சனி, 25 செப்டம்பர், 2010

இறப்பின் சோகம் இதயத்தில் இருந்தாலும்; இறைத்தூதர் சொல்லிவிட்டால்...

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்கள்;
தம் தந்தை (அபூ சுஃப்யான்(ரலி) அவர்களின் இறப்புச் செய்தி வந்தபோது (அன்னை) உம்மு ஹபீபா(ரலி) நறுமணத்தைக் கொண்டுவரச் சொல்லி அதனைத் தம் இரண்டு கைகளிலும் தடவினார்கள். மேலும், (பின்வருமாறு) கூறினார்கள்: எனக்கு இந்த நறுமணம் தேவையே இலை. ஆயினும், நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர' என்று சொல்லக் கேட்டுள்ளேன்.

ஆதாரம்; நூல் புஹாரி எண் 5345


ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்கள்;

(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் சகோதரர் இறந்த சமயம் அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி பூசிக்கொண்டார்கள்.

பிறகு, 'இதோ! (பாருங்கள்.) அல்லாஹ்வின் மீதாணையாக எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சொற்பொழிவு) மேடையில் இருந்தபடி 'அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தன் கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர!' என்று கூறக் கேட்டுள்ளேன்' என்றார்கள்.

அன்பானவர்களே! மேற்கண்ட இரு பொன்மொழிகளையும் நாம் பலமுறை படித்திருப்போம். ஆனால் நடைமுறையில் கொண்டுவரவில்லை என்பதே உண்மை. தமது தந்தை- சகோதரர்- கணவர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர் மரணிக்கும்போது, அதனால் அதிகம் வேதனைப்படுவது பெண்கள்தான்.

கணவர் நீங்கலாக , மற்றவர்களின் இறப்பு விஷயத்தில் நம்முடைய சோகம் எத்தனை நாட்கள் நீடிக்கவேண்டும் என்பது கூட நமது பெண்களில் பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. தெரிந்தவர்களும் அமுல்படுத்துவதில்லை. காரணம் அங்கே அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புதான் பெரிதாக தெரிகிறதே தவிர, இறைத்தூதர்[ஸல்] அவர்களின் கட்டளை என்பது பெரிதாக தெரிவதில்லை.


பொறுமை என்பதே துன்ப நேரத்தில் கடைபிடிப்பதுதான் என்ற நபிகளாரின் பொன்மொழியை மறந்து, தனது சோகத்தை மாதக்கணக்கில் கொண்டு, கணவன் மற்றும் பிள்ளைகள் நலனை புறக்கணிக்கும் பெண்களைப் பார்க்கிறோம். ஆனால் மேற்கண்ட ஹதீஸ்களில் நம்முடைய அன்னையர்கள், தனது தந்தை இறந்த சோகத்தைவிட , தனது சகோதரன் இறந்த சோகத்தைவிட, இறைத்தூதர்[ஸல்] அவர்களின் கட்டளையை பெரிதாக கருதி, மூன்று நாட்கள் முடிந்தவுடன் கணவருக்காக தனைகளை அலங்கரித்துக் கொள்கிறார்கள் எனில், அதுதான் சஹாபியர்கள்.

நம்முடைய அன்னையர்களை முன்மாதிரியாக கொண்டு நாமும் குறிப்பாக நமது சமுதாய பெண்கள் இழப்பு விஷயத்தில் பொறுமையை மேற்கொள்வோமாக! எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு அருள்புரிவானாக!!

சனி, 18 செப்டம்பர், 2010

பொறுமையை கொண்டு சுவனத்தை வென்ற பெண்மணி!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்;


இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர்.
 
இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி ) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி ) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
நூல்; புஹாரி எண் 5652
 
அன்பானவர்களே! நமக்கு நோய் வருமென்றால், அதற்காக மருத்துவம் செய்வோம்; அதோடு அல்லாஹ்விடம் துஆ செய்வோம். அந்த நோய் சில நாட்களில் தீர்ந்துவிடும் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் நோய் தீர தாமதமாகும் நிலை ஏற்பட்டால், அல்லது நோய் தீராமலேயே போய்விட்டால் அங்கே அல்லாஹ்வின் நாட்டம் என பொறுமை கொள்வதை விடுத்து, அல்லாஹ்வின் அருள்மீது நம்பிக்கையிழந்து அல்லாஹ்வின் மீதே வெறுப்புறுவதை  பார்க்கிறோம்.
 
இன்னும் சிலர் அல்லாஹ்விடம் கேட்டு எந்த பலனுமில்லை என்று தீர்மானித்து, தர்காவிடம்  சரணடைந்து அங்கே ஈமானையும் பறிகொடுத்து, சில நேரங்களில் கற்பு- பொருளாதாரம் இவ்வாறாக பல்வேறு இழப்புகளை தமக்கு தாமே ஏற்படுத்திக் கொள்வதை பார்க்கிறோம்.
 
ஆனால், மேலே உள்ள பொன்மொழியில், ஒரு பெண்மணி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர், தனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நபியவர்களிடம் வேண்ட, அப்பெண்மணியின்  இம்மை வாழ்வின்   சுகத்தை விட மறுமை பாக்கியம் அப்பெண்ணிற்கு கிடைக்கவேண்டும் என விரும்பிய இறைத்தூதர்[ஸல்] அவர்கள், உனக்கு நிவாரணம் வேண்டுமா; அல்லது சொர்க்கம் வேண்டுமா என்று கேட்ட மாத்திரமே,
 
தான் நோயால் வாடினாலும் பரவாயில்லை தனக்கு அல்லாஹ் தந்த நோயை போருந்திக்கொண்டு, அழகிய பொறுமையை மேற்கொண்டு சுவனத்தை  பெறவே விரும்புகிறேன் என்றார்களே! அதோடு, தனது நோயின் போது கூட, தான் அறியாத நிலையில் கூட  தனது ஆடை விலகிவிடக் கூடாது என விரும்பி, அதற்காக மட்டும் துஆ செய்யுமாறு அப்பெண்மணி இறைத்தூதரிடம் வேண்டுகிறார்களே! அதுதான் நபித் தோழியர்களின் இறையச்சம்.
 
ஆனால், இன்றைக்கு நம்முடைய பெண்களில் பெரும்பாலோர், பர்தா அணிவதில்லை. அதோடு அணிந்திருக்கும் சேலை தலையிலிருந்து நழுவினாலோ, அல்லது முன்பகுதியிலிருந்து விலகினாலோ கூட பெரும்பாலும் அலட்டிக்கொள்வதில்லை. காரணம் நம்முடைய பெண்களை நவீனம் அந்த அளவுக்கு நாசமாக்கியுள்ளது. இத்தகைய பெண்களுக்கு மட்டுமின்றி, அழகிய பொறுமைக்கும் இந்த நபித் தோழியின்  வாழ்வில்   மிகப்பெரும் படிப்பினை உள்ளது.
 
எல்லாம் வல்ல அல்லாஹ், நிறத்தால் கருப்பான, உள்ளத்தால் வெண்மையான அந்த நபித் தோழியை சுவனத்தில் பார்க்கும் பாக்கியத்தை நமக்குத் தந்தருள்வானாக!

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

விபச்சாரம் செய்தபோதும் விரும்பி வந்து தண்டனை ஏற்ற இறையடியார்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஜாபிர்(ரலி) அறிவித்தார்;


பனூஅஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (மாஇஸ் இப்னு மாலிக்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது நபி(ஸல) அவர்கள் அவரை விட்டு  தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம்அளித்தார். அப்போது அவரிடம் நபி(ஸல) அவர்கள், 'உமக்குப் பைத்தியமா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை' என்றார். எனவே நபி(ஸல்) அவர்கள், அவருக்கத் தண்டனை வழங்குமாறு உத்தரவிட பெருநாள் தொழுகைத் திடல் (முஸல்லா) அருகில் அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரைக் குறித்து நல்லதைக் கூறியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தார்கள்.
நூல்;புஹாரி எண் 6820
 
மற்றொரு அறிவிப்பில்,
 
மாஇஸ் இப்னு மாலிக் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்(து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக வாக்குமூலம் அளித்)தபோது, அவரிடம் நபி(ஸல்) அவர்கள், '(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!' என்றார்கள். அவர், '(அவ்வாறெல்லாம்) இல்லை; இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், சாடைமாடையாகக் கேட்காமல் 'அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?' என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், 'ஆம்' என்று கூறினார். அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
ஆதாரம்; புஹாரி எண் 6824
 
அன்பானவர்களே! சஹாபாக்கள் சாமான்யர்கள்; அவர்கள் பல்வேறு குற்றங்களை செய்தவர்கள் என்று சஹாபாக்களை விட தம்மையும், தமது கருத்தையும் முன்னிலைப்  படுத்துபவர்கள் இடும் பட்டியலில் மாயிஸ்[ரலி] அவர்களின் மேற்கண்ட சம்பவமும் இடம்பெற்றிருக்கும். ஆனால், உண்மை நிலை  என்ன..?
 
சஹாபாக்கள் இயன்றவரை பாவம் செய்வதை தவிர்ந்து வாழ்ந்தவர்கள். இருப்பினும் மனிதன் என்ற அடிப்படையில் அவர்களிடத்தில் தப்பித்தவறி தவறு ஏற்படுமேயானால், அந்த தவறுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனையைக் குறித்து அஞ்சியிருக்கிறார்கள். மறுமைத் தண்டனையை விட  இம்மையில் கிடைக்கும் தண்டனை இலகுவானது என்று எண்ணி, தாமாக விரும்பி வந்து தண்டனையை  ஏற்றுள்ளார்கள் என்பதற்கு மேற்கண்ட மாயிஸ்[ரலி] அவர்களின் சம்பவமே சான்று. மாயிஸ்[ரலி] அவர்கள் விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டவர் அல்ல. மாறாக,
 
தான் செய்த பாவத்தை யாரும் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அவர்களின் இறையச்சம்தான் இறைத்தூதர்[ஸல்] அவர்களை நோக்கி இழுத்து வந்தது. அங்கே மாயிஸ்[ரலி] குற்றத்தை சொல்லி தண்டனை கேட்டபோது, மாயிஸ்[ரலி] அவர்களின் நற்குணத்தை அறிந்த  நபியவர்கள்,
 
'உமக்குப் பைத்தியமா..? என்கிறார்கள், பின்பு நீர் முத்தமிட்டிருக்கலாம்; அல்லது சைகை செய்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லி மாயிஸ்[ரலி] அவர்களை திருப்பி அனுப்ப முயற்ச்சிக்கிறார்கள். இறுதியாக மாயிஸ்[ரலி] அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால்தான் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
 
தான் செய்த பாவத்தை யாரும் பார்க்காத நிலையிலும், இறைவன் பார்க்கிறான் என்ற அச்சத்தில் ஒரு வேதனை மிகுந்த தண்டனையை  ஏற்கும் அளவுக்கு சஹாபாக்கள் இறையச்சம் மிகுந்தவர்களாக திகழ்ந்துள்ளார்கள். அனால் இன்றைக்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோர் அதை ஏற்க மனமின்றி 'சப்பைக்கட்டு'  கட்டுவதைக் காண்கிறோம்.  காரணம் நாம் செய்த தவறை ஒப்புக்கொண்டால் இந்த உலகில் நம்முடைய 'இமேஜ்' அடிபட்டுப் போகுமே என்று கருதுகிறர்கள்.
 
ஆனால் சஹாபாக்கள் இந்த உலகில் தமது 'இமேஜ்' பாதிக்கப்படுவதையோ, அல்லது தண்டனையின் வேதனை குறித்தோ அஞ்சவில்லை. மாறாக மறுமையின் விசாரணையும், அவமானத்தையும், வேதனையையும் குறித்தே அஞ்சினார்கள். அன்று அவர்கள் விரும்பி ஏற்ற தணடனை இன்று அவர்களை சரித்திர புருஷர்களாக பலநூறு ஆண்டுகள் கடந்த பின்னும் நினைவு கூற செய்கிறது. எனவேதான் அந்த நல்லறத்  தோழர்களின் இடத்தை ஒருபோதும் நாம் எட்டிட முடியாது எனபது திண்ணம்.
 
எல்லாம் வல்ல அல்லாஹ் மாயிஸ்[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக!

இறைத்தூதர் [ஸல்] வெறுத்த உணவு எனக்கும் வெறுப்பானதே!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.
அபூ அய்யூப் அல் அன்ஸாரி[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

இறைத்தூதர்[ஸல்] அவர்கள் [மதீனா வந்த போது] எனது வீட்டிலேயே தங்கினார்கள். நபி[ஸல்] அவர்கள் கீழ் தளத்திலும், நாங்கள் மேல் தளத்திலும் தங்கியிருந்தோம்.  ஓர் இரவில் நான்  உணர்வு பெற்று, நாம் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் தலைக்கு  மேலாக நடமாடுவதா..? என்று சொல்லிக்கொண்டு [தலைக்கு  நேரான பகுதியை தவிர்த்து] மற்றொரு பகுதியில் [நானும் எனது வீட்டாரும்] இரவைக் கழித்தோம்.

பின்னர் நபி[ஸல்] அவர்களிடம் சொன்னபோது அவர்கள், 'கீழ் தளமே மிகவும் வசதியானது' என்று கூறினார்கள். நான் 'நீங்கள் கீழே இருக்க நான் மேலே இருக்கமாட்டேன்' என்று கூறினேன். எனவே நபி[ஸல்] அவர்கள்  மேல்தலத்துக்கும், நான் கீழ்தளத்திற்கும் இடம் மாறிக்கொண்டோம்.

நான் நபி[ஸல்] அவர்களுக்காக உணவு தயாரித்தேன். அது [நபி[ஸல்] அவர்களிடம் சென்றுவிட்டு] என்னிடம் கொண்டுவரப்பட்டபோது, [உணவுப் பாத்திரத்தில்] நபி[ஸல்] அவர்கள் விரல் பட்ட இடத்தைப் பற்றிக்கேட்பேன். அவர்கள் விரல்பட்ட இடத்தைக் கண்டறிந்து  அந்த இடத்தில்  நான்  சாப்பிடுவேன்.

இவ்வாறாக  [ஒருநாள்] வெள்ளைப் பூண்டு உள்ள ஓர் உணவைத் தயாரித்தேன். [நபி[ஸல்] அவர்களிடம்  சென்றுவிட்டு] அது திருப்பிக் கொண்டுவரப் பட்டபோது, நபி[ஸல்] அவர்களின் விரல்பட்ட இடத்தைக் கேட்டேன். அப்போது நபி[ஸல்] அவர்கள் உண்ணவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது. அதைக் கேட்டு  நான்  பதறினேன்.

மேல்தளத்திற்கு சென்று அது[வெள்ளைப்  பூண்டு உணவு] தடை செய்யப்பட்டதா..? என்று நபி[ஸல்] அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை. ஆயினும் நான் அதை விரும்பவில்லை என்று கூறினார்கள்.

'அவ்வாறாயின் தாங்கள் வெறுப்பதை அல்லது வெறுத்ததை நானும் வெறுக்கிறேன் என்று கூறினேன்'. அப்போது நபி[ஸல்] அவர்களிடம் [வேத அறிவிப்பு] வந்துகொண்டிருந்தன.

ஆதாரம்; முஸ்லிம்.

அன்பானவர்களே! இந்த பொன்மொழி, இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது அருமை சஹாபாக்கள் கொண்டிருந்த நேசத்திற்கு மற்றொரு சான்றாகும். இதில் சம்மந்தப்பட்ட அபூ அய்யூப்[ரலி] அவர்கள் நபியவர்கள் மீது கொண்ட அபரீதமான மதிப்பும், நேசமும் வெளிப்படுவதைக் காணலாம். இறைத்தூதர் [ஸல்] அவர்களுக்கு மேலாக நாம் தங்குவதா; அவர்களின் தலைக்கு  மேலாக நாம் நடமாடுவதா என்று அஞ்சியதாகட்டும், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் பூண்டு சம்மந்தப்பட்ட உணவை சாப்பிடாதது கண்டு பதறியதாகட்டும், மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டு, இறைத்தூதர்[ஸல்]  அவர்கள் மனம் விரும்பாத ஒரு உணவு தனக்கு தடையில்லை என்றாலும், அல்லாஹ்வின் தூதருக்கு விருப்பமில்லாத உணவு எனக்கும் வெறுப்பானதே  என்று முடிவெடுத்ததாக்கட்டும், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கரம்பட்ட இடத்தில் உண்ணும் அந்த பாங்காகட்டும்; இவையெல்லாம் அபூ அய்யூப்[ரலி] அவர்களின் பண்பையும், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது கொண்ட நேசத்தையும் பதிவு செய்யும் வரலாற்று சுவடுகள்.

ஆம்! அந்த இனிய தோழர்களுக்கு இன்பம் என்றால் இறைத்தூதரின் சிரிப்பும்; துன்பம் என்றால், இறைத்தூதரின் வாட்டமும் தானே!
அல்லாஹ் அந்த தோழர்களை பொருந்திக் கொள்வானாக!