூறியதோடு, அப்துல்லாஹ் இப்னு ஸுபைரின் சில நற்பண்புகளை அங்கே சொல்கிறார்கள். இந்த செய்தி ஹஜ்ஜாஜுக்கு எட்டியபோது, அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் ஜனசாவை யூதர்க்களின் அடக்கஸ்தலம் மீது போட்டுவிடுமாறு உத்தரவிட்டார். அதோடு, அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் தாயார் அஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] அவர்களை அழைத்துவர ஆளனுப்பினார். அஸ்மா[ரலி]அவர்கள் வர மறுத்துவிட்டார்கள். ஹஜ்ஜாஜ் மீண்டும் ஆளனுப்பி, அஸ்மாவே! நீயாக வருகிறாயா..? அல்லது உமது சடையை பிடித்து இழுத்துவர ஆள் அனுப்பட்டுமா என கேட்க, அப்போதும் அஸ்மா[ரலி]அவர்கள் வர மறுத்ததோடு மட்டுமன்றி, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது சடைப் பிடித்து இழுத்துக்கொண்டு வருபவரை நீர் அனுப்பாதவரையில் நான் உம்மிடம் வரப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள்.

உடனே ஹஜ்ஜாஜ் தமது செருப்பை அணிந்துகொண்டு அஸ்மா[ரலி] அவர்களை நோக்கி விரைந்து வந்து அஸ்மா[ரலி] அவர்களிடம், அல்லாஹ்வின் விரோதியை [உமது மகனை] என்ன செய்தேன் பார்த்தீரா என்று கேட்டார். அப்போது அஸ்மா[ரலி]அவர்கள்,

நீ என் மகனின் இம்மையை சீரழித்துவிட்டாய்; என் மகனோ உனது மறுமையை சீரழித்துவிட்டார் என்றே நான் கருதுகிறேன். நீ என் மகனை 'இரு கச்சுடையாளின் புதல்வரே! என்று ஏளனமாக அழைப்பாய் என்று நான் கேள்விப்பட்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இரு கச்சுடையாள் நான்தான். [மதீனா ஹிஜ்ரத் சென்ற] அல்லாஹ்வின் தூதருக்கும் , எனது தந்தை அபூபக்கருக்கும் உரிய உணவை எனது ஒரு கச்சின் மூலம் கட்டினேன். மற்றொன்று ஒரு பெண்ணிடம் அவசியம் இருக்கவேண்டிய கச்சாகும்.

அறிந்துகொள்! அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் எங்களிடம், 'சகீஃப் குலத்தாரில் ஒரு மகாப் பொய்யனும், ஒரு நாசக்காரனும் இருப்பார்கள்' என்று கூறினார்கள். மகாப் பொய்யனை [முக்தார் இப்னு அபீஉபைத்] நாங்கள் பாத்துவிட்டோம். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறிய 'நாசக்காரன்' நீதான் என்றே நான் கருதுகிறேன் என்று கூறியவுடன், அஸ்மா[ரலி] அவர்களுக்கு பதிலளிக்கமுடியாமல் ஹஜ்ஜாஜ் அங்கிருந்து வெளியேறி சென்றுவிட்டார்.

[ஹதீஸ் சுருக்கம்நூல்; முஸ்லிம்.]
அன்பானவர்களே! இந்த செய்தியை நாம் பொறுமையுடன் படித்துப் பார்ப்போமானால், அஸ்மா[ரலி] அவர்களின் அளவுகடந்த வீரமும், பொறுமையும் வெளிப்படுவதை நாம் அறியமுடியும்.
  • தனது அருமை மகன் அநியாயமாக கொல்லப்பட்டு, சிலுவையில் தலைகீழாக தொங்க விடப்பட்டு , பின்பு அநியாயக்கார யூதர்களின் அடக்கஸ்தலத்தில் போடப்பட்ட செய்தியறிந்த பின்பும், கத்தாமல் கதறாமல் தன் மகனை காண ஓடாமல், தன் மகன் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாகியுள்ளான் என பொறுமை காத்த அந்த அஸ்மா[ரலி] அவர்களின் பாங்கு.
  • ஹஜ்ஜாஜ், அஸ்மா[ரலி] அவர்களை அழைத்துவர ஆள் அனுப்பியபோது, வீரமிக்க நம் மகனையே கொன்ற இந்த அநியாயக்காரன் நம்மை விட்டு வைப்பானா.? என்று பதறி ஹஜ்ஜாஜை சந்திக்க ஓடாமல், வரமறுத்த துணிவு! 'என் சடையை பிடித்து இழுத்துவரும் உன் ஆளை அனுப்பிப் பார்' என்று ஆர்ப்பரித்த வீரம்!! சுப்ஹானல்லாஹ்!!. தொடைநடுங்கி முஸ்லிம்களுக்கோர் பாடம்!!!
  • எங்கள் தலைவர் நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்த 'அநியாயக்காரன்' நீதானோ என்று ஆர்ப்பரித்த ஆளுமை அஸ்மா[ரலி] ஒரு சகாப்தம்.

எங்கள் இறைவா! அஸ்மா[ரலி] அவர்களின் வீரத்தை, உள்ள உறுதியை, ஈமானிய வலுவை எங்களுக்கும் தந்து நீ பொருந்திக் கொண்ட முஸ்லிம்களாக மரணிக்க செய்வாயாக!

ஞாயிறு, 11 ஜூலை, 2010

அமல் செய்வதில்தான் எத்துனை ஆர்வம் இவருக்கு..?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
நபி [ஸல்] அவர்களின் இந்த உம்மத்தில் தலைசிறந்தவர் அபூபக்கர் சித்தீக்[ரலி] அவர்கள் என்பதை நாமெல்லாம் அறிந்துவைத்துள்ளோம். இத்தகைய சிறப்பு அவர்களுக்கு இருந்தும், சொர்க்கத்திற்கு உரியவர் என்று இறைத்தூதரால் பிரகடனப் படுத்தப்பட்ட பின்பும் அபூபக்கர்[ரலி] அவர்களின் அமல்கள் குறைந்ததா என்றால் இல்லை. நல்லமல்கள் என்று எவையெல்லாம் உள்ளதோ அவைகளை அன்றாடம் செய்யக்கூடிய அற்புத மனிதராக அபூபக்கர்[ரலி] அவர்கள் திகழ்ந்துள்ளதற்கு சான்றாகவும், நமக்கும் அத்தகைய ஆர்வம் வரவேண்டும் என்பதற்காகவும் இந்த பொன்மொழி இங்கு பதியப்படுகிறது;

அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

[ஒருநாள்] இறைத்தூதர்[ஸல்] அவர்கள் [எங்களிடம்] இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார் என்று கேட்டார்கள்.

அப்போது அபூபக்கர்[ரலி] அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றைய தினம் உங்களில், ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்றவர் யார் என்று கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றையதினம் உங்களில் ஒரு ஏழைக்கு உணவளித்தவர் யார் என்று கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றையதினம் ஒரு உங்களில் ஒரு ஒரு நோயாளியின்நலம் விசாரித்தவர் யார் என்று கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

அப்போது இறைத்தூதர் அவர்கள், இவை அனைத்தும் ஒரு மனிதரிடத்தில் ஒன்று சேர்ந்தால் அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை என்று கூறினார்கள். [நூல்;முஸ்லிம்].

சனி, 10 ஜூலை, 2010

அபூஹுரைரா[ரலி] என்றாலே நமக்கு பாசம் பொங்குவது எதனால்..?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
நபித்தோழர்களில் அபூஹுரைரா[ரலி] அவர்களை அறியாத முஸ்லிம்கள் இருப்பது அரிது. அதுமட்டுமன்றி, அபூஹுரைரா[ரலி] அவர்கள் பெயரை கேட்டாலோ, அல்லது அவர்கள் சம்மந்தப்பட்ட செய்தி படித்தாலோ அவர்கள் மீது நமக்கு இனம் புரியாத பாசம் வெளிப்படுவதை நாம் உணரமுடியும். அதற்கு காரணம் அவர்களின் தியாக வாழ்க்கை என்பது ஒருபுறமிருந்தாலும், மற்றொரு புறம் இவ்வாறு அவர்கள் மீது நமக்கு பாசம் ஏற்படுவதற்கு காரணம் இறைத்தூதர்[ஸல்] அவர்களின் பிரார்த்தனை என்பதுதான் பிரதானமான உண்மையாகும். அதுபற்றிய பொன்மொழி இதோ;

அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
எனது தாயார் இணைவைப்பு கொள்கையில் இருந்தபோது இஸ்லாத்திற்கு வருமாறு நான் அழைப்பு விடுத்து வந்தேன். அவர் மறுத்து வந்தார். இன்றும் அதுபோல் அழைப்பு விடுத்தபோது அவர் இறைத்தூதர்[ஸல்]அவர்கள் குறித்து நான் விரும்பாத வார்த்தைகளை என் காது பட கூறினார். நான் அழுதுகொண்டே அல்லாஹ்வின் தூதரிடம் சென்று நடந்தவற்றை கூறி, இந்த அபூஹுரைரவின் அன்னைக்கு நேர்வழி கிடைத்திட பிரார்த்தியுங்கள் என்றேன்.
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், இறைவா! அபூஹுரைராவின் அன்னைக்கு நல்வழி காட்டுவாயாக என்று பிரார்த்தித்தார்கள். இதைக்கேட்டு நான் மகிழ்ந்தவனாக புறப்பட்டு எனது வீட்டை அடைந்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது . எனது காலடி சத்தத்தை அறிந்துகொண்ட என் தாயார், அபூஹுரைரா! அங்கே இரு என்றார்கள்.
அப்போது தண்ணீர் சிந்தும் சத்தம் கேட்கவே என் தாயார் குளித்துவிட்டு வந்து கதவை திறந்தார். பின்பு அபூஹுரைராவே! அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாரும் இல்லை. முஹம்மது[ஸல்] அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிகூறுகிறேன் என்றார்கள்.
உடனே மகிழ்ச்சியில் அழுதவனாக இறைத்தூதரை சந்தித்து, யாரசூலுல்லாஹ்! அல்லாஹ் உங்களின் பிரார்த்தனையை அங்கீகரித்துவிட்டான், அபூஹுரைராவின் அன்னைக்கு நேர்வழி காட்டிவிட்டான் என்றேன். அதைக்கேட்ட நபி[ஸல்]அவர்கள் இறைவனை போற்றி புகழ்ந்தார்கள். அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! இறை நம்பிக்கையுள்ள அடியார்களுக்கு என்மீதும், என்தாயார்மீதும் நேசம் ஏற்படவும், அவ்வாறே அவர்கள் மீது எனக்கும் என் தாயாருக்கும் நேசம் ஏற்படவும் பிரார்த்தியுங்கள் என்றேன். நபியவர்கள், இறைவா! உன்னுடைய அடியார் அபூஹுரைரா மீதும், அவருடைய தாயார் மீதும் இறை நம்பிக்கையாளர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக! இறை நம்பிக்கையாளர்கள் மீது இவர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக என்று பிரார்த்தித்தார்கள்.
எனவேதான், என்னை பார்க்காவிட்டாலும் என்னைப்பற்றி கேள்விப்படும் எந்த ஒரு இறைநம்பிக்கையாளரும் என்னை நேசிக்காமல் இருப்பதில்லை.
நூல்;முஸ்லிம்]

அன்பானவர்களே! அபூஹுரைரா[ரலி] அவர்கள் மீது நமக்கு ஏற்படும் இனம் புரியா நேசம் இறைத்தூதர்[ஸல்] அவர்களின் பிரார்த்தனையால் இறைவன் உருவாக்கியதாகும் என்பதை பொன்மொழி வாயிலாக அறியமுடிகிறது. அதோடு இந்த பொன்மொழியில் மற்றொரு படிப்பினை என்னவெனில், இணைவைப்பு கொள்கையில் இருக்கும் தன்னுடைய தாய் நேர்வழி பெறவேண்டும் என்ற அபூஹுரைரா[ரலி] அவர்களின் ஆவல், நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். ஏனெனில், நம்முடைய பெற்றோர்களோ, உறவினர்களோ, நண்பர்களோ தர்காக்களில் விழுந்து கிடப்பவர்களாக இருக்கலாம். அப்படிப் பட்டவர்களுக்கு தினமும் நாம் சத்தியத்தின் பால் அழைப்பு விடுப்பதோடு, அவர்கள் நேர்வழி பெறவேண்டும் என்ற உண்மையான நோக்கோடு இறைவனிடமும் இறைஞ்சினால், இறைவன் நாடினால் அவர்கள் நேர்வழி பெறக்கூடும். அதைவிடுத்து அறியாமையில் தர்காக்களுக்கு செல்பவர்களுக்கு 'முஷ்ரிக்கீன்கள்' என ஃபத்வா வழங்குவதால் எந்த பயனும் இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அபூஹுரைரா[ரலி] அவர்களைப்போல் உண்மையான நோக்கோடு அழைப்புப் பணியாற்றுபவர்களாக நம்மை ஆக்கி அருள்வானாக!

இறைத்தூதரின் ரகசியத்தை இறுதிவரை காத்தவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நான்[ரசூல்[ஸல்]அவர்களிடம் சேவகனாக இருந்தபோது] என்னிடம் வந்தார்கள். நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். நபி[ஸல்] அவர்கள் எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு ஒரு அலுவல் நிமித்தமாக என்னை ஒரு இடத்திற்கு அனுப்பினார்கள். நான் என் தாயாரிடம் தாமதமாகவே வந்தேன். அப்போது என்தாயார், உன் தாமதத்திற்கு காரணம் என்ன..? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் ஒரு அலுவலுக்காக என்னை அனுப்பி வைத்திருந்தார்கள் என்று சொன்னேன். அப்போது என் தாயார் என்ன அலுவல்? என்று கேட்டார்கள். நான் அது 'ரகசியம்' என்று சொன்னேன். அப்போது என்தாயார், அல்லாஹ்வின் தூதரின் ரகசியத்தை நீ யாரிடம் சொல்லாதே என்றார்கள்.[ நூல்;முஸ்லிம் 4891 ].

மற்றொரு அறிவிப்பில்;
நபி[ஸல்] அவர்கள் என்னிடம் ஒரு ரகசியம் சொன்னார்கள். அவர்களின் இறப்பிற்கு பிறகு கூட அதை நான் ஒருவரிடமும் தெரிக்கவில்லை. என் தாயார் உம்மு சுலைம்[ரலி] அவர்கள் அது குறித்து கேட்டபோது நான் அவர்களுக்கும் தெரிவிக்கவில்லை. [நூல்;முஸ்லிம் 4892 ]

இந்த பொன்மொழியில் நபி[ஸல்]அவர்களிடம் சேவகராக இருந்த அனஸ்[ரலி] அவர்களின் பண்பு நமக்கு மிகப்பெரிய படிப்பினையாக உள்ளது. சிறுவர்களுடன் விளையாடும் அளவுக்கு சிறிய வயதுடைய அனஸ்[ரலி]அவர்கள், இறைத்தூதரின் ரகசியம் விசயத்தில் எந்த அளவுக்கு கவனமாக இருந்துள்ளார்கள் எனில், அவர்களது தாயார் கேட்டபோதும் கூட சொல்லவில்லை. அதுமட்டுமன்றி, அந்த ரகசியத்தை இறைத்தூதர்[ஸல்] அவர்களின் மரணத்திற்கு பின்னால் கூட எவரிடமும் சொன்னதில்லை என்றால், ரகசியமும் அமானிதமே என்பதை அனஸ்[ரலி] அவர்கள்வாழ்வு எமக்கு உணர்த்துகிறது. ஆனால் இன்று பெரும்பாலான பிரச்சினைக்கு ரகசியங்கள் வெளிப்படுவதே காரணமாக அமைகிறது. இயக்கம், அமைப்பு, தொழில், பாதுகாப்பு போன்றவை மட்டுமன்றி, கணவன் மனைவிக்குள் நடக்கும் இல்லறம் வரை பேணப்படவேண்டிய ரகசியங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு அதனால் பல்வேறுவகையான பின்னடைவை சந்திக்கிறோம். எனவே அனஸ்[ரலி] அவர்களின் இந்த உயரிய பண்பை நம்முடைய வாழ்விலும் கடைபிடிக்க முன்வருவோமாக!