பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
முஆது பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹூ அறிவித்தார்கள்;
நான் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் (வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்களுக்கும் எனக்கும் இடையில் வாகனத்தில் கட்டப்பட்டிருக்கும் குச்சியைத் தவிர வேறெதுவும் இல்லை. (அப்போது) 'முஆது பின் ஜபல் அவர்களே! " என்றழைத்தனர்.
'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களது அழைப்பிற்கு இதோ ஆஜர் ஆகியிருக்கிறேன். உங்களுக்கு கீழ்ப்படிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கிறேன்." எனக் கூறினேன்.
பிறகு சிறிது நேரம் சென்றனர். பிறகு 'முஆது பின் ஜபல் அவர்களே! " என்றனர்.
'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களது அழைப்பிற்கு இதோ ஆஜராகியிருக்கிறேன்.
உங்களுக்கு கீழ்பணிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கிறேன்" என்றேன்.
பிறகு சிறிது நேரம் (வாகனத்தில்) சென்றனர். 'முஆது பின் ஜபல் அவர்களே!" என்றனர்.
'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களது அழைப்பிற்கு இதோ ஆஜராகியிருக்கிறேன்.
உங்களுக்கு கீழ்படிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கிறேன் " என்றேன்.
'அடியார்கள் அல்லாஹ்விற்கு செலுத்த வேண்டிய கடமை என்ன என்பது உனக்கு தெரியுமா? " என்றார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதரும் மிகத் தெரிந்தவர்கள் " என்றேன்.
'நிச்சயமாக அடியார்கள் அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டிய கடமை,
அவனை வணங்குவதும் அவனுக்கு எதையும் இணையாக்காமல் இருப்பதாகும் " என்றனர்.
பிறகு சிறிது நேரம் வாகனத்தில் சென்றனர். 'முஆது பின் ஜபல் அவர்களே! " என்றழைத்தனர்.
'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இதோ உங்கள் அழைப்பிற்கு ஆஜராகியிருக்கிறேன். உங்களுக்கு
கீழ்பணிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கிறேன் " என்றேன்.
'அடியார்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அடியார்களுக்கு அல்லாஹ் செய்ய வேண்டிய கடமை என்ன தெரியுமா? " எனக் கேட்டார்கள்.
'அல்லாஹ்வும் அவனது தூதரும் மிகத் தெரிந்தவர்கள் " என்றேன்.
'அவர்களை அவன் தண்டிக்காமல் இருப்பதேயாகும். " என்றனர்.
[நூல்; முஸ்லிம்]
இந்த பொன்மொழியில் நபி [ஸல்] அவர்களின் நெருங்கிய தோழர்களில் ஒருவரான முஆது இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களின் அற்புதமான பண்பை நாம் பார்க்கிறோம். அல்லாஹ்வின் தூதரோடு ஒரே வாகனத்தில் பயணித்த இந்த நபித்தோழர், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அழைக்கும்போதெல்லாம் அந்த அழைப்பை எதிர்பார்த்தவர்களாக, அந்த அழைப்பின் மூலம் உள்ளம் உவகை கொண்டவர்களாக ஒவ்வொரு அழைப்பிற்கும், 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களது அழைப்பிற்கு இதோ ஆஜராகியிருக்கிறேன். உங்களுக்கு கீழ்படிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கிறேன் " என்று கூறுகிறார்கள்.
அது மட்டுமன்றி அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் இரண்டு விஷயங்களைப் பற்றி கேட்டவுடன் முந்திக்கொண்டு தனக்கு தெரிந்தது போல் காட்டிக்கொள்ளாமல் பணிவாக, 'அல்லாஹ்வும் அவனது தூதரும் மிகத் தெரிந்தவர்கள் " என்று கூறுகிறார்கள். அருள்மறை இறங்கிய அல்லாஹ்வின் தூதரிடத்தில் பாடம் பயின்ற நபித்தோழர்கள் யாரும் மார்க்க ஞானத்தில் தாங்கள் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக சொல்லிக்கொண்டதில்லை. ஆனால் படித்துக் கூட அல்ல; கேள்விஞானம் மூலமாக சில விசயங்களை அறிந்த நம்மில் சிலர் மார்க்கத்தையே கரைத்துக் குடித்தது போன்று நடந்து கொள்வதைப் பார்க்கிறோம்.
ஆம்! நபித்தோழர்கள் மார்க்கத்தை தேடுவதில் தங்களை என்றுமே மாணவர்களாகவே கருதியுள்ளனர் என்பதை முஆது இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களின் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. இத்தகைய பணிவு நமது உள்ளத்திலும் மலர அல்லாஹ் நல்லருள் புரிவானாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக