வெள்ளி, 11 டிசம்பர், 2009

பாங்கோசையை முன்மொழிந்தவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

உமர்[ரலி] அவர்கள், 'உமரின் நாவின் அல்லாஹ் பேசுகிறான்' என்று நபி[ஸல்] அவர்களால் சிறப்பித்து சொல்லப்பட்ட ஸஹாபி என்பதை நாம் அறிவோம். உமர்[ரலி] அவர்கள் கூற்றிற்கேற்ப, அல்லாஹ் சில வசனங்களை இறக்கியதையும் நாமெல்லாம் அறிந்துள்ளோம். அத்தகைய சிறப்பிற்குரிய உமர்[ரலி] அவர்கள் இன்னொரு நல் அமலுக்கு ஒரு ஆலோசனை கூற அது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, அன்றும்-இன்றும்- நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் இவ்வுலகம் உள்ளளவும் அது நடைமுறையில் இருக்கும். ஆம்! அதுதான் அல்லாஹ்வை வணங்க ஐவேளை தொழுகையின் போது அழைக்கப்படும் 'பாங்கு' எனும் அழைப்போசையாகும்.
இதுபற்றிய பொன்மொழி இதோ;

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 604

இந்த பொன்மொழி உமர்[ரலி] அவர்களின் பெரும்பாலான சிந்தனைகள், செயல்கள் அல்லாஹ்வாலும், அவன் தூதராலும் பொருந்திக்கொள்ளும் வகையிலேயே அமைந்துள்ளதற்கு மற்றொரு சான்றாகும்.
அல்லாஹ் உமர்[ரலி] அவர்களுக்கு கிருபை செய்வானாக!

வியாழன், 10 டிசம்பர், 2009

அபூஹுரைரா[ரலி] அவர்களின் வியக்கத்தக்க நினைவாற்றல்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆன் நபி[ஸல்] அவர்கள் மீது அருளப்படும் காலகட்டத்தில், சில நபித்தோழர்களை எழுத்தர்களாக நியமித்து நபியவர்கள் எழுதிவைத்திட பனித்த செய்தியை நாம் அறிவோம். ஆனால் நபி[ஸல்] அவர்களின் திருவாயால் மொழிந்த பொன்மொழிகள் அவ்வாறு எழுதப்படவேண்டும் என்று நபியவர்கள் கட்டளையிடவில்லை. இருப்பினும் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களைப் போன்ற சிலர் ஹதீஸ்களை எழுதிவைத்திருந்தனர். ஆனாலும் இவர்கள் அறிவித்த ஹதீஸ்களை விட, ஹதீஸ்களை எழுதிவைக்காத அபூஹுரைரா[ரலி] அவர்கள் தான் அதிக அளவில் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் ஹதீஸ்களை அறிவித்த சஹாபிகள் பட்டியலில் அபூஹுரைரா[ரலி] அவர்கள் முதலாவதாக திகழ்கிறார்கள். நம்மை எடுத்துக்கொண்டால் இன்று சாப்பிட்டதை ஒருவாரம் கழித்துக் கேட்டால் நினைவிருக்காது. பரீட்சைக்கு விழுந்து விழுந்து மனப்பாடம் செய்யும் மாணவன் கூட காலையில் மனனம் செய்ததை பரீட்சை ஹால் உள்ளே சென்றதும் பாதியை மறந்து விடுகிறான். திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் கூட தொழுகை நடத்தும் போது ஒரு சில வசனங்கள் மறந்து மற்றவர்களால் நினைவூட்டப்படுகிறது. ஆனால் அபூஹுரைரா[ரலி] அவர்கள் ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் எந்த வார்த்தையை பயன்படுத்தி சொன்னார்களோ அதே வார்த்தையை அட்சரம் பிசகாமல், மறக்காமல் எப்படி மனனம் செய்யமுடிந்தது..? பல ஆண்டுகளுக்கும் பின்னால் யார் கேட்டாலும் எப்படி இறைத்தூதர் வார்த்தையை அப்படியே சொல்ல முடிந்தது என்ற நமது வியப்பிற்கு விடையாக அபூஹுரைரா[ரலி] அவர்கள் அதிக ஹதீஸ்களை அறிவித்ததற்கும், மறக்காமல் இருந்ததற்கும் அவர்கள் கூறும் விளக்கம் பாரீர்;

'மக்காவிலிருந்து ஹிஜ்ரத்துச் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரம் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்ஸாரித் தோழர்களோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூ ஹுரைராவோ முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) பட்டினியாக நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்பாடம் செய்யாதவற்றையெல்லாம் நான் மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன்.என்று கூறினார்கள்" அஃரஜ் என்பவர் அறிவித்தார்.
ஹதீஸ் சுருக்கம் புஹாரி;எண் 118

இந்த பொன்மொழி ஹதீஸ்களை திரட்டுவதற்காக அபூஹுரைரா[ரலி] அவர்கள் செய்த தியாகத்தை விளக்குகிறது. அடுத்து திரட்டிய செய்தி மறக்காமல் இருக்க அவர்கள் செய்தது என்ன..?

'இறைத்தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன் மொழிகளைக் கேட்கிறேன். (ஆயினும்) அவற்றை மறந்து விடுகிறேன் என நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு 'உம்முடைய மேலங்கியை விரியும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் அதனை விரித்தேன். தம் இரண்டு கைகளாலும் இரண்டு கை நிறையளவு அள்ளி (எடுப்பது போன்று பாவனை செய்து)விட்டுப் பின்னர், 'அதனை (நெஞ்சோடு) நீர் அணைத்துக் கொள்வீராக!" என்றார்கள். நானும் உடனே அதனை என் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதனையும் மறந்ததே இல்லை" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஆதாரம் புஹாரி எண் 119

அபூஹுரைரா[ரலி] அவர்கள் ஹதீஸ்களை மறக்காமல் இருக்க நபியவர்கள் மூலம் பாதுகாப்பு பெற்றிருக்கிறார்கள். இந்த அளவுக்கு தியாகம் செய்து, சிரத்தைஎடுத்து அபூஹுரைரா[ரலி] அவர்கள் போன்ற பல நல்லறத் தோழர்கள் மூலமாக கிடைக்கப்பெற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை கூட 'நொண்டிச்சாக்கு' சொல்லி குப்பையில் தள்ளும் சில அதிமேதாவிகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை என்னும் போது உள்ளம் வேதனையால் விம்முகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அபூஹுரைரா[ரலி] அவர்களின் தியாகத்தை பொருந்திக் கொள்வதோடு, இறைத்தூதரின் பொன்மொழிகளை நாமும் மனனம் செய்து மற்றவர்களுக்கு எடுத்தியம்பும் நன்மக்களாக ஆக்கியருள்வானாக!

புதன், 9 டிசம்பர், 2009

'அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து காப்பாற்றப் பட்டவர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
உமர்[ரலி] அவர்கள் ஒரு பாதையில் சென்றால் ஷைத்தான் வேறு பாதையில் செல்வான் என்ற செய்தி நாமெல்லாம் அறிந்த ஒன்றுதான். மனிதனின் ரத்த நாளங்களில் எல்லாம் வியாபித்து ஆட்டிப்படைக்கும் ஷைத்தானின் அட்டூழியத்திலிருந்து பாதுகாப்பு பெற்ற மற்றொரு ஸஹாபி அம்மார் இப்னு யாசிர்[ரலி] அவர்களாவார்.

அல்கமா இப்னு கைஸ் அந் நகஈ(ரஹ்) அறிவித்தார்கள்;
நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். பள்ளிவாசலில் நுழைந்(து இரண்டு ரக்அத்கள் தொழு)ததும் 'இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரை ஏற்படுத்துவாயாக" என்று பிராத்தித்தேன். பிறகு அபுதர்தா(ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்தேன். அபுத்தர்தா(ரலி) 'நீங்கள் எந்த ஊர்க்காரர் ?' என்று கேட்டார்கள். அதற்கு நான் 'கூஃபா வாசி' என்றேன். அபுத்தர்தா(ரலி) '(நபி - ஸல் - அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா?' என்று ஹுதைஃபா(ரலி) அவர்களைத் கருத்தில் கொண்டு கேட்டார்கள். நான், 'ஆம் (இருக்கிறார்)" என்று பதிலளித்தேன். அவர்கள், 'தன் நபியின் வாயால் எவரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா?' என்று கேட்டார்... அம்மார்(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள். நான் 'ஆம் (இருக்கிறார்)" என்று பதிலளித்தேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்களின் (பல்துலக்கும்) மிஸ்வாக் குச்சியையும், தலையணையையும் சுமந்து சென்றவர்... அல்லது அவர்களின் அந்தரங்க உதவியாளர்.. (இப்னு மஸ்வூத்) உங்களிடம் இல்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம் (இருக்கிறார்)" என்று பதிலளித்தேன்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 3743 ]

அல்கமா இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார். நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள், 'அபுத் தர்தா(ரலி), (இங்கு) வந்து, அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இருக்கிறாரா?' என்று கேட்டார்" எனச் சொன்னார்கள். முகீரா இப்னு மிக்ஸம்(ரலி), 'அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர்" என்று அபுத் தர்தா(ரலி) குறிப்பிட்டது அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களைத் தான்" என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 3287

இத்தகைய சிறப்பு வாய்ந்த அம்மார்[ரலி] அவர்கள், இஸ்லாத்திற்காக முதன்முதலாக உயிர்த்தியாகம் செய்த சுமைய்யா[ரலி], யாசிர்[ரலி] ஆகியோரின் அருமை மகன் என்பது நாமறிந்த செய்திதான். இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சத்திய மார்க்கத்தை போதிக்கத்தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இஸ்லாத்தை ஏற்று பல்வேறு இன்னல்களை சந்தித்தவர்கள் அம்மார்[ரலி] அவர்கள். ஒரு கட்டத்தில் இணைவைப்பாளர்களின் உச்சகட்ட துன்புறுத்தலின் போது, உள்ளத்தில் ஈமானை நிறைத்துகொண்டு உதட்டளவில் ஈமானுக்கு மாற்றமான கருத்தை சொன்ன அம்மார்[ரலி] அவர்கள் கைசேதம் அடைந்தவர்களாக அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் கூறியபோது கண்ணியம் பொருந்திய அல்லாஹ்,

مَن كَفَرَ بِاللّهِ مِن بَعْدِ إيمَانِهِ إِلاَّ مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالإِيمَانِ وَلَـكِن مَّن شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.[16:106 ]

என்ற வசனத்தை இறக்கி அம்மார்[ரலி] அவர்களின் தியாகத்தை பொருந்திக் கொள்கிறான், மேலும் நபியவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா செல்வதற்கு முன்பாகவே மதீனாவிற்கு ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணம் மேற்கொண்ட அம்மார்[ரலி] அவர்கள் புனிதமிக்க மஸ்ஜிதுன் நபவியின் கட்டுமனான பணியில் அதிகம் உடலுழைப்பு செய்த அந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

இக்ரிமா அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடமும் அவர் மகன் அலியிடமும் 'நீங்களிருவரும் அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் சென்று அவர் அறிவிக்கும் செய்தியைச் செவிமடுத்து வாருங்கள்!' எனக் கூறினார்கள். நாங்கள் சென்றோம். அபூ ஸயீத்(ரலி) தங்களின் தோட்டத்தைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். (எங்களைக் கண்டதும் தங்களின் மேலாடையைப் போர்த்திக் கொண்டு (பல செய்திகளை) எங்களுக்குக் கூறலானார்கள். பள்ளிவாசல் கட்டப்பட்ட செய்தியைக் கூறும்போது 'நாங்கள் ஒவ்வொரு செங்கல்லாகச் சுமப்பவர்களாக இருந்தோம். (ஆனால்) அம்மார்(ரலி) இரண்டிரண்டு செங்கற்களாகச் சுமக்கலானார். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவரின் மேனியில் படிந்த மண்ணைத் தட்டிவிட்டு 'பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்." என்று கூறினார்கள். அதற்கு அம்மார்(ரலி) 'அந்தக் குழப்பங்களைவிட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார்கள்' என அபூ ஸயீத்(ரலி) குறிப்பிட்டார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 447

தான் கொல்லப்படுவோம் என்பதை இறைத்தூதர்[ஸல்] அவர்களின் வாயால் செவிமடுத்த அம்மார்[ரலி] அவர்கள், நம்மை போன்ற பலவீனமானமானவராக இருந்தால், உயிர்மீது ஆசையுடையவராக இருந்தால் அவர் இஸ்லாத்தை விட்டே விரண்டோடியிருப்பார். அம்மார்[ரலி] அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. தான் கொல்லப்படப்போகும் நாளை எண்ணி கண்ணீர் விட்டு கொண்டிருக்கவில்லை. மாறாக, அத்தகைய குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறுகிறார்கள் என்றால், அவர்கள் உள்ளத்தில் எந்த அளவு இறையச்சம் நிரம்பியுள்ளது என்பதை விளங்கிக்கொள்ளலாம். அந்த இறையச்சம்தான் அவர்களுக்கு ஷஹீத் எனும் அந்தஸ்த்தையும், சுவனத்தில் உயர்ந்த படித்தரத்தையும் பெற்றுத்தந்துள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மார்[ரலி] அவர்களைப் போன்று நம்முடைய வாழ்வும்-மரணமும் இஸ்லாத்திற்காகவே அமைந்திட அருள்புரிவானாக!

வெள்ளி, 4 டிசம்பர், 2009

கப்பல் படையில் களமிறங்கி ஷஹீதான வீரப்பெண்மணி!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம்(ரலி), உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படியே நபி(ஸல்) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, சிரித்துக் கொண்டே கண் விழித்தார்கள். உம்மு ஹராம்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! ஏன் (இப்படிச்) சிரிக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் வீரர்களாக எனக்கு (கனவில்) எடுத்துக் காட்டப்பட்டார்கள். அவர்கள் இந்தக் கடலின் முதுகில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் மன்னர்களாக அல்லது கட்டில்களில் அமர்ந்திருக்கும் மன்னர்களைப் போல்... ஏறிச் செல்கிறார்கள்" என்று பதிலளித்தார்கள். அதற்கு உம்மு ஹராம்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, தம் தலையை(த் தலையணையில்) வைத்(து உறங்க ஆரம்பித்)தார்கள்; பிறகு, சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். அப்போது உம்மு ஹராம்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் புரிபவர்களாக எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர்.." என்று முன்பு போன்றே கூறினார்கள். உம்மு ஹராம்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் (அறப்போருக்காகக் கடலில்) முதன்முதலாகப் பயணிப்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே, முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் (சைப்ரஸ் தீவின் மீது அறப்போர் புரியச் சென்றவர்களுடன் உம்மு ஹராம்(ரலி) அவர்களும் கடல் பயணம் செய்து கடலிலிருந்து (தீவின் ஒரு பகுதிக்குப்) புறப்பட்டபோது தம் வாகனத்திலிருந்து விழுந்து மரணமடைந்தார்கள். [நூல்;புஹாரி]


வீரப்பெண்மணி உம்மு ஹராம்[ரலி] அவர்கள், மற்றொரு வீரப் பெண்மணியான உம்மு சுலைம்[ரலி] அவர்களின் சகோதரியும், நபி[ஸல்] அவர்களின் ஊழியரான அனஸ் இப்னு மாலிக்[ரலி] அவர்களின் சிற்றன்னையும் ஆவார். மதீனாவில் உள்ள தனது தோழர்களின் வீடுகளில் நபியவர்கள் அதிகமதிகம் செல்லக்கூடிய வீடு இந்த இரு சகோதரிகளின் வீடுகள்தான். அந்த வகையில் உம்மு ஹராம்[ரலி] அவர்களும், உம்மு ஸுலைம்[ரலி] அவர்களும் நபியவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்துவிட்டால், அவர்களை இன்முகத்துடன் வரவேற்று உணவளித்து மகிழ்வார்கள். அப்படிப்பட்ட நிலையில்தான் ஒருமுறை தனது உம்மத்தினரில் கடல் மார்க்கமாக ஒரு சாரார் அறப்போருக்காக செல்வார்கள் என்ற செய்தியை நபியவர்கள் சொன்ன மாத்திரமே உம்மு ஹராம்[ரலி] அவர்கள்,nabi
[sal] அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறியதோடு, நபியவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்ததன் விளைவாக, உம்மு ஹராம்[ரலி] அவர்கள் அந்த போர் முடிந்து திரும்பும்போது கீழே விழுந்து ஷஹீத் எனும் பேற்றை அடைகிறார்கள் என்றால் நாம் அவர்களின் வீரத்தையும், இறையச்சத்தஹியும், சொர்க்கத்தின் மீது அவர்கள் கொண்ட நேசத்தையும் என்னும்போது மெய்சிலிர்த்து போகிறோம். இன்றைய பெண்களை எடுத்து பார்த்தோமானால், நாம் ஒரு பொழுதுபோக்கு இடத்திற்கோ, அல்லது ஒரு இன்ப சுற்றுலாவுக்கோ செல்கிறோம் என்றால் ஏங்க! நானும் ஒங்க கூட வருகிறேன் என்று சொல்வார்கள். அதே நேரத்தில் ஒரு போர்களத்திற்கு செல்கிறோம் என்றால், அவர்கள் வராததோடு நம்மையும் போகவிடாமல் தடுப்பார்கள். போகாதே போகாதே என்கணவா! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்ற ரீதியில் செண்டிமெண்டை காட்டி தடுக்க முயற்சிப்பார்கள். இதுதான் இன்றைய பெண்களின் நிலை. [விதி விலக்காக சிலர் இருக்கலாம்] ஆனால் சஹாபிப் பெண்களுக்கோ தமது உயிரோ, செல்வங்களோ, இந்த உலகின் கவர்ச்சியோ அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. மாறாக, சுவனத்தை அடைவது ஒன்றே அவர்களின் ஒரே இலக்காக இருந்துள்ளது எனபதற்கு உம்மு ஹராம்[ரலி] எனற உயிர்த் தியாகி மிக சிறந்த உதாரணமாக வரலாற்றில் மிளிர்கிறார்.
அல்லாஹ் உம்மு ஹராம்[ரலி] அவர்களை போன்று மார்க்கத்திற்காக உயிர் துறந்து மறுமையில் அவர்களை சுவனத்தில் நாம் பார்ப்பதற்கு நமக்கு நல்லருள் பாலிப்பானாக!

குறிப்பு; மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது. புஹாரி மட்டுமன்றி முஸ்லிமிலும் உள்ளது. ஆனாலும் இந்த ஹதீஸை நவீன ஹதீஸ்கலை[?] அறிஞர்கள் மறுக்கிறார்கள். காரணம் உம்மு ஹராம்[ரலி] என்ற அந்நியப் பெண் வீட்டிற்கு நபியவர்கள் எப்படி போயிருக்கமுடியும்.? ஒரு அந்நிய பெண் பேன் பார்க்கும் அளவுக்கு நபியவர்கள் எப்படி நடந்திருப்பார்கள்.? உம்மு ஹராம்[ரலி] அவர்களின் கனவர் வீட்டில் இல்லாதபோது நபியவர்கள் எப்படி சென்றிருப்பார்கள்..? எனவே இது நபியவர்களின் போதனைக்கும், அவர்களின் மகத்தான குணத்திற்கும் எதிராக உள்ள்ளது என்று கூறி, இந்த ஹதீஸை குப்பை கூடைக்கு அனுப்பி விட்டார்கள். ஒரு அந்நியப் பெண்ணின் வீட்டிற்கு செல்லக் கூடாது என்பது இவர்களுக்கு தெரிந்துள்ளது. ஆனால் பாவம் நபியவர்களுக்கு தெரியவில்லை. அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் சொல்லை விடநமது சிந்தனைதான் முக்கியம் என்றால், குளிப்பு கடமையான நிலையில் தண்ணீர் கிடைக்கவில்லையானால், தயம்மும் செய்யலாம் என்று மார்க்கம் சொல்கிறது. ஏற்கனவே ஸ்கலிதம் எர்ப்படடதால்தான் தான் குளிப்பு கடமையாகி உள்ளது. அந்த அசுத்ததோடு, தயம்மும் என்ற பெயரில் முகத்திலும் கைகளிலும் மண்ணை தடவி கூட கொஞ்சம் அசுத்தமாவது அறிவுக்கு பொருந்துகிறதா..? எனவே இது தொடர்பான வசனங்களையும், ஹதீஸ்களையும் குப்பை கூடைக்கு அனுப்புவோமா..? [அல்லாஹ் மன்னிப்பானாக].

இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டியபின் தடம்புரள செய்துவிடாதே!

வியாழன், 3 டிசம்பர், 2009

உயரிய பண்புடைய உம்மு ஸுலைம்[ரலி].

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
நபி[ஸல்] அவர்களின் மதீனா வாழ்வை நாம் படித்துப்பார்த்தால், அவற்றில் பல்வேறு இடங்களில் நபியவர்களோடு தொடர்புடையவர்களாக அபூதல்ஹா[ரலி] -உம்மு ஸுலைம்[ரலி] தம்பதியை நாம் காணலாம். இந்த தம்பதிகளுக்கென்று பல்வேறு சிறப்புகள் உண்டு. இவ்விருவரும் இறைக்கட்டளையை அப்படியே பேனக்கூடியவர்களாக, இறைத்தூதரின் விருப்பத்திற்குரியவர்களாக இருந்துள்ளனர். இவர்களில் உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் சீரிய அறிவாற்றலும் மதிநுட்பமும் பொருந்தியவர்களாக திகழ்ந்தார்கள். எப்படிப்பட்ட சோதனையான கட்டமாகிலும் அதை பொறுமையுடன் எதிர்கொண்டு அதை நன்மையாக மாற்றக் கூடியவர்களாக திகழ்ந்துள்ளனர் என்பதற்கு ஒரே ஒரு சான்று;

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்கள்;
என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூ தல்ஹா(ரலி) திரும்பி வந்தபோது 'என் மகன் என்ன ஆனான்?' என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) 'பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்' என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), 'ஆம்' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்.
பின்னர் உம்முசுலைம்(ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூ தல்ஹா(ரலி), 'குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டுசெல்' என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். என்னிடம் உம்மு சுலைம்(ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, 'இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?' என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் 'ஆம்; பேரீச்சம் பழங்கள் உள்ளன' என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தம் வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு 'அப்துல்லாஹ்' எனப் பெயர் சூட்டினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 5470

இந்த பொன்மொழியில் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் செயல்பாடுகள் ஒவ்வொரு முஸ்லிமான ஆணுக்கும்-பெண்ணுக்கும் ஆயிரம் படிப்பினை தரும் விஷயமாகும். பொதுவாகவே ஒருவர் இறந்துவிட்டால் அதிலும் குறிப்பாக தமது பிள்ளை இறந்துவிட்டால் ஆணை விட பெண்கள் அழுது ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதில் முன்னிலை வகிப்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். இங்கே தமது மகன் இறந்தபோது, உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை . முதலாவதாக அல்லாஹ்வின் தீர்ப்பை பொருந்திக் கொள்கிறார்கள். அடுத்து வெளியே சென்றுள்ள கணவன் திரும்பி வந்தவுடன் மகன் இறந்த சோகத்தை மறைத்து கணவனை உபசரிக்கிறார்கள். கணவனோடு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள். இந்த விஷயத்தில் கணவனின் மனநிலை அறிந்து செயல்படும் ஒரு சிறந்த மனைவியாக திகழ்ந்துள்ளார்கள். அடுத்து தன் மகன் பற்றி அபூ தல்ஹா[ரலி] அவர்கள் கேட்டபோது, உங்கள் மகன் இறக்கவில்லை என்று சொல்லியிருந்தால் அது பொய்யாகிவிடும் என்பதால், மிகவும் சாதுர்யமாக உண்மையை வேறு வார்த்தையில் அதாவது 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று கூறி, எந்த நிலையிலும் பொய் சொல்லக் கூடாது என்ற மார்க்க கட்டளையை பேணி காத்ததன் மூலம் மிகச்சிறந்த இறையச்சமுடையவராக திகழ்கிறார்கள் . உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் இந்த செயல் பற்றி அபூ தல்ஹா[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, நபியவர்கள் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை கண்டிக்காமல் அவர்களின் செயல்களை அங்கீகரிக்கும் வகையில், 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்திக்கிறார்கள் என்றால் உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் எத்தகைய சிறப்புடையவர்கள் என்று விளங்கிக்கொள்ளலாம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். [புஹாரி எண் 6424 ]

மேலும் உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் சொர்க்கத்திற்கு உரியவர் என்று நபி[ஸல்] அவர்களின் மற்றொரு பொன்மொழியின் வாயிலாக உணரமுடிகிறது;

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள், 'நான் (கனவில்) என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரிஎண் 3679 ]
[உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் இயற்பெயர் அர்ருமைஸா பின்த் மில்ஹான் என்பதாகும்]
எல்லாம் வல்ல அல்லாஹ் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக! தியாகத்தையும், இறையச்சத்தையும் வாழ்க்கையாக கொண்ட அவர்களைப்போல் நம்மையும் வாழ்ந்து மரணிக்க செய்வானாக!